தீவிர இலக்கியம் எனும் கலை வடிவுக்குள் நுழைவதற்கு பல வாசல்கள். பால்யம் தொட்டு சிறுவர் இலக்கியம் துவங்கி, தொடர் வாசிப்பினூடே தீவிர இலக்கியத்துக்குள் நுழைவது ஒரு வாசல்.
இயக்கங்களின் வகுப்புகள் வழியே இலக்கியத்தில் பலர் நுழைந்தது ஒரு காலம்.
நேரடியாக பொழுதுபோக்கு வாசிப்பில் துவங்கி சுஜாதா, பாலகுமாரன் சுட்டுதலின் வழியே தீவிர இலக்கியத்தின் அறிமுகத்தை தொண்ணூறுகளில் பலர் அடைந்தனர்.
கணினி வந்தபிறகு வாசிப்பிலும், புத்தக அச்சாக்கங்களிலும் சீரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாயிரத்துக்குப் பிறகு இணைய வாசிப்பின் வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் புதிய வாசல் திறக்கிறது.
இந்த புதிய தலைமுறை வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்கள் என முதன்மையாக அறிவது மூவரை. முதலாவதாக, அ. முத்துலிங்கம். சரளமான எழுத்தாலும், நுட்பத்தாலும், கனிந்த நகைச்சுவையாலும் தனித்த இடம் வகிப்பவர். ஆனால் இவரது படைப்புலகில் இலங்கையின் போர்ச் சூழல், போரில் சிதையும் குடும்பம், புலம்பெயர் வாழ்வின் துயரம், இவற்றை நேரடியாகப் பேசும் இடம் மிகக் குறைவே.
ஷோபா சக்தியின் படைப்புலகில் இலங்கையின் வரலாற்று ஒழுக்கில் முக்கிய பங்காற்றிய வன்முறை இயக்கங்களின், அதற்குள் இயங்கும் அதிகார ஆட்டங்களின், அபத்த முகங்களை காண முடியும்.
எஸ்பொ. அவரது எழுத்துக்களால், அரசியல் செயல்பாடுகளால் ஈழத்து ஜெயகாந்தன் என்றே இங்கு வகுக்கப்பட்டிருக்கிறார்.
செழுமையான ஆளுமைகள் இன்னும் பலர் இருப்பினும், தமிழக வாசகர்கள் அதிகமும் அறியாத தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா வாயிலாக இங்கு கவனம் பெற்றார்.
இயக்கங்களின் வகுப்புகள் வழியே இலக்கியத்தில் பலர் நுழைந்தது ஒரு காலம்.
நேரடியாக பொழுதுபோக்கு வாசிப்பில் துவங்கி சுஜாதா, பாலகுமாரன் சுட்டுதலின் வழியே தீவிர இலக்கியத்தின் அறிமுகத்தை தொண்ணூறுகளில் பலர் அடைந்தனர்.
கணினி வந்தபிறகு வாசிப்பிலும், புத்தக அச்சாக்கங்களிலும் சீரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாயிரத்துக்குப் பிறகு இணைய வாசிப்பின் வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் புதிய வாசல் திறக்கிறது.
இந்த புதிய தலைமுறை வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்கள் என முதன்மையாக அறிவது மூவரை. முதலாவதாக, அ. முத்துலிங்கம். சரளமான எழுத்தாலும், நுட்பத்தாலும், கனிந்த நகைச்சுவையாலும் தனித்த இடம் வகிப்பவர். ஆனால் இவரது படைப்புலகில் இலங்கையின் போர்ச் சூழல், போரில் சிதையும் குடும்பம், புலம்பெயர் வாழ்வின் துயரம், இவற்றை நேரடியாகப் பேசும் இடம் மிகக் குறைவே.
ஷோபா சக்தியின் படைப்புலகில் இலங்கையின் வரலாற்று ஒழுக்கில் முக்கிய பங்காற்றிய வன்முறை இயக்கங்களின், அதற்குள் இயங்கும் அதிகார ஆட்டங்களின், அபத்த முகங்களை காண முடியும்.
எஸ்பொ. அவரது எழுத்துக்களால், அரசியல் செயல்பாடுகளால் ஈழத்து ஜெயகாந்தன் என்றே இங்கு வகுக்கப்பட்டிருக்கிறார்.
செழுமையான ஆளுமைகள் இன்னும் பலர் இருப்பினும், தமிழக வாசகர்கள் அதிகமும் அறியாத தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா வாயிலாக இங்கு கவனம் பெற்றார்.
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர். கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார். இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார். இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற இரு தொகை நூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.
தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசுபெற்ற படைப்பு . இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப் பதிப்பாக கொண்டு வந்திருக்கிறது. [தகவல் உதவி செல்வேந்திரன்]
இலக்கியம் ஒரு காலக்கட்டத்தின் உரைகல். அதைக் காலாதீதம் கண்டு சுடரச் செய்வது அதில் இலங்கும் அறம். ‘குடை நிழல்’ காப்பியமல்ல எனினும் இதுவும் ‘’அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்’’ பிரதிதான்.
தெளிவத்தை ஜோசப்பின் ‘குடை நிழல்’ நாவல் இலங்கையின் ஒரு கொந்தளிப்பான அரசியல் காலக்கட்டத்தில் கால்கொள்கிறது.
எண்பத்து மூன்றுக்குப் பிறகு நடக்கும் நாவல். வாசக வசதி கருதி தெஜோ தனது முன்னுரையில் விடுதலைக்குப் பிறகான இலங்கையின் அரசியல் வரலாறு ஒன்றினைச் சுருக்கமாகத் தருகிறார்.
எனினும் நவீன நாவல்களின் அழகியலை [அல்லது நாவல் உருவான அரசியல் பின்புலம் தந்த இடர்கள் கருதி] பின்பற்றி குடை நிழல் நாவல் நிகழும் காலம் நாவலுக்குள் பூடகமாகவே சொல்லப்படுகிறது. நாவலில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் பெயரிலி. நாவலுக்குள் அக் கதைசொல்லியின் பெயரே ஒரே ஒரு முறைதான் வருகிறது. ஐசே என்று நண்பன் விளிக்கிறான். மகள் அப்பாவைப் பாராட்டி கிறிஸ்துவப் பாடல் பாடுகிறாள். ஆகவே கதை சொல்லி கிறிஸ்தவர். பெயர் ஐசக் என்றும் யூகிக்கலாம்.
ஐசக் மலையகத் தமிழர். சொந்த ஊரான பதுளையிலிருந்து அவனது தாய் தோட்டக் கங்காணியான அவனது தகப்பனை விட்டுப் பிரிந்து, அவனது தங்கையயும் அவனையும் அழைத்தபடி கொழும்பு வந்து, பல்வேறு சிரமங்களுக்கிடையே அவர்களை வளரத்தெடுக்கிறாள்.
இப்போது கதைசொல்லி ஒரு வேலையில் இருக்கிறான். நடுத்தர வசதி. தாய், தங்கை, மனைவி, மகள், மகன் என ஒருவர் பால் ஒருவர் பற்று கொண்ட சிறிய குடும்பம். மகனின் தமிழ் வழிக் கல்விக்காக தெகிவளைக்கு இடம் பெயர முடிவு செய்யும் கதைசொல்லி அங்கு ஒரு சிங்களர் வீட்டை வாடகை பேசுகிறான். தனது இல்ல முதலாளியின் [அவரும் சிங்களரே] வசம் முன்பணத்தை திரும்பப் பெற்று தெகிவளை முதலாளிக்கு தருகிறான்.
தெகிவளைக்காரர் பணத்தை ஏமாற்றிவிட, இந்த வீட்டு முதலாளி வீட்டை காலி செய்யச் சொல்ல, சுமையான நாட்களின் ஓரிரவு கதைசொல்லியின் எளிய வாழ்வில் அரசியல் அதிகாரத்தின் வன்முறைக்கத்தி ஊடு புகுந்து, அவன் குடும்பம், மரியாதை, பாதுகாப்பு, தொழில் சமூகத்தில் அவன் இடம் என அனைத்தையும் கிழித்து எறிகிறது. இந்தக் கத்தியைக் கூர்தீட்டும் பல்வேறு காரணிகள் மீதான கலைசார்ந்த விசாரணையே ‘குடை நிழல்’ நாவல்.
நாவலுக்குள் ஒரு வரி வருகிறது. அரசியல்வாதி ஒருவர் சொல்கிறார் ‘தமிழர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை’ என்று. துரதிர்ஷ்டவசமாக தமிழர்கள் அனைவரையும் அதிகாரமையம் பயங்கரவாதிகளாக கணக்கில் கொண்டதுதான் பிரச்னை.
இதில் சிக்கிச் சிதைவதே கதைசொல்லியின் குடும்பம். வெளியே வடக்கு தெற்கு கலவரங்களை அடக்கும் நோக்கில் அதிகார மையம் காவல்துறை கொண்டு அரச வன்முறையைக் கட்டவிழ்க்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்தோர், மலையகத் தமிழர் என அனைவர் மீதும் அவர்கள் தீவிரவாதத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனும் முத்திரை குத்தி, நினைத்தபோது நினைத்த இடத்தில் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அத்துடன் பலர் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்கவே இயலாது. சிலர் கடலோரம் சடலமாக ஒதுங்குவர். இந்த கொதிப்பான சூழலில் கதைசொல்லி தனது பணத்தை மீட்க, போலீசில் கொடுத்த ஒரு புகார் சிங்களருக்கு எதிரான தமிழனாக, புலிகள் ஆதரவாளனாக, அவனைக் கட்டமைத்து அதிகாரக் குஞ்சரத்தின் காலடியில் சிக்கிய முயலாக அவனது குடும்பத்தை சிதைக்கிறது.
ஒரு சமூகமும் அரசும் நாகரீகத்தின் பாதையில் எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்பதை அது ‘பன்மைத்தன்மையை’ எப்படி எதிர்கொள்கிறது, அது ‘பிறன்’ என்பதை எப்படி வரையறை செய்கிறது என்பதிலிருந்து அளக்கலாம் என்று சமூக விஞ்ஞானம் இயம்புகிறது.
இந்த ‘பிறன்’ மற்றும் ‘பன்முகத்தன்மை’ மீதான விவாதமாக தனித்து எழுகிறது நாவலில் கதைசொல்லியின் குரல். மலையகத் தோட்டச் சூழலில் பங்களாவாசி, லயம்வாசி என தமிழருக்கு உள்ளேயே நிகழும் முரண், தமிழர் சிங்களர் முரண், தமிழ், சிங்களம் என கல்வி அமைப்பு, அதன் பிரிவினை நிகழ்த்தும் முரண், சிங்கள அரசில் பணிசெய்யும் தமிழர் பிற தமிழருடன் நிகழ்த்தும் முரண், அரச வன்முறை, உள்நாட்டு தீவிரவாதம் இவற்றிடையிலான முரண் என அதிகாரம் தன்னை தக்கவைத்துக் கொள்ள கூர் தீட்டி சாமான்யனின் சமூக வாழ்வைக் கிழித்தெறிய பயன்படுத்தும் அத்தனை முரண்களையும், அதன் வேர்களையும் பரிசீலிக்கிறது இந்த நாவல்.
அதில் இன்னமும் குறிப்பாக சுட்டவேண்டிய இடம் ஒன்று உள்ளது. சிறைக்குள் ஒரு காவல் அதிகாரி கதைசொல்லிக்கு ஆறுதல் அளிக்கிறான். கதைசொல்லி ஆவலுடன், நீங்கள் தமிழா, என்று வினவுகிறான். அவனது பதில், ‘’இல்லை நான் ஒரு முஸ்லிம்’’. முரண்கள் மீதான பரிசீலனை நாவலுக்குள் சிகரம் தொடும் இடம் இது. இந்த ஒரு புள்ளியை பின்பற்றி வாசகன் வெகுதூரம் செல்லமுடியும்.
தெஜோ எழுத்துக்கள் [கதைசொல்லியின் ஓங்கி ஒலிக்கும் குரலை தவிர்த்து விட்டு] பல தருணங்களில் அசோகமித்திரன் புனைவுலகுடன் இணைந்து செல்கிறது. உதாரணமாக சிறைக்குள் கதைசொல்லி காவல்துறை வசம் அடி வாங்கும் இடம். அடியின் வேதனையைக் கடந்து அவனாலும் போலிஸ் அடியைத் தாங்க முடிகிறது எனும் நினைப்பு அவனுக்குள் கிளர்த்தும் உணர்வு அமியின் புனைவுத் தருணங்களுக்கு இணையானது.
நவீன நாவலின் அழகியல் அதன் உச்சம் தொடும் இடம் என, ‘’தலையாட்டி’’ கதைசொல்லியை தலையாட்டி காட்டிக் கொடுக்கும் இடத்தைச்\ சொல்லலாம். அவன் மேலும் கீழுமாக தலை அசைத்தானா? அல்லது இடம் வலமாகவா? கதை சொல்லி கண்களை இறுக மூடி இருக்கிறான்.
நாவல் நெடுகிலும் பெண்களின் கண்ணீரால் தகிக்கிறது. கதைசொல்லியின் அப்பா, அவரது நடத்தைகள் அனைத்தும் வேறு ஒரு பரந்த தளத்தில் ‘அதிகார மையம்’ என்பதன் குறியீடாக மாறிப் போகிறது. பணத்தைப் பற்றவைத்து சுருட்டுக்கு நெருப்பேற்றுவது துவங்கி, மனைவியைச் சொல்லால் சுடுவது வரை அனைத்தும் அதிகாரம் தலைக்கேற்றிய கர்வம்தானே?
கதைசொல்லியின் அம்மா தாம்பத்யம் நிகழ்த்திய கட்டிலை தீக்கிரையாக்குவது நாவலின் உக்கிர தருணம். அறைக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியே விழுந்து, நீண்டு, மடியில் குழந்தைகள் உறங்க, சுவர் சாய்ந்து அமர்ந்திருக்கும் அம்மாவை ஒளி தீண்டும் காட்சிப் படிமம் கால காலமாக பெண்மை அனுபவிக்கும் தனிமையின் பாரத்தை அல்லவா ஏந்தி நிற்கிறது?
நூறு பக்கங்களுக்குள் அத்தனை செறிவு கூடிய அநேர்க்கோட்டுத் தன்மையிலான நாவல்.
உங்களை எதிர்பார்த்து உங்கள் நண்பர் காத்து நிற்கும் இடத்திற்கு நீங்கள் செல்லும்போது, அங்கு மக்கள் கூட்டமாக நிற்க, காவல் வாகனமோ, மருத்துவ வாகனமோ நின்றால் மனது அக்கணம் எத்தகு பதட்டம் எய்துமோ? அத்தகு உணர்வு நிலையை இந்த நாவல் தன் ஒவ்வொரு அத்தியாத்திலும் கொண்டிருக்கிறது.
கதைசொல்லியின் செல்ல மகளுக்கு மீன் சாப்பிடப் பிடிக்காது. அதற்கான காரணமே இந்த நாவல் முட்டித் திகைத்து நிற்கும் வினாவின் ஆதார நரம்பு- கலவரம். இளைஞர்களும் யுவதிகளும் கொன்று எரிக்கப்படுகின்றனர். எஞ்சியோர் கடலில் வீசப்படுகின்றனர். பின்னொரு காலம் கதைசொல்லியின் மனைவி மகளுக்காக மீன் சமைக்கிறாள். எடுத்த மீன் ஒன்றின் குடல் பகுதியை வெட்டி விலக்க, அதிலிருந்து நழுவி விழுகிறது மனித விரல் ஒன்று.
இந்த காட்சிப் படிமம் வாசகனை நிம்மதி இழக்கச் செய்யும் ஒன்று. அது சுண்டு விரல். நகத்தில் வண்ணம் பூசிய சுண்டு விரல். ஆகவே இளம் பெண்ணின் சுண்டுவிரல். எந்த இளம் பெண்ணும் கலவரத்தில் ‘’அப்படியே’’ கொல்லப்பட்ட வரலாறு இல்லை. எனவே....
சிறைக்குள் இழுத்துச் செல்லப்படும்போது கதைசொல்லி சுற்றிலும் பார்க்கிறான். கூண்டுகள்தோறும் மிருகங்கள் போல அடைந்து கிடக்கும் மனிதர்கள். அவர்கள் குற்றவாளிகள்தானா? அல்லது கதைசொல்லி போல சாமானிய எளிய மனிதர்களா?
அந்தக் கூண்டுமனிதர்களின் கதை இன்னும் சொல்லப்படாத கடல். சொல்லப்பட்ட ‘குடை நிழல்’ அதன் ஒரு துளி. கடற்துளி.
[குடை நிழல் நாவல் மீதான எனது ரசனையைக் கூர்தீட்டிய எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட சொல்புதிது விவாத குழும நண்பர்களுக்கு நன்றி]
ஒளிப்பட உதவி - கடைசி பெஞ்ச்
ஒளிப்பட உதவி - கடைசி பெஞ்ச்
அற்புதமான அவசியம் படிக்கவேண்டும்
ReplyDeleteஎனும் ஆவலைத் தூண்டும் நூல் விமரசனம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDelete