'சென்னையினுடான உறவு ஆணின் முறையற்ற பெண் தொடர்பு போல. பிடிக்கும், ஆனால் வெளியே சொல்ல முடியாது’. எழுத்தாளார் கு.அழகிரிசாமியின் சத்தியவாக்கு இது என பழ.அதியமான்,.தான் தொகுத்த சென்னைக்கு வந்தேன் எனும் நூலின் முன்னுரையில் பதிவு செய்கிறார் சென்னை என்றில்லை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெருநகரங்களுக்கும் இது பொருந்தக்கூடும்.
காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த தொகுப்பு நூலில் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன், கு.அழகிரிசாமி, சாமி சிதம்பரனார், அசோகன், க.நா.சு, ந.சிதம்பர சுப்பிரமணியம், ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியவர்கள் சரஸ்வதி இதழுக்காக 1958-59 ஆண்டுகளில் பட்டின பிரவேசம் பகுதியில் எழுதிய கட்டுரைகள், இவற்றுடன் சின்ன அண்ணாமலை, கொத்தமங்கலம் சுப்பு, உ.வெ.சா, சுந்தர ராமசாமி, மற்றும் புதுமைபித்தனின் தனிக் கட்டுரைகளையும் இணைத்து தொகுப்பாக்கியுள்ளார் பழ.அதியமான்.