உபயவேதாந்தம் என வேதம் மற்றும் வேதாந்தத்தின் சாரமாகச் சொல்லப்படும் பிரபந்தங்கள் எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பரம்பொருளான விஷ்ணுவைப் போற்றி பாடப் பெற்றவை. தமிழின் மிகச் செறிவான கவிதைகளாகவும், பக்தி ரசத்தின் தொடக்கமாகவும் கருதப்படும் இப்பிரபந்தங்களை ஜகத்ரட்சகன், ஸ்ரீராம பாரதி போன்ற பலர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அவற்றுள் மொழியியலாளர் ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த நூறு பிரபந்தங்கள் கவித்துவ அழகில் உயர்ந்ததாகவும், மொழியில் செறிவானதாகவும், மூலத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமாகவும் அமைந்துள்ளதை பலர் சுட்டிக்காட்டியுள்ளர்.
Hymns for the Drowning - பரம்பொருளான விஷ்ணுவின் மீது `ஆழ்ந்து` பக்திகொண்ட ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில், இந்த புத்தகத்தில் நம்மாழ்வாரின் தேர்ந்தெடுத்த பாசுரங்களை மட்டும் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளார். ஓசை நயம் மாறாமல், பொருள் சார்ந்த மயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைந்திருப்பதால் பெரும் கவிதை அனுபவத்தை இந்த மொழியாக்கம் நமக்கு அளிக்கிறது. இவற்றை வெறும் மொழியாக்கம் எனச் சொல்லமுடியுமா? ஒரு வகையில், தமிழின் செறிவான சங்கப்பாடல்களையும், தமிழரின் பண்பாட்டு குறியீடுகளையும், பாரதப் புராணங்கள் இதிகாசங்களையும் சேர்த்தமைத்து ஒரு பெரும் அனுபவப் பகிர்வாகப் படிப்பவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அவ்வகையில், இப்பாடல்களைப் படிப்பவர்கள் கவிதை நயத்தில் மட்டும் மயங்குவதில்லை, பண்டைய பாரதத்தின் வாழ்வு முறையும், சமூகத்தின் குறியீடுகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்கள்.
