பதிவர் - சிவா கிருஷ்ணமூர்த்தி
ஒரு பின்மாலைப் பொழுதில் நண்பர்களுடன் உலக விவகாரங்களை, இலக்கிய வம்புகளை, இலக்கியவாதிகளின் சின்னத்தனங்களை ஆவேசமாக தர்க்கித்துவிட்டு உலகில் உள்ள அனைத்தையும் சற்றே விலகி நின்று நிதானமாகவும் தெளிவாகவும் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்புகிறீர்கள். யாருமற்ற இருண்ட தெரு முனையில் தெரு நாயின் கிர்ர் என்ற எச்சரிக்கை ஒலி தெளிவாக கேட்கிறது. என்ன செய்வீர்கள்? எல்லா அறச்சீற்றங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் நுழைய தயங்குவீர்கள்தானே? இதை என்னவென்று எடுத்துக் கொள்ளலாம்? தைரியமின்மையா விவேகமா?
போர் முனையில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் அல்லது தலையைத் தூக்கினாலே எதிரியின் தோட்டா துளைக்கும் சாத்தியம் ஏராளம் என்று உறுதியாகத் தெரிந்தும் கூட்டம் கூட்டமாக முன்னேறிச் செல்லும் நபர்களை என்னவென்று வகைப்படுத்துவீர்கள்? வீரர்கள்? முட்டாள்கள்? தனக்கு சாவும் மெடலும் மட்டுமே நிச்சயம் என்று தெரிந்தும் முன்னேறுவது என்ன மாதிரியான அசட்டுத்தனம்?
உங்களைக் கவர்ந்த அல்லது பாதித்த மனிதர்கள், உங்கள் மனமெனும் மேடையில் நாற்காலி போட்டு அமர்த்தியிருக்கும் ஹீரோக்கள், யார் யார் என்று கேட்டால் உங்களால் ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?
பிரிட்டிஷ்காரர், ரனால்ஃப் பியான்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திற்கு போவதிற்கு முன்னால் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் நிச்சயம் தேவை - நீங்கள் பிரிட்டிஷாராக இல்லாத பட்சத்தில் இவரைப்பற்றி தெரிவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு சிறப்புப் படையில் பணிபுரிந்தவர் (SAS). வட மற்றும் தென் துருவங்கள் - இரண்டையும் தரை வழியே அடைந்த முதல் மனிதர். அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களை கடந்த முதல் மனிதர் (கூட சார்லஸ் பர்டன் என்று துணையுடன்).
எவரெஸ்ட்டை அடைந்த பிரிட்டிஷார்களில் வயதானவர் (சீனியர் சிட்டிசனுக்கான பஸ் பாஸ்ஸுடன்! 65 வயது!). அதுவும் ஒரு தடவையில்லை. திபெத் வழி, நேபாளம் வழி என்று மூன்று முறை ஏறியிருக்கிறார், சாரிட்டிக்காக. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது அருமை கேப்டன் ஸ்காட் (Great Scott!) பற்றி இவர் எழுதிய புத்தகத்தின் மூலம்தான் என் கண்ணில் பட்டார்.
இந்த My Heroes புத்தகத்தில் இவர் ஹீரோவாக கருதுபவர்களைப் பற்றி பதினோரு அத்தியாயங்களில் விவரிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் பார்வையிலிருந்து சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு விதமான துடுக்கு நடையுடன், சற்று உணர்ச்சிபூர்வமாக, பிரிட்டிஷ் சினிக்குடன் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை கவனப்படுத்துகிறார்.
