பதிவர்: கடலூர் சீனு
சமீபத்தில் ஒரு காட்சி கண்டேன். 2 வயது அழகான பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும் உயரத்தில் இருந்த எதையும் தாவிப்பற்றி இழுத்து கீழே போட்டு, ஏந்தி ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம் செய்துகொண்டிருந்தது. சமையல் நேரம். அம்மாவால் அவளை சமாளிக்க இயலவில்லை. எடுத்தார் மொபைலை, இயக்கினார் ஒளிப்பாடல் துணுக்கு ஒன்றினை, குழந்தை ஆவலுடன் வாங்கி, காட்சியில் விழிகள் விரிய, உறைந்து அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப ஒலிக்க, சமையல் முடியும் வரை, ''ஜிங்கின மணியில்'' உறைந்து ஸ்தம்பித்துக் கிடந்தது குழந்தை.
வேறொரு இல்லம், பாலகன் ஒருவன், சோபா மீது ஏறி, சோட்டா பீம் மாற்றச் சொல்லி, தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த தந்தையை, பீம் போலவே எகிறி எகிறி உதைத்துக் கொண்டிருந்தான்.
மற்றொரு சமயம், வேறொரு மாணவன், பன்னிரண்டாம் வகுப்பு, அவனது மேன்மைகள் குறித்து அவனது பெற்றோர்களுக்கு சொல்லிமுடிய இன்னும் ஒரு ஆயுள் தேவை. அவனது பொழுது கொல்லி, கணிப்பொறி விளையாட்டு. முகத்தில் வெறி தாண்டவமாட, ஒரு அரைப் பைத்தியம் போல மாய உலகின் எதிரிகளை, சுட்டுத்தள்ளி புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.
எதிர்காலத்தில் இலக்கிய வாசிப்பு எனும் பண்பாட்டு நிகழ்வு அஸ்தமிக்கும் எனில் அதன் வேர் இங்குதான் பதிந்துள்ளது. வாசிப்பு என்பது உங்களது சுயம் போல, உங்களுடன் அணுக்கமாக இருந்து, உங்களுடன் வளரவேண்டிய ஒன்று. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன், எந்தக் குழந்தையும் தன்னை வாசிப்புடன் இணைத்துக் கொள்ள அனைத்து சாதகமான சூழலும் தமிழகத்தில் நிலவியது.
குழந்தைகளுக்காக நமது பண்பாட்டின் சாரமான அனைத்தையும் அறிமுகம் செய்யும் அமர் சித்திரக் கதை வரிசை, அடுத்த வயதினருக்கு பூந்தளிர், அதில் கபீஷ், வேட்டைக்கார வேம்பு, காக்கை காளி என நமக்கே நமக்கான ஓவியங்களால் இறவாப் புகழ் கண்ட பாத்திரங்கள், அதற்கடுத்து ராணி காமிக்ஸ் வழியே ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள், பின் முத்து காமிக்ஸ் உருவாகிய உலகம்,ரத்ன பாலா, அம்புலி மாமா, அடுத்து ராதுகா பதிப்பகம் உருவாக்கிய [வென்று செல்லவேண்டிய எதிர்கால திசைவழிகள் அனைத்தின் மீதும் காதலை உருவாக்குகிற] நூல் வரிசை என அன்று, குழந்தைகள் வாசிப்பு எனும் உயர் தளத்துக்குள் நுழைய சாதகமான அம்சம் தமிழகத்தில் நிலவியது. இன்று தீவிர இலக்கியத்தில் உலவும் கணிசமானோர் இந்த சரி விகித வளர்ச்சி வழியாக இங்கு வந்து சேர்ந்தவர்கள்.
இந்தத் தொடர்பு அறுந்தது கணிப்பொறி புரட்சியால். பிறந்த குழந்தையின் ஆற்றலுக்கு ஈடு கொடுத்து அக் குழந்தையின் அக உலகத்தை செழுமை செய்யும் பொறுமையையும், ஆற்றலையும் பெற்றோர் இழந்து விட்டனர். தாம் இன்னது செய்கிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உயிர்த்துடிப்பு என்பது முற்றிலும் வடிந்து, முற்றிலும் ஜடமாக அமர்ந்திருக்கும் குழந்தை என்பதன் பின்னுள்ள ''கொல்லும்'' தன்மையை அறியும் சொரணை கொண்ட பெற்றோர் அருகி வருகின்றனர்.
குழந்தை தன் இயல்பால், வண்ணங்களாலும், தொடர் அசைவுகளாலும், லயமான இசையாலும் கவரப்படக் கூடியது, அந்த உயிர்ப்பான நிகழ்வை ஒரு குறுகிய கைபேசிக்குள் அடக்கி, குழந்தையின் அக உலகை ஸ்தம்பிக்க வைப்பதில் முதல் கோணல் துவங்குகிறது.
குழந்தைகள் இவ்வுலகில், தங்கி வாழ, இயற்கை ஆதி இச்சையாக அதற்கு அளித்த தன் இயல்பான வன்முறையை ஊதிப் பெருக்கி, அவர்களை மனத்தால் சிதிலமாக்கி, இயற்கைக்குப் பிறழ்வான நோக்கை அவர்களுள் விதைப்பதை பீம் போன்ற தொடர்கள் வழியே குழந்தைக்கு அளித்து, அவன் மீளவே இயலாத சுழல் ஒன்றினுள் பெற்றோர்கள் அவனை தள்ளுகின்றனர்.
அடுத்த கட்ட, அல்லது இறுதிக் கட்ட சீரழிவு, கணிப்பொறி விளையாட்டு. ''அடிமை நிலை என்பதன் சாரம் இதுதான் அது நாம் அடிமை என்று நாம் அறியாமல் இருப்பதே'', அந்த அடிமை நிலைதான் கணிப்பொறி விளையாட்டு தரும் ஆகச் சிறந்த நிலை. வாசிப்பு எனும் கலாச்சார கொடையை இழந்த பாலகன், தாய் மொழியை இழக்கிறான், அதனால் தன்னம்பிக்கையை இழக்கிறான், சொல்லிலிருந்து காட்சியை, கனவை உருவாக்கும் தன்னியல்பை இழக்கிறான், அதனால் மானுடத்தின் வளர்ச்சிக்கு சாரமான ''படைப்பாற்றலை'' இழக்கிறான். அவன் இனி கணிப்பொறி விளையாட்டின் அடிமை மட்டுமே, கணிப்பொறி விளையாட்டின் நிரலியை 'படைப்பவனாக' பெரும்பாலானவர்களால் மாற முடிவதில்லை.
இன்று இந்த சைபர் வெளியை தாக்குப் பிடிக்க இயலாமல், பிரபல தினசரிகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. லௌகீகமான தளமே ஆட்டம் கண்டிருக்கையில் உயர்தளம் குறித்து சொல்லவே தேவையில்லை. எந்த புத்தக சந்தையிலும் அமர் சித்திர கதை அரங்கு, பார்க்க கூட வருகையாளர் இன்றி காலியாகக் கிடக்கிறது. ராணி காமிக்ஸ் மூடு விழா கண்டு மாமாங்கம் ஆகிறது, மாஜிக் பாட் இதழ் நன்கு விற்க, கோகுலம் கணிசமாக போட்ட இடத்திலேயே கிடக்கிறது. லயன் முத்து காமிக்ஸ் முற்றிலும் முகம் மாறி, 10 வகுப்பு மேலானோராலும், பழைய வாசகர்களாலும் தாக்குப் பிடிக்கிறது. வெகுஜன எழுத்து நாவல்கள் முற்றிலும் வழக்கொழிந்து விட்டன.
ஆம் இது விதைகள் அழியும் காலம். குழந்தை இலக்கியம் , பிற மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு, இவை செழிக்காத ஒரு மொழியில் தீவிர இலக்கியம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை. அரசு துவங்கி, பண்பாட்டு செயல்பாட்டாளர்கள் வரை அனைவரும் கூடி, இனி கவனம் குவிக்க வேண்டிய களம் குழந்தை இலக்கியம். விதை இன்றி விருட்சம் இல்லை.
***
இத்தகு சூழலில், குழந்தை இலக்கியங்களை வளம்பெறச் செய்யும் எந்த முயற்சியையும் அதன் தரம் சார்ந்து [ இன்றைய குழந்தைக் கதைகள் பலவற்றை குழந்தைகள் படித்தால் கூட அதை எழுதிய அங்கிள் ஒரு கேணை என்ற முடிவுக்கே வருவர்] விதந்தோத வேண்டிய கடமை வாசிப்பு பழக்கம் கொண்ட அனைவருக்கும் உள்ளது.
இன்று எஸ் ராமகிருஷ்ணன், இரா.நடராஜன், விழியன், போன்றோர் தொடர்ந்து இந்த இயலில் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். 90 வயதைத் தொட்ட 'வாண்டு மாமா' இன்னும் இந்தத் தளத்தில் [ கவனித்துப் பாராட்ட யாருமின்றி, எந்த அங்கீகாரமும் இன்றி ] செயல்பட்டு வருகிறார்.
இந்தத் தளத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளராக புதிய வரவு, சுகானா. இவரது தாயார் பிரபல மொழிபெயர்ப்பாளர் கே.வி .ஜெயஸ்ரீ. [இவர் தனது மகள் வசமிருந்தே மலையாளம் கற்றதாக தெரிவித்திருக்கிறார்].
13 வயதில் சுகானா மொழிபெயர்த்த நூல், சிபிலா மைக்கேல் எழுதிய குழந்தைக் கதைகளான 'எதிர்பாராமல் பெய்த மழை' எனும் நூல். இந்த நூலை எழுதியபோது சிபிலாவுக்கு 13 வயது.
இந்தத் தொகுப்பில் சிறந்த கதைகள் என நான்கு கதைகளை, எக்காலத்துக்குமான கதைகள் என சொல்ல முடியும். முதல் கதை மறையும் கரைகள். ஒரு குழந்தை தனது பால்யத்தில் கண்ட நதி, அந்த பால்யம் கரைவதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்ததில் விளையும் ஆதங்கத்தை சொல்லும் கதை.
இரண்டாவது கதை 'எதிர்பாராமல் பெய்த மழை ' ஒரு விடுமுறை தின கொண்டாட்டத்தில் சொந்தக்காரர்கள் ஊரில், குழந்தைகள் முதல் முறையாகப் பார்க்கும் ஆலங்கட்டி மழை பற்றிய கதை. பெரியவர்கள் அன்றாட நிகழ்வு பாதிப்பாக, அலுப்பாக பார்த்த ஒன்றை குழந்தைகள் ஆவலுடன் 'அறிந்து' தங்கள் நினைவுகளுக்குள் போதித்துகொள்ளும் தருணம் குறித்த கதை.
மூன்றாவது 'ஒரு கிறிஸ்துமஸ் இரவில்' கதை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயின் மகள், ஆலயம் செல்கிறாள், அங்கு அவள் பெறும் நம்பிக்கை குறித்த கதை.
ஆகச் சிறந்த கதை 'சிறகுள்ள தேவதை'. பாலகனுக்கு தனது பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள ஆவல். அவனது பெற்றோருக்கு அவனுக்கு வண்ணமோ,தூரிகையோ , காகிதமோ வாங்கித்தர பணம் இல்லை. அவனது வாட்டத்தை அவனது ஆசிரியை போக்குகிறாள். அவள் அனைத்தும் வாங்கித்தர பாலகன் போட்டியில் கலந்து பரிசு பெறுகிறான். பரிசு நிறைய காகிதமும், தூரிகையும் வண்ணங்களும். இரவு மகிழ்ச்சியுடன் உறங்கும் அவன் கனவில் தேவதை தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவுகிறாள். பாலகன் பெரிய ஓவியனாக தான் வரவேண்டும் என்று வரம் கேட்கிறான்.
இக் கதைகள் ஒரு 13 வயது ''படைப்பாளியால்'' எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு சாட்சியம் இக் கதைகள். சின்ன சின்ன சொற்றொடர்களில் வலுவான காட்சி அமைப்பு. இயல்பான குழந்தைமைக்கே உரிய துள்ளலான நடை. அனைத்திற்கும் மேல் ஒரு குழந்தையால் மட்டுமே திரை விலக்கி காட்டப்பட முடிந்த உலகம். இவையே இக் கதைத் தொகுப்பை முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது. குறிப்பாக 'சிறகுள்ள தேவதை' கதை ஒன்று இரண்டு என வயலின்கள் இணைந்து, உயரும் ஆரோகணத்தை உணரும் அனுபவத்தை அளித்தது.
சிச்சுப்புறா நாவலை மலையாளத்தில் அல்கா எழுதியபோது அவருக்கு 13 வயது. பரவலான வாசிப்பையும் பாராட்டையும் பெற்ற அந்த குழந்தைகள் நாவலை வெளியிட்டவர் தோப்பில் முகம்மது மீரான். [ தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்த்த குழந்தைக் கதைகள் இந்த இயலில் சிறப்பான ஒன்று. சாகித்ய அக்காடமி வெளியிட்டுள்ளது].
சிச்சுப்புறா நாவல் 13 வயதில் எழுதப்பட்டது என்று நம்ப இயலா அளவு காத்திரமான ஓட்டம், உள்ளடக்கம் கொண்ட நாவலாக இருக்கிறது. தாய் தந்தையை இழந்த சிச்சுப்புறா அவர்களைத் தேடி தனது தேவதைக் காட்டிவிட்டு அவர்கள் சென்று மறைந்ததாக நம்பப்படும்[B1] மஞ்சள் மலர் காட்டுக்கு செல்கிறது. போகும் முன் இக் காட்டின் தலைமை தேவதையால், அங்கு ஏற்கனவே வேட்டைக்காரன் ஒருவனால் கொல்லப்பட்ட புறா ஒன்றின் கதை சொல்லப் படுகிறது.
இருப்பினும் பெற்றோரை தேடி சிச்சு அந்த வனத்திற்கு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள பிற மிருகங்களின் நட்பை சம்பாதிக்கிறது. அதன் தொடர்புகள் வழியே பெற்றோரை தேட நினைக்கிறது. அப்போது அந்த வன மிருகங்களுக்கு எப்போதும், ஆபத்தாக அக் காட்டின் ராஜா சிங்கமும்,மந்திரி கழுதைப்புலியும் இருப்பது சிச்சுவுக்கு தெரியவருகிறது.
சிச்சு வன மிருகங்களை ஒன்று திரட்டுகிறது, அவர்களின் பயத்தை போக்குகிறது, ஒன்று கூடி போராடி எதிரியை வெல்கிறார்கள்.
இனிய கதை. குழந்தைகள் மட்டுமின்றி, இழந்த குழந்தைமைக்குள் சென்று வர விருப்பம் கொண்ட யாரும் வாசித்து உவகை அடையக் கூடிய நாவல். இந்த நாவலின் பலம், கனவு போல விரியும் காட்சி சித்தரிப்பு தான்.
ஒவ்வொரு மிருகமும் அதற்குரிய செல்லப் பெயருடன், தனிப்பட்ட குண நலன்களுடன் உலவுகிறது.. இந்த நாவலின் மிகப் பெரிய ஆச்சர்யம் இதில் உள்ள மறை பிரதி. ஆபத்து என தெரிந்தும், மஞ்சள் வனத்திற்குள் நுழைந்து, எளியோரை ஒருங்கிணைத்து, வலியோனை வீழ்த்தி, அந்த முயற்சியில் உயிர் துறந்து, ஆம் சே குவேரா எனக்கு நினைவில் வந்தார்.
இந்தக் கதையின் சிறந்த இடங்கள் இரண்டு, ஒன்று வேட்டைக்காரனுக்குள் உறையும் கருணையை காட்டும் இடம், இரண்டு மிருகங்களுக்குள் உறையும் பயமும் கருணை இன்மையும் இறுதியில் துலங்கும் இடம். சக மிருகங்களுக்காக போராடிய சிச்சு அதே நண்பர்களால் கைவிடப்பட்டு மரிக்கும் கட்டம்.
ஒரு நிலைபாட்டை, அதில் உருவாகி வரும் இன்னொரு நிலைப்பாட்டால் மறுக்கும் இந்தத் தன்மை மேம்பட்ட பிரதிகளில் மட்டுமே காணக் கிடைப்பது. இந்த அம்சம் மட்டுமே போதும், குழந்தைமையின் அடிப்படையான புத்திசாலித்தனத்தை நோக்கி சொல்லப்பட்ட கதை இது என்று நிறுவ.
ஒரு மொழிபெயர்ப்பாளராக சுகானா நிறைவாக பணி புரிந்திருக்கிறார். சுகானாவுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு குழந்தையும் வாசிக்க, வாசிக்க தெரிந்த பெரியோர் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டிய மிகச் சிறந்த நூல்கள் இவை இரண்டும்.
1] எதிர்பாராமல் பெய்த மழை $ சிபிலா மைக்கேல். 2] சிச்சுப்புறா அல்கா . தமிழில் சுகானா. வம்சி பதிப்பகம், பேச 9444867023.
No comments:
Post a Comment