சிறப்புப் பதிவர்: N. Balajhi
”ஸ்னோ" என்ற இந்த நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 2006ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக் எழுதிய நாவல் இது. துருக்கி மொழியில் எழுதப்பட்ட இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்ததே ஒரு பெரிய கதை. புத்தகத்தை வாங்கிய நாள் முதல் திரும்பத் திரும்ப வாசிக்க முயன்று தோற்றுப் போயிருந்தேன், இந்த மாதிரி மூன்று முறை தோற்றபின் நான்காவது முயற்சியில்தான் முழுசாகப் படிக்க முடிந்தது. இதற்கு முந்தைய முயற்சிகளில் ஆரம்பத்திலுள்ள முதல் சில அத்தியாயங்களைத் தாண்டிப் படிக்க முடிந்ததில்லை. புத்தக அலமாரியில் ஸ்னோவை நான் தொலைத்தேனோ, இல்லை அதுதான் என்னைத் தொலைத்ததோ, சென்ற வாரம் வரை அதைப் படிக்கவே முடியவில்லை. போன வாரம், கப்போர்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு வழியாக ஸ்னோ என்னை அடைந்தது - என்ன இருக்கிறது பார்க்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன், இந்த தடவைதான் புத்தகத்தினுள் என்னால் நுழைய முடிந்தது.
நாவலின் மையப்பாத்திரம் கா. அவன் ஒரு பிரபல துருக்கிய கவிஞன். அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வெளியேறியவன் தன் தாயின் இறுதிச் சடங்குகளுக்காக துருக்கி திரும்புகிறான். அங்கு சந்திக்கும் பழைய நண்பன் மூலம் அவன் கல்லூரி நாட்களில் காதலித்த இபேக் இப்பொழுது விவாகரத்து செய்துவிட்டாள் என்றும் தனியாக இருக்கிறாள் என்றும் கேள்வி படுகிறான். இதை அடுத்து அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் காவின் மனதை ஆட்டிப் படைக்கிறது. துருக்கியின் எல்லைப் பகுதியில் உள்ள கர்ஸ் நகரை நகரை நோக்கி பஸ்ஸில் கிளம்புகிறான். தன் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாதவன் கா, அவன் சந்தோஷத்தைத் தேடி கர்ஸ் திரும்புகிறான். அங்கே அவன் காதலித்த பெண் இருக்கிறாள். அவள் பெயர் இபெக். இபெக்கின் காதலைக் கொண்டு தன் வாழ்வில் மகிழ்ச்சியைத் திரும்ப பெற ஆசைப்படுகிறான் கா.
