"ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் என்றுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை"
கண்ணதாசனின் பாடல் வரிகளும், ஒரு பெண் ஒரே சமயத்தில் இரு ஆண்களை விரும்பும் கதையின் புதுமை குறுகுறுப்புமே எப்போதோ படித்திருந்த தி. ஜானகிராமனின் "மலர்மஞ்சம்" நாவலின் அடியோட்டமாக மனதில் பதிந்திருந்தது. கூடவே, இனிப்பை உண்டபின்னும் நாவில் தங்கிவிட்ட தித்திப்பின் சுவையை எப்போதும் தரும் தி. ஜாவின் எழுத்தும். மேலதிக விஷயங்களும் பரிமாணங்களும் மறந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை படிக்கக் கிடைத்தபோது வேறொரு புதிய நாவலையே படிக்கும் எண்ணம்.
