"கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்." – தேவதச்சன்{1}
சில ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரியத்துற்குரிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயமோகன். தமிழின் முக்கிய கவிஞர்களை ஒரு சேர சந்தித்தது அதுவே முதல்முறை. அந்த கூடுகைக்கு சுகுமாரன், கலாபிரியா, தேவதேவன் ஆகியவர்களுடன் தேவதச்சனும் வந்திருந்தார். நவீன கவிதையை தயங்கித் தயங்கி பரிச்சயம் செய்துகொண்ட காலகட்டமும் அதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து வைத்திருந்தேன். எவரிடமும் தனித்து பேசவும் கவிதை பற்றிய அபிப்ராயங்களை சொல்லவும் கூச்சம். எது கவிதை? அல்லது மடக்கி எழுதப்பட்ட வரிகள் எப்போது கவிதையாகிறது? குறிப்பிட்ட ஒரு கவிதையை ஏன் எல்லோரும் சிறந்த கவிதை என கொண்டாடுகிறார்கள்? அல்லது சிலவற்றை நிராகரிக்கிறார்கள்? என குழம்பி திரிந்த காலமது (இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. மோசமான கவிதைகளை இனங்காண முடியவில்லை என்றாலும், ஓரளவு நல்ல கவிதைகளை அடையாளம் காண முடிகிறது). அந்தக் கூடுகை கவிதை குறித்தான எனது புரிதல்களை விரிவாக்கியது. தேவதச்சன் தமிழின் முக்கியமான கவிஞர். கோவில்பட்டியில் இயங்கிய முக்கியமான இலக்கிய மையம் என்பதைத் தாண்டி அவருடைய கவிதைகளை ஒருசேர வாசித்தது விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது நிறைவான அனுபவத்தை அளித்தது.