1954'ல் ஜெயகாந்தனின் இருபதாவது வயதில் அவர் எழுதிய கதைகள். 1956'ல் சிறுகதைத் தொகுப்பாக வெளியாகின்றது. நாற்பது ஆண்டுகள் மறுபதிப்பு காணாமல் 1996'ல் இரண்டாம் பாதிப்பு வெளியாகிறது.
சத்யஜித் ரே'வின் பதேர் பாஞ்சாலி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உயிர்மை வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தில் எஸ்.ரா. இப்படி எழுதுகிறார்.
ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் பார்வையாளனிடம் மூன்று விதமான நினைவுகள் உள்ளன. ஒன்று அந்தத் திரைப்படம் காண்பதற்காகச் சென்றது. அதாவது எந்த ஊரில் எந்தத் திரையரங்கில் யாரோடு படம் பார்க்கச் சென்றோம், அப்போது என்ன வயது என்பது குறித்தது. இரண்டாவது அந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அது எந்த விதமான எதிர்வினையை உருவாக்கியது. அதில் எது பிடித்திருந்தது, எதை ரசிக்கவில்லை, என்பது போன்று திரைப்படத்தில் உருவாகும் நினைவுகள்.
மூன்றாவது அத்திரைப்படம் வேறு எதைஎதையெல்லாம் நினைவுபடுத்துகிறது.......
சில புத்தகங்களுக்கும் இப்படித்தானே?
இப்போது ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்று பெரும்பாலும் ஆகிவிட்டாலும் சில புத்தகங்களை வருடாந்திர புத்தக விழாவிற்காகவெனக் குறித்து வைத்துக் காத்திருந்து வாங்கும் வழக்கம் இன்றும் எனக்கு உண்டு.
சில நேரங்களில் சில மனிதர்கள் வாங்க பணம் சேர்த்துக் கொண்டு மாதவரத்திலிருந்து சாந்தி தியேட்டர் வாசலில் இருக்கும் புத்தகக் கடைக்குப் போன கதை உண்டு. மோகமுள் வாங்க மிகவும் சிரமப்பட்டுப் பணம் சேர்த்து, வீட்டுக்குத் தெரியாமல் திருவல்லிக்கேணி வரை சென்று வாங்கி வந்த கதை உண்டு. தொண்ணூறுகளின் மத்தியில் நூற்று முப்பது ரூபாய் (என்று நினைவு) புத்தகம் என்று வீட்டில் சொன்னால் ஜோட்டால் அடிப்பார்கள் என்று மோகமுள் புத்தகத்தில் விலை குறிப்பிட்டிருந்த பக்கத்தை கிழித்த பிறகே வீடு நுழைந்தது ஒரு வரலாறு.
இன்றைக்கும் இப்படிச் சில புத்தகங்கள் நம் கைக்கு வந்து சேர்வதன் பின்னால் கதைகள் சில இருக்கவே செய்கின்றன.
கவிக்கோ அப்துல் ரகுமான் யாப்பு வடிவில் எழுதிய தேவகானம் புத்தகம் குறித்து சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் வாசித்து விட்டு அதை வாங்க ஒரு ஆன்லைன் தளத்திற்குச் சென்றேன். அங்கே "புயலிலே ஒரு தோணி"க்கு இணைப்பு கிடைக்க அதையும் வாங்குகிறேன் எனச் சுட்டியைச் சொடுக்கி மொத்தம் 480 ரூபாய்க்கு பில். முப்பது ரூபாய் டெலிவரி சார்ஜ் சேர்த்து 510 ரூபாயைக் கட்டினால் புத்தகத்தை அனுப்புகிறேன் என்றது அந்த இணையப் புத்தகத் தளம்.
ஐநூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினால் டெலிவரி இலவசம் என்ற அறிவிப்பு கண்ணில் பட, மிச்சம் இருபது ரூபாய்க்கு என்ன புத்தகம் கிடைக்கும் எனது தேடியதில் கண்ணில் தட்டுப்பட்டதுதான் ஜெயகாந்தனின் "உதயம்". 2011 ஆம் வருடம் நான்காவது பதிப்பில் 40 ரூபாய் விலைக்குப் போட்டிருந்த புத்தகம் அது. மொத்த பில் தொகை 520 ருபாய் இப்போது. 10 ரூபாய் சேர்த்துத் தந்ததில் இன்னொரு புத்தகம் கைக்கு வந்ததில் பேருவகை கொண்டது மனம்.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஜெயகாந்தனின் பிற சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.
நாற்பது நெடும் வருடங்களுக்குப் பின் அந்த இரண்டாம் பதிப்பிற்காக புத்தகத்தை ப்ரூஃப் பார்க்கும் ஜெயகாந்தனின் எண்ணவோட்டம் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொண்டே இப்புத்தகத்தை வாசிக்கத் துவங்குகையில், பெர்னார்ட் ஷா மற்றும் புதுமைப்பித்தன் இருவரின் இதே போன்ற அனுபவங்களைத் துணைக்கு அழைத்து தன் முன்னுரையில் தன் மனவோட்டம் குறித்து எழுதுகிறார் ஜெயகாந்தன்.
"சாந்தி பூமி" ஒரு உருவகக் கதை வகையறா என்று முன்னுரையில் ஜெயகாந்தனே குறிப்பிடுகிறார். அதாவது ஓபிஎஸ், ஈபிஎஸ், தமிழிசைகளை வைத்து ஒரு நையாண்டிக் கதையை யாரேனும் எழுத, அதை அறுபது வருடங்கள் கழித்துப் படிப்பவர் ஒருவருக்கு என்னத்தைப் புரியுமோ அதேதான் உங்களுக்கும் புரியும். தொகுப்பின் முதற்கதையாக இந்தக் கதை இருந்துவிடுவதால் தொகுப்பிற்கு ஒரு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இந்தக் கதை.
"சுமை பேதம்" கதை ஒரு இருபது வயதுக்காரர் பத்து வயதுகளுக்கு ஐம்பதுகளில் எழுதிய கதை எனலாம். "கண்ணன் பிறந்தான்" ஒரு "நல்லதோர் வீணை செய்தே வகையறா சோகக் கதை.
இந்த மூன்று கதைகளையும் கடந்த பின் ஜேகே சம்மர்சால்ட் அடித்து " உதயம், பிழைப்பு, மீனாட்சி ராஜ்ஜியம், காந்தி ராஜ்ஜியம்" என்று அடுத்த நான்கு கதைகளையும் தருகிறார்.
"உதயம்" - ஒரு இருபது வயசுப் பையன் இப்படியெல்லாம் எழுதுவானா என்று யோசிக்கும் விஷயங்கள் எல்லாம் கதையில் வருகின்றன. நர்த்தனம் ஆடும் நாகராஜன். கலைக்கென காமத்தைத் துறந்த ஒருவன் கதை. கதையினில் நாகன் ஆடும் நர்த்தனத்தையும் விட, ஜேகேவின் வார்த்தை நர்த்தனங்கள் ஆஹாஹா! இந்த ஒரு கதைக்கே ஃபுல் பைசா வசூல்.
அலுவலகத்தில் என் அணியில் (team) இருக்கும் ஒரு பையன் மூன்று வருடங்களுக்கு முன் தாய்லாந்து போய் வந்தான். இல்லையில்லை. நீங்கள் நினைப்பது இல்லை. யாரோ ஒரு ட்ராவல் ஏஜென்ட் ஒருத்தன் ஒன்றரை லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இவன் அங்கே போயிருக்கிறான். இறங்கின நேரத்தில் அந்த ஊர்ப் பணத்தில் நான்கு நாள் தின்ன மட்டுமே கையில் காசு இருந்ததாம்.
வேலையின்றி அன்ன ஆகாரமின்றி அல்லலுற்று ஒரு வட இந்தியனைச் சந்தித்து தட்டுத் தடுமாறி தனக்குத் தெரிந்த ஹிந்தியில் தன் நிலை சொல்லி அவன் தயவில் தாயகம் திரும்பினானாம். இந்தக் கதையின் 1950'களின் மிகக் கொடூரமான டிராஜிடி வடிவம் "பிழைப்பு". பிழைக்கச் செல்பவர்கள் செத்துப் போவது என்னவோர் முரண்! அது இன்றும் தொடர்வதுதான் முரண்களில் மூத்த முரண்.
"மீனாச்சி ராஜ்ஜியம்" உலகின் முதலும் மூத்ததுமான தொழில் ஒன்றில் ஈடுபடும் மீனாச்சியின் வாழ்க்கைக்குக் கோடு. இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்பதான கேள்விகளுக்கு கதை நடுவில் ஒரு பதிலும் தருகிறார் ஜேகே.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "அனிமல் ஃபார்ம்" கதை இந்தியச் சாயலில் "காந்தி ராஜ்ஜியம்" என்று தொகுப்பின் கடைசிச் சிறுகதையாக. கதை உங்களுக்குத் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
தன் நூற்றைம்பது சிறுகதைகளை இருபது வருடங்களில் எழுதி முடித்த ஜெயகாந்தனின் முதற்பத்துக் கதைகளில் தேர்ந்தெடுத்த ஏழு கதைகள் இவை என்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு.
இந்தத் தொகுப்பு "உடுமலை" ஆன்லைனில் கிடைக்கிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.