- வெ சுரேஷ் -
இக்கட்டுரையை மின்னூல் வடிவில் வாசிக்க |
ஆபிரஹாம் எராலியின் இந்திய வரலாற்றுத் தொடர் நூல்களின் முதல் மூன்று நூல்களைப் பற்றி சொல்வனம் இணைய இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்-
"இந்த மூன்று நூல்களின் தொடர்ச்சியாக அடுத்து வருவது இந்தியாவின் தற்காலத்தையும் மிக வலுவாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் காலகட்டமான 11ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரைக்குமான ஒன்று. இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளின் தாக்கம் இன்றைய இந்தியாவிலும் அரசியல் விளைவுகளை உண்டாக்குவதை நாம் அறிந்திருக்கிறோம். அந்தப் புத்தகமான The Age of Wrath ஒரு தனிக் கட்டுரையைக் கோரி நிற்பது".
தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலத்தை ஆபிரஹாம் எராலி, "Age of Wrath," என்ற இந்த நூலில் விவரிக்கிறார்- “A historian sees with impersonal eyes. But speaks with a personal voice. A historian cannot be bothered with political correctness,” என்பதே அவரது பார்வையாக இருக்கிறது.
பொது சகாப்தத்தின் இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்திய வரலாறு, குறிப்பாக வட இந்திய வரலாறு, ஒரு திருப்புமுனையைச் சந்திக்கிறது. அதுவரையில் இல்லாத அளவில் இந்தியா சில அந்நிய சமூகங்களின், அந்நிய சிந்தனைகளின், வாழ்க்கை முறையின் ஊடுருவல்களையும் படையெடுப்புகளையும் எதிர்கொண்டது. அதுவரையில் இல்லாத அளவுக்கு, அது இந்திய வரலாற்றையும் இந்திய சமூகத்தையும் புரட்டிப் போட்டது. இந்த காலகட்டத்தை விவரிக்கும் நூல்தான் எராலியின் "சீற்றத்தின் காலம்" -- The Age of Wrath என்ற நூல். உண்மையில், Wrath என்ற சொல்லுக்கு, பேரழிவை உண்டாக்கும் சீற்றம் என்ற ஒரு பொருளையும் க்ரியாவின் தமிழ் அகராதி தருகிறது. இந்த நூலைப் பொருத்தவரையில் அந்த விளக்கமே மிகப்பொருத்தமானது எனலாம். 11ம் நூற்றாண்டில் முகமது கஜினியின் இந்திய படையெடுப்புகளில் துவங்கி, 16ம் நூற்றாண்டில் மீண்டும் பாபர் இந்தியாவை வென்றது வரை வட இந்தியாவும் தக்காணமும், ஓரளவு தென் இந்தியாவும், சந்தித்த பேரழிவுகளை கவனத்தில் கொண்டால், அந்தக் காலகட்டத்தை பேரழிவுகளின் காலம் என்று சொல்வது பொருத்தமானதுதான்.
வரலாற்றுக் காலக்கட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்திய நிலப்பகுதி அந்நிய சமூகங்களின் வருகையை சந்தித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டு வரை நடந்த இந்த வருகைகளுக்கும் 11ம் நூற்றாண்டில் இருந்து துவங்கிய துருக்கிய-முஸ்லிம் மதத்தினரின் படையெடுப்புகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது என்கிறார் எராலி. அந்த வேறுபாடுகள் எவையென்றும், அவை இந்தியாவை எப்படி பாதித்தன என்பதையும் விரிவாகச் சொல்கிறது இந்நூல்.
அதுவரை இந்தியாவுக்கு வந்த சமூகங்கள் பெரும்பாலும் இந்தியாவைப் புகலிடமாக தேடி வந்தவை, அல்லது தாம் இருக்கும் இடத்தைவிட மேம்பட்ட ஒரு வாழ்விடத்தைத் தேடி வந்தவை. அவை இந்திய நாகரிகத்தைவிட சற்றே குறைந்த அளவு வளர்ச்சி பெற்றவை, இந்தியா வந்து இங்கிருந்த உயர் கலாசாரத்துடன் இணைந்து தம்மை மேம்படுத்திக் கொண்டவை, இரண்டறக் கலந்துவிட்டவை. ஆனால் முதல் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின் நடந்த வரலாற்று நிகழ்வுகள் அப்படிப்பட்டவை அல்ல. சொல்லப்போனால், இந்தப் படையெடுப்புகள் மிகப் பிரபலமான மஹ்மூத் (ஆங்கிலத்தில் Mahmudதான்) கஜினியின் படையெடுப்புக்கு முன்பே துவங்கியவை. 8ம் நூற்றாண்டில் சிந்துப் பகுதியை ஊடுருவி படையெடுத்து வந்த அராபியரான முகமது பின் காசிம் அன்று புதிதாக உருவாகி வந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர், ஓங்குமுகத்தில் இருந்த ஒரு கலாசாரத்தின் பின்னணியில் வந்தவர். அவர் இந்தியாவில் வாழ இடந்தேடி வரவில்லை. மாறாக வென்றடக்க வந்தார்.
சொல்லப்போனால் அவர் நாடு பிடிக்கும் ஆசையில் இந்தியா வரவில்லை. ஒரு வணிகத் தகராறைத் தீர்க்கவே வந்தார் என்று நம்ப வேண்டியுள்ளது. அன்றைய சிந்துப் பகுதியின் இந்து அரசரான தாஹர், அங்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த அரபிக் கப்பல்களைக் கொள்ளையடித்துவந்த கடற் கொள்ளையர்களைத் தடுக்கத் தவறியதோடு மறைமுகமாக அவர்களை ஊக்குவிக்கவும் செய்தார் என்றும் இலங்கையிலிருந்து அரேபியா திரும்பிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து பல முஸ்லிம் பெண்களையும் ஆண்களையும் சிறைபிடித்திருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு பதிலடி கொடுக்கவே முகமது பின்காசிம் அன்றைய முஸ்லிம் உலகத்தின் தலைவரான கலீபாவின் ஆசிகளோடு சிந்துப் பகுதியின் மீது படையெடுத்து வந்தார். அப்போது முகமது பின் காசிமின் வயது 17தான். முதலில் அவர் தஹாருக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார்- சரணடைந்து விடும்படியாகவும், இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும். ஆனால் தாஹர் சரணடையாமல் எதிர்த்து நின்றார். படுதோல்வி அடைந்தார். அதற்குப் பின் நடந்தவை குறித்து பல மாறுபட்ட பதிவுகள் இருக்கின்றன என்கிறார் எராலி. பொதுவாக, காசிம் கௌரவமாகவே நடந்து கொண்டார் என்றும், மிக அவசியமான தேவைகளைத் தவிர சூறையாடலில் ஈடுபடவில்லை என்பதுமே உண்மை என்றும் எழுதுகிறார் அவர். ஆனால், ராஜகுடும்பத்தை மிகக் கடுமையாக தண்டித்தார். தாஹரின் ஒரு பெண்ணை மணந்து கொண்டு மற்ற இரு பெண்களை கலீபாவுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறார் (வெற்றி கொண்ட பொருட்களின் ஒரு பகுதியை கலீபாவுக்கு அனுப்புவது அன்று கடைபிடிக்கப்பட்ட இஸ்லாமிய நியதி).
இது அவரின் தீயூழ் ஆகிறது. அந்த இளவரசிகள் கலீபாவிடம் காசிம் தங்களிடம் முறை தவறி நடந்துகொண்ட பின்னரே அனுப்பி வைத்ததாகச் சொல்ல, கடும் கோபம் கொண்ட கலீபா, காஸிமின் ஆசன வாயைத் தைத்து மூட்டைக் கட்டி தன்னிடம் அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார். கலீபாவின் உத்தரவுக்குப் பணிகிறார் காசிம். காசிமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்பட்டவுடன், தாங்கள் சொன்னது உண்மையில்லை என்கின்றனர் இளவரசியர். அவர்களும் கொல்லப்படுகின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாவிட்டாலும், காசிம் காலிபாவின் ஆணைப்படியே கொல்லப்படுகிறார் என்பதும், அது சிந்து மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் நேசிக்கப்பட்ட மன்னராகவே இருந்தார் என்பதும் உண்மை என்கிறார் எராலி.
பாடப் புத்தக வரலாற்றில் அதிகம் இடம் பெற்றிராத இது போன்ற தகவல்களை தருவது இந்த நூலின் சிறப்பு. சொல்லப் போனால் இந்த நூலைப் பற்றி எழுதும் ஒருவருக்கு, இது மாதிரியான சம்பவங்களை சொல்வதா, படையெடுத்து வந்தவர்களின் வம்சாவழிப் பட்டியல்களை சொல்வதா, அல்லது அவர்களின் தொடர் வெற்றிக்கான காரணத்தை இந்த நூல் அலசுவதை விரிவாக எழுதுவதா என்று திகைக்க வைக்கும் அளவுக்கு தகவல்கள் நிறைந்த களஞ்சியம் இது. எனினும் தொடர்ச்சியாக வந்த படையெடுப்பாளர்களின் வரிசையை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
மஹ்மூத் கஜினி:
காசிமுக்குப் பின் சிந்து பகுதியில் முஸ்லீம்களின் ராஜ்யம் பெரிதாக வளராமல் அங்கங்கே சிதறுண்டு சிறு அரசுகளாகத்தான் நீடிக்கிறது. அதற்குப் பின் கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு வருவதுதான் கஜினியின் படையெடுப்பு. இங்கும் நாம் அதிகம் அறிந்திராத இன்னொரு படையெடுப்பு அதற்கு முன்னர் நிகழ்கிறது.
அதற்கு காரணமாக அமைவது கஜினியின் தந்தை சாபுக்திஜின் நாடு பிடிக்கும் ஆசை. அவர் 10ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் பஞ்சாப் மீது படையெடுக்கிறார். பஞ்சாபின் மன்னன் உடனான போரின் துவக்கத்தில் அவர் தோல்வியையே சந்திக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்போது அடித்த ஒரு பனிப்புயல் அவருக்கு உதவ, இறுதியில் அவர் வெல்கிறார் (இதே மாதிரி ஒரு பனிப்புயல் முதலாம் ஆங்கில- ஆப்கானிய போரின்போது ஆப்கானியர்களுக்கு உதவியது என்ற குறிப்பையும் தருகிறார் எராலி). அந்தப் பனிப்புயல் சாபுக்திஜின் தன் மந்திர சக்தியால் உருவாக்கியது என்றே ஜெயபாலனின் படை வீரர்கள் நம்பி பீதியுற்றதால் தோல்வியடைகின்றனர், என்கிறார் எராலி. ஜெயபாலனுக்கே அவரது நாட்டைத் திருப்பித்தந்து திறை செலுத்த ஆணையிட்டுத் திரும்பிவிடுகிறார் சாபுக்திஜின். அதற்குப் பின் நிகழ்ந்ததுதான் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிவிடுகிறது.
ஜெயபாலன் கப்பம் கட்டுவதை நிறுத்திவிடுகிறார். ஆங்காங்கே இருந்த சில சிற்றரசர்களை துணைக்குச் சேர்த்துக் கொள்கிறார். இப்போது அரசனாகியிருக்கும் மஹ்மூத் கஜினிக்கு இது ஆத்திரமூட்டுகிறது. அதற்குப் பின் என்ன நடந்ததோ, அது தொடர்ந்து ஒரு 600 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தது. வடமேற்கு கணவாய் வழியாக வந்த மஹ்மூதின் கட்டுக்கோப்பான சிறிய படை, தன்னைவிட பலம் வாய்ந்த இந்தியப் பகுதி படைகளை சிதறடித்து வெற்றி கண்டது. ஆனால் மஹ்மூதுக்கு இந்தியாவில் நிலைத்து நின்று ஆட்சி புரிய விருப்பமில்லை. அதன்பின் அவன் பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்துத் திரும்பவே மீண்டும் மீண்டும் படையெடுத்து வந்தது நாம் அனைவரும் அறிந்த கதை.
கஜினியின் சோமநாதபுரம் கோவில் கொள்ளை வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்றது. பின்னர் இன்றுவரை பல சர்ச்சைகளுக்கு இடமளிப்பது. கஜினி என் இந்தக் கோவிலைத் மீண்டும் மீண்டும் தாக்கினார் என்பதற்கான காரணங்களில் மிக முக்கியமானது கோவிலின் பெரும்செல்வமே என்கிறார் எராலி . அந்தக் கோவிலின் லிங்கத்தை உடைக்காமல் இருப்பதற்காக அவருக்கு பெருந்தொகை ஒன்று பேரம் பேசப்பட்டது. ஆனால் அதற்கு இசையாத கஜினி அதை உடைத்து பேரம் பேசப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகமான விலை மதிப்புள்ள கற்களை அந்த லிங்கத்தின் உள்ளிருந்து எடுத்துக் கொண்டார் என்ற தகவலையும் தருகிறார் எராலி.
இன்று வரையிலும் பெரும் சர்ச்சைக்கு இடமளித்துவரும் கஜினியின் செயலுக்குப்பின் இருந்த காரணங்கள்தான் என்ன? நிச்சயமாக மதம் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதைவிட முக்கியமானது பொருளாசைதான் என்பதே எராலியின் முடிவு. இந்து கோவில்களை மட்டுமல்ல, மசூதிகளையும், குறிப்பாக, இஸ்மாயிலிகளுடையதையும், ஷியா பிரிவினருக்கு உரியவற்றையும் உடைத்தெறிவதில் கஜினி தயக்கம் காட்டவில்லை. கஜினியின் படையெடுப்புகளின் மிக முக்கியமான ஒரு விஷயம், அவரது படைகளில் பல இந்துக்களும் இருந்தது. இன்னொன்று, அவர் ஒருபோதும் இந்திய பகுதிகளை வென்று ஆள நினைக்கவில்லை. காஃபிர் என்று நம்பியவர்களை வெல்வதும் கொள்ளையடிப்பதுமே அவரது முதன்மை நோக்கம். சோமநாதபுரம் கோவிலைத் திரும்பிக் கட்டியதை குறிக்கும் ஒரே ஒரு சம்ஸ்க்ருதக் கல்வெட்டுத் தவிர கஜினியின் படையெடுப்புகள் குறித்த உள்ளூர்ப் பதிவுகளே இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் எராலி. நமக்கு கிடைத்திருப்பதெல்லாம் அவருடன் வந்த, அவரைப் போற்றி பாராட்டிய புலவர்கள் சொல்வதுதான். இதில் எவ்வளவு மிகை எவ்வளவு உண்மை என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்லவே முடியாது என்பதும் எராலியின் முடிவு.
இந்தப் புலவர்களின் கற்பனையில் உருவான சுவாரசியமான தகவல் என்று, கஜினி பிறந்தபோது சிந்து பகுதியில் ஒரு கோவில் தானாகவே இடிந்து விழுந்தது என்ற ஒரு கதையையும் எராலி குறிப்பிடுகிறார். இந்தியப்பகுதிக்கு ஒரு கொடுங்கோலனாகவே காட்சியளித்த கஜினி உண்மையில் அவரது ஆட்சிக்குட்பட்டப் பிரதேசங்களில் நல்லாட்சியையே வழங்கினார் என்பதும் கலைகளிலும் கல்வியிலும் ஆர்வம் கொண்ட ஒரு மன்னனாகத் திகழ்ந்தான் என்பதும் இந்நூல் தரும் தகவல்கள். ஆனால் இதற்கான ஆதாரமும் அவரைப் போற்றி பாராட்டிய புலவர்கள் சொல்வதுதான் என்பதால் இதிலும் எவ்வளவு மிகை எவ்வளவு உண்மை என்பதை நாம் தீர்மானிப்பதற்கில்லை. இக்காலகட்டத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, இந்திய மன்னர்கள் தம் வரலாற்றையும் விட்டுச் செல்லாதது ஒரு சிக்கலாய்த்தான் இருக்கிறது.
இந்திய பகுதிகளில் பேரழிவுகளை நிகழ்த்திய கஜினி சாகும்போது மனநிலை சரியில்லாமல் போய், தான் கொள்ளையடித்த செல்வங்களைத் திரும்பத் திரும்பக் கண்டு மனம் வெதும்பி அழுது இறந்தார் என்பதிலிருந்து நாம் என்ன பெற்றுக் கொள்வது?
தில்லி சுல்தானிய வம்சங்கள்:
மஹ்மூது கஜினிக்குப் பிறகு அவரது சாம்ராஜ்யம் சரிகிறது. அவரது வம்சத்துக்கும், ‘கூர்’ எனப்பட்ட பகுதியில் உருவாகிவந்த வம்சவழியினருக்கும் உருவான பகையில் கோரி என்றழைக்கப்பட்டவர்கள் கை மேலோங்கி, அவர்கள் கஜினியின் சாம்ராஜ்யத்தை முற்றிலும் அழித்தனர். அந்த வம்சத்தில் வந்த முகமது கோரி, கஜினியைப் போலவே இந்தியா மீது தன் பார்வையைத் திருப்பினார். கஜினியைப் போலவே அவர் பல இந்திய பகுதிகளை எளிதில் வென்றபோதும் தில்லி பகுதியை ஆண்டு வந்த பிரித்திவிராஜிடம் முதல் போரில் தோற்கிறார். பிறகு நடந்த இரண்டாவது போரில் வென்று தில்லியைப் பிடிக்கிறார். இங்குதான் தில்லி சுல்தானியம் உருவாகிறது.
அடுத்த 350 ஆண்டுகளுக்கு வட இந்தியாவில் ஆதிக்க சக்தியாக விளங்கிய தில்லி சுல்தானியத்தை உருவாக்கிய முகமது கோரி வாரிசுகளற்றவர். சாம்ராஜ்ஜியத்தை தன் துருக்கிய இன அடிமைகளுக்குப் பிரித்துக் கொடுத்தவர். அதன் தில்லி பகுதிக்கு அதிபரானவர்தான் அவரது பிரதான அடிமைகளில் ஒருவரான குத் புதின் ஐபக். அவரது வம்சம் மாம்லுக் வம்சம் என்றழைக்கப்பட்டது. மாம்லுக் என்றால் அடிமைகள் என்று அர்த்தம், எனவே தில்லி சுல்தானியமும் அடிமை சுல்தானியம் என்று அழைக்கப்பட்டது.
தில்லி சுல்தானியத்தின் காலத்தில் ஐந்து வம்சங்கள் அரச பதவியை கைப்பற்றுகின்றன. முதலில் குத்புதீன் ஐபக் ஸ்தாபித்த மாம்லுக் அடிமை வம்சம். இரண்டாவது கில்ஜி, மூன்றாவது துக்ளக், பிறகு சய்யிது மற்றும் கடைசியாக லோதி வம்சங்கள். இவற்றில் முதல் நான்கும் துருக்கிய வழி வந்தவை, கடைசி வம்சம் ஆப்கான் வழியிலானது. இவர்கள் ஏறக்குறைய 350 ஆண்டுகள் இந்தியாவின் கணிசமான பகுதியை நேரடியாக ஆட்சி புரிந்தும் மற்ற பகுதிகளில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தியும் இருந்த இந்தக் காலகட்டம் இந்தியாவின், முக்கியமாக வட இந்தியாவின் சீரழிந்த காலகட்டம் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணமாக எராலி சொல்வது அரசியல் ஸ்திரத்தன்மையற்றதாக டில்லி சுல்தானியம் விளங்கியது என்பது. ஒரு சிறு கணக்கு- மிகச் சரியாக 320 ஆண்டுகள், 1206 முதல் 1526 வரை கோலோச்சிய தில்லி சுல்தானியத்தின் தலைமை பொறுப்பில் 32 அரசர்கள் இருந்தனர். இதில் அடிமை வம்சத்தின் கியாசுத்தின் பால்பன் 21 ஆண்டுகள் ஆண்டதையும், கில்ஜி வம்சத்தின் அலாவுதீன் கில்ஜி 26 ஆண்டுகள் மற்றும் பைரோஸ் ஷா துக்ளக் 37 ஆண்டுகள் ஆண்டதையும் கழித்தால் மீதமுள்ள 236 ஆண்டுகளில் 30 மன்னர்கள் ஆள்கிறார்கள். ஒவ்வொரு மன்னரின் ஆட்சிக்காலமும் சராசரியாக 10 ஆண்டுகளுக்கும் குறைவு. சில சுல்தான்கள் சில மாதங்களே, ஏன், சில நாட்களேகூட ஆண்டிருக்கிறார்கள். இது அக்கால அரசியல் ஸ்திரத்தன்மையை குலைத்ததோடு, எப்போதும் போர் இருக்கும்படியான ஒரு சூழலையும் கொண்டிருந்தது. மக்கள் நிலையாமையின் அச்சத்தில் உழன்றார்கள் என்கிறார் எராலி. இதற்குப் பின் வந்த மொகலாய வம்சத்தின் முதல் இருநூறு ஆண்டுளில் 7 மன்னர்களே ஆண்டனர் என்பதைப் பார்க்கும்போது இது மேலும் துலக்கமாக விளங்கும் என்கிறார் அவர்.
இந்த 320 வருட கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளை உருவாக்கிய சுல்தான்கள் என்று எராலி, பால்பன், அலாவுதீன் கில்ஜி, பிரோஸ் ஷா துக்ளக் ஆகியோரை மட்டும்தான் சொல்ல முடியும் என்கிறார். இவர்களது ஆட்சிக்காலத்தில் மட்டும்தான் ஒப்புநோக்க ஓரளவு அமைதியும், ஸ்திரத்தன்மையும் இருந்தது என்றும் மக்கள் ஓரளவாவது நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்றும் சொல்கிறார்.
பால்பனைப் பற்றிச் சொல்லும்போது, துருக்கிய இனக்குழுக்களிடையே தலைவன் என்பவன் சமமானவர்களில் முதல்வன் என்று அதுவரை இருந்த நிலையை மாற்றி, சுல்தான் என்பவன் கேள்வி கேட்க முடியாத அதிகாரம் கொண்ட முழுமுதல் தலைவன் என்று ஆக்கியது கியாஸுத்தின் பால்பன்தான் என்கிறார் எராலி. தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள தில்லியில் அவர் கட்டியதுதான் பிரம்மாண்டமான சிவப்பு மாளிகை. அதன் பின் அதுவே சுல்தான்களின் தலைமையிடமாகியது. அரச பதவி என்பது தெய்வீகத் தன்மை பொருந்தியது என்று அந்த இனக்குழுவில் நிலைநாட்டியது பால்பனின் சாதனை. அதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த 40 பேர் கொண்ட பிரபுக்களின் அவையை முற்றிலுமாக துடைத்தெறிந்து இதை சாதித்த பால்பன் இரும்புக்கரம் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை 21 ஆண்டுகள் அளித்தார்.
அவருக்குப்பின் வந்த குழப்பமான காலகட்டத்திற்குப்பின் சுல்தானாக வந்தவர் அவருடைய படைத்தளபதிகளில் ஒருவரான ஜலாலுதீன் கில்ஜி. இவரிலிருந்து கில்ஜி வம்சம் துவங்குகிறது. மிக இளகிய மனம் படைத்த அவர் தலைமைப் பதவியை மறுக்கிறார். ஆனால் படைத்தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒப்புக் கொள்கிறார். அதுவரை இருந்த சுல்தான்களிலேயே இளகிய மனம் படைத்த, மென்மையான சுல்தான் இவர்தான். பதவியேற்க தில்லி வந்து, சிவப்பு மாளிகைக்குள் நுழையும்போது குதிரையை விட்டு இறங்கி, தன் தலைவரான பால்பனை எண்ணிக் கண்ணீர் வடித்தபடி நடந்தே சென்று அரியணையில் அருகே முழந்தாளிட்டு தொழுதுவிட்டுப் பின்னரே அதில் அமர்கிறார். ஆனால் இளகிய மனமும், தன் துரோகிகளையும் மன்னிக்கும் குணமும் கொண்ட அவரது போக்கு சிற்றரசர்களுக்குப் பிடிப்பதில்லை. இருந்தும் 6 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். இறுதியில் தன் மருமகனான ஜூனாகான் என்பவரால் கொல்லப்பட்டு இறக்கிறார். இங்கும் பிறரை நம்பும் குணம் அவருக்குப் பகையாகிறது.
இந்த ஜுனாகான்தான் அலாவுதீன் கில்ஜி என்ற பெயரில் பட்டம் ஏற்றுக் கொண்டவர். தில்லி சுல்தானா வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆட்சியாளர் என்று ஆபிரஹாம் எராலி குறிப்பிடுவது அலாவுதீன் கில்ஜியைத்தான். அவரது ஆட்சிக்காலம் குறித்து மிக விரிவாக எழுதுகிறார்: தில்லி சுல்தானியம் தன் ஏகாதிபத்தியத்தை ராமேஸ்வரம் வரை விரிவாக்கியது; துவாரசமுத்திரம், வாரங்கல், மதுரை ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டு தன்கீழ் கொண்டு வந்தது என்று பல வெற்றிகள். இவருடைய அடிமையான மாலிக் காபூர் மிகத் திறமையான படைத்தளபதி. இவராலேயே அலாவுதீனின் தென்னிந்திய வெற்றிகள் சாத்தியமாகின. இவரால்தான் தென்னிந்திய கோவில்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டு ஏராளமான செல்வம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு தகவலின்படி அலாவுதீன் கில்ஜி, தேவகிரியை வென்று தில்லி திரும்பியபோது அவருடன் 17250 பவுண்டுகள் தங்கம், 200 பவுண்டுகள் முத்துக்கள், 28250 பவுண்டுகள் வெள்ளி மற்றும் 1000 பட்டுத்துணிகள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றார்.
பொதுபுத்தியில் ஒரு கொடுங்கோல் அரசராகவே இன்று நிலைத்திருக்கும் அலாவுதீன் கில்ஜிதான் இந்தியாவில் இன்றளவும் தம் விளைவுகளை செலுத்திக் கொண்டிருக்கும் பல வரித்திட்டங்களையும், நில அளவைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தவர். வேளாண் மக்கள் நலன்களில் அக்கறை செலுத்தியவர். உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் அவசியத்தை உணர்ந்தவர். மிக விரிவான ஒற்றர் படையினை நிறுவி தனக்குத் தெரியாமல் எந்த ஒரு செயலும் தன் ராஜ்ஜியத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொண்டவர் என்றெல்லாம் அலாவுதீன் கில்ஜி பற்றிய மிக விரிவான சித்திரத்தைத் தந்திருக்கிறார் எராலி. இவ்வளவு சீர்திருத்தங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் கொண்டு வந்த அலாவுதீன், அடிப்படையில் எழுதப் படிக்காத தெரியாதவர் என்ற முரணையும் பதிவு செய்கிறார் எராலி. இந்த இடத்தில் இந்தியாவின் இஸ்லாமிய மன்னர்களில் இன்னொரு மகத்தான மன்னரான அக்பரும் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.
தன்னை இரண்டாவது அலெக்ஸ்சாந்தர் என்று அழைத்துக் கொண்ட, பல வெற்றிகளைக் கண்ட அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் எழுந்து வந்த கர்ண பரம்பரை கதைகள் ஏராளம். வடக்கே சித்தூர் ராணி பத்மினி (இவரைப் பற்றி ஒரு தமிழ்ப்படம் வந்தது, சிவாஜி, வைஜயந்திமாலா மற்றும் கில்ஜியாக பாலையா நடித்தது), தெற்கே துலுக்க நாச்சியார் என்று நிறைய எதிர்ப்புகள் அவர் காலத்தில் தோன்றின. அதே போல அவரும் மாலிக் காபுரும் இந்துக்களுக்கு எதிராக நடத்திய பல அழித்தொழிப்புகளும், பல கோவில்களை அழித்தது குறித்தும் ஏராளமான கதைகளும் உள்ளன. இந்த அம்சத்தை கடைசியில் பார்க்கலாம்.
ஆனால் அலாவுதீன் கில்ஜியின் இறுதிக் காலமும் மகிழ்ச்சியாக முடியவில்லை. அவர் உடல்நலம் குன்றித் தளர்ந்தபோது வாரிசுத் தகராறுகள் தோன்றின. கில்ஜியின் மறைவுக்குப் பின் மீண்டும் குழப்பம், அந்த குழப்பங்கள் முடிவில் ஒரு புதிய சுல்தான், ஒரு புதிய வம்சம்.
அதுதான் கியாசுத்தின் துக்ளக்கும், அவரது துக்ளக் வம்சமும். அலாவுதீன் கில்ஜிக்கு பிறகான குழப்பத்தில் அலாவுதீன் கில்ஜி செயலற்று இருக்கும் சில காலம் மாலிக் காபூர் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார். அவர் இறந்தபின்பும்கூட அப்படி சில மாதங்கள் நடக்கிறது. மாலிக் காபூர் கொல்லப்படுகிறார். கில்ஜியின் இளம் மகன் ஒருவன் அரியணை ஏற்றப்படுகிறான். அதுவும் நீடிப்பதில்லை. அவரது வலிமை மிகுந்த தளபதிகளில் ஒருவரான குஸ்ரோகான் பதவிக்கு வருகிறார். அதுவும் தற்காலிகமே. முஸ்லிம் பிரபுக்களின் அதிருப்திக்கு ஆளான அவரை கில்ஜியின் ஆளுநர்களின் ஒருவரான காஜி மாலிக் மற்றும் அவரது மகன் பக்கீர் மாலிக் ஆகியோர் தூக்கியெறிந்துவிட்டு காஜி மாலிக், கியாசுத்தின் துக்ளக் என்ற பெயரில் பதவிக்கு வருகிறார். துக்ளக் வம்சம் உருவாகிறது. ஆனால் 1320லிருந்து 1325 வரையே அவரது ஆட்சி நடக்கிறது. ஒரு விபத்தில் அவர் இறக்கிறார். அவரது மகன் பக்கீர் மாலிக், முகமது-பின்-துக்ளக் என்ற பெயரில் அரியணை ஏறுகிறார்.
கியாஸுத்தீனின் இறப்பு வரலாற்றாசிரியர்களிடையே பெரும் விவாதத்துக்கு உள்ளான ஒன்று. அது விபத்து என்பாரும் உண்டு. அவர் மகனால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கொலை என்பாரும் உண்டு. முகமது பின் துக்ளக் தன் வாழ்நாள் முழுதும் தந்தையைக் கொன்றவன் என்ற பழியை சுமந்தேதான் இருந்தார் என்றே எராலி சொல்கிறார்.
முகமது பின் துக்ளக் இந்தியாவின் மிக சர்ச்சைக்குரிய மன்னர். இவர்தான் நாம் எல்லோரும் அறிந்த தலைநகர் மாற்றத்தை நிகழ்த்தியவர் (தில்லி- தேவகிரி- தில்லி). அரசாங்க நாணயங்கள் வெளியிடுவதில் பல பரிசோதனைகள் செய்து பார்த்தவர். ஒரே சமயம் பெரும் குரூரத்தையும், பெரும் கருணையையும் வெளிப்படுத்தியவர் என்று ஒரு சர்ச்சை நாயகராகவே இன்றும் விளங்குகிறார். வரலாற்றாசிரியர்களான பரணி மற்றும் இபின் பதூதா ஆகியோர் இவர் காலத்தைக் குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் இன்னமும் இவர் ஒரு மேதையா அல்லது மனநிலை பிறழ்ந்தவரா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சந்தேகமற்ற ஒரு விஷயம் இவரது காலத்தில்தான் நடந்தது: டெல்லி சுல்தானியம் முன்னெப்போதும் இல்லாத ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விரிந்தது. 26 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சி, குழப்பத்துக்கும் பல்வேறு கலகங்களுக்குமே பிரபலமாக விளங்கியது. இறுதியில் இவரது சாம்ராஜ்யம் பிளவுண்டு, தக்காணத்தில் பாமணி சுல்தானியமும், அதற்கு கீழே, இந்தியாவின் தென்கோடி வரை பரவிய விஜயநகரப் பேரரசும் பிறந்தன.
முகமது பின் துக்ளக்கின் இறப்புக்குப் பின் நடந்த குழப்பங்களுக்கு பின் வந்தவர் பிரோஸ் ஷா துக்ளக். முகமது பின் துக்ளக் எதுவெல்லாம் இல்லையோ அதுவெல்லாமாக பிரோஸ் ஷா விளங்கினார். தில்லி சுல்தானியத்தை மீண்டும் ஒரு வலிமையான அமைப்பாக மாற்றினார். 37 ஆண்டுகள் அரியணையில் இருந்தார். ஆனால் சுல்தானியத்தின் விஸ்தீரணம் குறைந்தது குறைந்ததுதான். பாமணி சுல்தானியமும், விஜயநகர பேரரசும் அதன் தெற்குப் பகுதியை நிரந்தரமாகப் பிரித்தே விட்டன. ஆனால் இவரது ஆட்சிக்காலம் ஒப்பு நோக்க அமைதியான ஆட்சிக்காலம் எனலாம். சில முக்கியமான சீர்திருத்தங்களிலும், அடிப்படை கல்வி போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. 1388ல் இவரது மறைவுக்குப் பிறகு மீண்டும் குழப்பங்களின் காலகட்டம் பிறந்தது.
இதை அடுத்து இந்தியாவில் நடந்த ஒரு பேரழிவு, தைமூரின் படையெடுப்பு. சமர்க்கண்டைத் தலைநகரமாகக் கொண்ட மங்கோலிய இனத்தைச் சேர்ந்த, ஆனால் முஸ்லிம் மதத்தவனான தைமூர் கேட்டவர் நடுங்கும் பெயர் கொண்டவராக இருந்தார். இந்தியாவின் மீது அல்லது சீனத்தின் மீது படையெடுப்பு நடத்தலாமா என்று யோசித்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். ஆனால் இந்த நிலப்பரப்பை வென்று இங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அவரது நோக்கங்கள் இரண்டு. ஒன்று, ஒரு மாபெரும் கொள்ளை. இன்னொன்று, கூடுமானவரை காபிர்களைக் கொன்று காஜி என்ற பட்டத்தைப் பெறுவது (காஜி என்றால் இஸ்லாத்துக்காகப் போர் புரிந்தவர் என்பது அக்காலப் பொருள்). அவை இரண்டையுமே அவர் அதிக எதிர்ப்பின்றி மிகச் சுலபமாக நிறைவேற்றிக் கொண்டார். அவர் இந்தியாவின் மீது பேரழிவு நிகழ்த்தினார், அவர் விட்டுச் சென்ற இடங்களெல்லாம் ரத்த ஆறு பெருகிற்று என்றே அக்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர் தில்லியை விட்டு சமர்க்கண்டை நோக்கிச் செல்லும் வழியில், சர்வ சாதாரணமாக, போகிற போக்கில் 20000 மக்களை துண்டங்களாக வெட்டிக் கொன்றுவிட்டு சென்றார் என்கிறார் எராலி.
தைமூர் நிகழ்த்திய பேரழிவுக்குப்பின் தில்லியில் ஆட்சிக்கு வந்த வம்சம் ஸய்யிதுகளின் வம்சம். இந்த வம்சம் குறித்தும், அதற்குப் பின் வந்த லோதி வம்சம் குறித்தும் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனலாம், ஒன்றைத்தவிர: லோதி வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோதியை வீழ்த்த தௌலத் கான் லோதி அழைத்த பாபர், தில்லி சுல்தானியத்துக்கு சாவு மணி அடித்து, மொகலாய வம்சத்தை நிலைநாட்டினார். இதுவே இக்காலகட்டத்தின் வரலாற்று பெருநிகழ்வு என்று சொல்லலாம்.
சுல்தானிய ஆட்சிக் காலத்தில் நடந்த ரத்தக்களரி நிறைந்த ஆட்சி மாற்றங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்று இஸ்லாத்தின் அடிப்படைகளை சொல்லலாம். முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்த மதத்தினரிடத்தில், இந்து மன்னர்களின் தெளிவான பரம்பரை வாரிசுக் கொள்கை இல்லை. போர்த்திறமை கொண்ட யார் வேண்டுமானாலும் சுல்தான் ஆகலாம் என்பதால் காபிர்களுக்கு எதிரான அறைகூவலுக்குச் செவி சாய்த்து படை திரட்டும் எவருக்கும் தன் வலிமையை நிலைநாட்ட வழி இருந்தது. எப்போதும் பூசல்களுக்கும் வாரிசுரிமைப் போர்களுக்கும் இவை காரணமாகின.
இதே காலகட்டத்தில், விஜயநகர பேரரசின் இந்து மன்னர்களிடையேயும் ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரண்மனைச் சதிகளும் நடைபெற்றன. தில்லி சுல்தானியத்தின் துக்ளக் ஆட்சிக்குப் பிறகு தக்காணமும், தென்னிந்தியாவும் சுதந்திர அரசுகளாக செயல்படத் துவங்கின. தக்காணத்தை ஆண்ட பாமணி சுல்தான்கள் குறித்தும் அதற்குத் தெற்கே துங்கபத்திரை நதிக்கரையிலிருந்து குமரி முனை வரை, சில சமயங்களில் இலங்கையிலும்கூட ஆட்சி செய்த விஜயநகர பேரரசு குறித்தும் இந்த நூலில் கணிசமான ஒரு சித்திரத்தையே தருகிறார் எராலி. என்றாலும், அடிப்படையில் இந்த நூல் தில்லி சுல்தானியத்தைக் குறித்ததுதான்.
வீழ்ச்சியின் காரணம் – எராலியின் ஊகங்கள்:
தில்லி சுல்தானியத்தை ஸ்தாபித்த வெற்றிகளை அந்நிய மண்ணிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து எவ்வாறு பெற்றார்கள் என்பதும் அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சிகள் ஏன் இங்கே எழவில்லை என்பதும் இந்நூலைப் படிப்பவர்களின் மனதில் இயல்பாக எழும் கேள்விகள். அதற்கான பதில்களை விரிவாக முன் வைக்கிறார் எராலி.
1. கி.மு. 600ம் ஆண்டுகாலம் முதல் இந்தியாவைப் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்றுச் சித்திரம், மிகச் சில சாம்ராஜ்யங்களையே காட்டுகிறது. பொது சகாப்தம் 9ம் நூற்றாண்டில் இந்தியப் பெருநிலம், பெரும்பாலும் பல்வேறு சிற்றரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. ஹர்ஷருக்குப் பிறகு வட இந்தியாவில் ஒரு பேரரசர் உருவாகவேயில்லை. எனவே வலிமையான ஒரு மைய அதிகாரம் என்பது இந்தியாவில் இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்த, எப்போதுமே பல்வகைப்பட்ட இன, மொழி, வேற்றுமை மிகுந்த சின்னஞ்சிறு அரசுகள்தாம் இந்தியாவில் பல்கிப் பெருகியிருந்தன. அத்தகைய காலகட்டத்தில் கஜினி- கோரி படையெடுப்பு நிகழ்ந்தபோது, அது ஒரு புதிய ஆபத்து என்றோ அதன் தன்மை முற்றிலும் வேறுபட்டது என்றோ இந்த மன்னர்கள் நினைக்கவேயில்லை. ஓயாமல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தங்களை போலவே அவர்களும் இன்னொரு தரப்பு என்றேதான் நினைத்தனர். அதனால், ஒருங்கிணைந்த எதிர்ப்பை அவர்களால் துருக்கிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக காட்டவே முடியாமற் போனது. அவர்களைப் பொறுத்தவரை இன்னும் ஒரு போர், இன்னும் ஒரு போட்டியாளர் அவ்வளவுதான். இதன் சிறந்த எடுத்துக்காட்டு, உள்ளூர் வரலாற்றுத் தகவல்களிலும் இலக்கியங்களிலும் துருக்கிய படையெடுப்பு இடம்பெறவேயில்லை என்பது.
துருக்கிய படையெடுப்பு குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களெல்லாம் அவர்களுடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய சித்திரங்கள். அவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் என்பதைவிட மன்னர்களின் பெருமையை விதந்தோதுபவர்கள் என்பதே பொறுத்தம். முகமது கோரி, பிரித்விராஜுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது பிரித்விராஜின் மாமனாரான கனோஜியின் மன்னர், ஜெயச்சந்திரனின் அவைப்புலவராக இருந்த ஸ்ரீஹர்ஷரின் படைப்புகளில் அந்த செய்தியே கிடையாது. ஜெயச்சந்திரனின் சம்யுக்தையை பிரிதிவிராஜ் கடத்திக் கொண்டு போய் மணந்தது ஜெயச்சந்திரனின் கோபத்துக்கு காரணம். யதார்த்தம் ஒன்றாக இருக்க இந்திய அரசர்கள் மற்றும் அரசவைகளின் நடப்பு முற்றிலும் வேறாக இருந்தது.
2. போர்த்திறனும் படைக்கலன்களின் மேன்மையும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு. பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் வாள் வீச்சு, அம்பு வீச்சு ஆகிய கலைகளில் பயிற்சி பெற்றிருந்தாலும் ஊடுருவி வந்த துருக்கி-ஆப்கனியப் படையினரின் விற்களும், ஈட்டிகளும் இங்கு இருந்ததைவிட மேம்பட்டு பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்தன. குறிப்பாக அவர்களின் விற்கள், இரு மரத்துண்டுகளை உலோகப்பட்டையால் பிணைத்துச் செய்தவை. வெகுதூரம் அம்புகளை செலுத்துவதாக இருந்தன. அவை அவர்களுக்கு ஒரு பெரிய அனுகூலத்தைக் கொடுத்தன.
3. குதிரைப்படையும் யானைப்படையும். துருக்கிய -ஆப்கனியப் படைகளிடம் யானைப்படைகள் கிடையாது, அவை இந்திய படைகளிடம் இருந்தன. ஆனால், அவர்களிடம் இருந்த குதிரைப்படைகள் இந்திய குதிரைப்படைகளை விட மிகுந்த வல்லமை கொண்டிருந்தன. குறிப்பாக குதிரைகளின் தரம் மிக உயர்வாக இருந்தது. மேலும் குதிரைப்படை வீரர்களின் திறன் மிக மேலானதாக இருந்தது, அவர்கள் குதிரைகளுடனேயே பிறந்து வளர்ந்தது போல் தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள். மாறாக இந்தியர்களின் குதிரைகள் மட்டக்குதிரைகள்தாம். இவற்றைச் சமானப்படுத்திடும் அளவுக்கு இந்தியர்களிடம் யானைப் படைகள் இருந்தாலும், ஒரு உக்கிரமான போரில் யானைப் படைகள் உண்மையில் பின்னடைவுகளுக்குக் காரணமாகவே விளங்கின. எரியும் தீப்பந்தங்களுடன், வேகமாகப் பாய்ந்து வரும் குதிரைகளைக் கண்டு பின்வாங்கும்போது, யானைப்படைகள் தமது தரப்புக்கே பெரும் இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தின. இது அலெக்ஸ்சாந்தர் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு உண்மை. ஆனாலும் இந்திய மன்னர்கள் அதிலிருந்து எதையும் கற்கவில்லை.
4. இன்னொரு முக்கியமான காரணம், நிலவமைப்பு. ஒரு உயரமான இடத்திலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து வரும் படைகள் எப்போதுமே ஒரு பெரிய அனுகூலத்தைக் கொண்டிருந்தன. இதனாலேயே படையெடுப்புகள் அங்கிருந்து இங்கேதான் நடந்தனவே ஒழிய இந்திய படைகள் இங்கிருந்து மேலேறி ஊடுருவ முடிந்ததில்லை.
5. புதிதாக உருவாகிவந்த மதத்தை பரப்புவது என்பதும் ஒரு முக்கியமான காரணியாக விளங்கிற்று. முக்கியமான தருணங்களில் தம் மதத்திற்காக போரிடுவதாக படைகள் நம்பினார்கள். வென்றால் மதத்துக்கான வெற்றி. தோற்று போர்க்களத்தில் இறந்தால், மதத்திற்காகப் போரிட்டு தோற்றதினால் கிடைக்கும் வெற்றி என்ற மனநிலை அவர்களை மிக உக்கிரமாகப் போரிட வைத்தது. மதம் ஒரு முக்கியமான ஒருங்கிணைத்தலை படைகளிடம் உருவாக்கியது. மாறாக, இந்திய ராஜ்புத்ரர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும், குழுவாகப் போரிடும் வல்லமையைக் காட்டிலும் தனிமனித சாகசத்தையே நம்பி நாடினார்கள். எதிரிகளைக் கொல்வதைவிட, வீர மரணம் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இது போரில் வெற்றியைவிட கௌரவமான தோல்வியையே அவர்களுக்கு கொடுத்தது.
6. அடுத்து, ஒரு அந்நியப் படையெடுப்பு என்ற வகையில் படையெடுத்து வந்தவர்கள் ஒரு சில ஆயிரம் பேர்களே. இங்கிருந்ததோ பல லட்சக்கணக்கானவர்கள். ஆனால், அவர்கள் ஆண்டார்கள். இவர்கள் அடங்கியிருந்தார்கள். இதற்கென்ன விளக்கம் இருக்க முடியும்? எராலியின் பார்வையில் இது இயல்பானதாகவே இருந்தது. ஏனெனில், முற்றிலும் வருணமயப்படுத்தப்பட்ட இந்திய சமூக அமைப்பில், ஆளப்படுபவர்கள், ஆள்பவர்களாக மாறும் சாத்தியமே இல்லை. அதனால், பெருவாரியான ஆளப்படும் மக்களிடையே, யார் ஆண்டாலும் அவர்களது அன்றாட வாழ்வில் அது எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில், சுல்தானாக இருந்தால் என்ன க்ஷத்ரிய குல அரசராக இருந்தால் என்ன என்ற விட்டேத்தி மனோபாவம், அவர்களை எந்தக் கிளர்ச்சிக்கும் தூண்டவில்லை. அவர்களிடத்தில் இருந்த பற்று என்பது முதன்மையாக தம் சாதி, அதிகம் போனால் தம் கிராமம் என்பதாகவே இருந்தது.
7. இன்னொரு வினோதமான காரணத்தையும், குறிப்பிடுகிறார் எராலி. அன்று இருந்த இந்தியர்கள் பலரும் இந்த நாட்டின் மீது இஸ்லாமிய படையெடுப்பு வருவதும் வெல்வதும் தவிர்க்க முடியாதது என்றும் அது தங்கள் புராணங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது என்றும் நம்பினர். குறிப்பாக, முகமது பின் காஸிமின் சிந்து பகுதி படையெடுப்பின்போது பௌத்தர்கள் போரில் தமக்கு விருப்பமில்லை என்பதையும் அது காலத்தின் கட்டளை என்பதையும் காசிமிடம் கூறிச் சரணடைந்தார்கள் என்ற ஒரு தகவலையும் சொல்கிறார்.
சுல்தான்களும் இந்துக்களும்:
அடுத்த முக்கியமான ஒரு பொருள். சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் நடத்தப்பட்ட விதம், அவர்களின் கோவில்கள் இடிக்கப்பட்டவை, ஜஸியா வரி விதிப்பு போன்றவை. இவை இன்றளவும், பகைமையை உருவாக்கவும், வளர்க்கவும் காரணமாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். இவை பற்றி எராலியின் பார்வை என்ன?
முதன்மையாக, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் மத்தியகால மனோநிலையே இஸ்லாமிய சுல்தான்கள் கொண்டிருந்தனர். சுல்தான்கள் ஒரு இஸ்லாமிய அரசைத்தான் அமைக்க முயன்றார்கள், அவர்கள் தம் புனித நூலின் அடிப்படையில்தான் செயலாற்றினார்கள். ஒரு இஸ்லாமிய தேசத்தில் முஸ்லிமற்றவர்களில் கிருத்துவர்களும், யூதர்களும் இயல்பாகவே பாதுகாக்கப்பட்ட குடிகளாவர். இவர்கள் அல்லாதவர்களைக் கையாள இரண்டு வழிகள்தான் இருந்தன- ஒன்று முஸ்லிமாக மாற்றுவது, அல்லது கொன்றொழிப்பது. முஸ்லிம் மதமாற்றம் நிறையவே நடந்தது. போரின்போது கொன்று ஒழிப்பதும் நடந்தது. ஆனால் போர்க்களம் தவிர்த்து, தைமூர் நடத்திய சில வெறியாட்டங்களைத் தவிர தேவையற்ற கொன்றொழிப்புகளில்லை என்றுதான் எராலி சொல்கிறார். ஒன்று, இங்கிருந்த இந்துக்களின் எண்ணிக்கை. அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே ஜஸியா எனும் வரி இந்துக்களின் மீது விதிக்கப்பட்டது. இந்த ஜசியா வரிகளை எதிர்த்து சில கிளர்ச்சிகள் (முக்கியமாக பிராமணர்களால்) நடந்தாலும் எத்தனையோ வரிகளில் இதுவும் ஒன்று என்ற விதத்தில் இது பெரிய எதிர்ப்பில்லாமல் செலுத்தப்பட்டது என்பதும், எல்லா காலங்களிலும் அது கெடுபிடியாக வசூலிக்கப்படவில்லை என்பதும் எராலி சொல்பவை. மேலும் பிராமணர்களுக்கான ஜசியா வரி பல சமயங்களில் விலக்கப்பட்டதும், அவர்களுக்காக மற்ற சாதியினர் வரி கட்டியதும் நடந்தது என்கிறார் எராலி.
ஆளும் முஸ்லிம்களின் குறைவான எண்ணிக்கை காரணமாக, பெருமளவு இந்துக்களை சார்ந்தே ஆட்சி நடந்தது. அதிகார வர்க்கத்தின் உயர் மட்டங்களில், துருக்கிய ஆப்கானிய இனத்தவர் இருந்தாலும், அடுத்தடுத்த மட்டங்களில் மரபான இந்து சாதியினரே அதிகாரம் செலுத்தினார்கள் என்பதே உண்மை. பிராமணர்கள் பெரும்பாலும் தம் நிலையைக் காப்பாற்றிக் கொண்டார்கள் (சில சமயங்களில் கடுமையான தண்டனைக்கு இலக்காகும் இடத்தில் இருந்தாலும்). சுல்தான்கள் ஆட்சியில், பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமான க்ஷத்திரியர்கள்தான். வணிகர்களும், விவசாயிகளும், கைவினைஞர்களும், பெருமளவு தம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாமலேயே வாழ முடிந்தது. இஸ்லாத்துக்கு மாறியவர்கள் எண்ணிக்கை என்றால் சுல்தான் ஆட்சி நடந்த காலத்துடன் ஒப்பிட்டால் அது குறைவானதாகவே இருந்தது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கட்டாய மதமாற்றம் என்பதுமே சில இடங்களில் நடந்தாலும், ஒப்புநோக்கக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்து சமூகத்தின் கடைசிப் படிநிலையில் இருந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்றாலும் அங்கும் அவர்கள் கடைநிலையிலேயே இருக்கவேண்டித்தான் இருந்தது. இந்திய மேல்தட்டு மக்களில் பலர் தம் பதவியும் உயர்குடி வாழ்வும் பறிபோகாமல் இருக்கவும் ஆசைப்பட்டு மதம் மாறினர். தவிர, இஸ்லாமிய சூபிக்கள் மூலமாக மதம் மாறியவர்கள் கணிசமாக இருந்தனர். மொய்னுத்தின் சிஸ்டி, க்வாஜா நிஜ்ஜாமுதின் அவுலியா போன்ற சூபிக்களும் இந்தக் காலக்கட்டத்தில்தான் தங்கள் செய்தியைப் பரப்பினர்.
மதங்களை பொறுத்தவரை மிகவும் பாதிப்புக்கு உள்ளானது பௌத்தம்தான். பௌத்தம் தன் முதன்மையான இடத்தை ஏற்கெனவே இழந்திருந்தாலும், முஸ்லிம்களின் வருகை அதற்கு சாவு மணி அடித்தது. நாளந்தாவில் குத்புதீன் ஐபக்கின் தளபதி பக்தியார் கில்ஜியின் தலைமையில் நடந்த ஒரு வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிட்சுக்கள் (பிராமணர்கள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு) கொல்லப்பட்டனர். அந்த வளாகமே ஒரு கோவில் என்று தவறுதலாகக் கருதி எரியூட்டப்பட்டது. இந்த ஆட்சிக்காலத்தின்போது, கிழக்காசிய நாடுகளோடு பௌத்தம் வழி இருந்த தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இவை போன்ற சம்பவங்கள் பௌத்தத்தை இந்தியாவிலிருந்து சுத்தமாகத் துடைத்தெறிந்தது. சமணர்களும் எண்ணிக்கையில் குறையலாயினர்.
கோவில் இடிப்புச் சம்பவங்களுக்கு வருவோமேயானால், பல கோவில்கள் இடிக்கப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் எல்லாமே மதம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக என்று சொல்ல முடியாது என்பதே என்பதே எராலியின் பார்வை. பெரும்பாலான கோவில்கள் அவற்றுக்குள் இருக்கும் செல்வங்களுக்காகவே அழிக்கப்பட்டன என்பதும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்துவதற்காகவும் இடிக்கப்பட்டன என்பதும் அவர் கருத்து. இந்த இடத்தில் அவர், ராஜராஜன் மற்றும் ராஜேந்திரசோழன் ஆகியோரின் சாளுக்கிய தேச படையெடுப்புகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அங்கும் இதேபோல பல கோவில்களை சோழர் படை நிர்மூலம் ஆக்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். இஸ்லாமிய சுல்தான்களின் கோவில் இடிப்பும் ஒரே சீராகவே நடைபெற்றது என்றும் சொல்ல முடியாது. ஒரு சுல்தான் பதவிக்கு வந்த புதிதில் கோயில் இடிப்பு மிக அதிகமாகவும் (தம்மை நிரூபித்துக் கொள்ள), பின் மெல்லக் குறைவதுமாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா சுல்தான்களுமே புதிய கோவில்கள் கட்டுவதைத் தடை செய்தனர்.
மேலும் பல சுல்தான்களின் கொடூரமான நடத்தைக்கு ஒரு காரணம், எண்ணிக்கையில் குறைந்த ஒரு புதிய கூட்டம் தன்னை விட மிக அதிகமான எண்ணிக்கையில் வாழும் ஒரு மக்களை ஆளும்போது, தம்மைப் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கவும், பரப்பவும், தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவும், கொடூரமான சம்பவங்களை நடத்தும் என்பதும் எராலி வைக்கும் ஒரு கோணம்.
இறுதியாக, இந்துக்களுக்கு எதிராக அக்காலகட்ட இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் நூல்களிருந்த வன்மம் சுல்தான்களின் வாள்களில் இல்லை என்பதே எராலியின் முடிவு. இதற்கு நிறையச் சான்றுகளைக் கொடுக்கிறார் அவர். உதாரணமாக, அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் ராமதேவரைத் தோற்கடித்தபின் அவரை மிகக் கௌரவமாகவே நடத்தி, ஆட்சியைத் திருப்பி அளித்திருக்கிறார். அதன்பின் கில்ஜியின் படைகளுக்கு உதவியாக தேவகிரியின் இந்துப் படைகள் ஹோய்சால மற்றும் பாண்டியர்களுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டது என்பதையும் குறிப்பிடுகிறார்.
அதேபோல சில சுல்தான்கள், இந்துக்கள் மீது அளவுக்கதிகமான கொடுமைகள் இழைத்தபோது, இஸ்லாமிய குருமார்கள் சிலர் இந்தச் செய்கை, இஸ்லாத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய சம்பவங்களையும் எராலி குறிப்பிட்டிருக்கிறார். அப்படி சுட்டிக்காட்டிய ஒரு சம்பவத்தின்போது தன்னைக் குறைசொல்லும் உலாமாவை மிகக் கோபத்துடன் எதிர்கொள்கிறார் அலாவுதீன் கில்ஜி. அவரை மறுநாள் வந்து பார்க்கச் சொல்கிறார். மறுநாள், இனி ஒரு போதும் தாம் திரும்பி வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு கில்ஜியின் அவைக்கு வரும் உலாமாவை பட்டு அணிவித்து, பரிசுகள் வழங்கி உண்மையைப் பேசியதற்காக கௌரவிக்கிறார் கில்ஜி. மங்கோலியருக்கு எதிரான ஒரு போரின்போது அவர்களுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லிக்கு அருகே இருந்த 30000 முஸ்லிம்களைக் கொன்று குவித்தார் அலாவுத்தின் கில்ஜி.
மேலும், ஒன்றுக்கொன்று எதிராக போர் புரிந்து கொண்டிருந்த மன்னர்களில் இந்துக்களும் முஸ்லீம்களும் இருந்தனர் என்பது ஒரு உண்மை. விஜயநகரப் பேரரசர் தேவராயர் ஒரு தனி முஸ்லிம் படைப் பிரிவையே உருவாக்கினார் என்பதும் ஒரு தகவல். தவிர, விஜயநகர பேரரசும் பாமணி சுல்தான்களும் எப்போதும் போரில் ஈடுபட்டிருந்தாலும் சில சமயங்களில் வாரிசு உரிமை குழப்பங்களில் தலையிட்டு சமாதானம் பேசியதும் நிகழ்ந்திருக்கிறது. இருப்பினும், விஜயநகர இந்து அரசர்கள் தம் முஸ்லிம் பிரஜைகளை நடத்திய விதம் ஒப்பு நோக்க மேலானதாகவே இருந்தது என்பதையும் சொல்கிறார் அவர்.
அடுத்து, இந்த இருபெரும் மதங்களும் இங்கே சந்தித்துக் கொண்டதின் விளைவுகள் என்ன என்று ஆராயகிறார் எராலி. அதில் அவர், தத்துவரீதியாக ஒன்றை ஒன்று பாதிக்கவேயில்லை என்று சொல்கிறார். இந்து மதம், தன் பல்வேறு வடிவங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடும் இங்கு ஏற்கெனவே இருந்த ஒன்றுதான். இசுலாமையும் தன் பிரிவுகளில் ஒன்றாக உள்வாங்கிக் கொள்வதில் இந்து மதத்துக்கு எந்த தயக்கமும் இருந்திருக்க இடமில்லை. ஆனால், அதைத் தடுத்தது ஆப்கானிய அடையாளம் சார்ந்த மேலாண்மை மேலாதிக்க* மனோபாவம்தான். அந்தந்த மதத்தின், மக்களின் வாழ்வேகூட தனித்தனி தளங்களில் இயங்கி வந்தன என்றும் சொல்கிறார் எராலி. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் நகரங்களிலும், இந்துக்கள் பெருமளவு கிராமங்களிலும் வாழ்ந்து வந்ததால் அவர்களிடையேயான தொடர்புகளே ஒரு குறைந்தபட்ச அளவுக்கு மேல் போகவில்லை என்பதும் அவர் கருத்து.
சுல்தானிய ஆட்சியின் பாதிப்பு முக்கியமாக நிகழ்ந்த இடங்கள் கலைகள், கட்டுமானங்கள், மற்றும் மொழி சம்பந்தப்பட்டவை. கலைகளில், அக்காலகட்டத்தில்தான் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் அடிப்படைகள் உருவாகின. இங்கு குறிப்பிட வேண்டிய ஒருவர் அமீர் குஸ்ரோ. அவர்தான் தபலா என்ற இன்று பிரபலமாக இருக்கும் தாள வாத்தியத்தை வடிவமைத்தார் என்பதும் ஹிந்துஸ்தானி மரபு இசைக்கு அஸ்திவாரமிட்டார் என்பதும் எராலியின் கூற்று. முதன் முதலாக இஸ்லாமிய பாணி கட்டிடங்கள் இந்தியாவில் கட்டப்படத் துவங்கின. தில்லி மட்டுமே மூன்று முறைக்கு மேல் கட்டப்பட்டது. வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்து கோவில்கள் கட்டப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது என்றாலும், தென்னிந்தியாவில் பல பழைய கோவில்கள் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்.
ஆட்சியாளர்களின் மொழியாக பாரசீக மொழி பரவலாகியது, சம்ஸ்க்ருத மொழியைப் பின்னுக்குத் தள்ளியது. அதே சமயம், இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகள் இக்காலகட்டத்தில்தான் தோன்றின. கன்னட, தெலுங்கு மொழிகளில் முக்கியமான படைப்புகள் தோன்றின. தமிழின் காவிய இலக்கியங்களின் பொற்காலமும் இந்தக் காலம்தான். முக்கியமான சில சம்ஸ்க்ருத நூல்கள் பாரசீக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டாலும், அங்கிருந்து இந்திய மொழிகளுக்கு எதுவும் மாற்றப்படவில்லை என்பதும் ஒரு முக்கியமான உண்மை.
முடிவு:
பொதுவாக, இந்திய நாகரிகம் இக்காலகட்டத்தில் அடைந்தது தேக்கமும் சரிவுமே என்றுதான் எராலி கூறுகிறார். நிலையற்ற ஆட்சி, ஏராளமான போர்கள், அளவுக்கு மீறிய கொடுஞ்செயல்கள் ஆகியவை நிச்சயமாக இந்தியாவைப் பின்னுக்கு தள்ளின. பால்பன், அலாவுதீன் கில்ஜி , பிரோஸ் ஷா துக்ளக் ஆகியோரின் ஆட்சிக் காலங்களைத் தவிர மற்ற சமயங்களில் இந்திய பொருளாதாரமும் பெரும் சரிவை சந்தித்தது. மக்களில் பலர், போர்களுக்கு அஞ்சி காடுகளுக்கு சென்று மறைந்து வாழும் நிலையும் ஏற்பட்டது. ஐரோப்பா விழித்தெழும் காலத்தில் இந்தியா நீண்ட உறக்கத்துள் ஆழ்ந்தது. அதனாலேயே இந்த நூலுக்கு எராலி The Age of Wrath -'பேரழிவுகளின் காலம்', என்று பெயரிட்டிருக்க வேண்டும்.
16ம் நூற்றாண்டின் இருபதுகளில் சுல்தானிய ஆட்சி ஒரு முடிவுக்கு வருவதற்கும் உள்ளிருந்து ஒரு கிளர்ச்சியும் எழாமல், மீண்டும் வட மேற்கிலிருந்து ஒரு படையெடுப்பு நிகழவேண்டி இருந்தது என்பதும் ஒரு வரலாற்று முரண். அந்தப் படையெடுப்பும், அதன் விளைவுகளுமே இத்தொகுப்பில் எராலி அடுத்து எழுதியிருக்கும், ‘கடைசி வசந்தம்’.
இந்த நூலை இக்காலக்கட்டத்தில் படித்து உள்வாங்குபவர், மீண்டும் உலகம் அந்த மத்தியகால மனோநிலைக்கு போகாமல் இருப்பதையே விரும்புவார். தீவிரமான மதவெறியும், அதற்கு எதிராக அதே ரீதியிலான எதிர்வினையும், நாட்டை எதில் ஆழ்த்தும் என்பதற்கு ஒரு பாடமாகவே இந்நூலைப் பயில வேண்டும் என்று தோன்றுகிறது. மாறாக, இந்நூலிருந்து, வரலாற்றுச் சம்பவங்களுக்கு பழிக்குப் பழி தேடித் தீர்வு காண வேண்டும் என்ற படிப்பினைகளை ஒருவர் அடைவாரேயானால், அது இந்நூலுக்கு செய்யும் நியாயமாகாது, கண்டிப்பாக எராலியின் நோக்கத்துக்கும் நேரெதிரானதாகவே இருக்கும்.
(The Age of Wrath- A History of the Delhi Sultanate, Abraham Eraly, April 2014, Viking)
oOo
(9.8.2016: 'மேலாண்மை மனோபாவம்' என்பது 'மேலாதிக்க மனோபாவம்' என்று திருத்தப்பட்டது- நன்றி, கோகுல் பிரசாத்)
oOo
(9.8.2016: 'மேலாண்மை மனோபாவம்' என்பது 'மேலாதிக்க மனோபாவம்' என்று திருத்தப்பட்டது- நன்றி, கோகுல் பிரசாத்)
இதே ஆசிரியரின் இன்னொரு புத்தகம் இது - https://puththakam.wordpress.com/2016/07/06/172-emperors-of-the-peacock-throne/
ReplyDelete