ஒரு சமயம் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மூத்த ஐரோப்பிய பெண்மணியோடு உரையாடிக்கொண்டிருந்தோம். கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி பேச்சு திரும்பியது. அவரவர்க்கு தெரிந்த இடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தோம் (விக்டோரியா மஹாலைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது). அவர், Black hole of Calcutta பற்றிக் கேட்டார். என் நண்பர் ஒருவருக்கு மட்டும் அப்படியொரு இடம் உண்டு என்று தெரிந்திருந்தது, ஆனால் அது என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. எங்களுக்கு Black Hole of Calcutta பற்றித் தெரியவில்லை என்றவுடன், அந்தப் பெண்மணியின் முகம் சுருங்கிவிட்டது. எங்கள் நால்வரையும் பார்த்து, “இந்தியாவில் பிறந்துவிட்டு, அதன் வரலாறு உங்களுக்குத் தெரியவில்லை. You should be ashamed of it.” என்றார்.
அன்றைய வங்காள நிஜாம் 1756ல், கிழக்கிந்திய கம்பெனியுடன் சண்டையிட்டு அவர்களின் வில்லியம் கோட்டையை கைப்பற்றினார். அங்கிருந்த ஒரு சிறிய அறையில் (டஞ்சன்) நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கைதிகளை அடைத்து வைத்ததால், அவர்கள் மூச்சுத்திணறி இறந்தார்கள். அந்த அறை தான் Black Hole of Calcutta. இது தெரியவில்லை என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? என்று கேட்கலாம். ஆனால், இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் எதையுமே நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 'Bare necessacites of life will come to you’ என்று நம்மால் சும்மாயிருக்க முடியாது. கையையும் காலையும் சும்மா வைத்துக் கொண்டிருந்தால் கூட, சிந்தனை ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கும். அன்னவெறி கண்ணையன் சொல்வது போல் “இம்ப்ரமேஷன் இஸ் வெல்த்”
இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களின் மீது இருக்கும் பயத்தை போக்கச் செய்யும் முயற்சியே இந்தக் கட்டுரைகள் என்று தொடக்கத்தில் எழுத்தாளர் கிருஷ்ணன் சொல்கிறார். இந்த புத்தகத்தில் மொத்தம் இருபத்தெட்டு கட்டுரைகள். காலச்சுவடு, உயிர்மை, வடக்குவாசல், இந்தியா டுடே இதழ்களில் வெளியானவை. பெரும்பான்மையாக, கட்டுரைகள் புத்தகங்கள் பற்றியே பேசுகின்றன. பேசுபொருள் என்று எடுத்துக் கொண்டால், சமூகம், இலக்கியம், வரலாறு, கிரிக்கெட், கவிதைகள், ஆளுமைகள், அறிவியல், கணிதம், ஓவியம் என்று பல விஷயங்கள் இந்தக் கட்டுரைகளில் பேசப்படுகின்றன. இசை மட்டும் இல்லை. இந்தக் கட்டுரைகளின் மூலம் விஷயங்களைத் தெரிந்து கொள்வதோடு, கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் கட்டுரைகள் எழுதுவது எப்படி என்பதையும் கற்றுக் கொள்ள முடியும்.
கிரிக்கெட்டை பற்றி மொத்தம் மூன்று கட்டுரைகள். அம்பேத்காரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பாலு என்பவர் ஒரு கிரிக்கெட் வீரர். பாலுவும் ஒரு தலித். அவருடைய அணியிலிருந்த சாதி இந்துக்கள் முதலில் அவரை தங்களோடு சமமாக நடத்தவில்லை. ஆனால் ஒரு போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய பிறகு யானையின் மீதேற்றி ஊர்வலம் வரச் செய்தனராம். இந்தத் தகவல்களை எல்லாம் ராமச்சந்திர குஹாவின் A Corner of a Foreign Field என்ற புத்தகத்திலிருந்து தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘கேட்டதும் கண்டதும்’ என்ற கட்டுரையில் சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் கிரிக்கெட்டை மக்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று ‘இரண்டு முறை விழுந்த அடி’ என்ற கட்டுரையைச் சொல்வேன். சுவாரசியமான கட்டுரைத் தலைப்பு. இந்தக் கட்டுரை, 1978ல் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரைப் பற்றியது. நடந்து கொண்டிருக்கும் ஒரு போட்டியைப் போல ஒரு சுவாரசியத்தை எழுத்திலேயே கொண்டு வந்துவிடுகிறார் கிருஷ்ணன். இன்றைக்கு கிரிக்கெட் போட்டி நடத்துபவர்கள் இந்தக் கட்டுரைகளைப் படிக்க வேண்டும். கிரிக்கெட்டிற்கென்றே ஒரு கவர்ச்சியிருக்கிறது; இந்த டமுக்கு டப்பா டான்ஸ்கள் எல்லாம் தேவையே இல்லை.
இரண்டாம் உலகப்போர் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தது இன்னமும் நினைவிருக்கிறது. ஹிட்லரின் படைகள் ரஷ்யாவின் மீது படையெடுக்கும் போது, அவர்களுக்கு குளிர் பெரிய தடையாக இருந்தது. இந்தக் கடும் குளிராலேயே ஹிட்லரின் படை வீழ்ந்தது என்றே புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும். ’ஸ்டாலினுக்குத் தெரியும்’ என்ற கட்டுரையில் Alexander Werth எழுதிய Russia at War என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசும் போது, கிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், “ரஷ்யக் குளிரே அதன் வெற்றிக்குக் காரணம் என்ற கூற்றை வலுவாக மறுக்கும் ஆசிரியர், குளிர் இரு தரப்புக்கும் ஒன்றுதான், ரஷ்ய வீரர்களுக்கும் குளிர் உறைக்கும் என்கிறார்.” ஜெர்மனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரஷ்ய தொழிற்சாலைகளை யூரல் மலைகளுக்கு அந்தப்புரம் இடம் மாற்றியது அவர்களுக்கு அதிக பயனைக் கொடுத்திருக்கிறது.
இதைப் போன்று பல புதிய தகவல்கள் புத்தகம் முழுவதும் கிடைக்கின்றன. சுபாஷ் சந்திர போஸின் மூத்த சகோதரர் சரத் போஸைப் பற்றி இந்த புத்தகத்தில் தான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன். 'அக்கிரகாரத்தில் பெரியார்’ கட்டுரை மொத்தமாகச், பெரியார் இங்கு செய்துவைத்த மாற்றங்களைப் பற்றிச் சொல்கிறது. வடக்கே இன்னும் நிலைமை மாறவில்லை என்கிறார் ஆசிரியர். இங்கே மாறியதற்கு பெரியாரைத் தவிர யாரைக் காரணமாகச் சொல்வது? ஓவியங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இந்த புத்தகத்தில் ஒரு கட்டுரையின் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் முழுமையானவை. அந்தரத்தில் தொடங்கி அந்தரத்தில் முடியாமல், எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் ஒருவித முழுமையுடன் அவை இருக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தரப்பட்டுள்ள மேற்கோள்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. தமிழில் படிக்கும் போது இடையில் ஆங்கில மேற்கோள்கள் வந்தால் அதை விட்டுவிடும் வழக்கம் இப்படிச் செய்வதால் ஒழியும். அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்பைப் பற்றிய கட்டுரையில், எடுத்துக்காட்டியிருக்கும் ஒவ்வொரு மேற்கோளுக்கும் பக்க எண் தந்திருக்கிறார். இது மிகுந்த அக்கறையோடு செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
தமிழில் வரும் தொலைக்காட்சிச் தொடர்கள் பற்றிய சீற்றமிகு கட்டுரையில், கிருஷ்ணன் இப்படி எழுதுகிறார்,
“மனித மனம் எப்போதும் அழகை, உண்மையைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அழுகி, நாற்றம் பிடித்தவைகளையும் அது சில சமயம் நாடுகிறது. கனவு காண்கிறது. பொய்யின் பல வண்ணங்களில் தன்னை இழக்கிறது. அதீதமான கற்பனை உலகில் சஞ்சரிக்க நினைக்கிறது.”
மேலே கிருஷ்ணன் சொல்வது பெரிய உண்மை. நாம் பல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்களின் தோல்வியை விரும்புகிறவர்களாக இருக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சாடிஸ்ட் இருக்கிறானோ என்ற சந்தேகம் வருகிறது. மனிதத்தன்மையோடு இருக்க நல்ல விஷயங்களை நாடுவது அவசியம். நல்ல உணவு, நல்ல வைன், நல்ல சூழல், நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல கவிதை, நல்ல மனிதர்கள், நல்ல பழக்கங்கள், நல்ல புத்தகம் இப்படி நிறைய இருக்கிறது. நல்ல விஷயங்கள் உண்மையிலிருந்து விலகி இருப்பவை அல்ல. ‘எது நல்லது என்று எப்படித் தெரிந்து கொள்வது?’ என்று ஒருமுறை நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் ரமணரின் கருத்து ஒன்றைச் சொன்னார், “யாருடைய கருத்து உனக்கு மன நிம்மதியையும், தெளிவையும் தருகிறதோ அவர் பேசுவதே உண்மை”. அப்படிப் பார்க்கையில் இந்த புத்தகம், நல்ல புத்தகம். நல்லதை நோக்கிய தேடலுக்கு அழைத்துச் செல்லும் புத்தகம்.
அக்கிரகாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன், கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், 214 பக்கங்கள், விலை ரூ.175, இணையத்தில் வாங்க
பிரமாதமாக இருக்கிறது இந்த கட்டுரை, புத்தத்தைப் பற்றிய ஆர்வத்தை தூண்டிவிட்டது. நன்றி!
ReplyDeleteநன்றி சிவா!
Deleteசிறப்பானதொரு முன்னுரையை வெளியிட்டிருப்பது வரவேற்கத் தக்க முயற்சி! வாரம் ஒரு முன்னுரை கூட வெளியிடலாம். முடிந்தால் காலச்சுவடு க்ளாசிக் வரிசை வெளியீட்டில் 'அம்மா வந்தாள்' - தி.ஜானகிராமன் நாவலுக்கு 'மீறலின் புனிதப் பிரதி' என்ற தலைப்பில் சுகுமாரன் எழுதியிருக்கும் 9 பக்க முன்னுரையை வெளியிடுங்கள்.
ReplyDeleteநன்றி...
Deleteஆனா இதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டுமே!
கேட்டுப் பார்க்கிறோம்.
தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள்.
மன்னித்துக்கொள்ளுங்கள்... http://omnibus.sasariri.com/2013/07/blog-post_24.html என்ற 24 ஜூலை பதிவில் வெளியிடவேண்டிய கமெண்ட்டை இந்தப் பதிவில் தவறுதலாக வெளியிட்டதற்கு! மற்றபடி இந்தப் பதிவிலும் மாயக்கூத்தன் பி.ஏ.கிருஷ்ணனின் புத்தகத்திற்கு ஒரு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார்.
Deleteமுன்னுரை வெளியிடுவதற்கான உரிமையைப் பொருத்தவரை, முன்னுரையை இணைய தளத்தில் வெளியிடுவது புத்தகத்தைப் பலரிடம் அறிமுகப்படுத்தி, அவர்களில் சிலராவது வாங்கிப் படிக்கவும் வழிவகுக்கும் என்பதால் பதிப்பகங்கள்-முன்னுரை தந்தவர்கள் பெருமளவில் சம்மதிக்கக்கூடும்.
உங்கள் ஆதரவான பதிலுக்கு மிக்க நன்றி.
அதனாலென்ன!
Deleteபல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்களின் முன்னுரைகள், தரமான மதிப்பீடுகள், ஆசிரியர் பேட்டிகள் என்று ஒரு பொது தளம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் இதையெல்லாம் பெரிய அமைப்புகளே செய்ய முடியும். சாதாரணர்களான நாம் கனவு கண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான் :)
நன்றி.
அம்மா வந்தாள் முன்னுரையை வெளியிடலாம் என்ற சரவணனின் ஆலோசனைக்கு நன்றியும் இசைவும்.பதிப்பகத்தினருக்கு ஒரு வார்த்தை தெரிவிட்து விட்டு வெளியிடலாம்.
Deleteவாசிக்கத்தானே எழுத்துக்கள்!
சுகுமாரன்
நன்றி ஐயா.
Deleteதாங்கள் அனுமதி கொடுத்ததற்கு நன்றி.
நாங்கள் பதிப்பாளரிடம் அனுமதி கேட்டு, மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். அவர், இசைவு தெரிவித்தவுடன் பதிப்பித்துவிடுகிறோம்.