சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்
தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த துவக்கப் பத்திகள் என்று ஒரு தொகுப்பு இருக்குமென்றால், அதில் பம்மல் சம்பந்தம் எழுதிய 'என் சுயசரிதை'யின் முதல் இரண்டு பத்திகளும் இடம்பெற வலுவாகப் பரிந்துரைப்பேன்.
என் இளம் பருவ சரித்திரம்
"பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞானசம்பந்தம் 1873ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1ந் தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந் தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்" என்று என் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.
பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம். அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும் அவன் ஒரு நாள் இறக்கவேண்டுமென்பதாம். ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?
இவ்வளவுதான். இந்த இரண்டே பத்திகள்தான் முதல் அத்தியாயம். தன் சுயசரிதையை எழுத முற்படும்போது பிறப்பும் இறப்புமே நிச்சயம், ஆனால் அதைப் பிறரே கூற வேண்டும் என்று சொல்லி தான் தன் வாழ்வைப் பற்றி சொல்வதத்தனையையும் சந்தேகத்தின் நிழலில் இருத்தும் பம்மல் சம்பந்தம் இதை எழுதிய ஒரு காரணத்தாலேயே நம் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிறார். தமிழ் இங்கு ஒரு உச்சத்தை அனாயசமாகத் தொட்டிருக்கிறது.

