பதிவர் - கடலூர் சீனு
சமீபத்தில் திரைக்கலை விஞ்ஞானம் வளர்ந்த வரலாறு குறித்த சில பதிவுகள் படித்துக் கொண்டிருந்தேன். மேற்கு உலகம் முழுக்க சலனப் படம் உருவாக்கிப் பார்க்கும் உத்வேகம் அலைஅலையாக எழுந்து பரவி, தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானிகளால் அந்த உத்வேகம் செப்பனிடப்பட்டு, கிட்டத்தட்ட மௌனப்படங்கள்வரை விஞ்ஞானம் வளர்ந்து விடுகிறது.
இந்தத் தருணத்தில் விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் கலப்புப் பிள்ளையாக விளைந்த திரைப்படம் வணிகமே என வணிகர்களாலும், கலையே என்று கலைஞர்களாலும் அலைக்கழிக்கப்பட, இந்த இரண்டையும் சமன் செய்யும் ஆளுமையாக உருவெடுத்தார் சார்லி சாப்ளின். சாப்ளின் ஒரு தொழில்நுட்பமாக திரைப்பட அறிவியலின் பலம் பலவீனங்களை அறிந்தவர். அவரது காலத்தில் 18 துண்டுகள் வழிதான் ஒரு ஷாட் படம் பிடிக்க இயலும். விளைவு, திரையில் காட்சிகள் வேகத் த்வனியில் அசையும். இந்த பலவீனத்தையே தனக்கான பலமாகப் பயன்படுத்தி, அற்புதமான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர் சாப்ளின். கலை தன் வெளிப்பாட்டு ஊடகத்தின் பலவீனங்களைத் தனது படைப்புத் திறனால் தாண்டுவது ஒரு தீர்வென்றால், அறிவும் தனது அத்தனை சாத்தியங்கள் வழியாகவும் இந்த பலவீனத்தை தாண்ட முயல்கிறது.
மைப்ரிட்ஜ் எனும் மனிதருக்கு ஒரு சந்தேகம். குதிரை அதிவேகமாக ஓடும்போது எதோ ஒரு கணத்தில் அதன் நான்கு கால்களும் தரை தொடாத கணம் வரும். அதைச் சிறை பிடிக்க முடியுமா ? ஆவல் மூளையைக் குடைய, விதவிதமாக முயன்று பார்க்கிறார். ஒரு முறை அடுத்தடுத்து குதிரை ஓடும் பாதையில், குறிப்பிட்ட இடைவெளியில் 24 புகைப்படக் கருவிகளைப் பொருத்தி, குதிரை அதிவேகமாக அந்தப் பாதையைக் கடக்கும்போது, அடுத்தடுத்து கருவிகளை இயக்கி , அக்குதிரையின் அசைவைப் படம் பிடித்தார். வரிசையாக அந்தப் புகைப்படங்களை வைத்துப் பார்க்கிறார். குதிரையின் கால்கள் அந்தரத்தில் நிற்க, திரைக்கலைக்குச் சரியான அசைவுகள் கொண்ட சலனப் படம் சாத்தியமாகிறது (சென்றமாத உயிரெழுத்து கட்டுரை - செழியன்).
அது எப்படி சரியாக 24 சட்டகம்? அப்படி அமைக்க மைபிரிட்ஜைத் தூண்டியது எது ? யார் அறிவார் படைப்புத் திறனை ஊடகமாகக் கொண்டு பூத்துவரும் அந்த வசீகர மர்மத்தின் வேரை? மைபிரிட்ஜை குதிரையைத் துரத்தத் தூண்டிய அந்த சக்தி, தமிழகத்தில் ஒருவரை அவ்வாறு காந்தியைத் துரத்தத் தூண்டியது. அந்த ஆற்றல் அதற்கு தேர்வு செய்த ஆளுமை, ஏ.கே. செட்டியார். தமிழ்நாட்டில் துவக்கம் முதலே திரைப்படம் வணிகம் எனும் சட்டகத்தில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து ஒரு மீறலாக காந்தி குறித்த ஆவணப்படத்தை உருவாக்கித் திரையிட ஏ.கே. செட்டியார் எண்ணியதுமே அவரது அசுர சாதகம் துவங்கி விடுகிறது.
காலச்சுவடு வெளியீடாக ஏ.கே. செட்டியார் காந்தி ஆவணப் படத்தை உருவாக்க நிகழ்த்திய பிரயத்தனங்களை அவரது மொழியிலேயே வெளியானவற்றை ஆ. இரா. வெங்கடாசலபதி தொகுத்து, 'அண்ணல் அடிச்சுவட்டில்' எனும் நூலாக வந்திருக்கிறது. ஏ.கே. செட்டியார் [4-11-1911 - 10-9-1983] உலகம் சுற்றிய தமிழர். அதில் சரிபாதி காந்தி ஆவணப் படத்திற்காக 'குமரி மலர்' எனும் பத்திரிக்கை நடத்தி இருக்கிறார். அதற்கு புதுமைப்பித்தனிடம் கதை கேட்டு, புபி நையாண்டியாக ஏதோ மறுமொழி அளித்திருக்கிறார்.
செட்டியாரின் அடக்க குணம் காரணமாக அவர் குறித்த அடிப்படை தகவல்கள்கூட மிகுந்த சிரமத்தின் பிறகே கிட்டியதாக ஆ. இரா. குறிப்பிடுகிறார். காந்தியை அவரது தென்னாப்பிரிக்க காலம்தொட்டே தொடர்ந்திருக்கிறார் ஏ.கே. அவரது தென்னாப்பிரிக்க பணிகளை அப்போதே 'புண்ணியவான் காந்தி' எனும் நூலில் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
1937, அக்டோபர் 2. டப்ளின் நோக்கிய கடல் பயணம் ஒன்றினில் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தினூடே ஏ.கே. மனதில் காந்தி குறித்த ஓர் ஆவணப் படம் தயாரித்தால் என்ன என்ற உத்வேகம் தோன்ற, அன்று அவருடன் பயணித்த ஒரே இந்திய நண்பருடன் அந்த எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். உடனடியாக செயல்திட்டமும் உருவாக்கினார். உலகெங்கும் திரிந்து காந்தி குறித்த சலனப்படங்களை சேகரிப்பது, புதிதாக சில சேர்ப்பது, சமகால தலைவர்களிடம் காந்தி குறித்து உரைகள் பேசச்செய்து அத்துடன் இணைப்பது என முன்திட்டம் வகுத்துக்கொண்டு, தான் ஒருங்கிணைப்பாளன் மட்டுமே என்றும் [இத்தனைக்கும் ஏ.கே. திரைப்படக் கலை பயின்றவர்] தொழில் நுட்பக் கலைஞர்கள் வேறு என்றும் திட்டவட்டமாக தீர்மானிக்கிறார் [காந்தி பட இயக்குனர் பி. வி. பதி].
காந்தி குறித்த துண்டுப்படங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் எனத் தோன்றுகிறதோ அங்கெல்லாம் பயணம் செய்கிறார். தென்னாப்பிரிக்கா சென்று காந்தியுடன் பணியாற்றிய போலக் அவர்களைச் சந்திக்கிறார் [இந்தப் பயணத்தில் ஏ.கே எதிர்கொள்ளும் நிறவெறியை காந்தியின் நினைவுகள் கொண்டு அவர் கடக்கிறார்]. போலக் வசம் 1912இல் கோபாலகிருஷ்ண கோகலே உடன் காந்தி ஐரோப்பிய உடையில் தொண்டர்கள் மத்தியில் உரையாடும் அபூர்வ சலனப்படம் கிடைக்கிறது. 25 வருடமாகப் பாதுகாத்த அப்பொக்கிஷத்தை போலக் ஏ.கே. அவர்களுக்கு இலவசமாக அளிக்கிறார். நேர்மாறாக ஒரு குஜராத்தி அவரிடமுள்ள துண்டுப்படத்திற்கு அதுவரை ஏ.கே. தராத ஒரு பெரிய விலை வைக்கிறார். ஓரிடத்தில் ஏ.கே. பணம் கட்டி, காந்தி படம் என்ற பேரில் குப்பைகளைப் பெற்று ஏமாறுகிறார். யுத்தச் சூழலில் நிதி நெருக்கடியில் சங்கல்பம் ஒன்றே உந்தித் தள்ள, உலகம் முழுக்க பல மனிதர்களை, எளியவர்கள் முதல் பிரபலங்கள்வரை கண்டு கடந்து, பல இடர்கள் தாண்டி ஏ.கே. தன் காந்தி திரைப்படத்தை வெளிக்கொண்டுவந்தபோது அவரது வயது 29.
போலக், ரோமன் ரோலந்த், மாண்டிசோரி, ஐயாமுத்து, மதன் மோகன் மாளவியா, சேலம் விஜயராகவாச்சாரி, சி.வி. ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, கிருபளானி, நேரு, குமரப்பா, பஜாஜ், அபுல்கலாம் ஆசாத், மகாதேவ தேசாய் எனப் பல ஆளுமைகள் நாம் இதுவரை அறியாத விசித்திர குணத்துளி ஒன்றினை வெளிக்காட்டியபடி இந்நூலில் அறிமுகம் ஆகிறார்கள்.
காந்தியை மகாத்மா என விளிக்க விரும்பாத சி.வி. ராமன், மெல்லிய புன்னகை பூக்க தனது உரையாக அளிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள 'மகாத்மா 'எனும் பெயரை உச்சரிக்கிறார். முதல் சந்திப்பில் ராஜாஜி ஏ.கே. மீது எரிந்து விழுகிறார். பின்னர் படம் திரையிடப்படுகையில் பரிவாக முன்நிற்கிறார். காந்தி ஆசிரமத்தில் இருக்கும் பௌத்த துறவி ஒருவர், முதலில் கருவிக்கு முகம் காட்ட மறுக்கிறார். பின் நேரம் கடக்க முகம் எல்லாம் கழுவிவிட்டு வந்து, ஒளிப்பதிவு கருவி முன் நிற்கிறார். ரோமன் ரோலந்த் முதலில் தனது முகம் திரைப்படத்திற்கான முகவெட்டு கொண்டதல்ல என்று மறுக்கிறார். அவரது மனைவி வற்புறுத்த இணங்குகிறார்.
நேருதான் அற்புதம். முதலில் கருவிக்கு முதுகு காட்டி நிற்கிறார். பின், மந்த கதியில் நாடகீயமாகத் திரும்பி, பார்வையாளர்களை நோக்கிப் புன்னகைக்கிறார் [எடிட்டிங் முடிந்து புன்னகை மட்டும் மிஞ்சுவது இனிய இணைகதை]. நேரு ராட்டையில் நூல் நூற்பதை படம் பிடிக்கிறார்கள். சில கணங்களுக்கு ஒருமுறை நூல் அறுந்துபோக, தனது திறனின்மை படமாவது கண்டு நேரு கேமராவை முறைக்கிறார். நூல் நெடுக வளரும் மனித அகத்தின் சுவாரஸ்யமான வெளிப்பாடுகளை வாசகர்கள் வாசிப்பின் வழி துய்ப்பதே சிறந்தது.
இப்பட உருவாக்கத்தில் ஏ.கே. ஒவ்வொரு முறையும் சிக்கிக் கொள்ளும் பொருளாதாரத் தடை நேர்நிலை அம்சத்தால், நல்மன மனிதர்களால் நீங்குவது வாழ்தல் மீதான நம்பிக்கையை விதைக்கும் தருணங்கள். 1938ஆம் ஆண்டிலேயே ஏ.கேயின் முயற்சியால் கவரப்பட்டு ட்வெண்ட்டியத் செஞ்சுரி நிறுவனம் ஏ.கேயை வணிக ஒப்பந்த்தத்திற்கு அழைக்கிறது. ஏ.கே. அதைக் கடந்து வருகிறார். மீண்டும் பணத் தட்டுப்பாடு. விகடன் வாசன் திரைப்படத்தை வணிகம் நோக்கி உத்தேசிக்க, அதையும் ஏ.கே மீண்டெழுகிறார். திரைப்பட ஆக்கத்தில் பல அற்புதமான காந்தி திரைத் துணுக்குகளை ஏ.கே. காண்கிறார். அதில் ஒன்று, சூட் என்பவர் 16 எம்.எம்.இல் வைஸ்ராய் அரண்மனை வளாகத்தில் வைத்து காந்தியை எடுத்த வண்ணச் சலனப் படம்.
இப்பட உருவாக்கத்தில் தவிர்க்க இயலாத ஆளுமை பிரான்சைச் சேர்ந்த க்யுரிபே எனும் மனிதர். 1912 தென்னாப்பிரிக்காவில் எடுத்த படம் பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்க, அதை க்யுரிபே கையாளும் விதம் அற்புதத் தருணங்களில் ஒன்று. நேர் நிலையில் இயங்கி கிழிந்திருக்கும் படச்சுருளை ப்ரொஜக்டரில் தலைகீழாக மாட்டி முதலில் ஒரு தலைகீழ் பாசிடிவ் எடுக்கிறார். பின் அந்த தலைகீழ் பிரதியிலிருந்து தலைகீழ் நெகட்டிவ், பின் அதிலிருந்து நேரான பாசிட்டிவ், பின் அதிலிருந்து நேரான நெகட்டிவ் என படத்தை பத்திரமாக மீட்டுருவாக்கம் செய்கிறார். 1920ல் எடுத்த திலகர் இறுதி ஊர்வலம் 18 ஃப்ரேம்களில் நகர, க்யுரிபே அதற்கும் வழி காண்கிறார். தன் மதிநுட்பத்தால் அதன் அசைவைச் சீராக்குகிறார். பல படைப்பாற்றல் கூடி முயங்கி ஒரு அற்புதம் உருவாகிவரும் வசீகரம் இந்த நூலின் தனிச்சுவை.
காந்தியின் ஆளுமை இரண்டே இடத்தில்தான் வருகிறது. ஒரு முறை காந்தி தான் குளித்துக் கொண்டிருப்பதை சலனப்படம் எடுக்கும் இயக்குனரை முறைத்து வெளியேற்றுகிறார். மற்றொன்றில் ஒரு குழந்தை காந்திக்கு மாலை இட, அதை அவர் குழந்தையுடன் இணைந்து இருவர் கழுத்திலும் ஒரே மாலையாக அணிந்து விளையாடுகிறார். ஏ.கே. காந்தியுடன் எங்குமே உரையாடல் நிகழ்த்தவில்லை என ஏ.கே.வின் குறிப்புகள் வழியே அறிய முடிகிறது.
உலகெங்கும் திரிந்து புதிதாக எடுத்த 12000 அடிகளைத் தொகுத்து 5000 அடிக்கு காந்தி படம் தயாராகிறது. அனைத்தும் முதல் முயற்சி என்பதால் தொகுப்பதில் குழம்பி, பம்பாய் வந்திறங்கும் காந்தியை லண்டன் துறைமுகக் கூட்டம் வரவேற்கிறது. பின்னணி இசைக் கோர்ப்பில் ஏக்கேவின் குறட்டையும் இணைந்து ஒலிக்கிறது.
இடர்கள் கடந்து முதல் பிரதி தயாராக, அரசியல் சூழல் காரணமாக காந்தி குறித்த திரைப்படம் பறிமுதல் ஆகும் நிலை. இரவோடு இரவாக 6 மாஸ்டர் பிரிண்டுகள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதுக்கப்படுகின்றன. சூழல் சரியானதும் படம் சென்சாருக்குப் போகிறது. இந்து ஸ்ரீநிவாசன் முயற்சியில் படம் தப்பிப் பிழைக்கிறது.
ஏகே ஊடகவியலாளர் என்பதால் நல்ல விளம்பரம். இன்று போல அன்றும் கார்ப்பெட் பாம்பிங் முறையில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். படம் வெற்றி, தோல்வி எனும் பேச்சு வருவதற்குள் காசு பார்த்துவிடலாம். 20 திரை அரங்கங்கள் என குறித்து, பிரதி உருவாக்க பணம் இல்லாமல் தமிழகமெங்கும் 5 திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியாகும் நாளன்று, இன்றுபோலவே அன்றும் ஒருவர் காந்தி திரைப்படத்திற்கு ஸ்டே வாங்குகிறார். அதில் உள்ள துண்டுப் படம் ஒன்று தன்னுடையது, தனது அனுமதி இன்றி அது இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வழக்கு.
பணம் நோக்கிய பொய் வழக்கு. ஏகே அதையும் தாண்டுகிறார் . படம் வெளியாகிறது, சென்னையில் ஒரு பார்சி பெண் காந்தி பற்றால் தனது ராக்சி திரை அரங்கை இப்பணிக்காக அளிக்கிறாள். காரைக்குடியில் படம் வெற்றி. 5 நாள் ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரத்தில் 7 நாள் ஓடி அமோக வெற்றி. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் காந்தி படத்தில் இடையில் வரும் சுபாஷ் சந்திர போஸைக் காண வருகிறார்கள்.
அரைகுறை சம்பளத்தில் தீரர் சத்யமூர்த்தி இத்திரைப்படத்துக்கு தனது பங்களிப்பைச் செய்கிறார். செருகளத்தூர் சாமா, [வைத்தமாநிதி முட்டலம்] வை. மு. கோதைநாயகி பின்னணிக் குரலுடன் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் காந்தி ஆவணப்படம் வெளியாகி வெற்றி. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்ட விகடன் மௌனம் காக்கிறது .
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு. அக் குணங்களில் ஒன்று வரலாற்றைத் தொலைத்தல். காந்தி ஆவணப் படம் தொலைந்து போயிற்று.
'அண்ணல் அடிச்சுவட்டில்' நூல் அதன் தொகுப்பில், மொழி நடையில், காலாதீதம் உறைந்த நவீன இலக்கியப் பிரதி. மனித ஆற்றலின், முயற்சியின், படைப்பாற்றல் வெற்றியின் ஆவணப் பதிவு. ஒரு மாபெரும் புனைவுக்கு நிகராக பிரவாகம் எடுக்கும் மனித முகங்கள், குணநலன்களின் தொகுப்பு. இந்த நூல் அதன் இறுதி அத்தியாயத்தில் அளிக்கும் உவகைகூடிய ஆயாசத்தை மிகச் சில ஆக்கங்களே அளிக்கக்கூடும்.
சுதந்திர தினம். டில்லி மொத்தமும் விழாக்கோலம். ஏகே அங்கு ஒரு அரங்கை எடுத்து காந்தி திரைப்படத்தை திரையிடுகிறார். இந்திய அரசியலை தீர்மானிக்கும் அனைத்து ஆளுமைகளும் பொதுமக்களும் கூடி காந்தியை தரிசிக்கிறார்கள். சுதந்திர தேசத்தின் நாயகன், பிரிவினை காயத்துக்கு மருந்திட எங்கோ கல்கத்தாவில் இருக்க, அவரது நிழல் டில்லியில் பீடம் ஏறுகிறது.
ஏகே வந்ததே அதற்காகத்தானோ? காந்தியின் நிழலும் காந்திதானே? காந்தியின் நிழல். ஒளியால் பதியன் இடப்பட்ட நிழல்.
ஏ.கே.செட்டியார் அறியாதன அறிந்தேன் நன்றி ஐயா
ReplyDelete