தனது முதல் புதினத்தில் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படி பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர் இமையம் என எங்கோ படித்த நினைவு.
தனது முதல் படைப்பான கோவேறு கழுதைகள் (1944) நாவலுக்குப்பின் தனித்துவத்துடன் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர். அவருடைய "எங் கதெ"யை சமீபத்தில் வாசித்தேன்.
நான் வாசிக்கும் முதல் நூல் என்பதால் எழுத்தாளர் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த புத்தகத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று அவரின் மொழி நடை. இரண்டாவது அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு.
நூலின் பெயரே "எங் கதெ" எனப் பேச்சு வழக்கில் இருந்ததால் அந்த எதிர்பார்ப்புடனே உள்ளே நுழைந்தேன். கடலூர் மாவட்ட பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கி.ரா போன்றவர்களின் வழியாக மற்ற பேச்சு வழக்கு நூல்களை வாசித்து பழக்கப்பட்டிருந்தாலும் இந்த மொழிநடை எனக்கு முற்றிலும் புதுமையான வாசிப்பனுபவம். இந்தப் பேச்சு நடை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக இருப்பது போல் தோன்றுகிறது.
"கள்ளக் காதலனைக் கொன்ற காதலி கைது", "பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், கல்லைத் தூக்கிபோட்டுக் கொன்ற கள்ளக் காதலன் கைது"- இது போன்ற தலைப்புகள் செய்தித்தாள்களில் அன்றாடம் நாம் எளிதாகக் கடந்து செல்லும் விஷயம். ஆனால் "எங் கதெ" அது மாதிரியான ஓரு நிகழ்வை உற்றுப் பார்க்கிறது. அப்படியானதொரு வாழ்க்கையை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை பயணிக்க வைக்கிறது.
ஆம். இதன் கதைக்கரு ஆண் பெண் கள்ள உறவைப் பற்றியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான “கமலா” என்கிற 28 வயது இளம் விதவை பெண்ணுக்கும் முதல் தலைமுறையாகப் படித்துவிட்டு வேலை தேடும் 33 வயது "விநாயகம்" என்பவருக்கும் ஏற்படுகின்ற உறவை பேசுகிறது.
இந்தக் கதை முழுமையும் சம்பந்தப்பட்ட விநாயகத்தின் மன ஓட்டமாய், அவனது பார்வையில் சொல்லப்படுகிறது. விநாயகத்தின் மனம் கமலாவை விரும்புவது, அவளுக்காக தன் குடும்பத்தை உதறிவிட்டு நகரத்துக்கு குடிப்பெயர்வது, பத்தாண்டுகளுக்குப் பின் அவர்களின் உறவில் நுழையும் மூன்றாமவன் என விரிவாகக் கதை சொல்லப்படுகிறது.
புதுமையானக் கதை சொல்லல் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஓன்று.
"இது எங் கதெ. பத்து வருசத்துக் கதெ. என் ரத்தம். என் கண்ணீர்." என முதல் வரியே உணர்ச்சிப்பூர்வமாய்த் தொடங்கி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. - பக்கம்-1
தேவையற்ற இழுவைகளில்லாமல் அடுத்தப் பக்கத்திலேயே கமலாவின் அறிமுகம்.
"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. போன் பேசினா, காச விட்டெரிஞ்சா. வந்த மாரியே சரசரன்னு போயிட்டா. அடுத்த நாளு வந்தா. அப்பறம் சனி, ஞாயிறு வரல." - - பக்கம்-2
இப்படி பேச்சு நடையில் கதை நகர்த்தல் பாய்ச்சலாய் இருக்கிறது.
எழுத்து நடை வேகமாக இருக்கும் அதே சமயத்தில் விநாயகத்தின் மன ஓட்டம் வாசகனுக்கும் தொற்றிக் கொள்கிறது-
"பத்து வருசமா அவதான் எனக்குக் காத்து. தண்ணி, சூரியன், சோறு. எனக்கு அப்படித்தான் காலம் ஓடிப் போச்சி. அவ கேக்கல. நானா கொடுத்தன். மனச. அவ சொல்லல. நானா அவ காலுல மண்டியிட்டன்."- பக்கம்-75
அதுபோல கதையினூடே வரும் நிகழ்வுகள் நாம் குடும்பங்களிலும், சமூகத்திலும் பார்த்து வளர்ந்த எதார்த்தத்தை சொல்கிறது.
கமலாவின் மீதான தனது அதீதக்காதலுக்கான நியாயத்தை இதைவிட எளிமையாக சொல்லமுடியுமா தெரியவில்லை
"பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டச்சிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...
"நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திக் காட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்." பக்கம்-48.
கமலாவும் தன் பங்கிற்கு தன் அப்பா, அம்மா மற்றும் இறந்த கணவரை கட்சிப் பைத்தியங்கள் என்கிறார். அவர்கள் கட்சி பேப்பரை மட்டும் படிக்கிறார்கள், கட்சிக்காக கைக்காசை செலவு செய்கிறார்கள். தேர்தல் வேலை செய்கிறார்கள். கட்சிக்கல்யாணம் செய்து கொள்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்களை மெட்ரிகுலேசன் பள்ளியை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
இப்படி வாழும் போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏதோ ஓரு கட்சிக்காக உழைத்து உழைத்து தன்னலமின்றி தன்னையும் தன் வாழ்க்கையையும் கட்சிக்காக அர்ப்பணிப்பவர்களுக்கு கடைசியில் கிடைப்பது போகும்போது பிணத்தின் மீது போர்த்தப்படும் கட்சிக்கொடி மட்டுமே என்கிற எதார்த்தம் முகத்தில் அறைவது போல சொல்லப்படுகிறது.
நகர்மயமாதலிலும், உலகமயமாதலிலும் காணாமல் போன சிவன் கோயில்கள் அதை ஒட்டிய அக்ரஹாரங்கள் பற்றிய குறிப்பு. அங்கிருந்த அடுத்த தலைமுறை அய்யர்கள் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துச் சென்றுவிட்டார்கள் என்பதையும் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார் (பக்கம் 90).
இந்தக் கதையில் பல வாய்ப்புகள் இருந்தும் வரம்பு மீறப்படவில்லை. முறை தவறி நடக்கும் மகனைத் தடுக்க வழியின்றி தவிக்கும் குடும்பம், வேலைச் சூழலில் இளம் விதவைகளைப் பார்க்கும் கண்ணோட்டம், கிராமத்திலிருந்து வேலைக்காகவும் பிழைப்புக்காகவும் நகரத்திற்கு இடம்பெயரும் மனங்கள் எனப் பல தளங்களில் இக்கதை பயணிக்கிறது. அது போல, பெண் படித்துப் பதவியில் இருந்தாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக ஆணின் உடமையாக்கப்படுகிறாள் என்பதை பட்டவர்த்தனமாகச் சொல்கிறது "எங் கதெ".
எங் கதெ, இமையம்
விலை: ரூ. 110
க்ரியா வெளியீடு,
இணையத்தில் - பனுவல், அமேசான்
No comments:
Post a Comment