சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தனது பத்தியில் 'நமக்குத் தேவை டேன் ப்ரௌன்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தொலைகாட்சியின் ஆதிக்கம் காரணமாக வணிகப் பத்திரிக்கைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த தொடர்கதைகள் அனேகமாக நின்று போனதையும் சுஜாதா போன்ற பெரும் ஆளுமைகள் உருவாகாததையும் அதனால் தமிழில் வாசகர் பரப்பு சுருங்குவதையும் சுட்டிக்காட்டி அப்படி ஒரு எழுத்தாளர் உருவாவதன் அவசியத்தைக் கூறியிருந்தார். டேன் பிரவுன் போல் தொன்மத்தையும் நவீன வாழ்வையும் இணைத்து, தமிழ், இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரையும் அப்படியான ஒரு எழுத்தையும் நானும் சில காலமாக ஏக்கத்துடனேயே எதிர்பார்த்திருந்தேன். மேலும் ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி (The shiva Trilogy) , அசோக் பன்கர் (Ramayana series), மற்றும் அஷ்வின் சாங்கி (The Krishna key, Rozabal line) போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கும்போது தமிழில் அவ்வாறான ஒரு எழுத்து இல்லையே என்று நிஜமாகவே ஏங்கினேன்.
சுதாகரின் '6174' என்ற நாவல் அத்தகைய ஒன்றாக வந்திருக்கக் கூடியது. ஆனால் ஆசிரியருக்குத் தன் பேசுபொருள் மீதும் நாவலின் வடிவத்தின் மீதும் சரியானதொரு பிடிமானம் இல்லாத காரணத்தால் நல்ல கருப்பொருள் கொண்ட ஒரு நாவல் அதன் முழு வீச்சை அடையாமல் தோல்வியுற்றது என்றே எனக்கு தோன்றியது. கே. என். சிவராமனின் 'கர்ணனின் கவசம்' அது போன்றதொரு நாவல் என்று வகைப்படுத்தப் பட்டாலும் நான் மேலே சொன்ன ஆங்கில நாவல்களுடன் அதை நேர்மறையாக ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை.
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் இரா. முருகவேள் எழுதியுள்ள மிளிர் கல் என்ற நாவலையும் அதற்கு ஓர் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த நாவல் என்ற பரிசு அளித்திருப்பதாகவும் ஒரு தகவலைப் படித்தேன். அன்று மாலையே என் நல்லூழாக அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது (வழக்கம் போல் கோவை தியாகு புத்தக நிலையத்தில்தான்).
அன்று இரவு படிக்க ஆரம்பித்தவன் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்தில் ஒரே மூச்சில் நாவலை முடித்துவிட்டுதான் உறங்கப் போனேன். உண்மையிலேயே கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். இப்படி ஒரு தமிழ் நாவலை ஒரே மூச்சில் படித்து வெகு காலம் ஆகிவிட்டது.