பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
அலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.
பயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.