சிறப்புப் பதிவர்: ஷாந்தி
சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ணி நூலகத்தில் தேடியபோது, இணைய நண்பர்கள் பரிந்துரையான பெருமாள் முருகன் பெயரே முதலில் ஞாபகம் வந்தது. .
இது பெருமாள் முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுகதை வாசிப்பு வார/மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டுவர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம்.
இது பெருமாள் முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுகதை வாசிப்பு வார/மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டுவர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம்.
இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாக கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படி படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள்.. கணநேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை,படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள் அதன் போக்கை தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள் ,எதிர்வினைகள் வெளிப்படும் அந்த தருணங்களை கதைகள் பதிவு செய்கின்றன.
Courtesy: Thinnai
வர்ணனைகள் அவற்றிற்கான ஆசிரியர் உணர்த்தும் (உணர்த்துவதாக சொல்லப்படும்) குறியீடுகள் போன்ற குழப்பங்களின்றி நிதானமான தெளிவான உரைநடை. பெருமாள் முருகனின் கிராமிய கதைக்களம் புதிதாகவே இருந்தாலும் விவரிப்புகளின் எளிமையில் சிக்கலின்றி நாம் கதைக்குள் பயணிக்க முடிகிறது. கதை இயல்பாய் தொடங்குவதிலிருந்து கனமான/ உணர்ச்சிகரமான முடிவுவரை நாமும் கதைக்குள் இருப்பது போன்ற உணர்வே சுவாரஸ்யமாகிவிடுகிறது. ஒரு கணத்தில் நிகழும் எதிர்வினையால் அதற்கு முந்தைய கணம்வரை இருந்த இயல்புநிலை மீட்டெடுக்க முடியா நிலைக்குப் போவது தெளிவாக இந்த கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதன் தாக்கமும் நம் மனதில் பதிகிறது.
'இருள்திசை' எனும் கதை அவ்வப்போது வேலை பளூ காரணமாக குடித்துவிட்டு வரும் கணவன், அவன் வீட்டிற்கு வராதபோது இருளில் சென்று அவனை தேடும் ஒரு பெண் மற்றும் அவள் இரு பிள்ளைகள் பற்றியது. இதில் அந்த பெண்ணும் அவள் மூத்த மகனும் சின்ன மகனை வீட்டில் விட்டுவிட்டு கணவனை தேடிச் செல்கிறார்கள். இது வாடிக்கையான ஒன்று ,பெரிய மகனும் இதற்கு பழக்கப்பட்டவனாகவே இருக்கிறான். அவர்கள் தேடிச் செல்லச் செல்ல விவரிப்புகளில் அவள் கணவனின் நிலைகுறித்தும் இருளில் தேடும் அவர்கள் நிலை குறித்தும்,அவர்கள் எதையும் எதிர்பார்த்துச் செல்வதையும் பதைபதைப்புடன் கதை பதிவு செய்கிறது . அவர்கள் ஒருவாறு, கீழே விழுந்து கிடக்கும் கணவனை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள். ஆசுவாசமான அந்த கணத்தில் வீட்டிலிருந்த சிறிய மகன் இருளில் தாயைத் தேடி அழுது அழுது மயங்கியிருப்பதாய் ,எதிர்பாரா ஒரு துன்ப அதிர்வோடு கதை முடிகிறது.
'கோம்பைச் சுவர்' கதை முத்துப்பாட்டார் எனும் கவலையில்லா வயது முதிர்ந்த ஒருவரை ஆட்கொள்ளும் பொறாமைத் தீ பற்றியது. எந்த கவலையுமின்றி படுத்ததும் உறங்கும் வரம் பெற்றவர் அவர். அதைப் பற்றி கேட்கும் அனைவரிடத்தும் கவலையில்லாமல் இருப்பதும் கடும் உழைப்புமே தனக்கு இந்த வரத்தை தருவதாக பெருமையாக கூறிக்கொள்வார். அந்த ஊரில் அவருக்கு ஸ்நேகமான ஒரு இளைஞன் வயல் வேலைகளையும் பார்த்துக்கொண்டு, நூல் மில் வேலைக்கும் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக அவரது ஓலை கொட்டாயின் அருகே ஒரு வீடு கட்டுகிறான். அவரிடமும் அடிக்கடி யோசனை கேட்பான், முத்துப்பாட்டாரும் அவனுக்கு யோசனைகள் சொல்கிறார். தன் காலத்தில் இதுபோல வீடு கட்டமுடியாது என்று நினைத்தவாறே தன் மகன்களிடம் வீடு கட்ட சொல்கிறார், அவர்கள் வசதி இல்லை என்று சொல்லி மறுத்துவிடுகின்றனர்.முத்துப்பாட் டார் அந்த இளைஞனுடன் சகஜமாக பேசினாலும்,கண்முன்னே வளரும் அந்த வீட்டின் கட்டுமானப்பணி அவருக்குள் படிப்படியாக பொறாமையை உண்டாக்குகிறது. சமீபமாய் நோய் போல் வந்திருக்கும் தூக்கமின்மையும் அவரை படுத்துகிறது. ஒரு இரவு அந்த வீட்டிற்கு சென்று உயர்ந்து வந்துகொண்டிருக்கும் சுவற்றை இடித்துவிட்டு வந்த பின்னர் அவர் தூங்குவதாக கதை முடிகிறது. இந்த கதையில் மேற்பரப்பில் எல்லாம் சரியாக இருந்தாலும் அடி ஆழத்தில் படரும் பொறாமைத்தீ, அதனால் ஒருவரின் குணமே மாறிப்போகும் வெளிப்பாடு ஆகியவை தெரிகிறது.
'நல்ல கெதி'' எனும் கதை ஒரு தாய் மற்றும் இரண்டு மகன்கள் பற்றியது. தினக்கூலியான தாய் வேலையில்லாத ஒரு நாளில் காலை எழுந்தது முதல் மகன்களை அக்கறையாய் கவனிக்கிறாள். அவர்களும் எப்போதோ கிடைக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களை இன்பமாய் அனுபவிக்கிறார்கள். கம்புமாவு இடிப்பது, பழையதை தாய் கையால் கரைத்து சாப்பிடுவதென அன்றைய நாள் நகர்கிறது. பக்கத்துவீட்டு பாட்டி, 'உனக்கு சிங்கக்குட்டிகளாய் மகன்கள்,' எனும்போது பூரித்து போகிறாள். ஒரு துக்க நிகழ்விற்கு பக்கத்துவீட்டு பெண்ணுடன் கிளம்பும்போது அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் சோற்றை பார்த்துக்கொண்டு, எங்கேயும் போகாமல் வீட்டிலேயே விளையாடுமாறு மகன்களிடம் கூறிவிட்டு செல்கிறாள். அவள் சென்றதும் சோற்றை காவல் காத்துக் கொண்டிருந்த மகன்கள் மெல்ல விளையாட்டால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொருவராய் சென்றுவிடுகிறார்கள். அவள் திரும்பும்போது சோற்றை பானையுடன் நாய்கள் எடுத்து சென்று தின்றுவிட்டதை பார்த்ததும் ஆவேசம் கொள்கிறாள். இரண்டு நாட்களுக்கான சோறு, பழகிய பானை என எதிர்பாரா இழப்புகளினால் ஆவேசம் கொண்டு மகன்களை அடிக்கிறாள். ஆத்திரம் தீர அடித்துவிட்டு, ஒரு பெண் குழந்தை இருந்தால் வீட்டு வேலையில் உதவியிருக்கும், எனக்கு நல்ல கெதி கிடைத்திருக்கும் என அழுவதாய் கதை முடிகிறது .அந்த தாயின் கோபம் நியாயமானதாய் இருந்தாலும் கோபத்தால் அவளுக்கு கூடுதல் வருத்தமே மிஞ்சுகிறது.
'வேப்பெண்ணெய்க் கலயம்' கதை ஒரு பாட்டிக்கும் அவள் கொள்ளுப் பேரனுக்கும் இடையிலான பாசத்தை பற்றியது. வேலை சூழ்நிலை காரணமாக வெளியூர் செல்லும் பேத்தி தனியே வசிக்கும் பாட்டியிடம் தன் ஆறு வயது மகனை வேறு வழியின்றி விடுமுறைக்கு விட்டு செல்கிறாள். பாட்டியும் இந்த வயதில் தன்னால் இப்படியொரு உபயோகமென மகிழ்ந்து ஒப்புக்கொள்கிறாள் .பேரனுக்கு சுதந்திரமான கிராமம் ,பாட்டியின் பக்குவமான சமையல், விளையாட்டு எல்லாம் பிடித்துப் போகிறது. எல்லாம் சரியாய் இருந்தும் பாட்டியால் பேரன் விளையாடும்போது பார்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து மரம் ஏறுதல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளின்போது கவலை கொள்கிறாள். எல்லா பிள்ளைகளும் கிணற்றில் விளையாட ஆரம்பித்ததும் பாட்டியால் பேரனை தடுக்கவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை. தன்னால் அவனை கவனித்து கொள்ள முடியாது என்று நினைத்து பக்கத்து ஊரிலிருக்கும் மற்றொரு பேத்தி வீட்டில் சிறுவனை விட்டுவிட கூட்டிச் செல்கிறாள். உற்சாகமாய் வந்த அவன் உண்மை தெரிந்ததும் கோவப்பட்டு மறுககிறான், வேறு வழி ஓடி பாட்டியை பிடிக்க சொல்லி சிரிக்கிறான். பாட்டியும் அவனை பின்னே துரத்தி செல்வதாக கதை முடிகிறது. வேப்பெண்ணெய்க் கலயம் எப்போதாவது உதவுவதுபோல் மிகவும் வயது முதிர்ந்த பாட்டி உபயோகப்படுவதும் அதனால் பாட்டிக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் இந்த கதையில் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
கோபம்,சோகம்,காமம், குற்ற உணர்வு, பொறாமை, மகிழ்ச்சி என உணர்வுகளை அதன் கனம் குறையாமல் பதிவு செய்கின்றன பெருமாள் முருகனின் கதைகள். கதையோடே பயணிப்பதால் முடிவிற்கு பின் அதன் தாக்கம் நமக்குள் எதிரொலிக்கிறது. அந்த ஒரு கணத்தின் மாறுதல்களை, பாதிப்பை பற்றி யோசிக்க வைக்கின்றன. நம் குணத்திலிருந்து நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ மாறுபட வைக்கும் அந்த கணம் எப்போதும் வரலாம். இந்த கதைகளை படிக்கையில் நம் மெல்லிய உணர்வுகளின் சிறுசிறு மாற்றங்களை கவனித்து சுதாரித்துக் கொள்ள மனதை பழக்கப்படுத்திக்கொள்ள தோன்றுகிறது.
வேப்பெண்ணெய்க் கலயம்
ரொம்ப அருமையா ஆய்வு பண்ணியிருக்கீங்க. சிறுகதைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன.
ReplyDeleteamas32
அழகான விமர்சனம். சிறந்த வார்த்தைத் தேர்வுகளும் மொழிநடையும். பெருமாள் முருகனின் 'கூள மாதாரி' மிகச்சிறந்த நாவல். சாயம் பூசாமல் கிராமங்களின் மனித்ர்களை கதைப்படுத்த வல்லவர். இந்த விமர்சனம் படித்தபின் இந்த கதைத் தொகுப்பையும் தேடி வாசிக்கும் ஆவல் வந்துவிட்டது. நன்றியும் வாழ்த்துகளும்!
ReplyDeleteமிக சிறந்த நடை.
ReplyDelete