க.நாகராசன்
சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்னர், நவீன மனிதனின் மூதாதையர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி அனைத்து கண்டங்களிலும் பரவினர் என்பது மானுடவியலாளர்களின் கணிப்பு. ஏன் முதல் மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்ற வேண்டும், வேறு கண்டத்தில் தோன்றி இருக்கக் கூடாதா, என்கிற கேள்விக்கு பல பதில்கள் தரப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் தழைத்துள்ள காடுகள் பல்லுயிரிகளின் தோற்றத்திற்கு ஆதரவாக உள்ளன என்பது அவற்றில் ஒரு பதில், மனிதக் குரங்குகளின் பல வகைப்பாடுகள் காடுகளெங்கும் காணக் கிடைக்கின்றன என்பது ஒரு சான்று ஆகும்.
வளமான காடுகள் ஆப்பிரிக்காவிற்கு இயற்கை அளித்த கொடை. கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் முக்கிய வருமானமே கானுயிர் சிறப்பு சுற்றுலாக்கள் தான். அத்தகைய ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் அரிய விலங்குகளைப் பற்றிய சுவைமிக்க முப்பத்தாறு நாட்டுப்புற கதைகள், வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலுமான விலங்குகளின் அழகிய ஓவியங்கள், ஒவ்வொரு விலங்கின் வாழிடங்களையும் காட்டும் ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடங்கள், ஒவ்வொரு விலங்கைப் பற்றியுமான ஏராளமான தகவல்கள் என ஓர் உயிரியல் கலைக்களஞ்சியமாக நூல் காட்சி அளிக்கிறது. மிகச்சிறப்பான இந்த நூல் 1997-ல் அச்சிடப்பட்டது என்று பதிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பிரபல தமிழ் எழுத்தாளர் பாவண்ணன் மொழி பெயர்த்திருந்தும்கூட, புகழ்மிக்க நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தும்கூட, இந்த நூலைப் பற்றிய எந்த ஒரு மதிப்புரையோ, எவராவது பரிந்துரைத்த தகவலையோ, நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.
நூலின் அமைப்பு முறை அழகாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட விலங்கை எடுத்துக் கொண்டால், அதைப்பற்றி குறைந்தது ஒன்று முதல் அதிகபட்சமாக நான்கு நாட்டுப்புறக் கதைகள் முதலில் சொல்லப்படும். அதைத் தொடர்ந்து, அந்த விலங்கைப் பற்றிய அனைத்து தகவல்களும் தரப்படும் (உயிரியல் இனப்பெயர், உயரம், எடை, பிறப்பின் எடை, பால்குடி மறக்கும் வயது, கருவளர்ச்சிக் காலம், குட்டிகளின் எண்ணிக்கை, பருவம் எய்தும் வயது, ஆயுள், போன்ற எல்லா தகவல்களும் ஆண் விலங்கிற்கும், பெண் விலங்கிற்கும், தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன). குறிப்பிட்ட விலங்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்கெங்கு வாழ்கிறது என்கிற வரைபடம் அடுத்து தரப்படுகிறது. அந்த விலங்கின் தனிப்பட்ட குணங்கள் குறைந்தது இரண்டு பக்கத்திற்காவது விவரிக்கப்படுகின்றன. இதற்கிடையில் விலங்கின் வண்ண ஓவியங்களும் கறுப்பு, வெள்ளைச் சித்திரங்களும் உள்ள பக்கங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. [ஓவியர் ராட் க்ளெமெண்ட் மிகச் சிறப்பாக ஓவியங்களை வரைந்துள்ளார். உயிரோட்டமுள்ள ஓவியங்கள் நம் கண் முன்னே விலங்குகளைக் கொண்டுவந்து நிறுத்துகின்றன]
மேலே குறிப்பிடப்பட்ட நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு விலங்கைப் பற்றியும் முழுமையான ஒரு சித்திரத்தை வாசகருக்கு வழங்குகிறது. நாட்டுப்புறக் கதைகளைச் சேர்க்காமல் இருந்திருந்தால் இந்த நூல் காட்டு விலங்குகளுக்கான கையேடு என்ற அளவில் இருந்திருக்கும்; விலங்குகளைப் பற்றிய சித்தரிப்பு இல்லாமல் கதைகள் மட்டும் இருந்திருந்தால், ஆப்பிரிக்க பழங்குடி இனக் கதைகளின் மற்றுமொரு தொகுப்பு என்ற எண்ணத்தை உண்டாக்கி இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, படங்களோடு நமக்கு ஒரு ஸ்பெஷல் ஃபுல் மீல்ஸ் படைத்துள்ள நூலாசிரியரும், நியூசிலாந்து நாட்டு விலங்கியியலாளருமான நிக் க்ரீவ்ஸ் நமது வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியவர் ஆகிறார்.
ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் மிக சுவாரஸ்யமானவை; மண்ணின் மணம் கமழ்பவை; நம் ஆழ்மனத்தை ஸ்பரிசிப்பவை; சமயத்தில் நகைச்சுவையாகவும் காட்சி அளிப்பவை. சிறுத்தையின் கன்னங்களில் கண்ணீர்ச் சுவடுகள் எதற்காக என்று ஓர் கதை. ஒரு சோம்பேறி வேட்டைக்காரன் பெண் சிறுத்தையை ஏமாற்றி அதன் மூன்று குட்டிகளையும் கவர்ந்து விடுகிறான். அந்த வேட்டைக்காரனுக்கு ஊர்க்காரர்கள் தண்டனை கொடுக்கிறார்கள் என்றாலும்கூட, குட்டிகளைப் பிரிந்த துக்கத்தில் ஓயாமல் அழுததால் சிறுத்தைகளின் கன்னங்களில் இன்றும் கண்ணீர்ச் சுவடுகள் உள்ளன என்கிறது அந்தக் கதை. அதே போல கர்வம் மிகுந்த சிங்கத்தை முயலின் தந்திரத்தால், தேனீக்கள் ஒன்று சேர்ந்து கொட்டி விடுகின்றன. அதனால் குரல் தடித்துப் போனதால் சிங்கம் கர்ஜிக்கிறது (தொண்டைக் கட்டு) என்கிறது இன்னொரு கதை. பேராசை கொண்ட முதலையின் சூழ்ச்சியை அறியாமலும், வலிக்கின்ற அதன் பல்லை சரிசெய்யும் நல்லெண்ணத்தோடும், திறந்திருந்த வாயில் குனிந்து பார்த்ததால், முதலையின் இரு தாடைகளுக்கு இடையில் அகப்பட்ட நெருப்புக் கோழியின் கழுத்து மிகவும் நீளமாக மாறிவிட்டது என்கிறது இன்னொரு கதை. உடம்பு முழுவதும் அழகான முடியுடன் திகழ்ந்தது நீர்யானை. முயலின் மோசமான தந்திரத்தால், நெருப்பில் பொசுங்கி நீர்யானையின் முடியெல்லாம் எரிந்து போய்விட்டது. நெருப்புக் காயங்களால் ஏற்பட்ட ரணங்களின் வலி தெரியாமல் இருப்பதற்குத்தான் நீர்யானை எப்போதும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது என்று உரைக்கிறது இன்னொரு கதை.
முப்பத்தாறு கதைகளும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பல பழங்குடி இன மக்களிடம் வழங்கி வருபவை. ஜூலு, நெடெபெலே, ஹும்பகூழ், படோங்கா, புஷ்மேன், ஷோனா, ஸ்வாகஜூலேண்ட், ஹாட்டென்ட்டாட், ஓகாவாங்கோ போன்ற இனங்கள் அவற்றில் உள்ளடங்கும் (ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும், கதை எந்த இன மக்களைச் சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது). ஆச்சரியப்படும் வகையில் இந்திய தொல் கதைகளுக்கும். ஆப்பிரிக்கக் கதைகளுக்கும் பல ஒற்றுமைகள் புலப்படுகின்றன. சிங்கம் எல்லா இடத்திலும் அரசனாகவே போற்றப்படுகிறது. நரி அங்கேயும் தந்திரம் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அங்கும் ஆமை - முயல் கதை வருகிறது. ஓட்டப்பந்தயம் நடக்கிறது. (கதை சற்று வேறுபட்டாலும்) இறுதியில் ஆமையே வெற்றி பெறுகிறது. மான்கள் அப்பாவியாக உள்ளன. முக்கிய வேற்றுமை, முயல் ஆப்பிரிக்காவில் தந்திரம் மிகுந்ததாகக் கருதப்படுகிறது.
விலங்குகளைப் பற்றிய சித்தரிப்பில் பல புதிய மற்றும் சுவையான செய்திகளை நூலெங்கும் தெரிவிக்கிறார் நிக் க்ரீவ்ஸ். சிங்கங்கள் கூட்டமாகவே வாழும்; வளரும் ஆண் இளம் சிங்கங்களை, பெரிய சிங்கங்கள் தம் எதிரியாகவேக் கருதி தீர்த்துக்கட்ட முயல்கின்றன; நீர்யானைகள் மிகவும் அப்பாவியானவை; காண்டாமிருகங்கள் மூர்க்கமானவை; நெருப்புக்கோழிகள் மிகவும் சோம்பலானவை; வரிக்குதிரைகள் சரியான தீனிப் பண்டாரங்கள்; கழுதைப் புலிகள் கூட்டமாகச் சேர்ந்தால் சிங்கத்தையே வீழ்த்தும் அளவிற்கு வல்லமை மிக்கவை. காட்டுப்பன்றி வலைக்குள்ளே போகும்போது தனது பின்பக்கத்தைதான் நுழைக்கும், தலையை கடைசியில்தான் நுழைக்கும், மரிமான்கள் சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி சிறுத்தையிடமிருந்து தப்பிக்க வல்லவை; ஒட்டகச்சிவிங்கிகள் சாத்வீகமானவை, இப்படி, நூலெங்கும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அரிதான இந்த நூலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் பாவண்ணன் நமது நன்றிக்கு உரியவர். மிக இயல்பான மொழிபெயர்ப்பு ஒரு தமிழ்நூலைப் படிக்கும் உணர்வைத் தருகிறது. மூலநூலின் அருஞ் சொற்பதங்களுக்கான விரிவுரை நூலின் கடைசியில் தரப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மூலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லையும் உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம்.
இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்னால், ஏழு வயது சிறுவனாக இருந்த என்னை உயிர் காலேஜ் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை உயிரியல் பூங்காவிற்கு அழைத்து சென்று, நாள் முழுவதும் களைப்பின்றி சுற்றிக் காட்டி, ஒவ்வொரு விலங்கைப் பற்றிய குறிப்பையும் கூறி, நான் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பதில்கள் சொல்லி, இரவு உறவினர் வீட்டிற்கு வந்த பின்னர் வலித்த கால்களை நீவிவிட்ட என் தந்தையின் புன்னகை பூத்த முகம் நினைவுக்கு வருகிறது. அவர் இருந்திருந்தால், அவரிடம் "இந்த புஸ்தகத்தில் உள்ள விலங்குக் கதைகள் அந்தக் காலத்து விலங்குக் காட்சிச்சாலை பயணத்தை நினைவூட்டுகிறது நைனா," என்று கூறி இருந்தால், அதற்கும் அவர் புன்னகையே பரிசாக தந்திருக்கக் கூடும்.
(நூலின் பெயர்: நீர்யானை முடியுடன் இருந்தபோது முதலிய ஆப்பிரிக்கக் கதைகள்
கதை சொல்லி: நிக் கிரீவ்ஸ்
சித்திரங்கள்: ராட் க்ளெமண்ட்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பாவண்ணன்
வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா, பதிப்பு: 1997
இணையத்தில் வாங்க: Marina Books)
No comments:
Post a Comment