ராஜாஜி கட்டுரைகள்
வானதி பதிப்பகம்
பக்கங்கள்: 226
விலை: ரூ.75
***
C.ராஜகோபாலாச்சாரி. சுதந்தர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர்-ஜெனரல். சேலம் மாவட்டத்தில் பிறந்து, பின்னர் இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி முதல் பல்வேறு பதவிகளை வகித்தவர். இதைத்தவிர இலக்கிய உலகத்திலும் ஒரு நட்சத்திரமாக விளங்கியவர். திருக்குறள், பகவத்கீதை, மஹாபாரதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், வியாசர் விருந்து என்ற தலைப்பில் மஹாபாரதத்தையும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் ராமாயணத்தையும் தமிழில் எழுதியவர். இதற்காக 1958ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இதையெல்லாம் தவிர, பலர் மனம் கவர்ந்த பாடலான ‘குறை ஒன்றும் இல்லை’ பாடலை இயற்றியவர். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்கவரின் கட்டுரைகள் எப்படி இருக்கும் என்கிற ஆவலில் வாங்கியதே இந்தப் புத்தகம் - ராஜாஜி கட்டுரைகள்.
இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கு பெற்ற ராஜாஜி அவர்கள், அதற்காக பலமுறை சிறை சென்றவர். அந்த சமயத்தில் சிறையிலிருந்து எழுதிய கட்டுரைகளும் (காலம் 1934-35) இந்தத் தொகுப்பில் உள்ளன. மொத்தம் 23 கட்டுரைகள். ஆன்மிகம், வரலாறு, பால்வெளி, இயற்பியல், ஆன்மிகம் vs விஞ்ஞானம், வானொலி, சிறுகதை என அனைத்தைப் பற்றியும் கட்டுரைகள். அனைத்திலும் மெல்லிய நகைச்சுவையுடன் ‘நச்’சென ராஜாஜியின் கருத்துகள்.
தேனீ வளர்ப்பு பற்றி ஒரு கட்டுரை. இது எங்கேயோ படித்து எழுதிய கட்டுரை இல்லை என்பது இதை படித்தாலே தெரிகிறது. இவர் 1934ம் ஆண்டு மத்திய அரசின் தேர்தல் வேலைகளில் பல பொறுப்புகள் வகித்தும், தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன் ஆசிரமத்தில் தேனீ வளர்ப்பில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். ஆண் தேனீ, ராணித் தேனீ, மற்றும் சேவகர்கள் என அனைத்தின் குணநலன்களை விரிவாக விளக்கிவிட்டு, தேன் சேகரிப்பது எப்படி?, அதில் இவருடைய அனுபவங்களை சுவைபடக் கூறியுள்ளார்.
தேனீ வளர்ப்பது என்றால் என்ன? பசுமாடு விலைக்கு வாங்குவதைப் போல், நல்ல சாதுவான பூச்சிகள் எங்கேயாவது விற்பார்கள் என்று எண்ணாதீர்கள். தேனீ பொல்லாத பூச்சியாயிற்றே; கொட்டினால் உடம்பெல்லாம் ஊதி உபத்திரவம் உண்டாகுமே? அதை எப்படி பிடிப்பது? கொடுக்குகளை எவ்வாறு எடுப்பது? இப்படி நிறைய கேள்விகள் கேட்பீர்கள்.
தமிழில் பேசுவதைப் பற்றி ஒரு பத்தி. இதில் இவர் கூறும் பிரச்னைகளும், அறிவுரைகளும் படித்தால், அவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அதிலிருந்து ஒரு மேற்கோள்.
தமிழோ, ஆங்கிலமோ, தெலுங்கோ, ஹிந்தியோ எது வேண்டுமானாலும் நாம் பேசலாம். ஆனால், ஆங்கிலப் பெயர்ச் சொற்களையும், தமிழ் வினைச் சொற்களையும் சேர்த்துப் பேசுகிற விகாரமான பேச்சு கூடவே கூடாது. “பண்ணு” என்ற ஒரு சொல்லைக் கண்டுபிடித்து விட்டோம். ரிப்பேர் பண்ணு, வாக் பண்ணு, சிங் பண்ணு, சிப் பண்ணி குடி. சிறிது மனம் வைத்தால் இந்தப் பழக்கத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இந்தி படிப்பது குறித்து அவரது கருத்துகள் சுவாரசியம். ஒரு கட்டுரையில் - இந்தியா முழுவதும் ஒன்றாக வேண்டுமென்றால், கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரை எங்கே போனாலும் நாம் சொல்லுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டின் பொது மொழியான ஹிந்துஸ்தானியை நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து இந்தியா முழுக்க சுற்றிவரும் தமிழ் இளைஞர்களை கேட்டுப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும் என்றும் கூறுகிறார்.
புத்தகம் முழுக்க அனைவருக்கும் பற்பல அறிவுரைகள். அதற்கு அங்கங்கே பொருத்தமான குறள்கள். உதாரணத்திற்கு சில:
* வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும். அப்போதுதான் நோய்நொடிகள் அண்டாது சுகமாய் இருக்கலாம்.
* குடும்பத் தலைவனும், தலைவியும் ஒருவரோடொருவர் அன்புடன் இருக்க வேண்டும். உறவினர்களை, விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்க வேண்டும்.
* பேச்சு எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும். மற்றவரகள் மனம் புண்படும்படி பேசவோ நடக்கவோ கூடாது.
பண்பாடு பற்றிய கட்டுரையில் அவர் கூறும் விஷயம் கிட்டத்தட்ட 75 வருடங்களானாலும் மாறாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வெளியூரிலிருந்து சென்னைப் பட்டணத்திற்கு வருபவர்கள் முதலில் எதைப் பார்க்கிறார்கள்? ஆம். அதேதான். ரயில்பாதையோரம் திறந்தவெளியில் காலைக்கடன் கழிப்பவர்கள். யாரும் இதை கவனிப்பார் இல்லையே என்ற அக்கறையில் இதை எழுதுகிறேன் என்று சொல்கிறார்.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பு பற்றி ஒரு கலகல கட்டுரை. மொத்த புத்தகத்திலேயே இதுதான் டாப் என்று சொல்லலாம். ஆங்கிலம், பார்ஸி, இந்தி, அரபி, உருது என பல மொழிகளிலிருந்து வந்து, அவையில்லாமல் நம்மால் பேசவே முடியாது என்ற நிலைமையை நகைச்சுவையுடன் கூறியுள்ளார் ராஜாஜி. ஒரு பெரிய பட்டியல் தந்து அவற்றிலுள்ள சொற்கள் எந்தெந்த மொழியிலிருந்து வந்துள்ளன என்றையும் விளக்கியுள்ளார். கீழ்க்கண்ட குறிப்பில் எவ்வளவு தமிழ்ச் சொற்கள் என்று கணக்கெடுத்தால்,
ஆச்சரியமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்!
வசந்தன், ஆபீஸிருந்து வந்தான். வந்ததும் தலையிலிருந்த சரிகை உருமாலையை எடுத்து மெதுவாக மேஜை மேல் வைத்துவிட்டு, சோம்பேறி நாற்காலியில் கால் நீட்டி உட்கார்ந்து மனைவியைக் கூப்பிட்டு, “காமு! நல்ல காபி போடுவாயா? முதல் தரமாக இருக்க வேண்டும். எவ்வளவு ஜல்தியில் முடியுமோ அவ்வளவுக்கு நல்லது” என்றான்.
மிகவும் சீரியஸாக வந்த ஒரு பத்தியில், கீழ்க்கண்ட வாக்கியத்தை படித்ததும் வாய்விட்டு சிரிக்கும்படி ஆயிற்று!
பேஷ், சபாஷ் வகையறா மகிழ்ச்சிக் குறிப்புகள் பார்ஸியிலிருந்து தமிழருக்குக் கிடைக்காமலிருந்திருந்தால் பாட்டுக் ”கச்சேரிகள்”, தமிழ் நாட்டில் எவ்வாறு நடந்திருக்கும்!
இயற்பியல், வேதியியல், கணக்கு என பலவற்றிற்கான தமிழ்ச் சொற்களை உருவாக்கியதில் ராஜாஜிக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது. இந்தத் தமிழ்ச் சொற்கள் இருக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லிவிட்டு கடைசியாக - இரவல் மொழிகளால் தமிழனுக்கு எந்த மகிழ்ச்சியும் உண்டாக மாட்டாது. அதற்காகவே நாம் தமிழிலேயே அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்கிறார்.
சைவ-வைணவ பேதங்களைப் பற்றி ஒரு கட்டுரை. பல அருமையான ஆழ்வார் பாசுரங்களை அதன் பொருளோடு விளக்குகிறார். பிறகு, அந்த பேதங்களைக் காட்டி பேசுபவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்?
ஆழ்வார், நாயன்மார்களின் கரை கடந்த பக்திக்கும் ஆழ்ந்த ஞானத்திற்கும் இந்த ஏற்றத் தாழ்வுப் பேச்சு மிகவும் பொருத்தமற்றதாகத் தோன்றும். கடவுளைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும், அசிரத்தையும் சந்தேகமும் நிறைந்த நாம், ஆழ்வார், நாயன்மார்களின் கருத்துகளையும் மனப்பான்மையையும் சரியாக உணர்வது கடினம்.
இப்படியாக இன்னும் பல கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் மூலம், ராஜாஜியின் அரசியல், சமுதாய, தமிழ் மொழி இன்னும் பலவற்றைப் பற்றிய கருத்துகளை நன்கு அறியலாம்.
***