ஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.
நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது.
பற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால்?, நமக்கு எப்படிப் பொருந்தும்? இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.