- வெ சுரேஷ் -
பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.
அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தூண்டினார்கள். அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.
அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும்.
எழுதப்பட்டு இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் மோகமுள் ஏன் இன்னமும் ஒரு கல்ட் நாவலாக உள்ளது? அதைப் படித்த பலர் ஏன் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள்? புதிதாக வாசிப்பவர்களையும் அது ஏன் கவர்கிறது? ஏன் புதிய வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது? இது நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு விடையளிக்க முயலலாம். அது தங்களை என்ன செய்தது என்று கூற முயற்சிக்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு நான் என்னாலான அளவுக்கு இப்படிச் சொல்கிறேன்.
இலக்கியம் என்பதுதான் என்ன? நான் அதை ஒரு நிகர் வாழ்வனுபவம் என்று சொல்வேன். நாம் வாழாத ஒரு வாழ்க்கையை நாம் உணர்ந்து பார்த்துக் கொள்வதற்கும், நாம் வாழும் வாழ்க்கையை, அதன் அழகிய, ஆழமான, மோசமான கணங்களை நாம் திரும்பி வாழ்ந்து மதிப்பிட்டுக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி படைக்கும் புனைவு வடிவிலான மாற்று, ஆனால் இணை உலகம் நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அங்கு நாம் போகாத இடங்களுக்குப் போகிறோம், பார்க்காத காலங்களில் திளைக்கிறோம். இந்த நிகர் உலகம் எவ்வளவுக்கெவ்வளவு தன் நேர்மையைக் கொண்டு நம்பச்செய்வதாக படைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நம் மனம் அதில் தோய்கிறது. இதில் அவரவருக்கான ஒரு பிரத்யேக believing point உண்டென்றும் நம்புகிறேன் ஒரு படைப்பை வாசிக்கும் மிகப் பெரும்பான்மையோருக்கு இந்த உணர்வை உண்டாக்கும் படைப்புகள் வெற்றிபெற்ற, கிளாசிக்ஸ் எனப்படும் படைப்புகளாகின்றன.
சமீபத்தில் ஜெயமோகன் நல்ல இலக்கிய வாசிப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு நல்ல வாசகன் குறித்து அவர் சொல்லும் அந்த குறிப்புகளின் corollary மூலம் ஒரு நல்ல படைப்பைக் கண்டு கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவை கீழ்கண்டவாறு அமையக்கூடும்.
- ஒரு படைப்பில் உள்ள நிலக்காட்சிவிவரணைகள் வாசகனின் கனவாய் விரித்து அக்கனவுள் அவனை வாழச் செய்ய வேண்டும்.
- கதைமாந்தர்களின் இயல்புகளைப் பற்றிய விவரணைகள் அவர்களை உண்மையான மனிதர்களைபோல கண்முன் காட்ட வேண்டும்.
- உரையாடல்கள், அவற்றின் வழியாக அந்தக் கதாபாத்திரங்களின் மனம் எப்படி வெளிப்படுகிறது என்று காட்ட வேண்டும்.
- அப்புனைவுப்பரப்பில் வெளிப்படும் குறியீடுகளும் படிமங்களும் வாசகனைத் தன் கற்பனையால் பொருள்கொள்ளத் தூண்ட வேண்டும்.
மேற்காணும் இந்த அடிப்படைகள் அப்படியே பொருந்திப்போவதுதான் மோகமுள்ளின் முதல் வெற்றி. நான் மோகமுள் படிப்பதற்குமுன் கும்பகோணம் போனதில்லை. ஆனால் அதை ஒரு முறை படித்தபின் அங்கு செல்ல ஏங்கினேன். தூக்காம்பாளையத் தெருவை கால்களால் அளக்க துடித்தேன். சாதாரண வாசகர்கள் மட்டுமல்ல பின்னாட்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளான பலருக்கும் இந்த ஏக்கம் உண்டென அறிந்திருக்கிறேன். இதைத்தான் எஸ்.ரா சொல்கிறார், "நான் ரஷ்யா போனதேயில்லை. ஆனால் சைபீரிய உறைபனியை நன்றாக அறிவேன், டால்ஸ்டாய் மற்றும் தஸ்த்யெவஸ்கி மூலமாக" என்று. மோகமுள் எனக்களித்தது ஒரு நிகர் வாழ்வனுபவத்தை 1930-40களின் கும்பகோணத்தில் நான் வாழ்ந்தது போல ஒரு அனுபவத்தை. எனக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஊர் என் ஊர் ஆக மாறிய ரசவாதத்தை.
இரண்டாவது, பெரும்பாலான வாலிபர்களுக்கு பெண்கள் மீது இருக்கும் இரு வகை ஈர்ப்பு. சில பெண்கள் மீது நாம் காமுறுகிறோம், சில பெண்கள் மீது (பக்திப்) பரவசம் கொள்கிறோம். ஆனால் இரண்டாவதுக்கும் முதல் அடித்தளமே அடிப்படை என்று எப்போதாவது புரிந்துவிடுகிறது. இதை தி.ஜா மிகச் சரியாக பாபு மூலம் சொல்கிறார்.
சரி. பாபுவுக்கு என்ன பிரச்சினை? யமுனா மீதான உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதல். அதை காமம் கலவாத தெய்வீகக் காதல் என்று நினைத்துக் கொள்கிறான் (தங்கம் அவனுக்கு அளிப்பது வெறும் காமம்). அவனின் இன்னொரு ஆதர்சம் கர்நாடக சங்கீதம். அதன் உன்னதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதில் உச்சத்தை அடைய வேண்டுமென்ற ஆவல்.
யமுனா மீதான காதல் தன் நம்பிக்கைக்கு மாறாக உடல் சார்ந்ததும்தான் என்பது பாபு உண்மையை எதிர்கொள்ளும் தருணம். ஆனால் அதனால் அந்த உறவு முடிவதில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, இருவராலுமே. இது அந்த நாவலின் ஒரு முக்கியமான இடம், ஆனால் அதுதான் உச்சக்கட்டம் என்றால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவேன். அது அங்கே உன்னதமாக்கப் படவுமில்லை, இகழப்படவுமில்லை, அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
யமுனாவின் இதற்குத்தானா என்ற கேள்வியையே இந்த நாவலின் உச்சக்கட்டமாகவும் சாராம்சமாகவும் பார்ப்பது ஒரு கோணம்தான். அது முக்கியமாக விமர்சகர்களால் வைக்கப்பட்டது. ஒரு நாவலை அப்படிச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாபு தன் இசைபயிற்சியை வளர்த்துக்கொள்ள மராட்டியப் பாடகர்களைத் தேடி போவது இன்னொரு உச்சகட்டம். பாபுவின் தந்தை பாபு- யமுனா உறவை அங்கீகரிப்பது மற்றொன்று.
அடுத்து, மோகமுள்ளில் அதன் பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படும் விதவிதமான வாழ்க்கை நோக்குகள் எனக்கு முக்கியமானவை. இசையே மூச்சாக வாழும் ரங்கண்ணா (ரங்கண்ணா ஒரு க்ளீஷே பாத்திரமாவது பின்னால் உருவானது. 60களில் தி .ஜா இந்த நாவலை எழுதுவதற்கு முன் அம்மாதிரி ஒரு பாத்திரம் தமிழ் நாவல்களில் உருவாக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்). தன் எளிமையான வாழ்வில் முழுமையை காணும் பாபுவின் தந்தை வைத்தி, தஞ்சை மண்ணுக்கே உரிய நிலப்ப்ரபுத்துவ ஆணவமும் தளுக்கும் விருந்தோம்பலும் கொண்டிருக்கும் யமுனாவின் அந்த ஒன்றுவிட்ட சகோதரன். பாபுவின் கர்நாடக இசை குறித்த பார்வையையும் குரல் பயிற்சி குறித்த எண்ணங்களையும் மாற்றியமைக்கும் மராட்டியப் பாடகர்கள், அவர்களின் உரையாடல்கள், தங்கள் வாழ்க்கைக்கும் பயணங்களுக்கும் பின்னால் உள்ளதை அவர்கள் கூறுவது. பாலூர் ராமு எனும் ரங்கண்ணாவின் சீடரான புகழ்பெற்ற பாடகரின் பாத்திரம், உணர்ச்சிகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கும் ராஜம், அவன் பாபுவின் மீது கொண்ட அபாரமான தோழமை. பாபுவின் வீட்டுக்கார பாட்டி, நீட்டி முழக்கும் மேலக்காவேரி சாஸ்த்திரிகள். கடைசியாகச் சொன்னாலும் மிக முக்கியமாக, யமுனா. அவளின் அந்த fierce independence.
எத்தனை அழகான கதாபாத்திரங்கள். நான் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு கதாபாத்திரம் மேலெழுந்து வந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு வாசிப்பில் யமுனா, ஒன்றில் வைத்தி, ஒன்றில் ரங்கண்ணா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மோகமுள். வெறும் இதற்குத்தானா என்பதல்ல என்றே நான் நினைக்கிறேன். கூர்மையான வாசிப்பு என்ற பெயரில் காலம் செல்ல செல்ல அந்தக் கேள்வியின்மீது அழுத்தம் அதிகம் விழுந்துவிட்டதோ என்று எண்ணுகிறேன்.
இதுக்குத்தானா எல்லாம் என்று ஏமாற்றத்தில் ஓயும் கணங்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அங்கும் ஒரு எழுச்சியைக் கண்டு அது மேலும் விரிந்து வாழ்க்கையைத் தொடர்கிறது, புது அனுபவங்களைக் கண்டு கொள்கிறது. பல்திசைகளில் விரிவதுதான் உயிரோட்டத்தின் இயல்பு. இந்த உயிர்ப்புதான் மோகமுள்ளின் கதைக்களனாக, பாத்திரங்களாக, உரையாடல்களாக வெளிப்படுகிறது. இதனால்தான் தலைமுறை தலைமுறையாக மோகமுள் வாசிக்கப்பட்டும் விமரிசிக்கப்பட்டும் வருகிறது.
உரையாடலில் நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார் - பாபுவின் மனதில் எப்போதும் இருக்கும் சங்கீதத்தின் ஸ்தூல உருவமே யமுனா, அவளைப் பிரிந்து இருக்கும் சமயங்களில் எல்லாம் பாபு பாடாமலேயே இருக்கிறான் என்று. அதுவும் ஒரு கோணம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாவலின் நுண் தகவல்களை, விவரிப்புகளை எல்லாம் நீக்கி விட்டு நாம் சாராம்சம் என்றும் தரிசனம் என்றும் நினைக்கும் ஒரே புள்ளியை ஏற்றுக் கொண்டோ அப்படி ஒன்று இல்லையென்று நிராகரித்துவிட்டோ போவதுதான் முழுமையான வாசிப்பா என்று நான் சந்தேகப்படுகிறேன். கனிகள் விதைகளுக்காகத்தான். ஆனால் கனிகளின் வடிவமும் வண்ணமும் வாசமும் விதைகள் அளவுக்கே முக்கியமானவை.
ஆனால் ஒரு எழுத்தில் வெளிப்படும் ஆதாரக் கேள்வி என்ன என்று கேட்பதில் தவறில்லை. அது அவசியமும்கூட. நளபாகத்தில் ஒரு இடத்தில் வரும்- "ஒரு உயிர் என்ன செய்ய வேண்டும்? இன்னொரு உயிரை அணுகி அணைத்துக் கொள்ள வேண்டும்". அவ்வளவுதான். மரப்பசுவையும், நளபாகத்தையும் படித்துவிட்டு ஒப்பிட்டு பார்க்கலாம். தி.ஜா.வின் ஆதாரக் கேள்வியின் மூலம் தெரிய வரும்.
மோகமுள், தி. ஜானகிராமன்.
இணையத்தில் வாங்க: nhm, We Can Shopping
புகைப்பட உதவி : We Can Shopping
மோகமுள்ளில் இதற்குத்தானா என்பதுதான் உச்சம், அதை நோக்கிதான் போகின்றது என்பது எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை. கதையில் ஒரு முக்கிய கட்டம். கதையில் காதல் காமத்துடன் இசையும் சேர்ந்தே பயணிக்கின்றது. பாபுவின் இசையும் ஒரு முக்கிய சரடு. மோக முள்ளின் மொத்த வெற்றியே அது தரும் அனுபவம். அது நமக்கு காட்டும் ஒரு உலகம். கதைக்கு நம்மையும் இழுத்து சென்று அமரவைக்கும்.
ReplyDelete