- வெ சுரேஷ் -
ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முதல் வகை சர்ச்சை, விருது வாங்கும் எழுத்தாளர் தேர்வை எதிர்மறையாக விமரிசிப்பதாக இருக்கும். தகுதியானவர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒருவருக்கு மிகச்சில சமயங்களே இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறை, வணிக இதழ்களில் அதிகம் எழுதியவரும் தமிழக அரசின் உயர் பதவி ஒன்றில் இருந்தவருமான ஒருவர் விருது பெற்றபோது, நல்ல வேளை, இந்த முறை துணி வியாபாரிக்கும் துணைவேந்தருக்கும் தராமல் ஒரு எழுத்தாளருக்கு விருதுத் தந்தார்களே என்று சுஜாதா விளையாட்டாக எழுதி சொல்லடிபட்டார்.
இரண்டாம் வகை சர்ச்சை, தகுதியான எழுத்தாளருக்கு விருது கொடுக்கப்பட்டாலும், அதை அவரது சிறந்த ஆக்கத்துக்குத் தராமல், சுமாரான அல்லது அவர் எதில் சிறந்து விளங்கினாரோ அந்த வகைமைக்கு மாறான வேறொன்றுக்குக் கொடுக்கப்படுவது குறித்து எழுவது. கவிதைகளுக்காக அல்லாமல் ஒரு தொடர்கதைக்கு கண்ணதாசன் விருது பெற்றதை நினைவு கூரலாம். அது போலவே தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் முதலானவர்களுக்கும் இவ்விருது அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படவில்லை என்ற குறை உண்டு.
இந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.