பதிவர் : பாலாஜி
"Crime and Punishment,
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235
"தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது ‘ஒரு லோட்டா இரத்தத்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."
-புத்தகக் காட்சிக்கு எனது “டாப் 10″, பேயோன்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு இளைஞன், ரோத்யா (ரஸ்லோநிகோவ் என்கிற ரஸ்கோல்நிகாவ்). அவனுக்கு ஒரு அம்மா, ஒரு தங்கை. அம்மாவும் தங்கையும் கஷ்டப்பட்டு இந்த இளைஞன் வக்கீலுக்குப் படிக்க பணம் அனுப்புகிறார்கள். ஆனால் இவன் சூதாடுகிறான். மது அருந்துகிறான். அத்தனை பணத்தையும் செலவழிக்கிறான். கல்லூரி பக்கமே செல்வதில்லை.
இந்த நாவலைப் படிக்கும்போது பழைய தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது. எல்லோருக்கும் கஷ்டம், எல்லோருமே ஏழை, யாருமே சந்தோஷமாக இல்லை.
ஒரு நாள் ரோத்யாவுக்கு அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதில் அவனது தங்கை வேலை செய்யும் இடத்தில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாள் என அம்மா எழுதுகிறார். கூடவே, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள் என்றும், அந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிரபு அவளை மணந்து கொள்ள விரும்புகிறார் என்றும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் இருக்கிறது. இதைப் படித்தபின் ரோத்யாவின் மனசாட்சி விழித்துக் கொள்கிறது. இந்தப் பிரபுவை மணம் செய்துக் கொண்டு நமக்காக நம் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்கிறாள், இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொள்கிறான். இங்கே ஒரு திருப்புமுனை. ரோத்யாவுக்கு ஒரு நண்பன், அவன் நல்லவன், வல்லவன். தன் தங்கைக்கு அவனைத் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று ரோத்யாவுக்கு ஒரு எண்ணம்.
மிகையுணர்ச்சியும், அன்றாட வாழ்வில் நாம் பார்க்க முடியாத ஆகிருதி கொண்ட பாத்திரங்களுமாக அந்த காலத்திலேயே ஒரு நாவலை இவர் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையே நாவல் முழுவதும் கடைபிடிக்கிறார். உம் என்றால் உணர்ச்சிகரமான காட்சி, உர் என்றால் சோகமான காட்சி.
ரோத்யா தன் அம்மா கொடுத்த மோதிரத்தை அடகு வைத்து அதிலும் குடிக்கிறான். அடகுக்கடை அம்மாளைப் பிடிக்காமல் போகிறது. அவளைக் கொலை செய்து அந்த பணத்தைக் கொண்டு தன் அம்மாவையும் தங்கையையும் நன்றாக வைத்துக் கொண்டு காப்பாற்றலாம் என்று நினைக்கிறான். தன் கொலைக்கு நெப்போலியனை முன் உதாரணம் கொள்கிறான். நெப்போலியன் பல பேரை கொன்றுதான் ஆட்சியை பிடித்தான், அவரைப் போல் நானும் ஒரு கொலை செய்தால் அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என தன் செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்துக் கொள்கிறான் - "நமக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை".
நீண்ட யோசனைக்குப் பிறகுதான் கொலை செய்கிறான் ஆனாலும்கூட கொலை செய்தவுடன் குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்கிறது. சரி, தான் செய்தது தப்பு என்று தெரிந்தவுடன் சரண் அடைகிறானா என்றால் அதுவும் இல்லை. போலீசும் இவன் தானாகச் சரணடையும்வரை தீவிரமாக துப்பறிந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு நடுவில் ஒரு குடிகாரர் தன் மனைவி சேமித்து வைத்திருக்கும் பணத்தில் குடித்துச் சாகிறார். அவரின் இறுதி சடங்குக்கு ரோத்யா பணம் தருகிறான். இந்தக் குடிகாரனின் பெண் சோன்யா உரிமம் பெற்ற விலைமாது. இந்தப்பெண்ணிடம்தான் இவன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அவள் அவனை சரணடையச் செய்கிறாள். இங்கே உணர்ச்சிகரமா ஒரு சீன். இந்த இடத்தில் பல பேர் கண்ணீர் விட்டு அழுததைப் பதிவு செய்திருக்கின்றனர். எனக்கு எரிச்சல்தான் வந்தது.
கடைசியில் அம்மா, தங்கை உணர்ச்சிக் குவியல்கள். ரோத்யா குற்றமே செய்திருந்தாலும் அதை மன்னித்து நீதிமன்றம் அவருக்கு குறைந்த தண்டனை வழங்குவதும், ஜெயிலில் இவர் திருந்துவதும் நம்பக்கூடியதாக இல்லை.
தமிழ் சினிமாக்கள் மற்றும் மெகாசீரியல்களுடன் இந்த நாவலை ஒப்பிடுவது anachronisticஆக இருக்கலாம். ஆனால் இந்த நாவலைத் தவறான காரணங்களுக்காக மிகைப்படுத்தி பாராட்டுபவர்கள் காலத்துக்குப் பொருத்தமில்லாத அழகுணர்வையும் கலையனுபவத்தையும் பரிந்துரைக்கிறார்கள். இதைப் பார்க்கும்போதுதான் அப்படி மோசமாக ஒப்பிட்டால் தப்பில்லை என்று தோன்றுகிறது. நம் காலத்து எழுத்தாளர்களுக்கு ஒரு நியாயம், அந்த காலத்து எழுத்தாளர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. நமக்கு எது தேவைப்படுகிறதோ அதைத்தான் செவ்வியல் ஆக்கங்களில் தேட வேண்டும். அதை விட்டுவிட்டு மிகையுணர்ச்சி, நாடகீய உச்சங்கள், பூதாகரமான பாத்திரங்கள் என்று தேடிப் போனால், நம் காலத்து தேவைகளிலிருந்து தப்பிக்க அங்கே போகிறோம் என்று அர்த்தமாகும்.
இது ஒரு மனிதனின் கதை, அவன் குற்றம் செய்துவிட்டு அதற்காக வருத்தப்படுகிறான் என்பதுதான் கதை என்று வைத்துக் கொண்டாலும் குற்றம் செய்வதற்கு அவன் சொல்லும் காரணங்கள் கொஞ்சம்கூட பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதை நாம் சொல்லாமல் இருக்க முடியுமா? நெப்போலியனுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதுகூட சரிதான், யார் வேண்டுமானாலும், யார்கூடவும் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி நியாயப்படுத்துவது கஷ்டம். இந்த மாதிரி நினைப்பவனை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனாகதான் என்னால் எண்ண முடிகிறது.
இணையத்தில் வாங்க - Flipkart
புகைப்பட உதவி : விக்கிப்பீடியா
This post has been updated, so that readers can get alternate point of view.
Update as on 7-4-2014: http://theamericanreader.com/12-september-1865-fyodor-dostoyevsky-to-m-n-katkov/
This post has been updated, so that readers can get alternate point of view.
Update as on 7-4-2014: http://theamericanreader.com/12-september-1865-fyodor-dostoyevsky-to-m-n-katkov/
முதல் விமர்சனம் கதையினை வாசிக்க ஆர்வமூட்டுகிறது. இரண்டாவது விமர்சனம் பராசக்தி திரைப்படம் பார்த்ததுபோல் இருந்தது. அம்மா தங்கை, ஏழ்மை, கொலை என.. :)
ReplyDelete//இந்த நாவலைத் தவறான காரணங்களுக்காக மிகைப்படுத்தி பாராட்டுபவர்கள் காலத்துக்குப் பொருத்தமில்லாத அழகுணர்வையும் கலையனுபவத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.// பெரும்பாலான ஆங்கிலநாவல்களை அருமை ஆஹா அற்புதம் என்று சொல்லித்தான் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.