ஜெயகாந்தன் எழுதிய இந்த தொடர்கதை 1965 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதனால்தானோ என்னமோ கதையும் எல்லா திசைகளிலும் சிதறிச் செல்கிறது. பாதிக்கு மேல் காதல் கதை பாணியில் ஓர் ஒருமை கூடிவிடுவது என்னமோ நிஜம்தான் என்றாலும் நாவலாக இதைக் கருதமுடியாது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இதை மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன? சாதுர்யமான கதைசொல்லல் என்பதாலா? அல்லது அவரது தனிப்பார்வைகள் அக்காலத்தில் புரட்சிகரமானவை என்பதாலா? பழமைவாதத்தை மீறி புது உலகைச் சந்திக்கத் துடிக்கும் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பு என்பதனால் இது முக்கியமாகிறது.
சுதந்தரம் கிடைப்பதற்காக தன் மண்ணுக்குரிய விழுமியங்களைப் பற்றிக்கொண்டிருந்த சமூகம் கிடைத்த விடுதலையைத் தொடர்ந்து தனது அடுத்த அடியை எப்பக்கம் வைப்பது என்ற தீர்மானமின்றி நின்றுகொண்டிருந்த தருணம். அழகியல் வகைப்பாட்டுக்காக அதை நவீனத்துவம் எனக் குறிப்பிடலாம். மிக முக்கியமான இந்த காலகட்டத்தை சரியானபடி திசைகாட்டும் சுய சிந்தனையாளர்கள் அரிதாகவே இருந்ததால், மேற்குலகை நகல் செய்யும் ‘வெஸ்டர்ன்’ சமூகம்தான் நவீனம் என சுலபமான பாதையைப் பலரும் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. விஞ்ஞானம், சுயதொழில்கள், விவசாயம், கலை வெளிப்பாடு என சகலமும் இப்பாதையை எடுத்துக்கொண்டது எனலாம். அதாவது நூற்றாண்டுகளாக செழித்த சமூகத்தை வேரிலிருந்து மேல் நோக்கி பராமரிக்கத் தெரிந்த அறிவை உதாசீனம் செய்து நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான அறிவை கேள்வி கேட்காமல் பலன் சார்ந்து உபயோகிக்கிறோம். ஸ்லோகங்களில் வரும் பலஸ்ருதிகூட சில பாடல்கள்தான் வரும், ஆனால் நமது அறிவு தேடல் முழுமையும் பலன் சார்ந்ததாக மாறியது.