Name :The Duel and other stories
Author : Anton Chekhov
Translated by : Ronald Wilks
Publishers : Penquin group
To Buy : Amazon
ஆன்டன் செகாவ் (Anton chekhov) என்ற
பெயரை, இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதில்லை. செகாவின் கதைகள் இன்னும்
ஐரோப்பா-அமெரிக்காக்களில் நாடங்களாக அரங்கேற்றப்படுகின்றன என்றும் நாலைந்து
இடங்களில் செகாவின் கதைகள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் -
அ.முத்துலிங்கத்தின் “அங்கே இப்ப என்ன நேரம்” புத்தகத்தில் செகாவ் பற்றி
எழுதியிருப்பார். இரண்டு வாரம் முன்பு லெண்டிங் லைப்ரரி சென்றபோது செகாவ்
புத்தகம் எடுத்து வந்ததற்கு அதுவே காரணம்.
பொதுவாகவே மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை கிடையாது, நூலாசிரியரின் உண்மையான எண்ணங்கள்/கருத்துகள்
மொழிபெயர்ப்பில் காணமல் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ரோனல்ட் வில்க்ஸ்
என்பவர் இந்த புத்தகத்திலுள்ள ஆறு கதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
ரொம்ப ரொம்ப எளிமையான மொழிநடை, கடினமான வார்த்தைகள் ரொம்ப ரொம்ப குறைவு.
ரஷ்ய இலக்கியத்தை எளிமையாக மக்களுக்கு சொல்லணும் என்ற எண்ணத்தில் இப்படி
மொழிபெயர்த்தாரா, இல்லை ஆன்டன் செகாவின் கதைகளும் ரஷ்ய மொழியில் இவ்வளவு
எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டு இருக்குமா என்பதை மூல நூலையும் இந்த
மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள்தான் சொல்ல முடியும்.
மொத்தம் ஆறு கதைகள்- முதல் கதை மட்டும் ஒரு குறுநாவல்.
மீதி எல்லாம் சிறுகதைகள். இந்த ஆறு கதைகளும் 1891-1895ஆம் ஆண்டுகளில்
எழுதப்பட்டவை. இப்போது இந்தக் கதைகள் படிக்கும்போது ஏனோ எனக்கு
இவற்றின்மேல் பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்படவில்லை. இணையத்தில் ஆன்டன் செகாவ்
என்று தேடினால், ரஷ்ய இலக்கியத்தில் பெரிய இடம் வகிக்கிறார் என்பது
தெரிகிறது. இவர் சிறுகதைகள் இன்றும் பெரிய அளவில் பேசப்படுகின்றன. அவருடைய
ஆறு சிறுகதைகளை மட்டும் படித்துவிட்டு, அவரது எழுத்தைக் குறைகூறுவதோ-
புகழ்வதோ சரியான முறை கிடையாதுதான். ஆனால் என்ன செய்வது? வாசித்த
அளவில்தானே நாம் பேச முடியும்?
ஆன்டன் செகாவ் சிறுகதைகள் எழுவது பற்றி இப்படி
சொல்கிறார், “ ஒரு எழுத்தாளன் கதைகளுக்கு தீர்வு சொல்லக்கூடாது, ஆனால் ஒரு
நிகழ்வை ஆணித்தரமாகச் சொல்லி, அந்த உண்மையை வாசகன் எதிர்கொள்ள வைப்பதே
முறை”. இன்று பல கதைகள் இவரைப் பின்பற்றி இப்படிதான் எழுதப்படுகின்றன என்று
தெரிகிறது.
எல்லா கதைகளிலும் ரஷ்ய நாட்டு இயற்கையை மிக அழகாக
வர்ணிக்கிறார். அதே மாதிரி கதை மாந்தரை பற்றியும் அவர்களது மனநிலை,
அவர்களது எண்ணங்கள் என்று சொல்லிக்கொண்டே போகிறார். சில சமயம் அது எனது
பொறுமையும் சோதித்து விட்டது.
இந்த ஆறு சிறுகதைகளிலும் வருகிற ஆண் – பெண்
கதைமாந்தர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறார்கள். ஆண்கள் இரண்டு
மூன்று பெண்களை மணந்து விவாகரத்து ஆனவர்கள்- அதே சமயம் கல்யாணம் செய்யாமல்
ஒரு பெண்ணுடன் வாழ்கிறார்கள். இந்தப் பெண்கள் எல்லாம் கணவனுக்கு துரோகம்
செய்கிறார்கள். அதே மாதிரி கதைமாந்தர்களில் முக்கால்வாசி பேர்,
நகரத்திலிருந்து கிராமத்திருக்கு குடிபெயர்ந்தவர்கள்- இல்லாவிட்டால்,
நகரத்திலிருந்து கிராமத்துக்கு சில காலம் பொழுதுபோக்க வருபவர்கள்.
முதல் குறுநாவலில் கலாசார சீர்கேடு பற்றி பேசுகிறார்
செகாவ். கதை நாயகன் அரசு வேலையில் இருந்துகொண்டு வேலை செய்யாமல்,
சீட்டாடிக் கொண்டும் குடித்துக் கொண்டும், வெட்டிக் கதை பேசிக்கொண்டும்
அலைகிறார். திருமணமான ஒரு பெண்ணுடன் வாழ்கிறார். இந்த நாயகன் எப்படி
ஆன்மபலத்தால் தனது கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடுகிறார் என்பதே
கதைக்கரு. அது என்ன அவ்வளவு சுலபமான வேலையா?!
“என் மனைவி” சிறுகதையில் தனது மிகப்பெரிய கனவுகளுடன்
(Megalomaniac) வாழும் ஒருவர், தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார்.
அவர் வாழும் பகுதியில் பஞ்சம் அதிகமாக இருக்க, தனது புகழைப்
பெருக்கிக்கொள்ள அந்த மக்களுக்கு உதவ எண்ணும்போது மனைவி மூலம் தனது
பலவீனத்தை உணர்கிறார்.
Terror சிறுகதை கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி –
நண்பன் மனநிலையை ஆராய்கிறது. Murder சிறுகதை ரஷ்யாவில் அந்த சமயத்தில்
மக்களுக்கு மத வெறியும் அதனால் ஏற்படும் படுகொலைகள் பற்றியும் பேசுகிறது.
“The two volodyas’ சிறுகதையில் பணத்தின் மேல் பற்றுகொண்டு வயதான ஆணை
திருமணம் செய்து கொள்ளும் பெண், கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு
இளைஞனுடன் உறவாடுகிறாள். அதே சமயம் அந்த பெண்ணின் மிக வேகமாக மாறும்
மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகவும் கதை அமைந்துள்ளது. “The black Monk”
சிறுகதை கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் தத்துவ பேராசிரியரின் மனநோய்
பற்றி ஆராய்கிறது.
இந்த ஆறு சிறுகதைகளிலும் வருகிற கதைமாந்தரின் எண்ண
ஓட்டம் ரொம்ப கூர்மையாக சொல்லப்பட்டுள்ளது, அதுவே சிறுகதையின்
பலம்-பலவீனம். இதே கருவில் உள்ள பல சிறுகதைகளை ஏற்கனவே படித்துவிட்டதாலோ,
இல்லை இது மாதிரியான நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே ஒரு புரிதல் உள்ளதாலோ
என்னவோ, கதைகள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. ஆன்டன் செகாவ் எழுதியதைப்
படிக்க வேண்டும் என்ற ஆசைக்காக மட்டும் இக்கதைகளை வாசிக்கலாம், மற்றபடி
பெரிதாக ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment