- வெ சுரேஷ் -
போகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப்போது அவை வெளியான இதழ்களில் படித்துள்ளேன். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு இப்போது 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்' (உயிர்மை பதிப்பகம்) தொகுப்பு மூலம் கிடைத்தது. இதுவே அவரது முதல் தொகுப்பு.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை வெளியானபோதே படித்துவிட்டிருக்கிறேன் . இப்போது மொத்தமாக படிக்கும்போது உடனடியாக மனதில் Humiliated and Insulted என்ற வரி ஓடியது. இப்போது அதிகம் பேசப்படாமல் போயிருக்கும் தாஸ்தாவெஸ்கி நாவலின் தலைப்பு அது. போகனின் இந்தத் தொகுப்புக்கும் அந்தத் தலைப்புப் பொருந்தும்.