சாப்பாட்டுப் புராணம் - சமஸ்
தான் பிரசுரம்
செப்’2009 பதிப்பு ரூ. 60/-
112 பக்கங்கள்
இணையத்தில் வாங்க: உடுமலை
தம்ரோட் ஹல்வா நம்மில் பலர் அறிந்த ஒரு இனிப்பு வகை. நமக்கு ரவா உப்புமா தெரியும், ரவா கேசரி தெரியும், ரவா தோசையும் தெரியும். ரவா ஹல்வா தெரியுமா? ரவை கொண்டு கிளறப்படும் ஒருவகை ஹல்வாதான் இந்த தம்ரோட் ஹல்வா.
சென்னை - திருவல்லிக்கேணி - எல்லீஸ் ரோடு - பாஷா ஸ்வீட்ஸில் இந்த தம்ரோட் ஹல்வா ரொம்பப் பிரசித்தம். எல்லீஸ் ரோடில்* பாஷா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இரண்டோ மூன்றோ கடைகள் உண்டு. எல்லாக் கடைகளிலும் தம்ரோட் கிடைக்கும், ஆனால் சரியான பாஷா, தேவி தியேட்டருக்கு நேர் பின்னே இருப்பார், அவரிடம்தான் ’நச்’ சுவையில் தம்ரோட் ஹல்வா கிடைக்கும்.
* (சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடிய திசையிலிருந்து வாலாஜா ரோடு பிடித்து மவுண்ட் ரோடு வந்தீர்கள் என்றால் அண்ணா சிலை சுரங்க நடைபாதைக்கு முன்னதாக வரும் இடது திருப்பம்தான் எல்லீஸ் ரோடு. தேவி தியேட்டருக்குப் பின் சந்து எனவும் கொள்ளலாம்)
சென்னையிலிருந்து திருச்சி ட்ரங்க் ரோடு பிடித்து எந்த வெளியூருக்குப் போவதானாலும் அச்சரப்பாக்கத்தைக் கடந்து போனீர்களானால் அங்கே இருக்கும் கணேஷ்பவனில் டிபன் காப்பி சாப்பிடாமல் போகக்கூடாது என்று இணைய அன்பர்கள் மாயவரத்தானும், ஆர்.கோகுலும் சொல்வார்கள். அச்சரப்பாக்கம் போனால் பாஷா கணக்காய் அங்கேயும் ஐந்தாறு கணேஷபவனங்கள். இந்த அனுபவத்தை முன்னமே பேசுகிறேன் தளத்தில் எழுதியுள்ளேன். பாரம்பரிய கணேஷ் பவன் “பழைய” என்னும் போர்டு தாங்கி நிற்பாராம். அதுதான் அடையாளம்.