தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை.
அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும். சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.
இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் (Mitch Albom).
வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.