பதிவர்: பூ. கொ. சரவணன்
நவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.
ஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.