கடந்த மாதம் நண்பருடன் சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு, நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வந்ததும் அமளிதுமளியானது. படிமம், உருவகம் என்பதெல்லாம் மொழிப் பற்றாக்குறையின் பக்கவிளைவுகள் என்பது அவரது ஆணித்தரமான நம்பிக்கை. நேரடியாக ஒரு கதையைச் சொல்லத் தெரியாத எழுத்தாளரை ஆதரிக்கவும் பத்து விமர்சகர்கள் பிழைக்கவும் உருவான ஜல்லியடிப்புகள் சூழ்ந்தது தமிழ் இலக்கிய வெளி என்பதும் அன்னாரின் கருத்து. சூடாக விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, 'தமிழ் சிற்றிதழ்களில் காற்புள்ளி அறைப்புள்ளியின் எண்ணிக்கையைப் போல பலவிதமான தடித்தடி வார்த்தைகள் எதற்கு? நேரடியாகச் சொல்லத் தெரியாததை மறைக்கத்தானே?' எனும் அணுகுண்டை சமாளிக்க முடியாத நிலைமையில் நான் தவிக்கும்போது என் கையிலிருந்த 'புலப்படாத நகரங்கள் (Invisible Cities)' நாவலை சொல்லச் சொல்ல கேட்காமல் பிடுங்கிகொண்டார்.
சிறிது நேரம் புரட்டிப் பார்த்தவர், 'இது என்ன மேஜிக் கதையா?' என அலட்சியம் தொனித்த குரலில் கேட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. 'இது ஒரு கிளாசிக்', எனச் சொல்லி முடிக்கும்போது என் குரல் கம்மிவிட்டது. ஒருவேளை நான் நம்புகிறேன் என்பதற்காக புரியாத புத்தகங்களை ஆணித்தரமாக நிறுவப் பார்க்கிறேனோ எனும் குழப்பம் உருவானது. புத்தகங்களை அல்ல என்னை நிறுவத்தான் இந்த வேடமோ எனும் எண்ணமும் முளைக்காமல் இல்லை. இந்த நாவலைப் பற்றி நண்பருக்கு நான் சொன்னவை கீழே உள்ளது.