என்ன எழுதுவது என்று தெரியவில்லை...
ஆம்னிபஸ்சில் லாசரா. எழுதிய ‘அபிதா’ நாவலுக்கு இதற்கு முன்னமே ஒரு விமர்சனப் பதிவு வந்திருக்கிறது. நம்ம நட்டு ஏற்கனவே எழுதியது விமர்சனம் என்ற வகையில் நிச்சயம் வராது. புத்தகத்தைப் படித்தவுடன் தனக்குத் தோன்றிய நாற்பது வார்த்தைகளையும் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்களையும் காட்டி ஒரு வியப்புடன் அந்த பதிவை முடித்திருந்தார் நட்டு. லாசரா'வின் விவரணைகளுக்கு நம்மால் விமர்சனமெல்லாம் எளிதில் எழுத ஏலாது என்று சிலிகான் ஷெல்ப் அண்ணன்கூட சொல்கிறார். நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.
இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதித் தொடங்கிய அந்த மூன்று- நான்கு வார்த்தைகள் கூட நட்டு அந்த விமர்சனப் பதிவிற்குக் கொடுத்த தொடக்க வார்த்தைகளான அதே மூன்று-நான்கு வார்த்தைகள்தான்.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
எனக்கு அம்மாவின் வழியில் ஒரு கொள்ளுத் தாத்தா இருந்தார் - சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் அல்லது அதற்கு சற்றே முந்தைய காலகட்டத்தில்.
அவர் பெண் பார்க்கப் போய் இருக்கிறார்.
பார்த்த இடத்தில் இவருக்குப் பெண்ணை பிடிக்கவில்லை, அல்லது பெண் வீட்டாருக்கு இவரைப் பிடிக்கவில்லை. அந்த இடம் தட்டிப் போய் விட்டது.
அதன் பின் வேறொரு பெண்ணைப் பார்த்தார்,
மணந்தார். சில வருடங்களுக்குப் பிறகு இவர் மணந்த அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். அந்த மனைவியின் மூலமாக குழந்தைகள் ஏதுமில்லை.
இப்போது இரண்டாவது திருமணத்திற்கு வீட்டில் பார்த்தார்கள். ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறார்.
பார்க்கப்போன இடத்தில் தன் முதல் கல்யாணத்திற்கு முன்னதாகத் தான் பார்க்கப் போய், தட்டிப் போன இடத்தின் அதே பெண் நின்று கொண்டிருக்கிறார்.
இப்போது மணப்பெண்ணாக அல்ல; மணப்பெண்ணின் தாயாக.
அந்தப் பெண்ணை இப்போது இரண்டாம் மணம் புரிகிறார்.
அதாவது தான் முதன்முதலில் பார்த்த பெண்ணின் மகளை இப்போது இரண்டாவதாக மணமுடிக்கிறார்.
கேட்பதற்கு எந்த விதத்திலும் உவப்பாக இல்லாத ஒரு கதை இது. இல்லையில்லை கதை இல்லை; நிஜம்தான்.
என்றாலும் கேட்பதற்கு அத்தனை உவப்பாக இல்லை பாருங்கள். தர்க்கரீதியாக, நியாய ரீதியாக அல்லது தர்ம ரீதியாக ஏதும் கேள்விகள் இருந்தால் இங்கே விடை சொல்ல சொல்ல முகம் இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனாலும் நிஜக்கதை.
இந்தக் கதைக்கும் அபிதாவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. அபிதாவை வாசித்துவிட்டுத்தான் சொல்லுங்களேன்.
முன்னமே வாசித்தவர் என்றாலும் சொல்லுங்கள்.
அபிதாவில் லாசரா. சொல்லும் கதை ரொம்பச் சின்னது.
உண்மையாகப் பார்த்தால் இந்தக் கதையை ஒரு சிறுகதையாக கூட அவர் எழுதி இருக்க முடியும்.
ஆனால் சிறுகதையாக இதை எழுதி இருந்தால் அபிதாவிற்கு என்று தமிழ் நாவல் உலகில் ஒரு இடம் கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனின், அபிதாவின் விஷய கனம் கதையில் இல்லை. லாசரா'வின் விவரணையில் தான் இருக்கிறது.
கதை முழுக்கவே கதையின் நாயகன் பேசிக்கொண்டே நம்முடன் இருக்கிறார். நம்முடன் என்றா சொன்னேன்? இல்லை இல்லை...
தன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார். அந்தப் பேச்சின் விஷயங்கள்தான் ஒட்டுமொத்த அபிதாவுமே. கதையின் நாயகன் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் விஷயத்தில் ஓராயிரம் விஷயங்கள் உள்ளன. நான் படித்து விழி விரித்துப் புருவங்கள் உயர்த்தி வியந்தவைகள் பத்து அல்லது பதினைந்து விஷயங்கள் இருக்கக்கூடும்.
இந்தக் கதைக்கு விமர்சனம் எழுதும்போது இந்தக் கதைக்கான இணைப்பைத் தந்து ஒரு மணி நேரத்தில் படித்து விட முடியும் என்று எழுதியிருந்தார் நட்டு. நிச்சயம் ஒரு மணி நேரத்தில் படித்துவிடக்கூடிய அளவுதான் அபிதா நாவல். ஆனால் கதையின் நாயகன் பேசும் பேச்சும்,
விவரணைகளும் பல முறைகள் படித்து உள்வாங்கிக் கொள்ளத்தக்கது.
கமல்ஹாசனின் நகைச்சுவைத் திரைப்படங்களைப் போல லாசரா'வின் ஒரே படைப்பைப் பலப்பல முறைகள் படித்துக் கொண்டே இருக்கலாம் போல. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு பிம்பம் உங்களுக்கு வெளிப்படலாம்;
ஒவ்வொரு விஷயம் உங்களுக்கு விளங்கலாம்.
கதிரில் லாசரா 'சிந்தாநதி'
என்ற அனுபவத் தொடரை எழுதினார். உங்களுக்கு வாரம் ரெண்டு பக்கம் ஒதுக்கறேன், ஏதாவது எழுதுங்க, என்று ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார்.
ஆசிரியர் அறைக்கு நுழையும் முன் தினமணி கதிரில் லாசரா. எழுதிய சிறுகதைக்கு வந்த கடிதங்களை ஊழியர் ஒருவர் லாசரா. கைகளில் தருகிறார்.
"லாசரா என்னத்தை எழுதுகிறார்? ஒண்ணும் புரியலை.
தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது",
என்கிறது அவற்றுள் ஒரு கடிதம். அடுத்த நிமிடம், உங்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து இரண்டு பக்கங்கள், என்கிறார் ஆசிரியர்.
லாசராவின் தயக்கத்திற்கு
- "தலையைப் பிய்த்துக் கொள்வோர் பிய்த்துக் கொள்ளட்டும்.
புரிவோர்க்குப் புரியட்டும். புரியவில்லை என்றால்தான் என்ன கெட்டுப் போச்சு.
இரண்டு பக்கங்கள் தானே",
என்கிறார் ஆசிரியர்.
‘சிந்தாநதி’ தொகுப்பாக வெளிவந்த போது அதன் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் லாசரா - " புரிந்தது, புரியாதது என்ற இரண்டு நிலைகளும் தற்காலிகமானவை.
ஒருவருக்கு ஒருவகைப் புரிதல் இருக்கலாம். மற்றவருக்கு வேறொன்று.
அதே மனிதருக்கே வேறொரு சந்தர்ப்பத்தில் அதே விஷயம் வேறொன்றாகப் புரியலாம்."
உங்களுக்கு இது புரியவில்லையா? – “விட்டுத் தள்ளுங்கள் நட்டமில்லை” என்பதுதான் அது.
கதையைப் பாதி வாசித்துக் கொண்டிருந்த போது, இதை இன்னமும் யாரும் சினிமாவாக எடுக்க ஏன் முயலவில்லை என்று யோசித்துக் கொண்டேன்.
ஒருவேளை எடுத்து நமக்குத் தெரியாமற் போனதோ என்னவோ என்றும் எண்ணம். முழுக்க வாசித்தபின் தோன்றியது என்னவென்றால்,
இதையெல்லாம் சத்தியமாக எந்தக் கொம்பனாலும் படமாக்க முடியாது என்பதுதான்.
ருத்ரன் அபிதாவை நாடகமாக்க முயன்று படுதோல்வி கண்டதாகத் தெரிகிறது. நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார் ருத்ரன். ஆச்சர்யம் ஏதுமில்லை எனக்கு.
அப்புறம்... எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம்.
அபிதா வாசிக்காதவர் நீங்கள் என்றால் முதல் வேலையாக புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
முன்னமே வாசித்தவர் என்றால் ஃபேஸ்புக், வாட்சாப்புகளை கொஞ்சம் எறிந்து தொலைத்துவிட்டு இன்னொரு முறைதான் வாசியுங்களேன்.