பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக்கம் சாம் டெய்லர்) ஒரு த்ரில்லர்தான், ஆனால் அதில் நல்ல கற்பனையைப் பார்க்க முடிகிறது. கதையின் அடிப்படையில் முதற்கோள் (premise) ஒன்றுண்டு, அது இந்த நாவலை ஒருங்கிணைக்கும் சரடாய் அமைந்திருக்கிறது.
1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம் ஒன்று பிரெஞ்சு- ஸ்வட்ஸர்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மீது மோதி வீழ்கிறது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறக்கின்றனர்- பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றைத் தவிர. அவள் விமானத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறாள். எலும்பை உறைய வைக்கும் குளிரில் அவளை எரியும் விமானத்தின் வெம்மை பாதுகாக்கிறது.
அடுத்து, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முதிய தம்பதியர், அவள் தங்கள் பேத்தி என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். குழந்தை அவர்களுக்கு அளிக்கப்படுவதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் முடிந்து, அவள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் நிலையில், அந்த அளவுக்கு வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் அவளைத் தம் பேத்தி என்றுஉரிமை கோரி வருகின்றனர். வழக்கு விசாரணை துவங்குகிறது. ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின் குழந்தைக்கு உரியவர்கள் ஏழைக் குடும்பத்தினர் என்று தீர்மானிக்கப்பட்டு அவள் அவர்களிடம் செல்கிறாள்.
பணக்கார குடும்பத்தினர் தொழில்முறை துப்பறிவாளன் ஒருவனைப் பணியில் அமர்த்துகின்றனர். அவன் பதினெட்டு ஆண்டுகள் இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் மேற்கொள்கிறான், ஆனாலும் அவனால் தீர்வு காண முடிவதில்லை. மனமொடிந்த ஒரு கணத்தின் உந்துதலில் அவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறான். விசாரணை விவரங்கள் பதிந்த தன் குறிப்பேட்டை அந்தப் பெண் வாசிக்க விட்டுச் சென்று, தன்னைச் சுட்டுக்கொள்வது என்பது அவன் தீர்மானம். துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொள்ளும் தருணத்தில் அவன் தன் கண் முன் பழைய செய்தித்தாள் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்கிறான். அந்த உள்ளூர் செய்தித்தாள்தான் விமான விபத்து பற்றிய விபரங்களை முதலில் பதிப்பித்தது. அப்போது அந்தச் செய்தித்தாளில் உள்ள ஒரு விஷயம் அவன் கவனத்தைக் கவர்ந்து இந்த மர்மம் பற்றிய புதிரை விடுவிக்கிறது. ஆனால, அதில் தொடர்புடையவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் அவன் கொல்லப்படுகிறான்.
புத்தகத்தின் பெரும்பகுதி விபத்து குறித்து துப்பறிவாளன் மேற்கொள்ளும் விசாரணைகளை விவரிக்கிறது. அவனது குறிப்பேட்டைக் கொண்டு நாம் அவனது செயல்கள் அனைத்தையும் தொடர்கிறோம். மர்மத்தின் விடை மெல்ல மெல்ல துலக்கம் பெறுவதை விவரிப்பதற்கும் குறிப்பேடு உதவுகிறது. மேலும், பல இடங்களில் கதையில் மர்ம முடிச்சுகள் விழவும் குறிப்பேட்டில் உள்ள தகவல்கள் பயன்படுகின்றன.
கதைக்கரு எப்படி கதையாக வளர்கிறது, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கியமான விஷயம். பாத்திரங்கள் அந்த அளவுக்கு முழுமை பெறவில்லை. அப்படிச் சொல்வதைவிட, அவர்கள் ஒரு பெரும் புதிரின் சிறு பகுதிகளாக இருக்கின்றனர் என்று சொல்லலாம். நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிர் நம் முன் விரித்து வைக்கப்படுகிறது என்பதால் தனித்தனி பாத்திரங்கள் குறித்து நாம் பெரிதாய் கவலைப்படுவதில்லை. யார் என்ன செய்கிறார்கள், யாருக்கு என்ன ஆகிறது என்பதைவிட, இந்தப் புதிர் எப்படி விடுவிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுகிறோம்.
புஸ்ஸி கதையில் சஸ்பென்சை மெல்ல மெல்ல டெவலப் செய்கிறார். “இப்படியெலலாம் நடந்திருக்கிறது என்றால் இதை எல்லாம் ஏன் விசாரிக்கவில்லை?” என்று வாசகன் கேள்வி எழுப்பும் வகையில் அவர் கதையைக் கொண்டு செல்கிறார். அடுத்த பக்கத்திலேயே அந்த விஷயம் விசாரிக்கப்பட்டு விட்டது என்பது தெரிகிறது, மேலும் மர்மம் கூடுகிறது. தவறவிட்ட பிற விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம், அடுத்த சில பக்கங்களில் அவற்றுக்கும் விளக்கம் சொல்லப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு கட்டிடம் போல் இந்தக் கதையும் அடுத்தடுத்த கட்டங்களாய் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவம், அது குறித்த கேள்விகள், கால அட்டவணை எல்லாம் முன்னரே பட்டியலிடப்பட்டு ஒவ்வொன்றாக எழுத்து வடிவம் பெறுவது தெரிகிறது. மர்மம் நம்மை உள்ளே இழுத்துக் கொண்டபின், மர்மத்தின் புதிரை அவிழ்க்கப் பார்த்து நாம் தோற்ற பின்னரே இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றையும் நாம் கடக்கிறோம் என்பதுதான் இந்தக் கதையின் வெற்றி.
பலமான வில்லன் இருக்கும் வழமையான த்ரில்லர் நாவல் அல்ல இது. இங்கும் வில்லன் இருக்கிறான், ஆனால் இதன் த்ரில்லர் தன்மைக்கு வில்லன் காரணமல்ல, கதையின் மையத்தில் உள்ள புதிர்தான் அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பை உருவாக்குகிறது. த்ரில்லர் எழுதுபவனுக்கு இது போன்ற சுவாரசியமான புதிர்கள் இருபுறமும் கூரான கத்தி போன்றவை. புதிர் எந்த அளவுக்கு சுவாரசியமானதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அது விடுபடுதலும் சுவையாக இருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுமிடத்தில் நாவல் தோல்வி அடைகிறது, வாசகர்களுக்கு அதிருப்திதான் மிஞ்சுகிறது. புஸ்ஸி தர்க்கப்பூர்வமாகவும் திருப்திகரமாகவும் புதிர்களை விடுவிக்கிறார், நாம் இது விஷயமாக குறையொன்றும் சொல்வதற்கில்லை.
பாத்திரப் படைப்பு தட்டையாக இருப்பதால் இது ழானர் என்றழைக்கப்படும் ‘வகைமை நாவலில்’ ஆழ வேர் விட்டிருக்கிறது. தன் வகைமையின் எல்லைகளைத் தாண்டி இந்த நாவல் வளர்வதில்லை, அதற்கான சாத்தியங்கள் கதையில் இருக்கவே செய்கின்றன. வழக்கமான கதைதான், ஆனால் சுவாரசியமான வாசிப்பை அளிக்கும் நாவலாய் வெற்றி பெற்ற கதை. நிச்சயம் படிக்கலாம்.
After the Crash, Michel Bussi,
Orion Publishing Co
WEIDENFELD & NICOLSON Imprint
Flipkart
000
ஒளிப்பட உதவி - The Reader
No comments:
Post a Comment