சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்
முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து போய்விடுதல் நலம். இது திறனாய்வு அன்று. நேற்று பார்த்த திரைப்படத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றதொரு பகிர்வு. நன்றி.
கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக, பொன்னியின் செல்வனைப் பலமுறைகள் படித்தது உண்டு. கல்கியின் சமூக நாவல்களில் ’அலை ஓசை’ வாசித்தது உண்டு. தியாகபூமி’யை நீண்டகாலமாகத் தேடியது உண்டு; தியாகபூமி புத்தகத்தைச் சொல்கிறேன்.
நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கம்போல் கிரியின் கைகளில் அரை டஜன் புத்தகங்கள் இருந்தன (இந்த வரிகளை உங்களுக்காக இடைச் செருகியது; “உங்கள்” கிரி). தேவனின் மிஸ்டர்.வேதாந்தம், கல்கியின் தியாகபூமி இரண்டையும் ‘லபக்’ என்று படியேறுமுன் பிடுங்கிக் கொண்டேன்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் எழுதப்பட்ட புதினம் தியாகபூமி. ஆனந்த விகடனில் கல்கி பணிபுரிந்தபோது படைத்த தொடர்கதை. நல்ல வர்த்தக சினிமா எடுக்கவல்ல கதை. அந்தக் காலத்திலேயே இதே தலைப்பில் திரைப்படம் ஒன்றும் வந்துள்ளதாகத் தெரிகிறது. சரியாக அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது திரைப்படம்; இல்லையில்லை புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் நெடுங்கரை கிராமத்தில் 1918’ல் நடப்பதாகக் கதை.
சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள்.
மாடர்னான மணவாட்டியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன். சாவித்திரி ஒரு பட்டிக்காடு என்பது அறியாமல் அவளை ஸ்ரீதரன் மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.
(அந்த காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டி சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் கொடுமைகள்.
கொடுமையின் உச்சமாக நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்குப் பயணப்படுகிறாள் சாவித்திரி. ஊருக்கு வந்தால் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு முன்னதாகவே அங்கே காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துகொண்டு பட்டணம் செல்கிறார்கள்.
சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் பட்டணம் பயணிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை சம்பு சாஸ்திரியிடம் சேர்த்துவிட்டு சாவித்திரி உமாராணியாக உருமாறுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார். ”ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!” என்ற பின்னணிப் பாடல் இன்றி புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறுகிறாள் சாவித்திரி. காலம் கரைகிறது. ஸ்ரீதரன் தமிழகம் வருகிறான். உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான்.
கோர்ட் சொன்ன தீர்ப்பு என்ன? இறுதியில் சாவித்திரி என்ன முடிவு எடுக்கிறாள்; ஸ்ரீதரனுடன் சேர்ந்தாளா? சம்பு சாஸ்திரி தன் மகளை மறுபடி சந்தித்தாரா? இவற்றை வெள்ளித்திரையில்.... இல்லையில்லை கடைசி அத்தியாயத்தில் வாசிப்பீர்.
கதையின் மிகக் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் “நல்லான்”. சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருக்கும் ’பெயருக்கு ஏற்றதொரு” நல்ல கதாபாத்திரம்.
சரி சரி, இத்தனை சொன்னபின் முடிவையும் சொல்லிவிடுவோம். மகாத்மாவின் அறப்போரில் நாயகனும் நாயகியும் இணைவதாக நிறைகிறது கதை.
கதை நமக்குப் பழகிய கதை என்றாலும் அமரர் கல்கியின் சொக்க வைக்கும் நடை நம்மைப் புத்தகத்துடன் அப்படியே கட்டிப்போடவல்ல ஒன்று என இந்தப் புத்தகமும் நிரூபிக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுப்பவர்கள் கடைசி அத்தியாயம் முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் (மேஜை மேல் வைப்பார்களா என்றெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்).
நல்ல எண்டர்டெயினிங் கதை வாசிக்க விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்கலாம். புனைவுகள் படைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வித டிப்ஸ்களுக்கும் இந்தப் புத்தகத்தை அணுகலாம். கல்கி நிச்சயம் இந்த இரண்டு ரக வாசகர்களுக்கும் கேரண்டி தருகிறார்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று சம்பு சாஸ்திரி மூலமாக சொல்லும் ஆசிரியர், பெண் விடுதலை குறித்து சாவித்திரி வழியே சொல்கிறார். தேச விடுதலை பற்றின எண்ணங்களும் கதை நெடூகிலும் உண்டு. இந்தக் கதைக்கும் கதை திரைக்காவியமாகப் படைக்கப்பட்ட போது அதற்கும் அந்த காலத்துப் பொதுஜனங்கள் எப்படி வரவேற்பு தந்தார்கள் என்று தெரியவில்லை.
தன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று, “நம் தேசத்திலேயே ஆதிகாலத்திலிருந்து எத்தனையோ பேர் தியாகம் செய்யவில்லையா? நம் தேசத்தை அதனால்தானே தியாகபூமி என்று சொல்கிறார்கள்”, என்று சம்பு சாஸ்திரி இறுதியில் சாவித்திரியிடம் கேட்கிறார்.
“சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வே; அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் தியாகம் செய்யேன்”, என்னும் சாவித்திரியின் ஆணித்தரமான பதில்கள் மிக வீரியம் மிக்கவை. படிக்கையில் நம்மைப் புல்லரிக்கச் செய்பவை என்றால் அது மிகையில்லை.
__________________
தியாகபூமி
சமூக நாவல்
அமரர் கல்கி
அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கும்
அனைத்துப் பதிப்பகங்களிலும் நிச்சயம் கிடைக்கும்
விலை ரூபாய். பதிப்பாளரையும் அச்சுத் தரத்தையும் பொருத்தது :)