கே. சண்முகதாஸ்
சென்ற தலைமுறையினருக்கு, ‘வாசகர் வட்டம்’ என்ற பெயர் மிக அறிமுகமானது. அதன் நிறுவனர்களான திருமதி லக்ஷ்மியும், கணவர் கிருஷ்ணமூர்த்தியும் 1971-ல் வெளியிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. திரு தி. ஜானகிராமன், திரு . சிட்டி ( பெ. கோ. சுந்தரராஜன்) கைவண்ணத்தில் வந்த எழுத்தோவியம், ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. இளமையில் என்னை மிகவும் ஈர்த்த, எனக்குள் பாதிப்பு உண்டாக்கிய நூல்களை வாழ்க்கைப் பயணத்தில் இழந்த எனக்கு இது போன்ற மறுபதிப்புக்கள் அளப்பரிய இன்பத்தை தருகின்றன. இன்றைய அரசியல், கலாசார சூழ்நிலைகளின் பின்னணியில் மீண்டும் மீண்டும் இந்நூலை படிக்கும்போது, மாறுபட்ட உணர்ச்சிகள் மனதில் அலையடிக்கின்றன.
“கன்னட நாடு மட்டுமல்ல; மகாராஷ்டிரம், குஜராத், வங்காளம், உத்திரப்ரதேசம், என்று எங்கு போனாலும் புற வேறுபாடுகளையெல்லாம் கடந்து நம் நாட்டு மணம் வீசிக்கொண்டுதானிருக்கும். மொழி, பிராந்தியம் என்ற பெயர்களில் நம் நாட்டை இன்னும் சின்னபின்னபடுத்திக் கொண்டிருக்கும் அறிவிலிகளைக் கண்டு, இந்த இந்திய உணர்வு ஊமை அழுகை போல் எங்களுக்கு ஒலித்தது. ஆற்று நீரும், மண்ணும், கன்னடம், மராட்டி, தெலுங்கு, என்று ஏதோதோ மொழி பேசுவது போலவும், அது அந்தந்த மொழிக்காரர்களின் வயிற்றுக்குள்ளேயே புகுந்து கிடக்க வேண்டும் என்பது போலவும், மனதில் குட்டிச்சுவர்களை எழுப்பி வேரறுக்கும் அறிவிலிகளைக் கண்டு இந்த கிராம எழில் அழுகிறது.”
“இந்தியாவின் ஒருமையைக் காண, பல மாநிலத்து மக்கள் சேர்ந்து வாழும் பிலாய், ரூர்கேலா போன்ற நகரங்குளுக்குப் போக வேண்டும். ஆனால் இந்தியாவின் பல்வேறு மூலைகளில் உள்ள கிராமங்களையும் பாருங்கள். அடிப்படையான இந்தியத்தன்மை இழையோடுவது தெரியும்.”
இராமநாதபுரம் என்ற ஒரு கிராமத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டவர்கள் “கட்டேபுர” என்ற இடத்தில ஜங்கம சன்யாசிகள் காவிரியின் குறுக்கே கட்டிய “ஜங்கமகட்டே” என்ற அணையைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்.
“ பல்லாயிரக்கணக்கான ராக்ஷச மிருகங்களின் செதில்கள் போல் தோன்றின. கற்களை செதுக்கி ஆற்றின் குறுக்கே படுக்க வைக்கப்பட்ட காட்சி, எந்த வசதியும் இல்லாத காலத்தில் ஒரு பெரிய சாகசம் என்றே சொல்லத் தோன்றும்.. வெள்ளத்தை அறவே நிறுத்தாமலும், வேகத்தைத் தணித்து கற்களின் இடுக்கிலும், மேலும், கீழுமாக மெல்லப் பாய்ச்சுகிறது.
“சன்யாசிகள் கட்டியது என்பதை கேட்கும்போதுதான், இந்தப் பெரும்பணிகளில் மக்கள் எந்த விதமான பொறுப்பும் உணர்ச்சியும் காட்ட வேண்டும் என்று நம் சிந்தனை இயங்குகிறது,. சன்யாசிகள் பற்றற்றவர்கள், நல்ல காரியம் செய்வதுதான் நோக்கம். வயிற்றுப்பிழைப்பு, லாப நோக்கம, ஏதும் இல்லாதவர்கள். பிறர் நலனைப் பற்றி நினைப்பது ஒன்றுதான் ஒருவன் எண்ணக்கூடிய லாபம், சேர்க்கக்கூடிய சொத்து. அந்த சன்யாசிகளும் பாட்டாளிகளை வைத்துதான் இதை செய்திருப்பார்கள், ஆனால் நடுவில், ஒரு காண்டிராக்டர் வயிற்றில் ஓட்டைக்குடத்தில் நீர் நிரப்புவதைப்போல, பாதிக்காசு அழிந்திருக்காது, பாட்டாளிகளும் மண்ணை காக்கிற பக்தியோடு வேலை செய்திருப்பார்கள். பௌத்த சமணத் துறவிகள் பலர், சிற்பிகளாகவும், பொறியியல் அறிஞர்களாகவும் தலைமை ஏற்று பொறுப்போடு கலைச்செல்வங்களையும் பெரும்பணிகளையும் செய்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. பற்றற்ற பொது உணர்வு, பெரும்பணிகளை நடத்துவோருக்கு இப்போது முக்கியமான தேவை.”
.....
காவிரியின் கரையோடுசெல்லும் பயணமாதலால் காவிரியாற்றைப் பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் மனிதப் பண்புகளையும் நினைவுகூர்கிறார்கள்.
“ஆறு தனக்கு இடமளிக்கும் நிலமெங்கும் பாய்கிறது. பண்பாடு, மனம் திறந்தவரிடம் எல்லாம் பாய்கிறது இவற்றையும் மீறி மொழிவெறியாளர்கள் பாறையாக உறைந்து கிடக்கும் ஒருமைப்பாட்டை குலைத்துக் கொண்டே இருக்கிறார்கள்”
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிக்கும் வந்தடைகிறார்கள்.
இன்றும் சில பல சுற்றுலா இடங்களில் நாம் காண நேரிடும் காட்சி. இணைப்பாக கைபேசியில் படம் எடுக்கும் அமளி.
“காப்பியைச் சாப்பிடுவதும் ..................ஓரங்களில் ஒதுங்கி ஒன்றுக்குப் போவதும், முகட்டில் வந்து கண்ணை இடுக்கிப் பார்ப்பதுமாக, வந்து வந்து போய்கொண்டிருக்கிறார்கள். சரி, பார்த்த இடங்களில் ஒன்றுகூட சேர்ந்து விட்டது என்று குறித்துக்கொண்டு அவசர அவசரமாக பஸ்ஸில் ஏறுகிறார்கள். சுற்றுலா பஸ்கள் நாலே நாளில் நாற்பது ஊர்களைச் சுற்றிக் காண்பித்துவிட்டு வந்து விடுகின்றன........நாலு நாளுக்குப் பிறகு மனதில் என்ன நிற்கிறது? எங்கெங்கோ காபி குடித்தது, கிச்சடி தின்றது, ரோடு ஒரத்தில் இடம் தேடியது..........வியர்த்து விட்டது, வழிகாட்டியின் மேய்ச்சலுக்கு பயந்து பயந்து பெருநடை போட்டது, கூட்டத்தில் ஒரு மூலையில் நின்று அவர் சொல்கிற வரலாறு – புராண உபன்யாசங்களை அரையும் குறையுமாகக் கேட்டது, --இந்த நினைவுகள்தான் மிச்சம். இவற்றையும் மீறி ஏதாவது ஞாபகம் இருந்தால், அது நம்மையும் அறியாமல் நாம் ஆறறிவு படித்தவர்களாக இருப்பதால்தான்”
ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சியை அடைகின்றனர் நமது நண்பர்கள்
“ஹொகனேக்கல்லுக்கு என்று ஒரு வனப்பும் அமைதியும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிழலையும் திவலைகளைப் புகையாகத் தூவி சிலிர்க்கச் செய்யும் அருவிகளையும் தனிமையையும் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள். குற்றாலத்தில் இருந்தால் என்ன? பாபநாசத்திலிருந்தால் என்ன? வீழும் நீருக்கு எங்கும் அழகுதான். எங்கும் மயக்கம்தான். நிரந்தர ஏகாங்கிகளும் தற்காலிக ஏகாங்கிகளும் எந்த இடத்திலும் அருவிக்காட்சிகளைப் புறக்கணித்ததில்லை.”
இந்த வரிகள் திரு சுந்தர இராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை”யில் “மனிதனின் கால்கள் போகின்ற இடமெல்லாம் பாதைதான்” என்ற வரிகளை நினைவூட்டுவது உண்மை.
மேலும் தொடர்ந்து,
மேலும் தொடர்ந்து,
“ஓடோடி நின்று பார்த்து மலைத்துப் போயிருக்கிறார்கள். அருவி விழுகிற இடத்தில் எல்லாம் ஒரு தல புராணம் இருப்பதைக் கேட்டால் இந்த உண்மை புரியும். எனவேதான் குற்றாலம், பாபநாசம், சஞ்சன்கட்டே, கோனை, இவைகளைப்போல ஹொகனேக்கல்ளையும் தொல்லிய புராணங்களும் புனித நினைவுகளும் போற்றியிருக்கின்றன.”
என்று எழுதியவர்,
“பிரம்மாவும், முனிவர் பலரும் செய்த வேள்விக்கூடத்தை மூழ்கடித்து, பிரம்மாவின் கோபத்திற்கு ஆளாகி வற்றி விட்டாள், என்றும் அரங்கன் அருளால் மீண்டும் ஓட வரம் பெற்றாள் என்றும் தல புராணம் கூறுகிறது. காவேரி அத்தனை கோபம் உள்ளவளாக இருந்தால் ட்ரான்சிஸ்டர்களையும், மசால் பக்கவடாக்களையும் கொண்டு வந்து கூச்சல் போட்டு காகிதங்களையும், எச்சில்களையும் எறிந்து கொண்டிருக்கிற உல்லாசிகளை ஏன் மூழ்கடிக்கவில்லை என்றுதான் புரியவில்லை”
என்றும் நகைச்சுவையாகவும் நொந்த மனதுடனும் வினவுகிறார்.
பயணத்தில் முடிவாக கன்னட நாட்டில் இருந்து தாய்த் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தபின் எழுதும் இவ்வரிகள் சிறப்பானவை-
“ஜேடர்பாளையத்திற்கு அருகில் ஒரு சிறு கிராமத்தை கடக்கும்போது ஒரு கிணறு கண்ணில் பட்டது. சில பெண்கள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். காரை நிறுத்தி அவர்களிடம் தண்ணீர் கேட்டதும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுத் தங்களுடைய பானைகளில் நீர் கொண்டு வந்தார்கள்......ஏழ்மையின் எல்லைக்கோட்டில் நின்று தள்ளாடும் மக்கள் நிறைந்த கிராமம். இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதாகச் சொல்லிக் கொண்டுதான் அரசியல்வாதிகள் பதவிக்குப் பாடுபட்டு, வீடுகட்டி, சொத்து சேர்த்து, தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக் கல்வி பயில அனுப்பி உழைக்கிறார்கள். நரிக்குறவர்கள், பழங்குடி மக்கள் போல், காசு கேட்காமல், ஒரு பலனும் எதிர்பாராமல் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்துதவிய பெண்கள் காவிரியின் செல்விகளாகவே தோற்றமளித்தார்கள். காரைச் சுற்றியிருந்த சிறுவர்களும் அமைதியாகவே ஒருவித மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது எங்கள் நண்பரின் உள்ளத்தை உருக்கிவிட்டது."
பயணக்கட்டுரையாக மட்டுமின்றி மனிதப்பாங்குகளையும் விவரிக்கும் வலுவான எழுத்தாற்றலால் காலத்தின் கண்ணாடியாக விளங்கும் இதைப் போன்ற புத்தகங்களை முற்றிலும் வேறுபட்ட ஒரு கால கட்டத்தில் படிக்கும்போது புதுப்புதுப் பொருள்கள் தோன்றுகின்றன.
நடந்தாய் வாழி காவேரி
தி. ஜானகிராமன், சிட்டி
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில்.
நூலுலகம், nhm
நடந்தாய் வாழி காவேரி
தி. ஜானகிராமன், சிட்டி
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில்.
நூலுலகம், nhm
No comments:
Post a Comment