சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தனது பத்தியில் 'நமக்குத் தேவை டேன் ப்ரௌன்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தொலைகாட்சியின் ஆதிக்கம் காரணமாக வணிகப் பத்திரிக்கைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த தொடர்கதைகள் அனேகமாக நின்று போனதையும் சுஜாதா போன்ற பெரும் ஆளுமைகள் உருவாகாததையும் அதனால் தமிழில் வாசகர் பரப்பு சுருங்குவதையும் சுட்டிக்காட்டி அப்படி ஒரு எழுத்தாளர் உருவாவதன் அவசியத்தைக் கூறியிருந்தார். டேன் பிரவுன் போல் தொன்மத்தையும் நவீன வாழ்வையும் இணைத்து, தமிழ், இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரையும் அப்படியான ஒரு எழுத்தையும் நானும் சில காலமாக ஏக்கத்துடனேயே எதிர்பார்த்திருந்தேன். மேலும் ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி (The shiva Trilogy) , அசோக் பன்கர் (Ramayana series), மற்றும் அஷ்வின் சாங்கி (The Krishna key, Rozabal line) போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கும்போது தமிழில் அவ்வாறான ஒரு எழுத்து இல்லையே என்று நிஜமாகவே ஏங்கினேன்.
சுதாகரின் '6174' என்ற நாவல் அத்தகைய ஒன்றாக வந்திருக்கக் கூடியது. ஆனால் ஆசிரியருக்குத் தன் பேசுபொருள் மீதும் நாவலின் வடிவத்தின் மீதும் சரியானதொரு பிடிமானம் இல்லாத காரணத்தால் நல்ல கருப்பொருள் கொண்ட ஒரு நாவல் அதன் முழு வீச்சை அடையாமல் தோல்வியுற்றது என்றே எனக்கு தோன்றியது. கே. என். சிவராமனின் 'கர்ணனின் கவசம்' அது போன்றதொரு நாவல் என்று வகைப்படுத்தப் பட்டாலும் நான் மேலே சொன்ன ஆங்கில நாவல்களுடன் அதை நேர்மறையாக ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை.
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் இரா. முருகவேள் எழுதியுள்ள மிளிர் கல் என்ற நாவலையும் அதற்கு ஓர் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த நாவல் என்ற பரிசு அளித்திருப்பதாகவும் ஒரு தகவலைப் படித்தேன். அன்று மாலையே என் நல்லூழாக அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது (வழக்கம் போல் கோவை தியாகு புத்தக நிலையத்தில்தான்).
அன்று இரவு படிக்க ஆரம்பித்தவன் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்தில் ஒரே மூச்சில் நாவலை முடித்துவிட்டுதான் உறங்கப் போனேன். உண்மையிலேயே கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். இப்படி ஒரு தமிழ் நாவலை ஒரே மூச்சில் படித்து வெகு காலம் ஆகிவிட்டது.
ஆனால் இந்த நாவல் நான் மேற்சொன்ன ஆங்கில நாவல்களைப் போல் வெறும் பொழுதுபோக்கு நாவலல்ல என்பதுதான் இதிலுள்ள முக்கியமான விஷயம். தமிழர்களின் சிந்தையில் என்றும் குடியிருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து, குறிப்பாக கண்ணகி புகாரிலிருந்து மதுரைக்கும் பின் மதுரையிலிருந்து சேர நாட்டிற்கும் மேற்கொண்ட பயணத்தையும் தற்காலத்தில் நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும் கற்கள் பட்டை தீட்டப்படும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டு, உண்மையிலேயே எடுத்தால் கீழே வைக்க முடியாத, அதே சமயம் சிந்தனையைத் தூண்டும், கண்ணகி என்பவள் எதன் அடையாளம் என்ற கேள்வியை முன்வைத்து ஒரு மிகச் சுவாரசியமான நாவலை உருவாக்கி உள்ளார் முருகவேள். அதனால் நான் மேற்சொன்ன ஆங்கில நாவலாசிரியர்களோடு முருகவேளைச் சேர்ப்பது அவருக்குநியாயம் செய்வதாகாது. ஒற்றுமை சுவாரசியம் என்ற ஒரு விஷயத்தில் மட்டுமே.
பிறந்ததிலிருந்து அதிகமும் இந்தியாவின் வடமாநிலங்களிலேயே வளர்ந்திருந்தாலும் தமிழார்வம் மிக்க தன தந்தையால் சிலப்பதிகாரத்தின்மீது, குறிப்பாக கண்ணகி மீது அதீதப் பற்று கொண்டு, கண்ணகி புகாரிலிருந்து மதுரை போன வழியே தானும் சென்று பார்த்து ஆவணப் படம் எடுக்கும் ஆசை கொண்டு தமிழகம் வரும் முல்லை எனும் இளம்பெண், அதில் அவளுக்கு உதவும் ஒரு தீவிர இடது சாரி இயக்கத்தில் பங்கு கொண்டுள்ள நவீன் என்ற இளைஞன் மற்றும் தற்செயலாக அறிமுகமாகும் ஸ்ரீகுமார் எனும் பேராசிரியர் ஆகியோரோடு புகாரிலிருந்து கிளம்பி மதுரை வந்து பின் கண்ணகி கோவில் சென்று கொடுங்கல்லூர் வரை சென்று ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சிதான் கதை. இந்தச் சம்பவங்களின் ஊடாக தமிழகத்தின் நவரத்ன கற்கள் ஏற்றுமதி செய்யும் முறைசாரா தொழில் ஒன்றில் ஈடுபட்டுள்ளோரையும் அதில் புதிதாய் நுழையும் ஒரு பன்னாட்டுக் நிறுவனத்தையும் அதற்கு துணைபோகும் உள்ளூர் ஆதிக்கசாதி அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டி குறிப்பிடத்தகுந்த ஒரு அரசியல் பரிமாணத்தையும் நாவலுக்குத் தந்து விடுகிறார் முருகவேள். இன்னொரு முக்கியமான தேடல் கண்ணகி என்னும் பெண் தெய்வம் ஏன் தமிழக மற்றும் கேரள தாழ்நிலை மக்களுக்கு ஒரு தவிர்க்க இயலாத தெய்வமாக விளங்குகிறாள் என்னும் புதிர்.
முத்தாய்ப்பாக இருப்பது இந்தத் தொழிலில் கடைமட்டத்தில் உழலும் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் வாழ்வும் அதன் அவலமும். கண்ணகியின் பாதையை தொடர்ந்து சென்று அவளின் அடையாளத்தை அறிய விரும்பும் முல்லை இறுதியில் கொடுங்கல்லூரில் தன் பயணத்தை முடித்துக் கொள்ளாமல் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் வாழ்வை ஆவணமாக்க அவர்களுக்காக போராட முன் வரும் விதமாக மன மாற்றம் அடைவதுதான் இதன் உச்சக்கட்டம். இப்படிச் சொல்லும்போது இது ஒரு பார்முலா இடது சாரி நாவலோ என்று தோன்றலாம். அதை அப்படி ஆகாமல் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வாசகனுக்கு அளிப்பவை நான்கு விஷயங்கள்.
ஒன்று, நாவலில் பேராசிரியர் ஸ்ரீகுமாரைத் தொடர்ந்து வந்து அவரைக் கடத்தி மிரட்டும் நவரத்ன கற்கள் சேகரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசியல் சார்புள்ள ஒரு மாபியா குழுவின் சித்திரம்..இது இந்த நாவலுக்கு ஒரு துப்பறியும் கதைக்குரிய சுவாரசியத்தை அளிக்கிறது.
இரண்டு, நாவல் நெடுக வரும் சிலப்பதிகாரம் கண்ணகி, கோவலன் இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், களப்பிரர் மற்றும் தமிழ் சமூக வரலாறு குறித்த ஆழமான அதே சமயம் மிகவும் பண்டிதத்தனமாக ஆகிவிடாத சுவாரசியமான உரையாடல்கள்.
மூன்று, நாவலில் வரும் தற்கால தமிழகத்தின் புறக்காட்சிகள். இந்த நாவலில் உள்ள அளவுக்கு தமிழகத்தின் ஒரு கணிசமான பகுதியின் நிலவியலை வெகு சில படைப்புகளிலேயே நான் கண்டிருக்கிறேன். டெல்டா பகுதியையும் அதற்கும் மதுரைக்கும் இடைப்பட்ட பகுதியையும் கொங்குப் பகுதியையும் கண்முன்னே அந்த மண்வாசனையோடு கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் முருகவேள். இதைப் படிக்கும்போது நிச்சயமாக இந்தப் பகுதிகளை மிக நன்றாக அறிந்தவரே எழுதியுள்ளார் என்று உங்களை நம்பவைக்கிறது. தமிழ் நாட்டின் நிலக்காட்சிகள் மட்டுமல்ல தற்காலத் தமிழகத்தின் நிலக் காட்சிகள் திமுக - அதிமுக போட்டி அரசியலால் பெறும் தோற்றம், புராதன பண்பாட்டு நினைவுச் சின்னங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நினைவகங்கள் அந்த போட்டி அரசியலில் படும் பாடு, (என்னதான் பகுத்தறிவு பேசினாலும்) அவை சார்ந்த மூட நம்பிக்கைகள், பிளக்ஸ் போர்டு யுத்தங்கள், தமிழகத்தின் மிக மிக அதிக அளவில் பேசப்படும் விஷயங்கள் குறித்த அங்கதம் கலந்த பார்வை என நாவலுக்கு அலாதியான நம்பகத்தன்மை ஏற்படுத்தும் பதிவுகள்.
நான்கு, கண்ணகி எனும் தொன்மத்தை ஆராயும் மனநிலையுடன் வந்த முல்லைக்கு சிறிது சிறிதாக அடித்தட்டு மக்கள் வாழ்வின்மீது உண்டாகும் அக்கறை இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் விதம். கடைசியில் கண்ணகியின் தனித்த அடையாளம் என்ன என்று முல்லை அறிய நேரும் அந்த கொடுங்கல்லூர் திருவிழாவின் உணர்வெழுச்சியுடன் கூடிய சித்திரம்.
இவற்றைத் தவிர முருகவேளின் மிகச் சரளமான நடை. நாவல் முழுக்க நமக்கு மிக அறிமுகமானவர்கள் நம்மிடையே அமர்ந்து சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் அவ்வளவு எளிதான ஆனால் ஆழமான விஷயங்களையும் இலகுவாக கூறும் மொழி.
தமிழகத்தின் நிலவியல் மற்றும் பருவ காலங்கள் குறித்த இவ்வளவு ஆழமான அவதானிப்பு கொண்ட முருகவேள் தவறும் ஒரு இடம் கோடை காலம் குறித்த ஒரு அவதானிப்பு. முல்லையும் நவீனும் பூம்புகாரில் இறங்கும் வேளையில், இந்தக் கடுமையான கோடையிலும் மரங்களில் காணப்படும் டெல்டாவின் பசுமை என்று விவரிக்கிறார் முருகவேள். இது கோடை என்றாலே மரங்கள் காய்ந்திருக்கும் என்ற தமிழ் பொதுப்புத்தியில் பதிந்துள்ள பாமர எண்ணத்தின் வெளிப்பாடு. சற்று நம்மை சுற்றிக் கவனித்தாலே தெரியும், கோடை காலமே தமிழகத்தின் பெரும்பாலான மரங்கள் செழித்து காணப்படும் காலம் என்று. இளவேனிற் காலத்தில் துளிர்த்து மலர்விட்டு முதுவேனிற் காலத்தில் பழங்களை அளிக்கும் தமிழத்தின் பெரும்பாலான மரங்களை ஏனோ மறந்து விட்டு கோடை என்றால் மரங்கள் காய்ந்து கிடக்கும் என்ற பிம்பத்தை நம் தினசரி பத்திரிக்கைகள் விதைத்துவிட்டிருக்கின்றன. முருகவேள் போன்ற ஒரு கூர்ந்த அவதானிப்பு கொண்டவரும் அதற்குத் தப்பவில்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்கலாம். முருகவேளின் மற்ற அவதானிப்புகளின் உயர்ந்த தரம் இந்தக் குறையை மிகைப்படுத்திக் காட்டுகிறது என்பதால்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு தகவலும் சரி பார்க்கப்பட வேண்டியது. இதில் வரும் ஒரு உரையாடலில் சிலம்பின் காலத்தில் கொள்ளிடமே கிடையாது என்று வருகிறது. அது சரியல்ல என்றே நினைக்கிறேன். கொள்ளிடம் இல்லாமல் ஸ்ரீரங்கம் தீவு கிடையாது. சிலம்பில் ஸ்ரீரங்கம் வருகிறது.
தமிழர் அறியா தமிழ்க் காவியம் என்று சிலப்பதிகாரத்தைக் குறிப்பிடுவார் க.நா.சு. அவர் அதைச் சொன்ன காலத்தில் அது ஓரளவுக்கு உண்மையாக இரூந்திருக்கலாம். ஆனால் இன்று சிலப்பதிகாரம் குறித்து பரவலான கவனமும் ஆர்வமும் உண்டாகியிருப்பதாகவே நான் எண்ணுகிறேன். இதில் திராவிட இயக்கங்களுக்கும், ஜெயமோகனின் கொற்றவை நாவலுக்கும், சுஜாதாவின் 'சிலப்பதிகாரம் - ஒரு அறிமுகம்', பேராசிரியர் இராமகி அவர்களின் சிலம்பின் காலம் முதலிய நூல்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்தப் பின்னணியில் சிலப்பதிகாரத்தில் ஒரு குறைந்தபட்ச அறிமுகமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இந்த நாவல் ஒரு தனி சுகத்தை தரும். மீண்டும் ஒரு முறை புகாருக்கும், கண்ணகி கோவிலுக்கும், கொடுங்கல்லூருக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற பேரவாவைத் தூண்டி விடுகிறார் முருகவேள். நிச்சயமாக சமீப கால தமிழ் நாவல்களில் தனித்து மிளிரும் ஒன்று தான் இந்நாவல்.
மிக எளிமையாகவும் அழகாகவும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் ஆசிரியர் பற்றிய அறிமுகம் இல்லாதது ஒரு பெரும் குறை (குறிப்பாக முருகவேள் The Red Tea என்னும் டானியலின் நாவலை எரியும் பனிக்காடு என்ற குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாக செய்தவர் என்ற நிலையில் நூலாசிரியரின் ஒரு புகைப்படமாவது போட்டிருக்கலாம்). மேலும் ஒரு நல்ல முன்னுரையும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மிளிர் கல் - இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
4/413, பாரதி நகர், 3-வது வீதி
பிச்சம்பாளையம் (அஞ்சல்)
திருப்பூர் 641 603
கைபேசி: 94866 41586
விலை: ரூ. 200
இணையத்தில் வாங்க - பனுவல்
ஒளிப்பட உதவி - மலைகள்
மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது, இந்த வாசிப்பனுபவம். மிளிரும் தலைப்பு, அருமை...தகவல் பிழை பற்றி படித்தவுடன் புன்னகைத்தேன்!
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி