மனிதனுக்கு தன் வாழ்வின் கதையை மீள மீள சொல்வதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் இருக்கும் போலிருக்கிறது. தான் பெற்ற வெற்றிகள், அம்முயற்சிகளில் தாம் பெற்ற தோல்விகள், நினைவெச்சமாக உலர்ந்த வடுக்கள், வலி கொடுக்கும் ஆறாத காயங்கள். உலகில் பிறந்து மரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்ல ஏதோ ஒரு வாழ்க்கை செய்தி இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று நிகழ்வுகளுடன் தனி மனித சரிதைகளை சேர்ந்து வாசிப்பது அபாரமான அனுபவம். ஒற்றை நிகழ்வின் கணக்கற்ற பரிமாணங்களை அவை நமக்குக் காட்டக்கூடும். காந்தியின் செயலராக பணிபுரிந்த கல்யாணம் அவர்களின் வாழ்வைப் பேசும் இந்த நாவலை வாசித்தவுடன் வரலாற்றின் மாற்று பரிமாணங்கள், சாத்தியகூறுகள் குறித்த சிந்தனைகள் தொற்றிக்கொண்டன.

நாவலாசிரியர் குமரி எஸ்.நீலகண்டன் சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவர் எழுதிய ;ஒரு ராஜகுமாரனின் கதை' எனும் கவிதை (இந்த நாவலின் ஒரு பகுதியாக வருவது) 'காந்தி இன்று' தளத்தில் ஏற்கனவே பிரசுரம் ஆகியிருக்கிறது. 490 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் இதுவரை நாம் அறிந்திடாத பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு சொல்லி செல்கிறார். அத்துடன் நில்லாமல் பிற்சேர்க்கை பகுதியிலும் நாவலின் பகுதியாகவும் காந்தியுடன் கல்யாணம் மற்றும் பிரபலங்கள் இருக்கும் அறிய புகைப்படங்கள், காந்தி கைப்பட திருத்திய கடித குறிப்புகள் , வெளிவராத கடிதங்கள, வெவ்வேறு முறையில் காந்தியை விளித்து எழுதப்பட்ட தபால் அட்டைகள், நாளேட்டு செய்தி பிரதிகள் என பல அரிய ஆவணங்களையும் தொகுத்துள்ளார்.