18ம் நூற்றாண்டு தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்கத்தக்கது. நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பத்தாண்டுகளில் நிகழத் தொடங்கின. 20ம் நூற்றாண்டின் மத்தியில் பிறப்பெடுத்த கணினித் தொழில்நுட்பம் இந்த வேகத்தை மேலும் பன்மடங்காக்கியது. இந்த 21ம் நூற்றாண்டில் மனிதன் தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிமையாகிவிட்டான் என்றால் அது மிகையாகாது.
தொழில்நுட்ப புரட்சி பிரம்மாண்டமான நகரங்களை உருவாக்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்களை நகரங்களில் கொண்டு குவித்துள்ளது. பாரம்பரியத் தொழில்கள் அழிந்து ஆண்களும் பெண்களும் இன்று புதிய புதிய தொழில்களிலும் சூழ்நிலைகளிலும் பணிபுரியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே பாரம்பரிய ஆண் பெண் உறவுகள் வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பொருள் தேடுவதில் நாம் அடைந்துள்ள மாற்றம் நம் கலாச்சாரம் என்று இதுவரை நாம் பொத்தி வைத்திருந்ததில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.
பெருநகரங்களில் மனிதன் ஒரு சிதறுண்ட வாழ்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் அதிக இளம் பெண்களை மிக அந்நியமான சூழ்நிலையில் அந்நிய ஆண்களின் மத்தியில் பணிபுரியும், வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனம் அதிகம் இருப்பினும் ஒரு சிறு உறவு வட்டம் அல்லது கிராமம் அளித்து வந்த பாதுகாப்பு முற்றிலும் தகர்ந்து பெண் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் அவசியத்தை உருவாக்கியுள்ளது.
பொருளாதாரமே அடிக்கட்டுமானம், கலாச்சாரம் மேல்கட்டுமானம்தான் என்ற மார்க்சிய கருத்துவாக்கத்தை இன்று நிகழும் மாற்றங்கள் நினைவு கொள்ள வைக்கின்றன. சிதறுண்ட வாழ்க்கை, அந்நியத்தன்மை, புதிதாகக் கிடைத்துள்ள பொதுவெளியில் தனியாக நடமாடும் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை ஒரு புது மாதிரியான யுவர்களையும் யுவதிகளையும் இன்று அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலும் உருவாக்கியுள்ளது. இவர்கள் இன்றைக்கு எழுதப்படும் தமிழின் தீவிர இலக்கியத்தில் சித்தரிக்கப்படுகிறார்களா?
மானுடம் என்றென்றும் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகளுக்கே நீண்டகால இலக்கிய மதிப்பு உண்டு எனினும் இன்று நம் கண் முன்னே நிகழும் மாற்றங்களும் இலக்கியத்தில் பதிவாவது மிக முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். அந்த வகையில்தான் அண்மையில் படித்த அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் என்னைக் கவர்ந்தன.