Remember them all. They had no choice.
- Animals in War, Jilly Cooper.
கானுயிர் வாரத்தை முன்னிட்டு ஆம்னிபஸ் நண்பர்கள் விலங்குகள் தொடர்பான புத்தகங்களை இந்த வாரம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். துணி உலர்த்தும் கொடியில் தொங்கும் பேண்ட், சட்டையைப் பார்ப்பதோடு முகமறியா பக்கத்து அறைவாசியின் தொடர்பு முடிந்துவிடும் இக்காலகட்டத்தில் மின்சாரக் கம்பிகளில் தொங்கும் குருவிகளைப் பற்றியும், தெருவோர நாய்களைப் பற்றியும் நமக்கென்ன அக்கறை இருக்கப்போகிறது. நமது அக்கறைகளும் கவலைகளும் திசையறியாமல் சிதறிப்போகும் காலகட்டத்தில் விலங்குகள் பற்றி நாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது?
யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த விலங்குகள் பற்றிய புத்தகத்தை இன்று பார்க்கலாம். Animals in War எனும் புத்தகத்தை எழுதிய ஜில்லி கூப்பர் ஒரு நாவலாசிரியர். போர் சம்பந்தமான புத்தகளைப் வெளியிடும்பதிப்பாளரின் மனைவி. இந்த புத்தகம் மிகவும் வரவேற்பை பெற்றதும் Animals in War என்று ஒரு தன்னார்வக் குழு ஒன்றை அமைத்து நடத்திவருகிறார். பொதுவாக வீட்டு நாய்களில் மேல் இருக்கும் மேலோட்டமான அக்கறை மட்டுமே தனக்கு ஆரம்பத்தில் இருந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், இரண்டாம் உலகப் போரில் விலங்குகளின் பங்கு பற்றிப் படித்தபின் தனது கண்ணோட்டத்தில் ஒரு மாறுதல் உருவானதாக முன்னுரையில் எழுதியுள்ளார். யுத்தங்களில் பங்கு பெற்ற அனைத்து மிருகங்களையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும் - ஏனென்றால் மனிதனின் அடிமையாக இருந்த அவற்றுக்கு அதைத் தவிர வேறு வழி இல்லை. யுத்தங்களில் பங்கு பெற்றாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் அவை இருந்தன. ஆனால் யுத்தங்களே நடக்காமல் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு இருந்திருக்குமே! அந்த ஒரு காரணத்துக்காகவேணும் நாம் விலங்குகளை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று நேற்றல்ல, தன்னைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்துமே தனக்கு எதிரி என அஞ்சத்தொடங்கிய நாட்களிலிருந்தே மனிதன் விலங்குகளை அடிமைப்படுத்தத் தொடங்கினான். குகை மனிதனாகவும், வேட்டை சமூகத்தின் தலைவனாகவும் விலங்குகள் அவனுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்திருக்கிறது. குறிப்பாக வேட்டையாடுவதற்கும், வியூகம் அமைக்கவும் விலங்குகளை பல காலங்களாக உபயோகித்திருக்கிறான். விலங்குகளுக்கு சூஷுமமான நுண்ணறிவு உண்டு என உணர்ந்து கொண்ட நாள் மனிதனின் வாழ்வில் ஒரு பொன்னாள். தனது புலன்களுக்கு அப்பால் நடக்கும் விஷயங்களை தன்னால் உணர முடியாது; ஆனால் விலங்குகளுக்கு இயற்கையில் இருக்கும் நுண்ணுணர்வு மூலம் எதிர்காலத்தில் வரும் சிக்கல்களைக் களைய முடியும் என அறிந்துகொண்டான். காடுகளில் வாழ்ந்த போது இயற்கை சீற்றங்களையும், எதிரிகளின் அருகாமையையும் இதன் வழியாகவே உணர்ந்தான். வாழை மரம் போல, தனக்குத் தேவையிருந்தால் எல்லா விதங்களிலும் அவற்றைப் பயன்படுத்தத்தொடங்கினான். நுண்ணுணர்வுள்ள சாதுக்களை தனது இருப்பிடப் பிராணியாக வைத்துக்கொண்டான். அவற்றைக் கொண்டே பிற விலங்குகளை தனது வயிற்றுக்காக வேட்டையாடினான். மெல்ல சாத்தியங்கள் பல்கிப் பெருக விலங்குகளின் மீதேறி வேட்டையாடத்தொடங்கினான்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் நடந்த யுத்தங்களில் தொடங்கி இன்று நடந்துகொண்டிருக்கும் யுத்தம் வரையில் விலங்குகள் எப்படி பயன்படுத்தப்பட்டன என இந்த நூலில் மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது. சில நிகழ்வுகள் நமக்கு மகிழ்வூட்டக்கூடியவை, ஆனால் பெரும்பாலானவை மிகுந்த துயரமானவை. தனது ஆளுகைக்குள் எவரையும் கொண்டு வருவதற்கு மனிதன் எடுத்தாளும் தந்திரங்களும், புத்திசாலித்தனங்களையும் என்னவென்று சொல்வது? ஜில்லி கூப்பர் சொல்வது போல இந்த விலங்குகளுக்கு வேறு வழி இல்லை, யுத்தத்தில் பங்கு பெறுவதற்கு கட்டாயப்படுத்தப்படும் வீரர்கள் போல இவையும் ஊமைகளே.
மனிதன் போர் புரியத் தொடங்கிய காலம் முதல் குதிரை அவனுக்கு போர் வாகனமாக இருந்துவருகிறது. இலியட் போன்ற கிரேக்க புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் என நம் கைக்குக் கிடைக்கும் பண்டைய காவியங்கள் அனைத்திலும் குதிரைகள் போர் வாகனமாக இருந்திருக்கின்றன. கடும் போர் நடக்கும் சமயங்களில் அவைகளுக்குத் தேவையான சாப்பாடு, சிகிச்சை பற்றி இரண்டாம் உலகப் போர் வரை நாம் பெரிதும் கவலை கொண்டதில்லை. இலியட்டில் வரும் ஒரு போரில் குதிரைகள் லட்சக்கணக்கில் செத்து மடிகின்றன. ஆனால் அந்த நேரத்தில் போர் வீரர்களுக்கு இருக்கும் கவலையெல்லாம் எப்படி இத்தனை குதிரைகளை எரிக்கப்போகிறோம் என்பதாக இருக்கிறது. உக்கிரமான போர்முனைகளில் கூடத் தங்கள் எஜமானர் வீழ்ந்தபின்னர் அவருடனே சாகும்வரை இருக்கும் குதிரை பற்றியும், போரில் காணாமல் போன தனது எஜமானரைத் தேடி பல இரவுகளும் பகல்களும் அலைந்த குதிரை பற்றியும் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கின்றன. கடும் பயிற்சிகளினாலும், இயல்பாகவே குதிரைகளுக்கு இருக்கும் உடல்வலு காரணமாகவும் பனி, மழை, உணவு பற்றாக்குறை, வியாதி எனும் பெரும் இன்னல்களுக்குக்கிடையே அவை சமாளித்திருக்கின்றன.
உடல் வலிமை போதாது என உணர்ந்த மனிதன், அவற்றை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். தங்கள் எஜமானர்களோடு நன்கு பழகிய குதிரைகள் உடல்மொழியின் மூலம் பேசத்தொடங்கின. முதல் உலகப் போரில் பங்குபெற்ற ஒரு குதிரை எதிரி நாட்டு விமானம் பல மைல்கள் தள்ளி வருவதற்கு முன்னர் தனது எஜமானரிடம் உணர்த்திவிடுமாம். குதிரைகளுக்கு இப்படிப்பட்ட நுண்ணுணர்வு இருப்பது போரில் மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. அதே சமயம், நீண்ட தூரப் பயணங்களுக்கு வண்டிகளை உபயோகப்படுத்தத் தொடங்கிய பின்னர் குதிரைகள் தேவைப்படாது என நினைத்து விற்றுவிட்ட ஜெர்மன், இங்கிலாந்து படையினர் குளிர் காலங்களில் மிகவும் திண்டாடினார்கள் என்றும், ஆப்ரிக்காவிலிருந்து நல்ல ஜாதிக்குதிரைகள் வாங்கினர் என்றும் முதல் உலகப் போர் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாதக்கணக்கில் நடக்கும் யுத்தங்களை குதிரைகளால் தாக்குபிடிக்க முடிவதில்லை - அந்த சமயத்தில் படையினருக்கு உணவாகவும் மாறிவிடுகின்றன.
நேரடியாக யுத்தங்களில் பங்குபெறாவிட்டாலும் நாய்கள் லட்சக்கணக்கில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நாய்களின் மோப்ப சக்தியினால் எதிரிகள் வைத்திருந்த பலவகையான கன்னிவெடிகளை கண்டெடுத்துள்ளன. மெட்டல் டிடெக்டர் எனும் கருவியால் ப்ளாஸ்டிக் மற்றும் தோல் பைகளில் இருக்கும் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நாய்கள் பல வகையான பொருட்களையும் கண்டுபிடிக்கும் சக்தி கொண்டவை என்பதால் போரில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிகமான வெடிகளை விரைவில் கண்டுபிடித்து விருதுகளை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்ட ‘பழுத்த’ நாய்களும் இதில் அடக்கம். இது மட்டுமல்லாது, குண்டுகளில் இடிந்த கட்டிடச் சிதிலங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட மக்களையும் நாய்கள் கண்டுபிடித்துவிடும் என்பதால் போர் நடந்துமுடிந்த இடங்களிலும் அவைகளுக்கு மவுசு அதிகம்.
பல சமயங்களில், மண்ணுக்கும் கல்லுக்கும் அடியில் மனிதர்கள் கிடக்கிறார்கள் என்பதால் அந்த இடத்திலேயே நாய்கள் நகராமல் நின்றுகொண்டிருக்குமாம் . நாய்களின் திறனுக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அவை உருப்படியாகத் தொடர்ந்து கண்டுபிடிக்க பூஸ்டாகவும் இருக்கும் என்பதால் அவற்றின் எஜமானர்கள் குறிப்புகளை அலட்சியம் செய்வதில்லை. இப்படி பல சந்தர்ப்பங்களில் அடியில் உயிரோடு புதைந்த பல குழந்தைகளை கண்டுபிடித்துள்ளதாக ஜில்லி குறிப்பிடுகிறார். ஒரு இடத்தில் இந்த நிகழ்வைக் குறிப்பிடும்போது - அப்படி வெளியே எடுக்கப்படுபவர்கள் உயிரோடு இல்லாத பட்சத்தில், நாய்கள் அவர்களது முகத்தை நக்கி குணப்படுத்தப்பார்க்கும் என எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு பெரும் மனநெகிழ்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் இந்த நாய்களின் பயிற்சி மிக ரசமானதொன்றும் இல்லை. குறிப்பாக, போர் காலங்களில் வீட்டுப் பிராணிகளைக் கூட அரசு கட்டாயப்படுத்தி எடுத்துச் சென்று பயிற்சி அளிக்கும். சாப்பாடு இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இருப்பதுதான் முதல் பயிற்சியே. இப்படியாக பலவகையான பயிற்சிகளுக்குப் பிறகே சேகரித்த நாய்களிலிருந்து பல தேர்ந்தெடுக்கப்படும்.
பல சமயங்களில் குழந்தைகள் தங்கள் நாய்களை விட்டுவிடுமாறு அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர் - அவற்றைப் படிக்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. குறிப்பாக ஒரு கடிதத்தில், எட்டு வயது சிறுமி எழுதுகிறாள் ‘போன வருடம் என் அப்பாவைக் கொண்டுபோனீர்கள். இந்த வருடம் என் செல்ல நாய் ராபி. எனது குடும்பத்திலிருந்து இரு உறுப்பினர்களை நாட்டு சேவைக்காக அனுப்பியிருப்பதற்குப் பெருமை படவேண்டும் என அம்மா சொல்கிறாள். அது சரிதான். ஆனால் ராபிக்கு குறிப்பிட்ட வகை பிஸ்கெட்டை தினமும் கொடுக்கவும்’.
யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் நாய்களைக் கொண்டு மின் கம்பிகளையும், முகாம்களையும் அமைத்துள்ளனர். புது இடங்களுக்குப் போவதற்கு முன் பாராசூட் மூலம் நாய்களை கீழிறக்கி சோதனை செய்வதும் வழக்கம். யுத்த சமயத்தில் குண்டுகளை கண்டுபிடிக்கவும், எதிரி வாகனங்களை மோக்க சக்தி மூலம் முன்கூட்டியே அறியவும், இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் மக்களைக் காப்பாற்றவும், சில ரகசிய அறிவிப்புகளை பரிமாறிக்கொள்ள உளவாளியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பொதுவாக விஸ்வாசமுள்ள பிராணிகளான இவை, போர் சமயத்தில தனது அடிபட்ட எஜமானரை மிக அரவணைப்போடும் கவனிப்போடும் பார்த்துக்கொள்ளும் என ஜில்லி குறிப்பிடுகிறார்.
குதிரை, நாய்கள் தவிர ஆசிய நாட்டுப் போர்களில் அதிகம் பங்குபெற்ற விலங்கு யானையாகும். நீண்ட தூரங்களைக் கடக்க யானைகளால் முடியாது என்றாலும், தங்களது பலத்தினால் எதிரிகளிடமிருந்து தங்கள் எஜமானரைக் காக்க அரண் அமைக்க மிகவும் பயன்பட்டிருக்கின்றன. உயரத்தில் வீரர்கள் உட்காருவதால் எதிரிகளை மிக எளிமையாகத் தாக்க முடிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, யானை மீதமர்ந்து சண்டை போடும் வீரனை எதிர்ப்பவன் ரெண்டு எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மிகவும் புத்திகூர்மையுள்ள பிராணி என்பதால் போர் சமயத்தில் மனிதன் சிந்திக்காத பல தீர்வுகளைத் தந்திருப்பதாக ஜில்லி குறிப்பிடுகிறார். வெட்டப்பட்ட மரங்களை இடமாற்றுவதற்கும், மிகக் கனமான சாமான்களையும் சாப்பாட்டுப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்பட்டிருக்கிறது. ஒரு தேர்ந்த செஸ் ஆட்டக்காரனைப் போல, எதிரியைவிட பல கட்டங்கள் முன்கூட்டியே யானையால் சிந்திக்க முடியும் என ஜில்லி எழுதுகிறார். இதனால் போரில் பல தந்திரமான பிரயோகங்களை உபயோகப்படுத்தி அடிபட்ட தங்கள் எஜமானர்களை மீண்டும் கூடாரத்துக்குக் கூட்டி வரமுடிந்திருக்கிறது.
பறவைகள், கோவேறுக் கழுதை, பனிப்பிரதேசங்களில் காட்டு மான்கள் என மனிதன் தனது யுத்தகாலத்தில் பயன்படுத்தாத விலங்குகளே இல்லை என நினைக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. Canary எனக் குறிப்பிடும் சிறு குயில்களைக் கூட அவன் விட்டுவைக்கவில்லை. அவற்றின் சக்தி வாய்ந்த நுகர்வுத் தன்மையால் விஷவாயுக்களை உடனடியாகக் கண்டுபிடித்துவிட முடியும். எதிரிகளின் இருப்பிடங்களைக் கைபற்றி உள்ளே செல்லுமுன் குயில்களை முதலில் அனுப்புவது வாடிக்கையாம். காதலுக்குப் புறா தூது அனுப்புவது போல போர் காலங்களில் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள புறாக்களை அனுப்பியுள்ளனர். பருந்துகளிடம் கடிபட்டு தப்பித்த நிலையிலும் புயல் மழை பாராது செய்திகளை சேர்த்துவிடுமாம்.
இத்தனை உபயோகங்களைப் பெற்றுக்கொண்டாலும் மனிதனின் நிர்தாட்சண்யமற்ற தன்மையாலும், தன்னகங்காரத்தினாலும் மனிதன் கையில் கிடைத்த பூமாலையாக மிருகங்கள் இருந்துள்ளன. தனது சொந்த மகனைப் பிரிந்த சோகத்தைப் போல தாங்கள் பயிற்சி கொடுத்த விலங்குகளைப் பிரிய மனமில்லாமல் இருந்த அதிகாரிகளின் கதை ஏதோ ஒன்றிரண்டு தான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால், எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் அவர்கள் உபயோகித்துக்கொண்டுவிடுவரே என பயந்து ஆயிரக்கணக்கான குதிரைகளை தீயிலிட்டு அழித்தது பிரான்ஸ் நாட்டு ராணுவம், லட்சக்கணக்கான புறாக்களைக் கொன்றது ஜெர்மன் ராணுவம், அரைகுறையாக அடிபட்டு சாகக்கிடந்த குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் எகிப்தியர். RSPCA, PSAD போன்ற தன்னார்வுக்குழுவினரின் செயல்பாடுகளால் இரண்டாம் உலகப் போரின் போது விலங்குகளுக்கான மருந்துகளும், மருத்துவர்களும் போர் நடக்கும் இடங்களுக்குக் செல்லவேண்டும் எனும் உத்தரவு போடப்பட்டது. அதுவரை நமது அகங்காரத்தினாலும், அளவுக்கதிகமான ஆசையினாலும் பலகோடி விலங்குகள் போரில் மட்டுமே அழிக்கப்பட்டிருக்கின்றன.They had no choice.
கானுயிர் விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. அதை நம் பக்கம் இழுத்து அரவணைப்பது புதைமணலில் சிக்கிய யானையை இழுப்பது போலத்தான். ஏதோ வேற்றுகிரகவாசியைப் போல பெரும்பான்மையான விலங்குகளைப் பற்றி நாம் ஆச்சர்யத்தோடு அறிந்துவருகிறோம்.
நண்பரிடம் பேசும்போது, விலங்குகளைப் பற்றி பிழியப் பிழிய பொலம்பலாக ஏன் கட்டுரை எழுத வேண்டும் எனக்கேட்டார்.
கானுயிர் வாரம் என ஏன் கொண்டாடவேண்டும் என்பதில் விடை இருப்பதாகத் தோன்றியது. பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் நாம கொண்டாடும் எல்லா நாட்களும் ஒரு நினைவோட்டத்துக்காக மட்டுமே. யோசித்துப் பார்த்தால் குழந்தைகள் நாள், பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் எல்லாமே நம்முடைய மேன்மையை, வீழ்ச்சியை நினைவூட்டி 'பார் ஒழுங்கா இருந்துக்கன்னு' சொல்லத்தான் எனத் தோன்றுகிறது. கானுயிர் குறைகின்றது என்பது நாம் ஆசையாக எடுத்த முடிவு இல்லை, நாம் செய்யும் சுயநலமான காரியங்களின் விளைவு தான் இது. நேரடியா செய்யாததினால பலருக்கு அது உறுத்துவதில்லை. மா.கிருஷ்ணன், சலீம் அலி போன்ற ஆர்வலர்கள் சொல்லும்போதுதான் இது தெரிகிறது. அது போல நம் கண்ணுக்குத் தெரியாமல் நாம் செய்யும் அழிவுகளின் இன்னொரு பக்கம் தான் இவையெல்லாம். ஒரு கையில் இயற்கையை உபயோகப்படுத்திக்கொண்டே இன்னொரு கையில் அதை வளப்படுத்துவது எப்படி என்று பார்க்கும் அறிவியல் காலகட்டத்தில் கானுயிர் வாரம் ஒரு சிறு விழிப்புணர்வும், 'ஆமாம்ல பறவை சத்தம் கேக்கும் தாத்தா வீட்டுக் கொல்லைப்புறம் இப்ப ஏன் மெளனமா இருக்குன்னு' ஒரு நிமிஷம் நம்மைக் யோசிக்க வைக்கும்.
தலைப்பு - Animals in War
ஆசிரியர் - Jilly Cooper
இணையத்தில் வாங்க - Animals in War.
// அவைகளுக்குத் தேவையான சாப்பாடு, சிகிச்சை பற்றி இரண்டாம் உலகப் போர் வரை நாம் பெரிதும் கவலை கொண்டதில்லை//
ReplyDeleteசாமிஜி அற்புதமான பதிவு...மேலை நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை..இந்தியாவில் மானுட ஆயுர்வேதம் அளவிற்கே தொன்மையானது ஹய ஆயுர்வேதம்- குதிரை சிகிச்சை, மகாபாரதத்து சகாதேவன் அதில் முனைவர் என்று சொல்லப்படுகிறது. கஜ ஆயுர்வேதம் - பாலகாப்பிய சம்ஹிதை எனும் நூல் இதை பற்றி பேசுகிறது. இன்று வரை அஷ்ட சூரணமும், சியவன ப்ராஷமும் யானைகளுக்கு கொடுக்கப்படுகின்றன.