கவிதை என்றால் அதற்கென சொல்லப்பட்டிருக்கும்
அனைத்து இலக்கணங்களையும் தாங்கி நிற்கவேண்டும் எனும் கூற்றுகளுக்கு மத்தியில் அப்படியான
ஒரு பிம்பத்தை உடைத்து சாதாரண வார்த்தைகளின் கோர்வைகளால் நம்மை மயக்கும் கவிதைகள் மனுஷ்யபுத்திரனுடையவை. தொகுப்பில் பெரும்பாலும் உரைநடைக் கவிதைகள் தாம். கொடுக்கப்படும்
அன்பு, மறுக்கப்படும் பாசம், பிரிவாற்றாமை,
தனிமை, துயர், பிரிவு,
சந்தேகம், துக்கம் என மனதிற்கு வலியேற்படுத்தும்
அனைத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.
தனது சுற்றத்தைத் தீவிரமாக
கவனிக்கிறார். ஒவ்வொரு கவிதையும் நாம் கடந்து செல்லும் அல்லது
மறந்து செல்லும் ஒரு நுணுக்கமான விஷயத்தை விவரிக்கிறது. கல்யாண்ஜிக்கு
பறவைகள் போல மனுஷ்யபுத்திரனுக்குப் பூனைகள். வாசிக்கும்போதே அவை
நம்மை அருகார்ந்து காலைச்சுற்றி மடிமேல் ஏறிப்படுத்துக் கொள்கின்றன. காதலையும் பிரிவையும் ஒருசேரப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை எழுத ஏலாது.
என்றால்
எனும் கவிதையில் உன்னிடம் வீழும்போது அது எப்போதும் மீட்சியற்றதாக
இருக்கவேண்டும் எனும் அதிதீவிர அன்பும், அமைதிக்குத்
திரும்புதல் எனும் கவிதையில் இருவருக்குமிடையேயான ஈகோவினால்
இருவரும் பிரிய நேரிட அதனால் ஏற்படும் மௌனத்தையும் எழுதியிருக்கிறார். உறவுகளையும் உறவுகளுக்கிடையேயான நெருக்கம், காதல்,
பிரிவு, ஈகோ போன்றவற்றையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.
ஒரு கடைசி சந்திப்பை உணராமல்
உணர்த்தும் ஒரு கடைசிக்கோப்பை தேநீர், எள்ளல்
மிகு ’வாசகர் சந்திப்பு’, மழையில் சோகத்தை கரைக்கும்
ஒரு ’திரும்பும்போது மட்டும்’ இன்னும் பல கவிதைகளை
மனதிற்கு மிக நெருக்கமாக உணரலாம். தொகுப்பிலிருந்து எனக்குப்
பிடித்த கவிதைகள் சில.
புனித
ஒப்பந்தம்
மரத்திலிருந்த பறவை
தரையிலிருந்த வேடனிடம்
ஒப்பந்தம் செய்துகொண்டது
நான் உன் கைகளுக்கு வரும்போது
நீ அழுத்தமாகப் பிடிக்கக்கூடாது என்றது
வேடன் புன்னைகையுடன்
தலையசைத்தான்
நான் பாடும்போது
நீ மௌனமாக இருக்கவேண்டும் என்றது
வேடன்
மௌனமே சிறந்த மொழி என்றான்
உனது உணவுப் பழக்கங்களை
எனக்குக் கற்றுத் தரக்கூடாது என்றது
வேடன்
அது ஆரோக்கியமானதல்ல என்றான்
என்னை அடைக்கும் கூண்டிற்கு
என்னிடமும் ஒரு மாற்றுச் சாவி இருக்க வேண்டும் என்றது
வேடன்
அதுதானே சமத்துவமும்கூட என்றான்
என்னைத் தேடி வரும் நண்பர்களை
இணக்கமாக நடத்தவேண்டும் என்றது
வேடன்
அது நம் பண்பாடு என்றான்
என் பூர்வீக நினைவுகளை
அவமதிக்கக் கூடாது என்றது
வேடன்
தனித்தன்மைகள் முக்கியமானவை என்றான்
நீ தன்னம்பிக்கை இழக்கும்போது
என் சிறகுகளை வெட்டக் கூடாது என்றது
வேடன்
தானும் பறத்தலின் இன்பத்தை அறிவேன் என்றான்
எனக்கு ஆகாயம் நினைவுக்கு வந்துவிடும்போது
என்னைப் போக விடவேண்டும் என்றது
வேடன்
உன் பாதைகள் உன்னுடையதே என்றான்
இறுதியாக
என்னைத் தொடும்போது
நீ வேடன் என்பதை மறந்துவிடவேண்டும் என்றது
வேடன்
தான் ஒரு வேடனேயல்ல என்று சத்தியம் செய்தான்
பறவை அப்போது
என்றென்றைக்குமாக மறந்துபோனது
தான் ஒரு பறவை என்பதை.
இந்தக் கவிதையை வாசித்து முடிக்கையில்
துரோகத்தின் சூழ்ச்சியறியா ஒரு பறவையாகிப் போனேன்.
பயமற்ற வாழ்வு
கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்துவிடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்துவிடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லாமல் இருக்கலாம்
இந்தக் கவிதை பேசுவது வெறும்
உருவத்தின் அளவைப் பற்றி மட்டுமல்ல, நாம் சார்ந்திருக்கும்
பிரச்சினைகளை..
கடைசியாக
அழியும் டைனோசர்களில்
கடைசி டைனோசர்
நானாகத்தான் இருக்கவேண்டும்
பிறகு
இந்த உலகை
முழுமையாக ஆளட்டும்
சின்னஞ்சிறு பூச்சிகள்!
இப்படியாக, ஒரு சில வாரங்களாகவே நான் மனுஷ்யபுத்திரனாக மாறியிருக்கிறேன். ஆழ்ந்த நிம்மதி, உறக்கம், அமைதி.
புத்தகத்தை முடித்த பிறகும் மீண்டும் மீண்டுமாய் அதில் என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறேன். மனதிலிருக்கும் காயங்களுக்கும் தழும்புகளுக்கும்
மயிலிறகாய் இருக்கின்றன இக்கவிதைகள். கவிதை என்றால் காத தூரம்
ஓடுபவர்களுக்குக் கூட இந்த புத்தகத்தை பரிந்துரைப்பேன். வாசிக்க
அவ்வளவு எளிதாகவும் மனதில் ஒரு பெரும் புயலையும் அதற்குப் பிறகான அமைதியையும் ஏற்படுத்தவல்லது
இந்தப் புத்தகம்.
கவிதை தொகுப்பு | மனுஷ்யபுத்திரன் | பக்கங்கள் 432 | விலை ரூ.350