காலத்தால் மறக்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்கள் பட்டியலில் தன் கோபால்
முகர்ஜியைச் சேர்க்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்தவரையில் பலருக்கு
அவரைத் தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல், இணையத்தில் எதையோ தேடிக் கொண்டு போய்,
கடைசியில் தன் கோபால் முகர்ஜியைச் சென்றடைந்தேன். அவர் யானைகளை வைத்து இரண்டு புத்தகங்கள்
எழுதியிருக்கிறார் என்பது காரணமாக இருக்கலாம். தன் கோபால் முகர்ஜி, சிறுவர்களுக்கான
எழுத்தாளர் மட்டுமல்ல. அவருடைய படைப்புகள் சிறுவர் கதைகள், புனைவுகள், கவிதைகள், அபுனைவுகள்
என்று பல வடிவங்களைக் கொண்டவை. சிறுவர்களுக்கான புத்தகங்களின் பேசுபொருள் மனிதர்களுக்கும்
மிருகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தங்கள் தான்.
மேற்கு வங்காளத்தில் 1890ல் பிறந்து, அங்கிருந்து ஜப்பானுக்குச்
சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். முகர்ஜியின் வாழ்க்கைச் சரித்திரம்
கொஞ்சம் குழப்பமானது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தேடினால் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம்.
இவருடைய சகோதரர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.
அவர் கைது செய்யப்பட்ட பின், தானும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று தன் கோபால், கொல்கத்தாவிலிருந்து ஜப்பானுக்கு
தப்பிப் போனதாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் சிறிது காலம் கல்வி பயின்றபின், அங்கிருந்து
அமெரிக்காவுக்குப் பெயர்ந்திருக்கிறார். ஆனால், ஏன், எப்படிப் போனார் என்பதும் இங்கே
கொஞ்சம் குழப்பம் தான். ஆனால், இரண்டு இடங்களிலும் அவர் இந்தியாவில் நடந்து வந்த அன்னிய
ஆட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஜவஹர்லால் நேருவிடமும் அவருக்கு
பழக்கம் இருந்திருக்கிறது. எழுத்தைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு
இருந்ததாகத் தெரிகிறது. சிறுவர் இலக்கியத்திற்கான விருதான, நியூபெர்ரி மெடல் 1928ல்
கே-நெக் நாவலுக்காக பெற்றார். பின்னர் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால், 1936ல்
தற்கொலை செய்து கொண்டார்.
~