தமிழில் இன்றைய வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சிகள். அவற்றைத் தாண்டி திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் என மக்களுக்கு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். அச்சில் வெகுஜன ஊடகங்களாக தினசரிகளும், வாராந்திர பத்திரிகைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையிலும் கட்டுரைகள், அரசியல், சுய முன்னேற்றம், பொது அறிவு புத்தகங்களைத் தாண்டி தமிழில் கதைகளை வாசிக்க சிறிய கூட்டம் ஓன்று இருக்கத்தான் செய்கிறது.
அந்த வாசகர்களை கருத்தில் கொண்டு வருடம்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவருகின்றன. அவற்றில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்புகள் ஏதோ ஓரு வகையில் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. மற்ற படைப்புகளில் தரமானதை அடையாளம் காண வாசகனுக்கு பெரும் வழிகாட்டலாக இருப்பது மூத்த எழுத்தாளர்கள் தான்.
அப்படி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் சமீபத்தில் அடையாளம் காட்டப்பட்டது ஏக்நாத்தின் "கெடைகாடு" புதினம் (நாவல்). நாவலாசிரியர் ஏக்நாத் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை. அதனால் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன்.