- வெ சுரேஷ் -
பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.
அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தூண்டினார்கள். அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.
அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும்.

