சிறப்பு பதிவர் : அஜய்
எக்காலத்திலும் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் இயல்பு கொண்ட ஒரு தொல்கதையை 'வரலாற்றாய்வாளர்' நவீனப்படுத்துகிறது. பல திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் கதைக்கருவைக் கொடுத்த தொல்கதை இது - ப்ராம் ஸ்டோகர் தன் டிராகுலாவை உருவாக்க அடிப்படையாக இருந்த 'கவுண்ட் டிராகுலா' (Count Dracula) அல்லது 'வ்லாத் தெபஸ்' (Vlad Tepes) என்ற அந்த நிஜ மனிதரைத்தான் சொல்கிறேன். டிவிலைட் (Twilight) தொடரை அதன் வெற்றியின் பாதிப்பில் நகல் செய்து எழுதப்பட்ட நாவல் இல்லை இது. இரத்தக் காட்டேரிகள், vampirism போன்ற விஷயங்கள் அதிக அளவில் இல்லாத, முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை எலிசபெத் கொஸ்தோவாவின் 'வரலாற்றாய்வாளன்'. இது டான் ப்ரௌவுனும் அவரது சகாக்களும் பொங்கலிட்டுப் பரிமாறும் பழகிய சரக்கில்லை. சிறப்பான கதையமைப்பு கொண்ட இந்த நாவலில் அவற்றைவிட தேர்ந்த கதை சொல்லல் உண்டு.
இந்த நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லியின் பார்வையில் இதன் முதல் பகுதி துவங்குகிறது. நாவலின் எந்த இடத்திலும் இவரது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இவர். இந்தப் பகுதியில், ஒரு விடலைப் பருவ மாணவியான கதைசொல்லி தன் தந்தை பால் உடன், ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கிறார். பால் சமூக அமைதி மையம் ஒன்றை நிர்வகிக்கிறார், அது மனிதாபிமான சேவைகளைச் செய்கிறது. சொர்க்கம் போன்ற கதைசொல்லியின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் குறுக்கிடுகிறது - அவரது தந்தையின் நூலகத்தில் ஒரு நாள் அது எதிர்ப்படுகிறது. மரக்கட்டையில் செதுக்கிய வடிவங்களில் மசி பூசி அச்சிடப்பட்ட அதன் ஓவியங்களில் டிராகுலாவோடு தொடர்புடைய டிராகனின் ஒற்றை உருவமும் இருக்கிறது. அது குறித்து தன் தந்தையிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் பேசும் விருப்பம் இல்லை. ஆனால் எப்படியோ தன் தந்தையிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுகிறார். கதை சொல்லியின் தந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் துவங்குகிறார்.