சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்.
நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம்.
இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது என எழுதமுடிவதில்லை) இருக்கும் ஏற்பாடுகள் கொஞ்சம் புரியத் தொடங்கியது. நான் வசிக்கும் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் கிராமத்தில் தடுக்கி விழுந்தால் Funeral directors எனும் கடைசி பயண ஏற்பாடுகளைச் செய்யும் கடையில்தான் விழ வேண்டும். இப்படிப்பட்ட இடத்தில் பொதுவாக அரசு சவுகரியங்கள் அளவுக்கதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கென ஷாப்பிங் வண்டிகள், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தப்படுத்த கவுன்சில் எனப்படும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் என ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள். தோட்டத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அட்டைப்பெட்டிகள் என மண்ணில் மக்கி அழியக்கூடிய பொருட்களையும் இதர கழிவுகளையும் சரியாகப் பிரித்து வைக்க தனித்தனி குப்பைத் தொட்டிகள் உள்ளன. ஒழுங்காக தரம் பிரித்து குப்பை கொட்டவே வாரயிறுதியைச் செலவு செய்கிறார்கள். இப்படியாக இங்கு வசிக்கும் பலருக்கும் பொதுவாகவே இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக உள்ளது. தனது வீட்டுத் தோட்டத்தில் செர்ரிப் பழங்களைத் தின்ன வரும் பறவைகள் குறைவது போலத் தெரிந்தால் அவசர போலிஸைக் கூப்பிட்டுவிடுவார் என் பக்கத்து வீட்டுப் பாட்டி. RSPB எனும் பறவைகள் பாதுகாப்பு அமைப்பு போலிஸ் வந்ததும் அவரது பதற்றம் குறையும்.
இப்படித்தான் வாழவேண்டும் எனத் தங்களுக்குள் திட்டமிட்ட சட்டகத்துள் வாழும் மனிதர்களுக்கிடையே ஜொனாதன் லிவிங்ஸ்டோன் போன்ற ’கடற்புள்ளு’ (seagull - நன்றி : நாடோடித்தடம், கவிஞர் ராஜ சுந்தரராஜன்) வாழ்ந்தால் எப்படி இருக்கும்? வெளியான முப்பது வருடங்களுக்குப் பின்னும் விற்பனையில் உலக அளவில் சக்கப்போடு போடுவதில் பைபிளுக்குப் பிறகு இந்த புத்தகம்தான் எனச் சொல்லலாம். அந்தளவுக்கு படிக்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் இந்த புத்தகம் பாதித்திருக்கிறது.