ஜெயமோகனின் உலோகம் அவரது இணையதளத்தில் தொடராக வந்தபோது நான் ஏனோ வாசிக்கவில்லை. புத்தகமாக வந்தபின்னும் முதலில் வாங்கவில்லைதான்.
“இலங்கைத் தமிழருக்காய்க் குரல் கொடுக்கிறேன் என்பவர்களுக்கு, எது நடந்தால் என்ன என்று இருப்பவர்க்கு, குரல் கொடுக்க மாட்டேன் என்பவர்களுக்கு, தமிழர் நலனுக்காய் உழைக்கிறோம் நாங்கள் என்று மார்தட்டுவோருக்கு என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இலங்கையின் உண்மை நிலவரம் இங்கிருக்கும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது என்பது என் துணிபு” என்றார் அலுவலக நண்பர்.
”இப்போ என்ன திடீர்ன்னு இதைச் சொல்றீங்க?”, என்றவனிடம், “உலோகம் வாசிச்சேன்”, என்றார்.
“ஓ”
’உலோகம்’ வாசித்தால் உமக்கு அந்த இலங்கை அரசியல் பத்தி ஏதும் தெரியாவிட்டாலும் அகதிகள் பத்தி ஒரு அவுட்லைன் கிடைக்கும் பாருங்க”, என்றார்.
“வாசிக்கறேனுங்க”, என்றேன்.
"
அவங்க லைஃப் பத்தி தெரிஞ்சிட்டா, நம்ம பி.பீ.ஓ. லைஃப் பத்தி அதன் பிறகு நிச்சயம் குறை சொல்லமாட்டீங்க. வாழ்வாங்கு வாழறோமய்யா நாமெல்லாம்.
"
"மேனேஜரிசம் பேசறீங்களோ?"
“ஜெமோ வாசகர்தானே நீங்க? இன்னும் வாசிக்கலைன்றீங்க?
“வாசிக்கலாமுங்க. புக்கு எங்க போயிடப் போவுது”
பின்னொரு நாளில் ஒரு 'கான்ஃபரன்ஸ் கால்' வேளையில் நம் நண்பருக்கும், மறுமுனையில் மேற்கு தேசமொன்றில் வசித்த புலம்பெயர்ந்த ஒருத்தருக்கும் நிகழ்ந்த முடிவுறா ஒரு விவாதம் என்னை உடனடியாக உலோகம் வாங்கச் செய்தது.
“உங்களுக்கு என்ன தெரியும்னு அந்த நாவலைக் கொண்டாடறீங்க”
“எதுவுமே தெரியாததாலதான் கொண்டாடறேன்னு வெச்சுக்கோங்களேன்”
“எதுவும் தெரிஞ்சா நிச்சயம் கொண்டாடமாட்டீங்க”
“சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கறேன்”
“இல்லை. உங்க மாதிரி ஆசாமிக்கு புரிய வைக்கறது அத்தனை எளிமையில்லை”
“பிறகு எதுக்கு உங்களுக்கு என்ன தெரியுமுன்னு கேக்கறீங்க”
“இல்லை. நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் கோ பேக் டு தி பிஸினஸ். டெல் மீ டிசம்பர் நம்பர்ஸ். லெட்ஸ் கோ த்ரூ”
நான் சிரித்துக் கொண்டேன்.
உலோகம்.....!
அயல்தேசத்து நண்பர் சொன்னதுபோல, ’உலோகம்’ நிஜத்தின் பிம்பம் துளியும் இல்லாது முழுக்க முழுக்க புனைவாகவே கூட இருக்கலாம். எனினும் நம் நண்பர் சொன்னதுபோல் அகதி ஒருத்தனின் வாழ்வின் அவுட்லைனையேனும் குறைந்தபட்சம் நமக்குத் தருகிறது. தீவிரமான, அழுத்தந்திருத்தமான ஒரு அவுட்லைன்.
எனக்குத் தெரிந்த த்ரில்லர் நாவல்கள் வேறுவிதமானவை. புலரும் நல்காலைப் பொழுதின் புள்ளினங்களின் சங்கீதத்துடனான இனிமை போல சந்தோஷமாகக் கதை தொடங்கும். இரண்டொரு அத்தியாயங்களுக்குள் ஒரு கொலை அரங்கேறும். டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்துபவர் கதாநாயகராக கதையுள் நுழைவார். அவர் காதலியோ அல்லது மனைவியோ அவருடன் எப்போதும் உதவி டிடெக்டிவாக வளைய வருவார். கதைமாந்தர் மூவர், நால்வர் மீது சந்தேக நிழல் இருக்கும். ஒவ்வொரு சந்தேக முடிச்சாக நம் கதாநாயகர் அவிழ்க்க இறுதி அத்தியாயத்தில் கொலையாளி அடையாளம் காணப்படுவார்.
உலோகம் அந்த வகையிலான பத்தோடொன்றான த்ரில்லர் அன்று. துப்பாக்கியில் பொருத்தப்பட்ட குண்டு போன்று தனக்குத் தரப்பட்ட ஒரு குறிக்கோளுடன் இந்தியா வந்து இறங்குபவன் சார்லஸ் என்கிற சாந்தன். தன்னை இயக்கும் கை எந்தக் கை என்பதை அறியாத குண்டு அவன் என்பதுதான் ஒட்டுமொத்தக் கதையின் த்ரில்லையும் நம்மிடம் தக்க வைக்கும் காரணி.
சார்லஸ் செய்யும் கொலையில் துவங்குகிறது கதை. பொன்னம்பலத்தார் என்னும் பிரபல மனிதரைக் கொல்கிறான் சார்லஸ். கதை பின்னோக்கிச் செல்கிறது. ”கிளம்பு” என்றொரு ஒற்றை வார்த்தை ஆணை கிடைக்க அகதிகளோடு அகதியாக இந்தியா வந்திறங்குகிறான் சார்லஸ். அவனது பயணங்களும், சந்திக்கும் மனிதர்களும், ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து அவன் தனக்குத் தரப்பட்ட குறிக்கோளை நோக்கித் தன்னையறியாமலேயே பயணிப்பதுவும் இறுதி நிகழ்வாக பொன்னம்பலத்தாரைக் கொல்வதுமாகக் கதை நிறைகிறது.
தமிழ் இயக்கங்களாலேயே கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்தைத் தொடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். போராட்ட இயக்கங்களைப் பொருத்தவரையில் தம்மைப் பற்றி சரிவர அறியாத எதிரியைவிட தம்மைப் பற்றி நன்கு அறிந்த துரோகி மிகவும் ஆபத்தானவன். அதனால்தான் துரோகிகளாகத் தாங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களைக் களையெடுப்பதில் இயக்கங்கள் பெருமுனைப்பு காண்பிக்கின்றன.
இயக்கத்தால் அப்படிப்பட்ட துரோகியாக அடையாளம் காணப்பட்டவரான பொன்னம்பலத்தாரை மற்றொரு துரோகத்தின் துணையைக் கொண்டே முடிப்பதுதான் ஒட்டுமொத்தக் கதையும்.
அந்தக் கொலையும் அதற்கான காரணமும் அது அரங்கேறும் விதமும் மட்டுமே கதையாகியிருந்தால் உலோகம் ஒரு சராசரி த்ரில்லராக இருந்திருக்கும். உலோகம் சம்பவங்களின் வழியே சொல்லப்படுவதாக அல்லாமல் சார்லஸின் உள்ளம் வழியே பயணிக்கிறது. நம்மருகே அமர்ந்து சம்பவங்களைச் சொல்பவனாக சார்லசின் பார்வையில் விரிகிறது கதை. வாழ்க்கையின் சில விசித்திர கணங்களையும், பல தீவிர கணங்களையும் சார்லஸ் வழியே ஜெயமோகன் நம்முன் வைக்கிறார்.
துப்பாக்கித் நம்மைத் துளைக்கும் தருணத்தில் நாம் அதை உணர்வது எப்படி இருக்கும் , நடுக்கடலில் துப்பாக்கிகளின் முழக்கங்களில் இருந்து தப்பிக்கும் தருணம் தரும் போதை, சித்திரவதையின் வலி, அதை அனுபவிக்கும் ஒருவனின் அந்தக் கண நேர சிந்தனை.... இப்படிக் கதை நெடூக ஒரு சராசரி மனிதன் சந்தித்திராத தீவிர சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்டு நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம்.
இந்நாவலை வாசித்தவர்கள், நுனிப்புல் மேய்ந்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவருமே பொதுவாக இது இயக்கங்களுக்கு எதிரான நாவலாகப் பார்க்கிறார்கள். உன்னிப்பான வாசிப்பில் இந்திய உளவுத்துறையின் தேவை சார்ந்த விளையாட்டுகளும் அது சார்ந்த சம்பவங்களையும் கதையில் காணலாம்.
உலக அரங்கில் இலங்கை சதுரங்கப் பலகையாகி, அதன் விடுதலை இயக்கங்களும் கூட இந்தியா இயக்கிய சதுரங்கப் பொம்மைகளான தோற்றம் நாவல் வாசிக்கையில் உங்களுக்குக் கிடைத்தால் அது ஆச்சர்யமில்லை.
உலோகம் - ஜெயமோகன்
த்ரில்லர் நாவல்
பக்கங்கள் 216 / விலை ரூ. 50/-