ஒரு படைப்புடன் வாசகன் கொண்டிருக்கும் உறவு குறித்து பலர் எழுதியுள்ளனர். பெரும்பாலும் சொந்தப் படைப்புகளைப் பற்றி தாங்களே பேசக்கூடாது எனும் எழுத்தாளனின் தேவையற்ற தன்னடக்கம் காரணமாக விமர்சகர்கள் முன்வைக்கும் குறிப்புகள் படைப்பை முந்திக்கொண்டு வாசகனை சென்றடைகின்றன. இது பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நடக்காது. மிகக் குறுகிய வட்டத்துள் புழங்கும் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. விமர்சனத்தைப் பொருத்து துர்பாக்கிய நிலை வாசகனுக்கா படைப்பாளிக்கா எனும் சங்கடங்களும் இதில் அடங்கும். இவற்றைத் தாண்டி வாசகன் படைப்போடு கொள்ளும் நேரடி உறவு மலர்வதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்.
ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’நாவல் மேற்சொன்ன அனைத்து சங்கடங்களையும் மீறி வாசகனை அடைய முனையும் படைப்பாகத் தோன்றுகிறது. முதல் பதிப்பு ஜூன் 1942 ஆம் ஆண்டு கு.ப.ராஜகோபாலனின் ஆசியோடு வெளியானது. பிற்காலத்தில் வெளியான சில விமர்சனங்கள் மூலம் இந்த நாவல் மீண்டும் மீண்டும் பல விதமான வாசிப்புகளைச் சுமந்து வந்துள்ளது.
’கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத் தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்..மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாகவேண்டும்..கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா’, என கு.ப.ராஜகோபாலன் நாவல் முன்னுரையில் எழுதுகிறார். கிராம வாழ்க்கையின் எளிமையில் நற்குணங்கள் இருக்கின்றன, பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது என்பதால் கிராமப் புனருத்தாரணம் செய்வது போல நாவலின் பண்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி தனது விமர்சனத்தில் ‘பாத்திரங்கள் ஆயாசம் எதுவுமின்றித் தம் போக்கில் எழும்பிவருகிறார்கள். வாழ்வு மீது ஆசிரியர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெற்றி என இந்த நாவலைச் சொல்லலாம்..நாகம்மாள் எவ்வித ஒப்பனையும் செய்யப்படாமல் உயிர்ப்புடன் இயங்குகிறாள்’, எனக் குறிப்பிடுகிறார். பெரும்பாலும் நாவலின் எளிமையான உருவாக்கம், செறிவான பாத்திரப் படைப்பு மற்றும் கதையின் இயல்பானப் போக்கு போன்றவை இதன் பலம் என்கிறார்.