கதை கேட்பது, படிப்பது ஒரு ஆசுவாசமான சுகம். கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் விரியும் கற்பனை, ஆர்வம், கவனம் மற்ற விசயங்களில் எத்தனை முயன்றாலும் வருவதில்லை. சிறுவயதில் அம்புலிமாமா, கோகுலம் என படிக்கும் புத்தகம் முழுக்க கதைகள் இருந்தாலும் தொடர் கதைகளும், படக்கதைகளும் முதலில் படித்துவிட்டு மற்ற கதைகளைப் படிப்பேன். சுவாரஸ்ய திருப்பங்களோடு "தொடரும்" என முடியும் கதைகள் தொடர அடுத்த இதழுக்காக காத்திருப்பதும், அடுத்த இதழ் வந்ததும் உடனே படித்துவிட்டு மறுபடி காத்திருப்பதுமே வழக்கமாய் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் தொடர்கதை, படக்கதை, கைவினைப்பொருள் குறிப்பு என ஆளுக்கு ஒன்றாய் பிரித்து, கத்தரித்து, தொகுத்து, சேமித்து வைத்தது உண்டு. அத்தகைய தொகுப்புகளை மொத்தமாய் படிக்க அத்தனை ஆனந்தமாய் இருக்கும். விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் என புத்தக கண்காட்சிகளில் ஏதேனும் புத்தகம் ஒன்றை வாங்கும் வழக்கமும் இருந்தது.
கதை கேட்டு, கதை படித்து, பின் அதையெல்லாம் மறந்து பாடத்திட்டதில் கதைகதையாய் எழுதி முடித்து பெற்றோர் பதவி வரும்வரை கதை சொல்லும் அவசியம் இருக்கவில்லை. பின் மகனுக்கு உணவு ஊட்ட கதை அவசியமானபின் கிட்டத்தட்ட மூன்று வேளை மூன்று கதைகள் சொல்லவேண்டி வந்தது. அதுவும் சுவாரஸ்யமான கதைகள் மட்டுமே சொல்ல வேண்டும் எனப் பல நிபந்தனைகள்.