A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

31 Aug 2012

கலகம், காதல், இசை - சாரு நிவேதிதா

கலகம், காதல், இசை என்கிற இந்த சின்னஞ்சிறிய புத்தகம், சமூகத்தின் வெவ்வேறு மாய அடுக்குகளை, இசைக் கலைஞர்களின் வாழ்வியல் வழியாக ஊடுருவிப் பார்க்கிறது. சீலேயில் கலைஞர்கள் அரசியலை நோக்கிப் பரவிய அசலான நிகழ்வை, புனைவைப் போல் விவரித்து பரவசப்படுத்துகிறது. இசை, அதனோடுகூட அரசியல், மானுடவியல், பூகோளம், கணிதம், வான சாஸ்திரம், பௌதிகம், கட்டிடக்கலை என எல்லாத்துறைகளையும் ரம்மியமான மொழியில் தீண்டிச் செல்கிறது. இந்த புத்தகத்தின் வாசிப்பு, முழுவதும் ஜன்னல்களால் ஆன அரண்மனைக்குள் நின்று கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது. வாசகர்கள் தாங்கள் விரும்பிய ஜன்னலைத் திறந்து பார்க்கலாம்.
கணிதமும் இசையும் என்கிற கட்டுரையின் வாக்கியங்களில், அறிவியலும் இசையும் காமம் கொண்ட இரு பாம்புகளைப் போல் பின்னிக் கிடக்கின்றன. அரபி மொழியின், இசையின் அழகியலை பற்றி இந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. அதைப் படித்து முடித்ததும் இன்னும் ஓர் எழுத்து கூட தெரியாத அந்த மொழியின் மீது மெல்லிய காதல் வந்து விடுகிறது. (இசை வடிவில் அமைத்துள்ள மொழி அரபி மொழி , மற்றொரு விசேஷம் அதன் எழுத்து வடிவம் ஓவியம்).

பெத்ரோ பௌலசின் யை (எழுத்தாளர் ) பற்றி புத்தகத்தில் வரும் எளிய குறிப்பு இதோ ....
"பெத்ரோ பௌலசின்யின் koliarda என்ற புத்தகம் 1971 இல் வெளிவந்தது. கிரீசின் ஓரினப் புணர்ச்சியாளர்களின் பேச்சு மொழி அகராதி இந்தப் புத்தகம். இதற்காக இவர் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார். (ரெம்பேத்திக என்ற புத்தகத்திற்காக 5 மாதங்களும், ஹோமோ செக்ஸ்சுவல் அகராதிக்காக 7 மாதங்களும், உடல் என்கிற கவிதை தொகுதிகாகவும் 7 மாதங்கள் சிறையில் இருந்தார்.) history of the condom (1999) (படங்களுடன் விவரிக்கப்பட்ட 500 பக்க புத்தகம்.) இவர் எழுதிய புத்தங்களில் ஒன்று." 

பெத்ரோ பௌலசின் போன்ற எண்ணற்ற ஆளுமைகள். ஆதிசங்கர், பிதாகரஸ் , ஹோமர் என அற்புதமான மனிதர்களை புத்தம் நெடுக சந்திக்க நேர்கிறது. இவற்றையெல்லாம் படிக்கும்போது இது போன்றதொரு தகவல் சேகரம் இன்னொரு மனிதனால், ஏன் இன்னொரு முறை இதன் ஆசிரியர் சாரு நிவேதிதாவால்கூட நிகழ்த்த முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது!

15 ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட Inti-Illimani (இயிமானி மலைச் சூரியன் ) என்ற இசைக்குழு, இசைக்காக பிதாகரஸ் நடத்திய ரகசிய பள்ளி, ஸாம்போ என்ற உலகின் முதல் லெஸ்பியன் பெண் கவி, உடலில் டைனமைட்டைக் கட்டிக்கொண்டு சிப்பாய்கள்முன் ஆனந்த நடனமாடிய நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் அடிமைகள், என இந்த புத்தகம் பல அலாதியான விசயங்களைப் பேசி நம்மைச் சிதறடிக்கிறது.

இந்த புத்தகம் எங்கே வேறுபடுகிறது என்றால், இசையைப் பற்றி தமிழில் வெளிவந்த சொற்ப புத்தகங்களில் ஒன்றுகூட வாகா எல்லையை தாண்டிப் பேசியதில்லை. கலகம் காதல் இசை அனாயசமாக எல்லாவற்றிலும் அத்துமீறல் செய்கிறது.

"கலகம், காதல், இசையை" , பயணங்களின்போதோ, டிவி பார்த்துக் கொண்டோ , just like that படிக்க முயல்வது அபத்தம். சிகரெட்டைப் பற்றவைக்க, கடைசித் தீக்குச்சியை உரசுபவனின் கவனத்தோடு படிக்க வேண்டிய புத்தகம் இது.
கலகம், காதல், இசை - சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 70.
ஆன்லைனில் பெற: 600024.காம் / கிழக்கு

தீராக்காதலி - சாருநிவேதிதா

சிறப்புப்பதிவர்: நவீன்


சினிமாவை விரும்பாதவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், வரலாறு அப்படியல்ல. வரலாறைச் சுவைபட படிக்கத்தக்க வகையில் சொல்தல் என்பது தனிக்கலை. தமிழ்ச் சூழலில் சினிமாவின் ஆரம்ப கால வரலாறை சுவாரசிய நடையில், இழுவை ஏதுமின்றி சுருக்கமாக இந்தப் புத்தகத்தில் படிக்கத் தந்திருக்கிறார் சாரு.

நாடக உலகம் திரையுலகாய் மாறத் தொடங்கிய காலத்தின் சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், எல்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், அதற்கு அடுத்த காலத்து எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு இது. அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் பல புத்தகங்களில் முழுமையாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் அவர்களின் வாழ்க்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டுரைகளாக சுவைபட இருக்கின்றன. அதுவும் சாருவின் பாணியில் கட்டுரை என்பது வெறும் கட்டுரையாக மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் முன்வைத்துச் செல்கிறது.
எம்.கே.டியின் வரலாற்றில் இருந்து தொடங்குகின்றது புத்தகம். சினிமாத்துறையின் முதல் சூப்பர் ஸ்டாரின் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்முன்னே பரந்து விரிகின்றது சாருவின் நடையில். உச்சகட்ட நடிகர் ஒருவர் தேவையில்லாத குற்றத்துக்காக சிறை சென்றுவந்து, மூன்றே ஆண்டு காலத்தில் அதலபாதாளத்துக்குச் சென்றதைப் படிக்கும்போது சற்று திகைத்துத்தான் போகிறோம் நாம். அரிதாரம் பூசுபவர் வாழ்வின் நிலையாத் தன்மை ஒரு தொன்று தொட்ட நிகழ்வுதான் போல.
பி.யு.சின்னப்பாதான் முதலில் தமிழில் இரட்டை வேடங்களில் நடித்த நடிகர்.  படம்: உத்தமபுத்திரன் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல்,விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டைகளுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளியே சின்னப்பா-பாகவதர் ரசிகர்களின் சண்டைகளே என்பவை எல்லாம் இந்தப் புத்தகம் நமக்கு அறியத் தரும் சுவாரசியத் தகவல்கள். 

எல்.ஜி.கிட்டப்பா சினிமா நடிகர் என்றே நினைத்திருந்த எனக்கு அவர் சினிமாவில் நடிக்கவேயில்லை, நாடகத்தில் மட்டுமே நடித்தவர் என்பது இந்த புத்தகம் படித்து பின்னர்தான் தெரிந்தது. கிட்டப்பா பற்றிய கட்டுரைகளில் முத்தாய்ப்பாய் அவருக்கும் கே.பி.சுந்தராம்பாளுக்கும் இடையேயான காதல் கடிதங்களும், அவருக்கும் அவரின் நண்பருக்கும் இடையேயான நட்பு கடிதங்களும் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன . நெஞ்சைத் தொடும் கடிதங்கள் அவை.

முதிய தோற்றத்திலேயே நம் மனதில் நிலைத்துவிட்ட கே.பி.சுந்தரம்பாளே இந்த புத்தகத்தின் நாயகி தீராக்காதலி இளம்பருவத்திலேயே நாடகத்தில் நடிக்க வந்துவிட்ட அவருக்கு அந்த காலத்தில் ஜோடியாக நடிக்க ஏற்றவர் எவரும் இல்லை மக்களும் யாரையும் ஏற்கவில்லை. அப்போது தைரியமாக உடன் நடித்து கே.பி,எஸ்ஸையும் தன் குரலால் வென்று வசப்படுத்தினார் கிட்டப்பா.
கிட்டப்பாவுடன் - கே.பி.எஸ் இருவரும் சேர்ந்து வாழ்ந்தது ஏழு வருட வாழ்க்கைதான் (அதுவும் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை). ஆனால், அந்த ஏழு வருடங்களுக்காய் (இதிலும் பல மாதங்கள் பிணக்கால் பிரிந்தே இருந்தனர் ) 47 வருடங்கள் விதவையாகவே வாழ்ந்து மறைந்தார் கே.பி.எஸ். 

எம்.ஆர்.ராதா குறித்த ஒரு கட்டுரையில், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசுவதை கவனியுங்கள் 

“தோழர்களே இவ்வளவு காலம் கழித்து இன்று எனக்கு வரவேற்பு அளித்துள்ளீர்கள் காரணம் இன்று நான் சினிமாவில் இருப்பதால்தான். நான் நாடகத்தில் எவ்வளவோ சாதனைகளை செய்தபோது எனக்கு அளிக்காத வரவேற்பை இப்போது அளிக்கிறீர்கள் சினிமா எனது ரிட்டையர்ட் லைப் சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் ”, எத்தனை பேரால் வளர்ச்சி நிலையில் இப்படிப் பழையன மறவாமல் பேச இயலும்?
நாம் மேலே பார்த்தவர்களில் பலர் சூப்பர்ஸ்டார்களாய் வலம்வந்த காலத்தில் துண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகான அவர் கண்ட வளர்ச்சியும் சரித்திரங்களும் இந்த உலகறிந்தது.

சிறிய புத்தகம் என்றாலும் அவர்களின் வரலாற்றை, இழுவைகள் இல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் சொல்லும் மாபெரும் மனிதர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ள நல்லதோர் நூல்

தீராக்காதலி - சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்:
விலை: ரூ 80
இணையத்தில் பெற: கிழக்கு

சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்



‘ஒரு வரலாற்று புனைவு’ எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் என்று சிக்கவீர ராஜேந்திரனை பற்றி இணைய நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது குறிப்பிட்டிருந்தார். ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடாக, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதி 1947 ஆம் ஆண்டு முதற்பதிப்பு கண்ட  இந்த கன்னட  நாவல் எதேச்சையாகத்தான் என் கண்ணில் பட்டது. 508 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் (1990 ஆம் ஆண்டில் வெளியான) இரண்டாவது பதிப்பின் விலை 32 ரூபாய் எனும் முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே  எனக்கு கொஞ்ச காலம் பிடித்தது.


30 Aug 2012

வாக்குமூலம் - நகுலன்

நான் மீண்டும் தனியாகிவிட்டேன். எனக்கு என்னாகிவிட்டது அதுவும் இந்த 65 ஆவது வயதில்? அங்கமுத்து, ஏபிள் தாம்ப்ஸன், சாமிராவ்சாமி - இவர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது அவர்களில் ஒரு அம்சம் இல்லாவிட்டால் இன்னொரு அம்சமாக நான் ஆகிவிடுகிறேன். ஏன், சொல்லப் போனால் என்னில் நான் சாமிராவ் சாமியின் இரண்டாவது அண்ணனையும் காண்கிறென். அவன் விஷயத்தில் பயம் அனுதாபத்தைத் தின்றுவிட்டது என்றால் என் விஷயத்தில் பயம் என்னை எதற்கும் செயல் அற்றவன் ஆக்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

- வாக்குமூலம், நகுலன்.

நண்பரிடம் நகுலனின் படைப்புலகம் குறித்து உரையாடினேன். கீழ்வருவது எனக்கும் அவருக்குமான உரையாடல்:

நான்: ஒண்ணு  சொல்லணும் நண்பரே - இது நான் படிக்கும் நகுலனின் நாலாவது நாவல். கிறுக்குத் தாத்தன் ஒவ்வொரு வரியாக அடிமேல் அடி வைத்து மொத்தமாக நம்மளை கிறங்கடிக்கச் செய்கிறார். தனித்தனி வரிகள், கருத்துகளாகப் பார்த்தால் ஒண்ணுமே இல்லாதது போலத் தோன்றும். ஆனால் ஒட்டு மொத்த கருத்துகளாகப் பார்த்தால் மிக பிரத்யேக உலகுக்கு நம்மை இட்டுச் செல்கிறார். அது எப்படி என்பது தான் புரியவில்லை.

நண்பர்: அதுக்கு காரணம் இருக்கு பைராகி. நீங்க நகுலனின் உலகம் இருண்ட அடர்வனம்னு  சொல்லியிருக்கீங்க. அடர்வனம் செடி மரம் கொடிகள் பறவைகள் என்று உயிர்ப்புள்ள, ஆனால், வெளிச்சமில்லாத காரணத்தால் அறியப்பட முடியாத மர்மத்தைத் தன்னில் கொண்டது. நகுலன் காட்டும் உலகம் வரண்ட, வெறும் எண்ணங்களாலான உலகல்ல : அதில் புறவுலக போதங்களின் செழிப்பும் உயிர்ப்பும் இருக்கிறது, அதே சமயம் ஆளுமை சார்ந்த சிக்கல்கள் அந்த போதத்தை இருட்டடித்துக் குழப்புகின்றன.

நான்: அடடா! நண்பரே. நீங்கள் தான் இந்த விமர்சனம் எழுத சரியான ஆள். அவரது உலகமே அக உலகம் மட்டுமேன்னு சில எழுத்தாளர்கள் விமர்சனம் செய்கிறார்களே? புற உலகை காட்டாத எழுத்தா இது?

நண்பர்: அக உலகம் என்பதால் அவரது காலடி அளவேயுள்ள ஒரு சிறு நிலப்பரப்பாகவும் இருக்கலாம், அவரால் விரிக்கப்படும் உலகம் என்பதால் எல்லையற்று விரிவதாகவும் இருக்கலாம். அதன் பரப்பல்ல, அதன் மையத்திலுள்ள இருளும் அதையும் மீறி புலப்படும் போதமும்தான் நகுலனின் நாவலில் நமக்கு முக்கியமான விஷயம்.

நான்: ஆஹா! அற்புதமான விளக்கம் ஐயா. உங்களுடைய விளக்கத்தை எனது விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ளலாமா?

நண்பர்: தாராளமாக.

(அதுவரை நண்பரின் அருகில் பதுங்கியிருந்த  பழுப்பு நிறப் பூனை அவரோடு நடந்து மறைந்தது. அது விட்டுச் சென்ற அபத்தமான சிரிப்பு மட்டும் என் முன்னே மறையாமல் இருந்தது )

ஆகாயம் சாம்பல் நிறம்
அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம்


____


பல எழுத்தாளர்களைக் கவர்ந்த எழுத்தாளர் நகுலன். வரிசையாகக் கவிஞர்களும் கதாசிரியர்களும் அவரது வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அவரது உலகத்துக்குள் நுழைந்து அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்ப்பதற்காகவா? அச்சூழலின் துளி தங்கள் மேல் பட்டால் கூடுதலாகத் துளிர்க்க மாட்டோமா எனும் எதிர்பார்ப்பா? கிறுக்குத் தாத்தனின் பூடக வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதார்த்தவாதியை வெளிக்கொணரவா? சும்மா விளையாடாதீங்க தாத்தா எனப் பூனையை துரத்திவிட்டு, அவரது பிராந்தி பாட்டிலை உடைத்துப் போட்டு அருகிலிருக்கும் அரச மரத்தடிக்கு சக பேரன்களோடு விளையாட்டுக்கு அழைத்துச் செல்லும் துடிப்பா? அல்லது கிறுக்கனின் உலகம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வக்கோளாறு மட்டுமா? எதற்காக தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இவரது வீட்டுக் கதவைத் தட்டினார்கள்? இந்த விமர்சனத்தில் இதற்கான பதிலைக் கண்டடையப் போவதில்லை. Some things are better left unexplained.

சரி, கதைக்குள் போவோம்.

யதார்த்தமாக ஆரம்பிக்கும் கதை. கதை நாயகன் ராஜசேகர் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளில் அரசின் தேச முன்னேற்றச் சட்டம் (286) அறிவிப்பைப் பார்க்கிறார். அதாவது, அறுபது வயதுக்கு மேல் வாழ்பவர்கள் விருப்பப்பட்டால் கத்தியின்றி ரத்தமின்றி இன்முகத்துடன் அவர்களது இறப்பை அரசு நிறைவேற்றி வைக்கும் எனும் அறிவிப்பு. முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்று அன்று இந்த அறிவிப்பு வெளியாகிறது. தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதாலும், அரசு நிறைவேற்றும் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருப்பதாலும் ராஜசேகர் இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறார். நாளெல்லாம் இந்த அறிவிப்பே அவரது மனசை வியாபித்திருக்கிறது. ஒரு வேளை தனது பிரதியில் மட்டும் அப்படி இருக்கிறதோ எனும் அரிப்பும் ராஜசேகரனுக்கு உண்டாகிறது. பொது நூலகத்தில் மீண்டும் அந்த அறிவிப்பைப் பார்த்து சமாதானம் ஆகிறார்.




தனது நண்பர் அங்கமுத்துவுடன் அரசின் அறிவிப்பைப் பற்றி பேசுகிறார். நண்பர் இந்திய அரசுக்கு எதிர்ப்பானவர். இவங்க எந்த சட்டத்தைத் தான் சரியாக நிறைவேற்றி இருக்கிறார்கள் என அங்கலாய்க்கிறார். உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை எனத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ராஜசேகர் அவரை அரசு அலுவலகத்துக்கு கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். அங்கு ஏபிள் தாம்ப்ஸன் எனும் வசதி படைத்த அரசு அலுவலர் ஸ்போர்ட்ஸ் காரில் சிகரெட் பிடித்தபடி வருகிறார். அவரிடம் ராஜசேகர் தனது கோரிக்கையை முன்வைக்கிறார். வழக்கமான அரசு அலுவலர் போல எரிச்சல் உண்டானாலும் ஏபிள் விண்ணப்பப் படிவத்தை ராஜசேகரிடம் கொடுக்கிறார்.

விண்ணப்பதாரர் 'வாக்குமூலம்' எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்படி நூற்றுப் பத்து கேள்விகள் விண்ணப்பத்தில் இருக்கும். இந்தக் கேள்விகள் நாவலின் முக்கியமானப் பகுதி. அதற்கான பதிலைத் தயாரிப்பது விண்ணப்பதாரரின் வேலை. நாவலின் பிற்பகுதி முழுவதும் இந்த பதில்களுடன் பயணிக்கிறது. குடும்ப, சொத்து, கலை ஈடுபாடு, சமூக ஆர்வங்கள், நண்பர்கள், சிந்தனைகள், தற்கொலை முயற்சிகள், பழக்கங்கள் எனவிண்ணப்பதாரரின் வாழ்க்கையே கேள்விகளாகக் கேட்கப்பட்டிருக்கின்றது. நாவலின் முடிவில் அரசு சார்பில் ஓட்டெடுப்பு நடக்கிறது. பத்து நபர்களின் வாக்குமூலங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், முழுமை கருதி ராஜசேகரின் வாக்குமூலம் வெற்றி பெறுகிறது. அதற்கு சன்மானமாக அரசு சார்பில் பணம் ராஜசேகருக்கு வழங்கப்படுகிறது. அவரது கொலையை அரசு நிறைவேற்றியதா அல்லது தாமதமாக்கியதா எனும் முடிவு தெரியாமல் ராஜசேகர் வாக்குமூலம் எனும் நாவலை எழுதி முடித்து தனது நண்பருக்கு படித்துக் காட்டுவதுடன் நாவல் முடிகிறது.

ராஜசேகரின் வாக்குமூலம் எனும் பகுதி நாவலின் மிக உயிர்ப்பான சித்திரத்தை தரவல்லது. குறிப்பாக தனது உள மாற்றத்தை சொல்ல முடியாமல் ‘வார்த்தைகள் தவிக்கின்றன. தப்பி ஓடப் பார்க்கின்றன. ஓலமிடுகின்றன’ என ராஜசேகரின் தவிப்பு மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது கனவுப் பகுதி போல நிழலுடன் நடத்தும் விவாதமும், தனக்குள் பலரும் இருப்பது போன்ற பயத்தில் அவர்களுடன் நடத்தும் உரையாடல்களும் ராஜசேகரின் உளச்சிக்கலை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் ராஜசேகர் தனக்கிருக்கும் மனக்குமறலை நேரடியாகச் சொல்லாமல் இயல்பான மனிதன் போல இருக்கிறார். வாக்குமூலத்தில் அவரது குரல் முதல்முதலாக பலவாகப் பிரிகிறது. சாமிராவ்சாமி எனும் பிளவாளுமையுடனான உரையாடலில் ‘மனிதன் எப்போதுமே ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என எண்ணுகிறேன்’எனக்கூறியதுடன் தேடல் முடிவடையாத மனிதன் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறான். தேடல் முடிவடைந்ததும் தூக்கம் மட்டுமே உள்ளது என தான் நம்புவதாக ராஜசேகர் தெரிவிக்கிறார். தான் ஒரு கனவுலகில் வாழ்வதாக சாமிராவ்சாமி நம்புவதை தான் நம்பவில்லை என்றும் அதனால் தேச முன்னேற்ற சட்டத்தை உபயோகிக்க விருப்பமில்லை எனவும் வாக்குமூலத்தை முடிக்கிறார்.


தேச முன்னேற்றம் எனும் பெயரில் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இருக்கும் தத்தளிப்புகளை இந்த சிறு நாவல் விவரிக்கிறது. புற வாழ்வின் எதார்த்தங்களை மீறிய படைப்புகளையும், மூச்சு முட்டும் அக உணர்வுகளின் அடைப்பை வெளிப்படுத்தும் நகுலனின் நாவல்களில் இது மாறுபட்டது. மிகத் தெளிவான புற உலக வர்ணனை, கதாபாத்திரங்களின் கையாலாகாத்தனம் போன்றவற்றை கச்சிதமாகக் காட்டுவதினால் நகுலனின் கடைசி நாவலான வாக்குமூலம் ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாகிறது. அக நெருக்கடிகள், செயலின்மையின் தத்தளிப்புகள், கனவுலகில் சஞ்சாரிக்கும் நிகழ்வுகள் போன்றவை மற்ற நகுலன் நாவல்களின் மையக்கருத்தாக இருந்து வந்திருக்கிறது. வாக்குமூலம் அவற்றைத் தாண்டிய ஒரு நிதர்சனப் பார்வையை கனவுலகிலிருந்து மீட்டு வெளிப்படுத்தியிருக்கிறது.


நகுலனின் அக உலகு சித்தரிப்புகள் இருண்ட குகைக்குள் கிடப்பவன் சிறு வெளிச்சக் கீற்றுக்கு ஏங்குவது போன்ற பாரத்தை தரவல்லவை. நாவலின் இறுதிப் பகுதியில் வரும் கனவு வழியாக ராஜசேகரின் வாழ்வில் நடந்த சிறு சம்பவங்கள் வெளிப்படுகின்றன. நந்தலாலா படத்தில் வரும் பைத்தியம் சொல்வது போல, 'இந்த உலகம் ரொம்ப மோசம். இங்கிருந்து தப்பிக்கணும் என்றால் சாவணும்', என்பதைத் தாண்டி இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் வாழ்வு-சாவு போராட்டமாக தினப்படி புற உலகம் இருப்பதையும் நாவல் காட்டுகிறது. அக ஆளுமை சிக்கலுக்கும் புற போதங்களுக்கும் உள்ளான இழுபறி போராட்டமாக   ராஜசேகரது  இருண்ட அடர்வனம்  போன்ற உலகம் நமக்கு காண்பிக்கப்படுகிறது. அந்த இருட்டு அவரது காலடி நிழலின் அளவு சிறிய நிலப்பரப்பாகவும் இருக்கலாம், அல்லது உலகப் பரப்பளவு கொண்டதாகவும் இருக்கலாம்.

புற யதார்த்தத்தின் தீவிரத்தை முழுவதும் சந்திக்க இயலாத உளச்சிக்கல் கொண்டதால் ராஜசேகரால் முழுவதுமாக சட்டத்தின் விருப்பத்துக்கு இயைந்து போக முடியவில்லை. தனக்குள் இருக்கும் பிளவாளுமைகள் தான் தனது இருப்புக்கான அடையாளம் என நம்பத் தொடங்குவதோடு, அவை இருக்கும்வரை தனது தேடல் தொடரும் எனவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கிறார். சுவர்களை எழுப்பிக் கொண்டு தனது நிழலைத் தேடும் மக்களுக்கு நடுவே ராஜசேகர் போன்ற பிளவாளுமைகளின் தேடல் முடிவிலாதது எனத் தோன்றுகிறது. கனவுலகில் வாழும் தனது உறக்கத்தில் இனி கனவுகள் கிடையாது எனத் திடமாக நம்புகிறார். தன்னைக் கைவிடாத இருப்பின் அடையாளங்களாக அவற்றை பாவிக்கிறார்.


மிகவும் நிதானமாக முடிவுகளை எடுப்பவராகத் தெரியும் ராஜசேகர் வாக்குமூலத்தின் கேள்விகளை தனது வாழ்வோடு பொருந்திப் பார்க்கிறார். நகுலனின் கதைகளில் வரும் பூனை இதிலும் பழக்கத்துக்கு அடிமையாக வருகிறது. ராஜசேகர் உணவு தரும் நேரத்தை எதிர்பார்த்திருக்கிறது, சமையலறை அருகே இருந்தும் திருடச் செயலற்று ஜன்னலில் உட்கார்ந்திருக்கும் வெள்ளை-மஞ்சள் பூனை.



புகைப்படங்கள் நன்றி- உடுமலை.காம்


தலைப்பு - வாக்குமூலம்
ஆசிரியர் - நகுலன்
உள்ளடக்கம் - நாவல் 
பதிப்பாசிரியர் - காவ்யா  பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை


29 Aug 2012

ராமானுஜ காவியம் - கவிஞர் வாலி




ராமானுஜ காவியம்
ஆசிரியர் : கவிஞர் வாலி
பதிப்பகம் : வானதி
பக்கங்கள்: 394
விலை : 150

விகடன் வாங்கியவுடன் அந்த xyz தொடரைதான் முதலில் படிப்பேன். எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கும். அப்படி இப்படின்னு நிறைய பேர் சொல்வாங்க. நான் அதற்கு உல்டா. எந்த தொடர் மிகவும் பிடிக்குதோ, அதை மட்டும் கடைசி வரை படிக்கவே மாட்டேன். மற்ற பக்கங்கள், விளம்பரங்கள், அட்டைப்படம் எல்லாவற்றையும் படித்த பிறகே என் மனம்கவர்ந்த அந்த தொடருக்கு வருவேன். அதுவரை கிடைக்கும் சஸ்பென்ஸ் இருக்கிறதே, அப்பப்பா... அதுதான் சூப்பர். சிறப்புப் பேச்சாளர்கள் கடைசியில்தானே வரணும்? இப்படி ’கடைசியா’ படித்ததுதான் கவிஞர் வாலியின் தொடர்கள், கற்றதும் பெற்றதும் ஆகியன. வாராவாரம் படித்தாலும் ஒரு புத்தகமாய் ஒரே மூச்சில் படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனி. ஆகையால், ராமானுஜ காவியம் பார்த்தவுடன் உடனே வாங்கி விட்டேன்.

விசிஷ்டாத்வைதத்தை தேசம் முழுதும் பரப்பிய இராமானுஜரின் வரலாறான இந்த புத்தகத்தில், இராமானுஜரின் திருஅவதாரம் முதல், அவரது பாரத திக்விஜயம், படைப்புகள், சீடர்கள் ஆகிய அனைத்தையும்/அனைவரையும் பற்றி கவிஞர் வாலியின் கவிதை வரிகளில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தத்துவ விசாரணைகள், எதுகை மோனையுடன், அழகிய சந்தத்துடன் அற்புதமான தமிழில் இருப்பதை படிக்கப் படிக்க இன்பம். சில விவரணைகளை கடக்கும்போது கண்களில் நீர் மல்குகிறது; மனமோ பேரானந்தத்தில் திளைக்கிறது.

காஞ்சிபுரம், உறையூர், திருவரங்கம், திருப்பெரும்புதூர், திருப்புட்குழி, திருக்கச்சி என்று பற்பல தலங்களின் அருமைகளையும்; அவற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவன்/இறைவியின் பெருமைகளையும் விரிவாகவும், மிகவும் அழகாகவும் விவரித்துள்ளார் கவிஞர். திருவரங்கத்தைப் பற்றி சில பக்கங்கள்; திருப்பெதும்புதூரைப் பற்றிய அழகிய வரலாறு இப்படி கொஞ்சுதமிழில் விவரிக்கும் கவிஞர், இராமானுஜரின் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்த, என் மனம் கவர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் பெருமைகளை சொல்லியுள்ளார். அதை படிக்கையிலேயே உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக சென்று அந்த வெண்மீசை உடையோனை பார்த்து வந்தேன். இதோ அந்த வரிகள்:

பார்த்த சாரதியை; பாஞ்ச சன்னியம் ஊதி -
ஆர்த்த சாரதியை; அர்ச்சுனன் அவலம் -
தீர்த்த சாரதியை; திருவாயால் கீதைத் தேன்
வார்த்த சாரதியை; வளநாட்டை தருமன்கை
சேர்த்த சாரதியை; சுயோதனன் செருக்கைப்
பேர்த்த சாரதியை; பாஞ்சாலியை சேலையினால்
போர்த்த சாரதியை; புல்லர் கூட்டத்தைத்
தூர்த்த சாரதியை; திருகி திருகி திருமீசை
கூர்த்த சாரதியை; கூடாதார் கண்ணுக்குக்
கார்த்த சாரதியை; களத்தினில் தேரோட்டி
வேர்த்த சாரதியை; வேயிசையால் கறவைகளை
ஈர்த்த சாரதியை;

இராமானுஜரின் வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் புத்தகத்தில் சொல்லியபடி முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக இங்கே பட்டியலிடுகிறேன். அதைத் தொடர்ந்து என்னைக் கவர்ந்த வரிகள்/விவரங்கள்.

* இராமானுஜரின் பிறப்பு, உபநயனம், திருமணம்
* குருவினைத் தேடி காஞ்சிபுரத்திற்கு இடப்பெயர்வு
* யாதவப் பிரகாசரை குருவாகக் கொள்ளுதல்
* ஆனால், யாதவப் பிரகாசரோடு கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது வருத்தமடைதல்.
* ஒரு முறை, கப்யாஸம் என்பதை கபி+ஆஸம் = குரங்கின் குதம் என்று யாதவப் பிரகாசர் சொல்ல, இராமானுஜரோ கபி+ஆஸம்=கதிரவன்+சிரித்தல் என்று பொருள் கூற சண்டை முற்றிற்று.

* பிறகு குருவே, தத்துவம்தான் முக்கியம், தனி நபர் முக்கியமல்ல என்று சீடர்களை சமாதானப்படுத்தி, இராமானுஜரை வாரணாசிக்குக் கூட்டிப் போய் கங்கையில் தள்ளிவிட திட்டமிடல்
* இந்த திட்டம் இராமானுஜரின் தமையன் கோவிந்தனுக்கு (அவரும் ஒரு சீடர்) தெரிந்து, அதை அவர் இராமானுஜரிடம் தெரிவித்தல்
* வருத்தமுற்ற இராமானுஜர் இரவோடு இரவாக குருவை விட்டுப் பிரிதல்
* இவரைக் காணாமல் மற்றவர்கள் வாரணாசி போதல்
* காட்டில் வழிதவறிப் போன இராமானுஜரை, அந்த பெருமாளும், தாயாருமே வேடன், வேடச்சி வேடத்தில் வந்து காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்து விடுதல்
* இராமானுஜரும் காஞ்சியில் தேவராஜப் பெருமாளின் திருமஞ்சனப் பணியினை செய்து வருதல்
* வாரணாசிக்குப் போனவர்கள் மறுபடி காஞ்சிக்கு வந்து, இராமானுஜரைக் கண்டு அதிர்ச்சியடைதல்
* மறுபடி யாதவப் பிரகாசரோடு குருகுலம்
* சிறுமன்னன் ஒருவரின் புதல்வியை பீடித்த பிரம்ம ராஷஸனை விரட்டியதில், மறுபடி இராமானுஜரிடம் மோதல் ஏற்பட்டு, அவரை விரட்டினார் யாதவப் பிரகாசர்.
* திருவரங்கத்தில் இருக்கும் யாமுனரின் பின்னணி; அவரே துறவறம் மேற்கொண்ட பிறகு ஆளவந்தார் என்னும் பெயர் பெறுதல்
* இதனிடையில் இராமானுஜரின் தாயார் இறைவனடி சேர்தல்
* எப்போதும் கோயில் பணி, கற்றல் இப்படியே இருக்கும் கணவனிடம் மனைவி கோபம் கொள்ளல்
* ஆளவந்தார் அனுப்பிய தூதர், பெரிய நம்பி இராமானுஜரை சந்தித்தல்.
* அவருடன் இராமானுஜர் திருவரங்கம் போய்ச் சேர்வதற்குள், ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தல் (இறைவனடி சேர்தல்)
* ஆகையால் மறுபடி காஞ்சிக்கு வந்து, திருக்கச்சி நம்பியையே குருவாக ஏற்க நினைத்து, அவரை வீட்டிற்கு உணவருந்த அழைத்தல்
* ஆனால், வைசியரான திருக்கச்சி நம்பியை வீட்டிலேயே நுழைய விடாமல், திண்ணையில் அமரவைத்து உணவளித்தார் தஞ்சமாம்பாள்
* மறைந்த ஆளவந்தாரின் ஆசைப்படி, பெரிய நம்பிகள் இராமானுஜரை தேடி வந்து, அவரை சீடராக ஏற்றுக் கொள்ளுதல்
* அவரை இராமானுஜர் தன் இல்லத்திலேயே தங்க வைத்தல்; ஆனால் தஞ்சமாம்பாளோடு ஏற்பட்ட தகராறில் அவர் வீட்டை விட்டு வெளியேறுதல்
* இந்நிலையில், இராமானுஜர் காஷாயம் தரித்துக் கொண்டார்.
* உறங்காவில்லையையும், அவர் இல்லாள் பொன்னாச்சியையும் ஆட்கொண்டு அவர்களை பாகவதர்களாக ஆக்கினார்.
* திருக்கோட்டியூர் நம்பியை தேடிப் போன இராமானுஜர் அவரை தன் குருவாக ஏற்றார்.

* ரகசியமாக வைக்கச் சொல்லிய உபதேச மந்திரத்தை, கோபுரம் ஏறி அனைவருக்கும் அறிவித்தார்.
* அனந்தாழ்வாருக்கும், வரதாழ்வாருக்கும் உபதேசம் அளித்து அவர்களுக்கு அருளுதல்
* சகோதரர் கோவிந்தனுக்கு எம்பார் என்னும் நாமம் அளித்து அவரை பாகவதராக ஆக்குதல்
* பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதுவதற்காக முயற்சித்தல்; அதற்காக போதாயன பாஷ்யத்தை பார்க்க பிரியப்படுத்தல். அது காஷ்மீர் ஸ்ரீநகரில் இருப்பதாக கேள்விப்பட்டு, காஷ்மீர் பயணம் மேற்கொள்ளுதல்
* இதன்பிறகு, ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தல்;

* திருக்குடந்தை, திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம், திருவல்லிக்கேணி, மதுராந்தகம், திருவஹீந்திரபுரம் ஆகிய தலங்களுக்கு சென்று அருளுதல்
* திருமலையில் உள்ளது அரியா? சிவனா? என்னும் சர்ச்சையில் அது அரியே என்று நிரூபித்தல்
* கிருமி கண்ட சோழனின் ஆணைப்படி இராமானுஜரை கூட்டிப்போக வந்த வீரர்களிடம், தானே இராமானுஜர் என்று கூரத்தாழ்வார் செல்லுதல்
* விஷ்ணுவை விட சிவனே பெரியவர் என்று சொல்ல விரும்பாத கூரத்தாழ்வரின் கண்களை பறிக்கச் சொல்கிறான் சோழன்
* திருநாராயணபுரத்தில் யதிராஜ மடம் நிறுவுதல்
* தன்னைப் போலவே தத்ரூபமாய் ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி - தன் அருட்சக்தியை அதனுள் பெய்தார்.

* அந்த விக்ரகத்தை ஸ்ரீபெரும்புதூரில் பிரதிட்டை செய்து, வைகுந்தம் ஏகினார் ஸ்ரீராமானுஜர்.

இந்த வரலாற்றை 394 பக்கங்களில் கவிதை வடிவாக பொழிந்துள்ளார் கவிஞர். புத்தகத்தில் பிடித்த வரிகள் என்று சொல்ல ஆரம்பித்தால், மொத்த புத்தகத்தையுமே சொல்ல வேண்டியிருக்கும் என்றாலும், எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் இங்கே சொல்கிறேன். படித்து மகிழ்க.

இராமானுஜரின் அவதாரம் நிகழும் நேரம்:

சீர்மல்கும் சித்திரைத் திங்களில்
சந்திரன் பூக்கும் சுக்கில பட்சத்தில்
அரனார்க்குகந்த ஆதிரையில்
வானோர் ஏத்தும் வியாழனில்
நல்லொளி பரப்பும் நண்பகலில் -

அவதரித்த ராமானுஜருக்கு அவர் தாய்மாமனாகிய பெரிய திருமலை நம்பி என்னும் அடியார், இலட்சுமணன், இராமானுஜன், இளையாழ்வான் என மூன்று திருநாமங்களை சூட்டினார்.

பெரும்புதூரிலிருந்து காஞ்சிக்கு இடம்பெயர்கையில் :

தன்னைத் திருப்பெரும்புதூரை விட்டு
காஞ்சியில் குடியேறி - அவனது அருள்மிகு
மூஞ்சியில் முழிக்குமாறு

பணிக்கிறான் என்றும்; பகவான் அவனோடு - தன்னை
பிணிக்கிறான் என்றும்; தனது துன்ப விலங்குகளைத்
துணிக்கிறான் என்றும்; தனக்குற்ற வெப்பங்களைத்
தணிக்கிறான் என்றும்; தீனன் தன்மேல் - திருவருளைத்
திணிக்கிறான் என்றும்; காரண காரியங்களை - அவன்
கணிக்கிறான் என்றும்; நுகரும் இரு வினைகளை - அவன்
நுணிக்கிறான் என்றும்; குணங்களின் விசேஷங்களைக்
குணிக்கிறான் என்றும்;
இளையாழ்வானாகிய இராமானுஜன் ஓர்ந்தான்;

விசிஷ்டாத்வைதத்தின் தத்துவம்:

சித்து; அசித்து; இவை இரண்டுக்கும்
வித்து - விட்டுணு; விட்டுணுதான்
விசுவமாயும் - வேறுள்ள சித்து
அசித்தாயும் விரியும் அணு;

இராமானுஜரின் சூளுரை:

வேதங்களைத் தொகுத்த வியாச பகவானையும்;
விஷ்ணு புராணத்தை யாத்த பராசரையும் -
மனிதகுலம் மறவாதிருக்கச் செய்வேன்;
இருவர் புகழையும் பாவில் நெய்வேன்.

பராங்குசரின் திவ்வியப் பாசுரங்களை பாரெங்கும்
பரப்புவேன்; திருவாய்மொழியால் நாட்டார் செவிகளை
நிரப்புவேன்.

பகவான் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு
விசிஷ்டாத்துவைதத்தின் வழியில் - விரிவுரை
ஒன்று ஆக்குவேன்; வைணவ நெறியை ஊக்குவேன்.

வரதராஜப் பெருமாள் அருளிய வாசகங்களாக திருக்கச்சி நம்பி சொன்னது:

பரத்வம் நாமே! பேதமே தர்சனம்!
உபாயமும் பிரபத்தியே! அந்திஸ்மிருதியும் வேண்டா!
சரீர அவஸானத்திலே மோஷம்! பெரிய நம்பி திருவடி பேணல்!

இதன் பொருள்:

அனைத்திற்கும் நாராயணனே ஆணி வேர்;
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றல்ல; வேறு;
ஆண்டவனை அடைய ஒரே வழி - அடைக்கலம் புகுவதே;
நாராயணனை நாளும் நம்பி வாழ்பவன் -
உயிர் பிரியும்போது அவன் பேரை உச்சரிக்க வேண்டியதில்லை!
அத்தகு அடியார்க்கு - ஆவி நீத்ததும் வீடு நிச்சயம்!
பெரிய நம்பிகளைப் பேராசானாகப் பேணி -
அவர் திருவடிகளைத் தொழுக!

***

படிக்க படிக்கத் தெவிட்டாத தமிழில், இராமானுஜரின் சரிதையை அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.

***



28 Aug 2012

சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்

”சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல”
(சங்கச் சித்திரங்கள் புத்தகத்திலிருந்து)

”கவிதைகள், நாவல் போல, பழந்தமிழ் பாடல்கள், செய்யுள், பா'க்கள் படிக்க விருப்பம் தோன்றியிருக்கிறது. ஆர்வக்கோளாறில் சில பதவுரைகள் முயன்று பார்த்தேன். புரியவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது. எதிலிருந்து துவங்கினால் சங்கத்தமிழ் வாசிப்பு சீராகும்? உதவுங்கள் அனுபவஸ்தர்களே!”

இப்படி இணையக் குழுமம் ஒன்றில் நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு மற்றோர் குழு உறுப்பினர் சொன்ன பதிலில் தொடங்கியது இந்தப் பதிவை எழுதுவதற்கான உந்துதல். அந்த பதிலைக் கடைசியில் பார்ப்போம், சங்கச் சித்திரங்கள் புத்தகம் பற்றி அதற்குமுன் பார்க்கலாம்.

ஒரு படைப்பு நம்முள் ஒரு அதிர்வை ஏற்படுத்த அது என்னவாக இருக்க வேண்டும்? எத்தகையதாக இருக்க வேண்டும்? அது ஒரு மூன்று வரிப் புதுக்கவிதையாக இருக்கட்டும், முப்பது வரித் திரைப்பாடலாக இருக்கட்டும், சிறுகதை, பெருங்காவியம், நாடகம், திரைப்படம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அது ஏற்படுத்தும் அதிர்வு எதனால் எங்கிருந்து ஏற்படுகிறது? 

இது எனக்கு நிகழ்ந்த போது நன்றாயிருந்தது என எதையோ அசைபோட வைக்கிறது ஒரு படைப்பு. இந்த நிகழ்வு எனக்கு நிகழாமற் போகட்டும் என எதையோ பார்த்து அச்சமுறச் செய்கிறது இன்னொன்று. இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என ஏக்கமுறச் செய்கிறது மற்றும் ஒன்று. அதிர்வின் காரணம் படைப்பில் இல்லை. படைத்ததைச் சொன்னவன் சொன்ன முறையினில் இல்லை. ஆனால், அதை வாங்கிக் கொண்டவன் வாங்கிக் கொண்ட விதத்தினில் இருக்கிறது. 

ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன். 

சங்கப்பாடலின் அர்த்தத்தை எளிய நடையில் மொழிபெயர்ப்பது என்பது நாம் பள்ளியில் படித்த அருஞ்சொற்பொருள் அறிதல் மட்டுமேயன்றி வேறில்லை. புத்தகத்தை வைத்துக் கொண்டு யோகா, தியானம், சமையல், கராத்தே கற்பது எல்லாம் எப்படி சாத்தியமற்ற விஷயங்களோ அதே போன்றுதான் அருஞ்சொற்பொருள் விளக்கத்தின் வாயிலாக சங்கப் பாடல்களை அறிவதுவும்.  அருஞ்சொற்பொருள் தந்தவுடன் நின்றுவிடுவதில்லை அவற்றுள் பொதிந்துள்ள அர்த்தங்கள். 

சரி! சங்கச் சித்திரத்திற்கு வருவோம்.

சங்கச் சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சங்கப்பாடலை (அல்லது அதன் ஒரு பகுதியை) நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜெயமோகன். 

சங்கப்பாடல் ஒன்று, புதுக்கவிதை வடிவில் எளியநடையில் அதற்கான மொழிபெயர்ப்பு, அந்தப் பாடல் சார்ந்த அர்த்தம் பொதிந்த தன் வாழ்வின் உக்கிர அனுபவம் ஒன்று என ஒவ்வொரு அத்தியாயத்தையும் மூன்று லேயர்களாகப் பிரித்துச் சொல்கிறார் ஜெயமோகன். 

அந்த நாற்பது பாடல்களில் ஒரு உதாரணம் பார்ப்போம்:

காதலனோடு ஓடிப் போகும் தன் மகளின் பயணப் பாதையெங்கும் நிழலும், குளுமையும் நிறைந்ததாய் இருக்கட்டும் என எண்ணி  அவள் அன்னை பாடும் பாடல் இது. குறுந்தொகையை ஏதோ ஒட்டுமொத்தமாகக் காதல் கவிதைகளின் தொகுப்பு மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு இந்தப் பாடல் வேறொரு பரிமாணத்தைப் புரிய வைத்தது. 

 ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).

மனிதனின் மனதில் மாறாமல் தேங்கிப் போன சாதீய உணர்வுகளின் உக்கிர சொரூபத்தை ஜெயமோகன் தரிசித்த ஓர் வாழ்வனுபவம் இந்தப் பாடலின் அர்த்தத்தை நம் முகத்தில் அறைந்து புரிய வைக்கிறது. இந்த உக்கிரத்தின் வெம்மை நாம் ஒவ்வொருவரும் எங்கேனும் தரிசிப்பதே. 

சங்கப் பாடல்களோடு பரிச்சயம் பண்ணிக் கொள்ள விரும்புபவர்கள்  இந்தப் புத்தகத்தின் நாற்பது அத்தியாயங்களையும் வாசித்தல் நலம்.

இதையேதான் நம் இணையக் குழு நண்பர் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் மற்றொரு நண்பருக்குப் பதிலாய்ச் சொன்னார், இப்படி:

”ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்தான் சரியான துவக்கம்.
சங்கக் கவிதைகள் என்றில்லை, தமிழ் மொழியின் தனித்தன்மையையே உணர்வுகளோடு அறிய அதுதான் சரியான துவக்கம்.
அந்தப் புத்தகத்தை வாசித்தபின் பல சமயம் அவர் அதில் சொல்லியிருக்கும் கருத்துகளை, அவர் முன்வைக்கும் பார்வையை நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
இன்னமும் சொல்லப்போனால், இன்று நவீன விஷயங்களை எழுதவும்கூட சங்கச் சித்திரங்களை வாசிப்பது உதவக் கூடும்.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று”

ஜெயமோகன், 
சங்கச் சித்திரங்கள், 
288 பக்கங்கள், 
கவிதா பப்ளிகேஷன் 
டிசம்பர், 2002 பதிப்பு 
விலை ரூ.100
இணையத்தில் கிழக்கு / உடுமலை 

27 Aug 2012

தமிழ் மகனின் வெட்டுப்புலி



நாம் அன்றாடம் பயன்படுத்தும், அதிகம் கண்டுகொள்ளாத ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதைப் பற்றியும், அதன் வரலாறு என்னவாக இருக்கும், அப்பொருள் எப்படி உருவாகியிருக்கும் என்றெல்லாம் யோசிப்போமேயானால், பத்து நிமிடத்தில் மூளை குழம்பி அதைத் தூக்கி மூலையில் எறிந்து விட்டு நிச்சயம் வேறு வேலை செய்யப் போயிருப்போம். ஆனால் தனக்கு அப்படி கைக்குக் கிடைத்த ஒரு தீப்பெட்டியின் மீதிருக்கும் படத்தை ஆராய்ந்ததின் பலனாய், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் வரலாற்றை புனைவின் வழி நாவலாய் வடித்திருக்கிறார் தமிழ் மகன்.

தீப்பெட்டியின் மீதிருக்கும் ஒரு படம். ஒரு சிறுத்தையை ஒருவர் வெட்டுவதாக கையை ஓங்கிக் கொண்டிருக்கும் ஒரு சித்திரம். அந்தப் படத்தின் வரலாறைத் தேடிச்சென்று, அதன் வழி தமிழகத்தின் எழுபது வருட மாற்றங்களைக் கண்முன் திரையோடச் செய்கிறது வெட்டுப்புலி.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் நாவல் தொடங்குகிறது, அந்தப் படத்திலிருப்பவர் வாழ்ந்த இடத்திற்குச் சென்று விசாரிப்பதாய் ஆரம்பிக்கும் கதை நினைவுச் சுருளாய் முப்பதுகளில் மெல்லப் பின்சென்று சிறுத்தையை வெட்டியவர் சின்னா ரெட்டி என்றும், மூலிகை மருத்துவர் போன்றொருவர் என்றும் அவரைப் பற்றியும் முப்பதுகளின் சூழல் பற்றியும் பேசுகிறது நாவல்.

களம் மீண்டும் நாற்பதுகளுக்குத் திரும்பி, வெட்டுப்புலியை விட்டு வெளியே வர தமிழக வரலாறு நகர ஆரம்பிக்கிறது. சாதி பிரிவினைகளின் தாக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும், சுதந்தரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றியும் சில குறிப்புகள் உள்ளன. ஐம்பதுகளில் தமிழகத்தில் சினிமாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமா மோகமும், சினிமா நடிக்க, எடுக்க மக்களின் ஆர்வமும், சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று சுகமாய் குடி கூத்து என அழிந்தவர்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார். 

காமராஜர், பெரியார் அண்ணாதுரை என்று அரசியலையும், பேன்ட் அணிதல், சிகை திருத்திக் கொள்ளுதல் என நாகரிக மாற்றங்களைம், பார்ப்பனீய எதிர்ப்பையும் பேசுகிறது அறுபதுகள் பகுதி. மீதி முப்பதாண்டுகால நூற்றாண்டு இறுதிப் பகுதி பெரும்பாலும் சினிமா, அரசியல் மற்றும் இரண்டும் சேர்ந்து தமிழகத்தை ஆண்ட பாங்கைப் பற்றியும் சொல்கிறது.

நாவலின் ஒரு மிகப்பெரிய நிறை, ஒரு நூறாண்டு வரலாறை விக்கிப்பீடியாத்தனமாக சொல்லாமல், படிப்பவர்க்கு அயர்ச்சி ஏற்படுத்தாது புனைவின் வழி சுவாரஸ்யமாகச் சொன்னதே. ஒரு தீப்பெட்டிப் படம், அதன் கதையாக இருக்குமென ஆரம்பித்து நாம் எதிர்பார்த்திரா வண்ணம் வரலாறை வியப்பூட்டும் வகையில் சொல்லி நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம். நிச்சயம் படிப்பவர் உணரக் கூடியதான வகையில் வரலாறைச் சொல்கிறது.

முப்பதுகளும், நாற்பதுகளும் ஒரு டாக்குமென்ட்ரி போல மெதுவாகவும் சற்றே அலுப்பூட்டும் வகையிலும் இருந்து, நூற்றாண்டின் பிற்பாதியைக் குறும்படத்தைப் போல அவசர அவசரமாக முடித்திருப்பதே நாவலின் ஒரே குறை. இருந்தாலும், அந்த நீட்டலும் சுருக்கலும் நாம் அவசியம் அறிய வேண்டிய அந்த எழுபதாண்டு கால மாற்றங்கள், நிகழ்வுகள் பலவற்றை இந்தப் புத்தகம் தொட்டுச் செல்ல ஒரு தடையாய் இல்லை. 

சன் டிவியின் திரை விமர்சனக் குழு பாணியில் சொல்ல வேண்டுமெனில், முற்பாதி ஜல்லி, பிற்பாதி கில்லி!

தமிழ்மகன் | நாவல் | உயிர்மை | ரூ. 240 | பக்கங்கள் 375

இணையத்தில் வாங்க: கிழக்கு



26 Aug 2012

ஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- "மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்"

நாம் எவ்வளவு சாதாரண மனிதர்களாக இருந்தாலும், நமக்கு எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் நாம் பல்வேறு கவனக் குறுக்கீடுகளைத் தாண்டிதான் நம் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு சாலையைக் கடப்பதானாலும்கூட நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போக முடிவதில்லை. கண்டதையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அட, அப்படிதான் பார்க்கிறோமே, உருப்படியாக ஒரு விஷயத்தைப் பார்க்கிறோமா, ஆற அமர அதன் அழகை, அதிசயத்தை ரசிக்கிறோமா என்றால், அதுவும் கிடையாது - அபூர்வமான விஷயங்கள் எத்தனையோ நம் கண்களைத் தாண்டிச் சென்று விடுகின்றன. நாம் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கிறோம் என்பதுதான் பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கிறது.




விஷயத்துக்கு வருகிறேன். கல்கி, பாரதி, தி ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், நகுலன் என்று ஜெயமோகன் அவர்களால் அண்மையில் போட்டுத் தள்ளப்பட்டவர்களின் பட்டியல் கௌரவமானது - வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை, மறந்தாலும் மன்னித்திருக்கும் வாய்ப்பு சுத்தம். மிகையாகப் புகழப்பட்ட ஒவ்வொருத்தரையும் அவரவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் ஜெயமோகன் இந்த விமரிசனங்களை எழுதவே காரணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம்கூட இத்தனை நாட்களாக இருந்திருக்கிறது.

கல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்

கடந்த மூன்றாண்டுகளாக இரண்டு மாதத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், வீட்டிலிருக்கும் மற்றவர்கள் அவற்றைத் தொடுவது என்பது நான் எங்காவது வைத்துவிட்டுப் போகும்போது, திட்டிக்கொண்டே அவற்றை பத்திரப்படுத்துவது என்ற அளவில்தான். அதிர்ஷ்டவசமான விதிவிலக்குகளும் உண்டு; சில புத்தகங்களை வீட்டில் அனைவரும் படித்துவிடுவார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படித்தான் படித்தார்கள். ஒரு புத்தகத்தை வீட்டில் எல்லோரும் படிக்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம். திட்டு வாங்குவது வேறு குறையும்.



கல்யாண சமையல் சாதம் ஒரு முழு சுயசரிதை இல்லை. நடராஜன் தன்னுடைய வாழ்வானுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். ஏழு வயதில் தந்தையுடன் வேலைக்குச் சென்றது முதல், தான் மேலேறி வந்த அனுபவங்களை ஒரு தொண்ணூறு வயது தாத்தா சொல்லக் கேட்பது ஒரு டானிக் மாதிரியிருக்கிறது.

என்னுடைய ஏழுவயதில் நான் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அழுது கொண்டிருந்ததாக நினைவு. நடராஜன், அந்த வயதில் மாட்டைக் குளிப்பாட்டுவது, மற்ற வீடுகளுக்குச் சென்று கற்சட்டியைத் தேய்த்துக் கொடுப்பது, தந்தையுடன் சமையல் வேலைக்குச் செல்வது என்றிருந்திருக்கிறார். (1950க்கு முந்தைய வாழ்க்கைகளைப் படிக்கையில், ஒரே வீட்டில் நிறைய குழந்தைகள், குறைவான வருமானம் போன்றவை ரொம்பச் சாதாரணம் என்று தெரிகிறது. மேலும் குழந்தைகள் இறப்பு என்பதும் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு நிலைமை எவ்வளவோ மேல்).

கல்யாண வீடுகளில் சமையற்காரர்கள் நடத்தப்படும் விதமே தன்னை வைராக்கியத்தோடு உயரத்தை அடைய உந்துசக்தியாக இருந்ததாகச் சொல்கிறார் அவர்:


“விகடனில் என்னைத் தொடர் எழுதச்சொல்லிக் கேட்டபோது, எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வை இதுவரையில் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது சொல்கிறேன். ரொம்ப வெளிப்படையாகச் சொல்வதானால் குழப்பம்தான் உண்டானது. இடுப்பில் ஈரத்துண்டுடன், புகைமண்டலத்தின் நடுவே கரிபிடித்த பாத்திரங்களுடன் போராடிக் கொண்டிருக்கிற சாதாரண ஒரு சமையல்காரனுக்குப் பல லட்சக்கணக்கான வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெரிசாக என்ன இருக்கிறது என்பது தான் அந்தக் குழப்ப உணர்வு. 
"பிறகு கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்தபோது, கண்ணெதிரில் ஆள் உயர பாத்திரத்தில் சோறு பொங்கிக் கொண்டிருந்தாலும், சொந்தக் குடும்பத்துக்கு அரைவயிறு சோறுபோட முடியாமல் தவித்த எனது முதல் பாதி வாழ்க்கை பற்றிப் பகிர்ந்துகொண்டால்தான் என்ன என்று தோன்றியது. கூடவே, ‘சமையல்காரந்தானே’ என்று பரவலாக இருக்கிற உதாசீனத்தைப் பற்றியும் வாசகர்களிடம் ஒரு பாட்டம் சொல்லி அழுதால், பொதுவான அந்த அலட்சிய மனோநிலை மாறக்கூடும் என்றும் தோன்றியது. எனக்கு மனசும் கொஞ்சம் லேசாகும் போல் இருந்தது”


என்று சொன்னாலும், புத்தகம் முழுக்க முழுக்க சென்டிமென்ட்டைப் போட்டு நிறைத்து விடவில்லை. புத்தகத்தில் பாதி கல்யாண கலாட்டாக்கள்தான். மேலும், தன்னைத் தூக்கிவிட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாகவே இதை எடுத்துக்கொண்டிருக்கிறார் நடராஜன். கீதா கஃபே ஜெயராமன், திருப்பதியில் உதவி செய்த ரெட்டியார், தாசபிரகாஷ் ஹோட்டல்காரர்கள் என்று பலரும் தனக்கு உதவியதை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் கூடவே முப்பது பக்கங்களுக்கு அறுசுவை அரசு வழங்கும் சமையற்குறிப்புகளும் இருக்கின்றன.

கல்யாண சமையல் சாதம் | ‘அறுசுவை அரசு’ நடராஜன் | விகடன் பிரசுரம் |
128 பக்கங்கள் | விலை ரூ.60 | இங்கே வாங்கலாம்

25 Aug 2012

இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3


பெயர்               :     இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-3
பதிப்பகம்         :    கலைஞன் பதிப்பகம்,                          
                               10, கண்ணதாசன் சாலை,                       
                                தி.நகர், சென்னை-17        
உள்ளடக்கம்   :     சிறுகதைகள்
 தொகுத்தவர்  :    விட்டல் ராவ்


இரண்டு வாரம் முன்பு எழுதிய "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-1" புத்தக பார்வையைத் தொடர்ந்து இந்த வாரம்  "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-3"  புத்தகத்தைப் பார்க்கலாம்.

புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவ்வளவாக பெயர் தெரியாத எழுத்தாளர்கள் என்று சென்ற நூற்றாண்டில் வெளிவந்த கதைகளில் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையளவு கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விட்டல் ராவ். இத்தனை கதைகளைத் தேர்ந்தெடுக்க எத்தனைக் கதைகளைப் படித்திருக்க வேண்டும் இவர்? 

இந்தத் தொகுப்பில் என் மனதில் தாக்கம் ஏற்படுத்திய ஆறு சிறுகதைகள் இவை:

பிரயாணம்அசோகமித்திரன் .:வயது முதிர்ந்து நோயினால் அவதிப்படும் தன்னுடைய குருவுடன் மலைப் பிரதேசம் வழியாக  வரும் சீடன், இரவில் அவருடைய சாவை எதிர் கொள்கிறான். அதைத் தொடர்ந்து அவரது உடலை ஓநாய்களிடமிருந்து அவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை. சீடனின் பார்வையில் இருந்து மொத்த கதையும் சொல்லப்படுகிறது,  கடைசி பத்தி வரை மிக சாதாரணமாக செல்லும் கதை,  திடுக்கிட செய்யும் முடிவு, ஓ.ஹென்றிதனமான கதை, மிக சிறந்த ஹாரர் கதைன்னு சொல்லாம்.

ஜன்னல் - சுஜாதா : மனித மனம்   எவ்வளவு விசித்திரமானது ஒரு சமயம் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது,  இன்னொரு சமயம் அதை வெறுக்கவும் செய்கிறது. ஒரே வேலையை ஒன்பது வருடங்களாக  தினமும் 8 மணி நேரம் செய்யும் சீனிவாசனின் கதை இது. ஒரு நாள் தற்கொலை  செய்துக் கொள்ளும் எண்ணம் அதிகமாக வரவே மருத்துவரை சந்திக்கிறான்.இயந்திரத்தனமான வாழ்க்கை மனித மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான் - இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

யானையின் சாவு - சார்வாகன் : குழந்தைகளோடு பழக ஆரம்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும், நாம் அதனுடைய அலைவரிசையை அடையும்போது நாமும் குழந்தையாவே மாறிவிடுகிறோம், ஆனால் குழந்தை வளர்ந்து விடும்போது நாம் குழந்தையாவே இருந்து விடுகிறோம். கோயிலில் நிஜ யானையைப் பார்த்துவிட்டு அதை வாங்க வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தை.பொம்மை  யானை வாங்கித் தந்தவுடன் அதனுடன் ஐக்கியமாகி விடுகிறது, குழந்தையின் தந்தையான ரங்கநாதனும் பொம்மை யானையை நிஜ யானையாக பாவித்து விளையாடுகிறான், ஒரு நாள் குழந்தை மற்றும் யானையோடு புதிய ஆட்டம் ஆடலாம் என்று அவன் வரும்போது , குழந்தை யானையை வெறுத்து பொம்மை கார்க்கு தாவி விடுகிறது. 



24 Aug 2012

பால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்



பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப்  போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர  ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த  பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.


23 Aug 2012

மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா.பாலுசாமி


நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன் .. (அகம், 274;7,8)


                                                            (தண்டுகால் ஊன்றிய இடையன்)

அறிஞர் தியாடோர் பாஸ்கரனின் கட்டுரையில் முதன்முதலாக சா.பாலுசாமியின் ஆய்வு பற்றி அறிந்துகொண்டேன். மாமல்லபுரத்திலுள்ள சிற்பத்தொகுப்புகள் பற்றிய இந்த நூல் பல்லவ கலைப்படைபுகளை சமநிலையோடு ஆய்வு செய்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். மாமல்லபுரத்தில் உள்ள சாளுவன் குப்பத்துப் புலிக்குகையும், கிருஷ்ண மண்டபமும் பார்ப்பவர்களுக்கு பெரிய ஆச்சர்யம் தரும் சிற்பத்தொகுதிகள். வெறும் கற்சிலைகள் எனப்பார்ப்பவர்களுக்கு அவற்றில் அடங்கியிருக்கும் எண்ணிலடங்காத நுண்ணிய விவரங்கள் புரியாமல் போவதில் ஆச்சர்யமில்லை. அடுத்த முறை மாமல்லபுரம் போகுமுன் இந்த புத்தகத்தை கையிலெடுத்துச் செல்வது மிக விரிவான விவரங்களை நமக்கு அளிக்கும்.


நூலாசிரியர் சா.பாலுசாமி முன்வைக்கும் அவதானிப்புகள் மிகப் புதுமையானவை என முன்னுரையில் தியாடோர் பாஸ்கரன் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்ன புதுமைகள் இருக்கக்கூடும்? 

                                           
                                                        (தமிழ்நாடு - கீழ்வாலை குகை ஓவியம்)

பண்டைய இந்திய குகைகளில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கலை மதிப்புக்காகவோ, ஆட்சியாளரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவோ, ஓவியர்களின் திறமைக்கு சான்றாக அமைவதற்காகவோ வரையபடுபன அல்ல. கலை மதிப்பில்லாத குகை ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கை சார்ந்து வாழ்வோடு ஒன்றிருக்கும் அம்சங்களாக அமைந்துள்ளதால் அவர்களது அடையாளமாகக் கூட அச்சிற்பங்கள் கருதப்படுகின்றன. சில கோடுகள் மூலம் வரையப்பட்ட வினோத மிருகங்கள், கூட்டு நடனங்கள், வேட்டை சார்ந்த ஓவியங்கள் இதன் சிறப்பம்சமாகும். 

பின்னர் உருவான குப்தர்கள், பல்லவர்களது ஆட்சிக்காலத்தில் கலை பொருட்களுக்கு அவற்றின் பயன்பாடு தாண்டிய மதிப்பு உண்டானது. ஏறக்குறைய இக்காலகட்டத்தில் வெளியான ஓவியங்களும் சிற்பங்களும் மிக செழுமையான செவ்வியல் படைப்புகளாக உருவாகின. படைப்புகளின் செழுமை நுண்மை சார்ந்து மதிப்பு உருவானது. அது மட்டுமல்லாது பலவடிவங்களில், மாறுபட்ட கோணங்களில், உடல்மொழியை வெளிப்படுத்தும் வண்ணம் படைக்கப்பட்டன. அன்றைய வாழ்வை சொல்வது மட்டுமல்ல செழுமையான மாதிரி வடிவங்களும் பண்பாட்டு ஆவணங்களாக வடிவமைக்கப்பட்டன. ஒரு விதத்தில் ஆட்சியாளர்களின் பெருமையை உணர்த்த உருவான கலைப்படைப்புகள் அவர்களது சமய நம்பிக்கைகளையும் உள்ளடிக்கியிருந்தது. சைவம், வைணம் பெரு மதங்களாக உருவான இக்காலகட்டத்தில் தொடர்ச்சியான நிதி உதவி மூலம் பலதரப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், கோவில்கள் மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர ஆதரவு கிடைத்து வந்தது. ஒரே காலகட்டத்தில் தமிழகத்தின் பல கோவில்களில் ஒரே வகையான சிற்பத்தொகுதிகளை உருவாக்கியதிலிருந்து இதை உணரலாம்.


                                           
                                                           (மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபம்)

சா.பாலுசாமியின் ஆய்வு சிற்பங்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் கொண்டு அமைந்த ஒன்றல்ல. புராணக்கதைகள், இதிகாச நிகழ்வுகள், சங்க இலக்கியங்கள், பல்லவ சிற்பம் சார்ந்த பொதுவான பான்மை ஆகியவற்றின் கலவையில் பல அவதானிப்புகளை முன்வைக்கிறார். இந்திய பண்பாடு மற்றும் வரலாறை நேர்கோட்டு நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்கும் ஆய்வாளர்கள் விட இப்படிப்பட்ட ஆய்வுகள் உண்மைக்கு பன்முகத்தன்மையை அளிக்கின்றன. பல கோணங்களில் அன்றைய பண்பாடை நம்மால் நெருங்கிப் பார்க்க முடிகிறது.



                                                       (சாளுவன் குப்பத்து புலிக்குகை)

மாமல்லபுரம் அருகே இருக்கும் சாளுவன் குப்பத்து புலிக்குகை என்பது கோவிலே அல்ல என வெளியான பிற அறிஞர்களின் ஆய்வை மறுபரிசீலனை செய்கிறார் ஆசிரியர். முருகனையும் இந்திரனையும் பரிவார தெய்வங்களாகக் கொண்ட சிவன்கோயிலையும் வடக்கு முகமாகக் கொற்றவைக்குரிய சிம்மக்கோயிலையும் கொண்டதொரு கூட்டுக்கோயில் என முடிவுக்கு வருகிறார். இதை முன்வைக்க கொற்றவைக்குரிய பொது அம்சங்களான சிம்மம், யாளிகளின் வடிவங்களைச் சுட்டிக்காட்டுவதோடு திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல்களின் வரும் பாடல்களின்படி முருகனுக்கு மயிலும் யானையும் வாகனங்கள் என்பதை இச்சிற்பங்கள் காட்டுவதாகத் தெரிவிக்கிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் யானை மேல் உட்கார்ந்திருப்பவர் இந்திரன் ஆதலால் இந்திரவிழா நடக்கும் இடமாக புலிக்குகையை தவறாக சித்தரித்து உள்ளனர் எனக்கூறுகிறார். புலிக்குகை ஒரு நடன அரங்கோ, இந்திரவிழா நடக்கும் களியரங்கோ இல்லை அது ஒரு கூட்டுக்கோவில் என நிறுவுவதற்கு புராணங்களைத் துணைக்கழைக்கவும் அவர் தயங்கவில்லை.

விஷ்ணுபுராணத்தின்படி பாற்கடலைக் கடையும் போது வெளிவந்த ஐராவதம் எனும் வெள்ளையானை, கடும் நஞ்சு, அமிர்தம், உச்சைச்சிரவம் எனும் வெண்குதிரை, திருமகள் போன்றவற்றை பல தேவர்களும் பெருங்கடவுளரும் பகிர்ந்துகொண்டனர். ஐராவதம் மற்றும் உச்சைச்சிரவம் இரண்டையும் இந்திரன் எடுத்துக்கொண்டதால் புலிக்குகையின் கிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை யானை மற்றும் வெள்ளை குதிரை மீது இருப்பவர் இந்திரனே என வாதிடுகிறார். மேலும் குப்தர் காலத்தில் பெருந்தெய்வமாகக் கருதப்பட்ட இந்திரன் பல்லவர் காலத்தில் திசை தெய்வமாக ஆகியுள்ளதால் கருவரைக்குள் அவனது சிற்பம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

மாமல்லபுரத்தின் மற்றொரு சிறப்பான சிற்பத்தொகுதி கிருஷ்ண மண்டபமாகும். கோவர்த்தன மலையின் கீழ் கண்ணன் மற்றும் பலராமனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் ஆயர், ஆய்ச்சியர், குழந்தைகள், அரச குலப்பெண்டியர், பசு, எருது, கன்று மற்றும் விந்தை விலங்குகள் எனப்பலரும் நிற்கும் காட்சி இத்திரிக்கப்பட்டுள்ளது. ஆயர்களின் பண்பாட்டு சித்திரமாகக் கருதக்கூடிய அனைத்து குறிப்புகளையும் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். ஆயர்களின் ஆயுதங்களான கோடரி, கோல், ஆய்ச்சியரின் மண் பானைகள், உறி, மோர் பானைகள், வாஞ்சையோடு கன்றை நாவால் நக்கும் பசு, செழுமையான எருது, நகை அலங்காரங்கள், வளை அணிந்திருக்கும் கோபியர் என சிற்பத்தை உயிரோட்டமுள்ள குடும்பச் சித்திரம் போல விவரிக்கிறார். குறிப்பாக சிற்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில அசைவுகளை சிற்பிகள் தத்ரூபமாகச் செதுக்கியதை சுட்டிக்காட்டுகிறார். அவர் சொல்லும் உடல்மொழி, மாறுபட்ட கோணங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், விவரிக்கும் சிற்ப பாணிகள் முதலியன மாமல்லபுரத்துக்கு உடனே சென்று அவற்றைக் காண வேண்டும் எனும் ஆவலைக் கூட்டுகின்றன. உள்ளிருக்கும் கருப்பு-வெள்ளைப் படங்கள் தவிர வண்ணப்படங்கள் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

குடைவரை கோவில் (மலையைக் குடைந்து உருவாக்கப்படும்) , ஒற்றைக் கற்றளி (Monolithic), கட்டுமானக் கோயில், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள் எனச் சிற்பங்கள் அமைப்பதில் பல பாணிகளை ஆசிரியர் விளக்கியுள்ளது சிற்பக்கலை பற்றித் தெரியாத எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மரபிலமைந்த கோயில்கள் மட்டுமல்லாத புதுமையான வடிவில் உருவாக்கப்பட்ட உருளைக்கோயில், சிம்ம வாகனங்களின் மார்பில் சதுரப்பிளவுக்கு உள்ளே உருவாக்கப்பட்ட கோயில் என பலவகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார்.



                                                               (பாயும் உறியும் ஏந்திய இடைச்சி)

பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, புறநானூறுப் பாடல்களில் ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டு சிற்பத்தின் முக்கியமான பகுதிகளை விவரித்திருக்கும் பகுதி மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

பேர் ஊரும் சிற்றூரும் கெளவை எடுப்பவள்போல்
மோரொடு வந்தாள் - தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு.. (கலித்தொகை)

கலித்தொகை பாடலில் செம்மார்ந்த நடையை உடையவள்; தலையில் மோர்ப்பானையுடன் அழகாலும் இளமையாலும் மிக்கு உடையவளாய் பேரூரின் கண்ணும் சிற்றூரின் கண்ணும் ஆரவாரம் எழுமாறு செல்பவள் போல், மோரோடு வந்தவள் அழகை நெஞ்சே காண்பாயாக, யாரோடும் சொல்லி ஒப்பிடமுடியாத வனப்பை உடையவள் - என சிற்பத்தின் அழகு அம்சங்களை பாடலுடன் விவரிக்கிறார்.

ஒரு விதத்தில் பார்த்தால் வாழ்வில் இருப்பவற்றை எந்தவித மிகையுமில்லாது விவரிப்பவையாக சங்கப் பாடல்கள் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் இருந்த ஆயர் சமூகத்தை இதனுடன் இணைத்துப்பார்க்கும்போது நமது பண்டைய இந்திய வாழ்வை படம் பிடிப்பதற்கு எத்தனை விதமான வழிமுறைகள் இருந்திருக்கின்றன என்ற எண்ணம் மனதை மகிழ்விக்கிறது. வரலாறு எனும் நிகழ்வுகளின் தொகுப்பை ஒரே பாங்கில் படம் பிடிக்காமல் புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், சமய பக்தி இலக்கியங்கள், சிற்பங்கள், கோவில்கள் என எத்தனை எத்தனை விதங்களில் நமது பண்பாடு நம்முன் விரியக்காத்திருக்கிறது! பக்கசார்பு எடுக்காமல், சமய ஆவ்ணங்களோடு ஒன்றிவிடாமல் பல விதமான குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து செய்யப்பட்ட ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. ஆய்வறிக்கை போலில்லாமல் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக தேவையான இடங்களில் சிறப்பான படங்களோடு அமைந்திருப்பது புத்தகத்தை பலதரப்பட்ட வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும்.



புகைப்படங்கள் நன்றி- Kilvalai wikipedia , புத்தகத்திலுள்ள புகைப்படங்கள்.
தலைப்பு - புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
ஆசிரியர் - சா.பாலுசாமி (சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி தமிழ்த் துறை)
உள்ளடக்கம் - ஆய்வுக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர் - காலச்சுவடு பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை.காம்.

Related Posts Plugin for WordPress, Blogger...