பெருநகரத்தில் வசிக்கும் பலரும் மணி பார்ப்பதற்காக கைக்கடிகாரத்தை பார்ப்பது என்பது மறந்து போய் எவ்வளவு வருடமாயிற்று! கடிகாரத்துக்கு சாவி கொடுப்பது என்பது இப்போதைய தலைமுறைக்கு புரியவைக்கக்கூட முடியுமா? கடிகாரம் என்பது உபயோகம் சார்ந்த வஸ்து என்பது மாறிப்போய் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒரு சினிமாவில் மனோரமா கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்கும் தன் உதவியாளரிடம், மணி என்ன இப்போ, என்று தனது கடிகாரத்தை காட்டி கேட்பார். மற்றொருவர், மணி பார்க்க தெரியவில்லை, உனக்கு எதற்கு கடிகாரம், என்பார். கடிகாரம் இருந்தா மணி பார்க்க தெரியணும்னு என்ன அவசியம்? கார் வச்சிருக்கறவன் டிரைவர் வச்சிக்கறது இல்லை? என்று வாச்சாலகமாய் பதில் சொல்வார் மனோரமா. இந்த நகைச்சுவை - கொஞ்சம் உண்மை கலந்த ஒன்று.
மணி பார்ப்பதற்கு கடிகாரம் எதற்கு என்பதே இப்போதைய மாநகர புதுமொழி.
HMT கைக்கடிகாரத்தை செம்டி வாச் என்று புழங்குமொழியில் சொல்லும் ஒரு தலைமுறை இருந்தது. இன்று அந்த நிறுவனமே இல்லை. காந்திகூட கடிகாரத்தை இடுப்பில்தான் செருகிக் கொண்டிருந்தார். இந்திய அளவில் கடிகாரத்தை நுட்பமான மெல்லிய அழகு சார்ந்த உபயோகப் பொருளாக மாற்றியது டாட்டாவின் டைட்டன் நிறுவனம். ஆனால் சீக்கோ பேவர்லு வாட்சுகள் ஓரளவுக்கு அப்போது ஓரளவுக்கு அறியப்பட்ட உயர் ரக வாட்சுகள். ஆனால் பொது ஜனங்களுக்கு நெற்றிப் பொட்டு அளவு உள்ள பட்டன் போன்ற லித்தியம் பேட்டரியில் ஒருவருடம் கடிகாரம் நிற்காமல் ஓடும் என்பதே ஒரு புதுமையாக இருந்தது அப்போது. குறிப்பாக, கடிகார நிறுவனங்கள் பெண்களை இளம் தலைமுறையினரை சரியாக குறிவைத்து முன்னேகின. ‘புதிதாய் அல்ல, புதுமையை நோக்கி முன்னேறுங்கள்’, எனும் பொருள்பட "நீங்க எப்போது மாறப்போகிறீர்கள்?" என்ற விளம்பர வாசகம் பிரபலமான ஒன்று. மாற்றங்கள் விரைவாக உண்டாயின. காட்சிகள் மாறின. இன்று வாட்ச் என்பது ஒரு மணிக்கட்டுக் கனவு.
பயன்பாட்டுப் பொருட்கள் பயன்பாடு தாண்டிய கனவை அணிந்து கொண்டு வரும்போது நுகர்வோரின் திருப்தி புதிய பரிமாணத்தை அடைகிறது. உதாரணமாக டயர், தயிர், இரும்புக்கம்பி, போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் விஷயத்தில் இவற்றுக்குள் பெரிதாக வித்யாஸப்படுத்தி சொல்வது கடினம். எல்லாம் ஒரேவிதமான பொருள்தான், ஆனால் பிராண்டிங்தான் வேறு. ஒருவிதத்தில் ஒருகாலத்தில் அதைப்போலத்தான் கைக்கடிகாரமும். எல்லா கடிகாரத்துக்கும் அதன் பயனும் உள்ளீட்டுப் பொருளும் ஒரே மாதிரிதான். எல்லா வாட்சுகளுக்கும் இதயம் 'மூவ்மெண்ட்' எனப்படும் உயிர்த்துடிப்பு. கண்ணுக்கு அழகாய் வண்ணங்களை மாற்றி விற்கலாம். சங்கிலி வகை அல்லது தோல் வகை, ஸ்டீல் மற்றும் தங்கம் என்று ஸ்டராப்களை மாற்றி அமைக்கலாம். ஆனால் அதுவும் குறிப்பிட்ட அளவு மட்டுமே வித்யாசப்படுத்தி காட்டலாம். அதற்கு மேல் என்ன செய்ய முடியும் ? ஜுவல் என்று குறிப்பிட்டு கடிகாரத்துக்குள் இருக்கும் வைரம் என்று குறிப்பிடப்படும் கடினவகை வஸ்துவைப் . (தேய்மானத்தை குறைக்கும் ஒரு இயக்கப் பகுதி) பொறுத்து அவற்றுக்கு மதிப்பு இருத்தது. கல்யாண மாப்பிள்ளைக்கு வாட்ச் என்பது ஒரு போகமாக இருந்தது. இப்போது வாட்ச் என்பது சாதாரண பயன்பட்டு பொருள் அல்ல.அது ஒரு அடையாளமாக அவதாரம் எடுத்துவிட்டது. இன்று கைக்கடிகாரங்கள் அனைவருக்குமானவை. ஆனால் அனைவருக்கும் ஒரே விதமான கடிகாரங்கள் கிடையாது. இந்த வித்யாசத்துக்குள் இருக்கும் தூரபாரம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் புழக்கம் உள்ள கைக்கடியார சந்தை.
இன்று கைக்கடிகாரம் ஒரு பெரும் அழகான கனவுச் சிலந்தியின் நுட்ப வலை. லட்சம் மற்றும் கோடியில் செய்யப்படும் கைக்கடிகாரங்கள் உண்டு. அவை லட்சத்தில் ஒருவருக்கும் கோடியில் ஒருவருக்கும் செய்யப்படுபவை என்பதும் நிஜம்.
நாம் பேசப்போகும் இந்த புத்தகத்தின் ஆன்மா இந்த கடிகாரம் பற்றிய அறிமுகப் புரிதலில்தான் இருக்கிறது. எல்லாவித படைப்புக்கும் எழுத்துக்கும் ஒரு காத்திரமான அகத்தூண்டல் அவசியமாகிறது. தூண்டப்படாத அகம் எதையுமே விகசித்து படைக்க இயலாது. சிற்பம் ஓவியம் இலக்கியம் இசை என்பதுபோல கடிகாரமும் அழகியல் சார்ந்த தொழில்நுட்பம். அது ஒரு அழகான ராட்சஸி ! கனவுத் தன்மை மிகுந்த வாட்ச் உலகமும், கனவு போல வாழ்வில் வந்து போன அரிய தருணங்களும் அருகருகே உள்ள உணர்வுச் சித்திரங்கள். ‘திங்ஸ் யூ கெனாட் பை இன் லைஃப்’ என்ற புத்தகத்தின் தலைப்பு அட்சர சுத்தம் நிஜம்.
வாழ்க்கையில் பணக்காரனாக இருந்துவிட்டால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்பது வெற்றுக் கூற்று மட்டுமே. உனது கனவில் புலியைப் பற்றி நீ கனவு காணலாம். ஆனால் அதை உன்னால் நடமாட விட முடியாது என்று லூயி போர்ஹெய் வரி ஒன்று பற்றி எஸ்.ரா சொல்லி இருப்பார். இப்படியான அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை அற்புதமான வாய்ப்புகள் மட்டுமே நமக்கு சமிக்ஞை செய்ய முடியும். அப்படி வாய்ப்புகள் கிடைப்பதற்கு பணம் தேவை இல்லை. அந்த தருணத்தின் பார்வையில் நாம் படவேண்டும்.
எனது சித்தப்பாவும் அத்தையும் இரட்டைக் குழந்தைகள். ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். பெண் குழந்தை முதலில். அடுத்த நிமிடம் ஆண் குழந்தை. ஆனால் அவர் அண்ணன். இவள் தங்கை. ஏனென்றால் இரண்டாவதாக பிறக்கும் சிசுதான் முதலில் கருக் கொண்டிருக்கும் என்பது நம்பிக்கை.
நிலவில் விண்கலம் இறங்கும்போது முதலில் இறங்குவதாக திட்டமிடப்பட்டவர் ஆல்ட்ரின் தான். ஆனால் கலத்திற்குள் காற்றில் மிதந்து சுழலும் நிலையில் அந்த நிமிடம் கதவு திறப்புக்கு அருகில் இருந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். ஆகவே அவர் இறங்கினார். திட்டமிடப்பட்டாலும் கைதவறி போன அந்த உலகத்தின் மிகச் சிறந்த வாய்ப்பு குறித்து ஆல்ட்ரின் மனதுக்குள் வருத்தம் ஒரு வடுவாகவே எஞ்சி இருந்ததாக சொல்வார்கள்.
பணம் இருந்தால் மட்டும் போதுமா? உலகின் சிறந்த தருணங்களை காணும் கனவுகள் மட்டும் இருந்தால் போதுமா? அது அமையவேண்டும். நிகழவேண்டும். அது வாய்ப்பு இருக்கும் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதை தாண்டி நிகழும் அந்த தருணங்களை நாம் வாழ்வில் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. அவைதான் - காபி டேபிள் புக் - என்று சொல்லப்படும் வடிவத்தில் Things you can not buy in Life - இதை எழுதித் தொகுத்தவர் மித்ராஜித் பட்டாச்சார்யா. ஹோரோலாஜி என்று அறியப்படும் கடிகார உலகில் மிகவும் பரிச்சயமான பிரபலர். கடியாரங்களின் காதலர். அந்த இடைவிடாத அவாவும் இயக்கமும் அவருக்கு தானே எதிர்பாராத அற்புதமான கணங்களை தந்திருக்கிறது. தான் மேற்கொண்ட பயணங்களில் கிடைத்த அரிய கணங்களின் தொகுப்பாக இது வந்திருக்கிறது.
இந்த புத்தகத்தில் மிகவும் சுருக்கமாக - மிக நேர்த்தியான புகைப்படங்களும் - அதைக் கண்டவுடன் நமக்கு எழும் ஆவலுக்கு நொறுவைகளாக எழுத்தாக்கமும் - நல்லதொரு வாசக அனுபவத்தை தருகின்றன. வெறும் தகவல்களாக படிக்காமல், அந்த நிமிடங்களை நாம் மனதின் பின்னணியில் வைத்து படிக்கும்போது ஒரு வித்யாசமான அனுபவம் கிடைக்கிறது. வாட்ச் பிரியரும் கிரிக்கெட் வீரருமான ரவிசாஸ்திரி முன்னுரையில் இப்படி ஒரு உலகம் இருப்பதை மித்ரஜித் மூலம் அறிந்தேன் என்கிறார்.
இனி கட்டுரைகளுக்குள்-
ஜப்பானிய யுத்தக் கலையாகிய சுமோ பற்றிய கட்டுரையில் சின்ன சின்ன விவரங்களால் கட்டுரை சுவையேறுகிறது. சுமோ என்பது கடவுளரை மகிழ்வூட்டுவதற்காக துவங்கப்பட்ட கேளிக்கை யுத்தக் கலை. பொதுவாக நாம் வேடிக்கையாக காணும் அவர்களது பருமனான உடல்கள்தான் அந்த கலையின் பெரிய ஆதாரம். மராத்தான் வீரனுக்கு உடல் மெலிவு எப்படியோ அப்படி இவர்களுக்கு பருமன். மிகக் குறுகிய நிமிடங்களுக்குள் துவங்கி முடிந்துவிடும். ஆறு நிலைகளைக் கொண்ட இந்த கலையில் சுமோ வீரருக்கு உச்சம் என்பது மக்குச்சி என்பர். தொழில்முறை சுமோட்டோரியனை ரிகிஷிஸ் என்பார்கள். டோயோ எனும் வட்ட அரங்கில்தான் போட்டி நடக்கும். ஒரு வீரன் மற்றவனோடு உரசி மோதி வட்டத்துக்கு வெளியே தள்ளி விட்டால் வெற்றி வீரன். அவ்வளவுதான். ஆனால் உண்மையில் இது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. எழுபது முறையில் ஒருவர் மற்றவரை தள்ளலாம். ஆனால் முடியை இழுத்தல், காதைக் கடித்தல் (டைசன்களுக்கு இடமில்லை) போன்றவை தடை செய்யப்பட முறைகள். உள்ளங்கையால் அறையும் சுபாரி முறை பிரசித்தம். இடுப்பு பட்டையில் பிடித்து தூக்கி வீசுதல் உண்டு. முதலில் இரு வீரர்களும் வட்டத்திற்குள் வந்து தமது இடங்களில் நின்று - ஷிகோ முறையில் - பூமியை காலால் உதைப்பார்கள். இது தீய சக்திகள் விலகிப் போவதற்கு. பிறகு தூய்மையாக்க உப்பை தூவுவார்கள். அதன் பின் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பார்கள். கடவுளை துதிக்கும் முறையாக ஒருமுறை இணைந்து ஒத்திசைவாக கைதட்டுவார்கள். மல்யுத்தத்திற்கு 'stare down' என்பது எப்படியோ அப்படி. ஒருவரை ஒருவர் இப்படி ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தபடியே ஏதோ ஒரு நொடியில் சட்டென மோத ஆரம்பிப்பார்கள். எப்போது மோதல் ஆரம்பிக்க போகிறது என்று பார்வையாளர்கள் ஆவலாக கவனிப்பார்கள். ஒருவன் மோதும்போது மற்றவன் சட்டென விலகி அவன் வட்டத்திற்கு வெளியே விழுந்துவிடவும் கூடும். அல்லது பார்வையாளர் கூட்டத்தில் மத களிறுபோல ஓடிவிடக் கூடும். ஆனால் முதல் தர வீரர்கள் அப்படி ஒதுங்கி ஆடும் ஆட்டத்தை விளையாடுவதில்லை. பெரும்பாலான ஆட்டங்கள் "தாச்சி ஐ" எனப்படும் முதல் கணத்தின் முன்னேற்றத்தை வைத்தே அமைகின்றன. ஓரிரு நிமிடமே நீடிக்கும் ஆட்டத்தில் ஊடுருவும் பார்வையும் ஆரம்ப கணங்களும் அப்போது உருவாகும் மனநிலையும்தான் அடுத்த நொடியே நிகழும் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கிறது என்ற யோசனையே ஆச்சரியமூட்டுகிறது.
பாரீஸின் லூவர் மியூசியத்தில் (மோனாலிசா ஓவியம் உள்ள இடம்) உலகப் பிரசித்தி பெற்ற பிரிகே கடியாரங்களை பார்வைக்கு வைத்திருக்கும் அரிய நிகழ்வு பற்றிய கட்டுரை. பேராடம்பரத்தின் உச்சிப் புள்ளி வகைகளில் இது ஒன்று எனலாம். மாவீரன் நெப்போலியனும் அவரது சகாக்களும் வாங்கி அணிந்த கடிகார வகைகள் பிரிகேவில் இருந்தே.
மற்றொன்று "வெப்ப வாயு பலூன்கள்" மூலம் உயர பறக்கும் மயிர்கூச்செரியும் அனுபவம். சுவிஸ் நாட்டு ஆல்ப்ஸ் மலையின் மேல் ராட்சத பலூன்களில் மிதக்கும் அனுபவம். பர்மிஜியானி எனும் கடிகார நிறுவனம் இத்தகைய அரிதான நிகழ்வுகளில் தனது விளம்பர மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்துகிறது. கடிகார உலகின் முக்கியஸ்தராக உள்ள மித்ரஜித் பட்டாச்சார்யா அதற்காக அழைக்கப்பட்டிருந்தார் என்பதில் அவரது அதிருஷ்டம் புன்னகைத்திருந்தது. 1979 ல் இருந்து துவங்கப்பட்ட இந்த பலூன் மிதவை கேளிக்கை பிரசித்தமானது. உலகெங்கிலிருந்தும் இதற்காகவே குவிகிறார்கள். பனி கவிந்து கிடைக்கும் ஆல்ப்ஸ் உச்சியை பலூனில் இருந்து பார்ப்பது சாதாரண அனுபவமா !
பலூனுக்குள் வெப்பக்காற்று இருந்தாலும் வெளியே உள்ள வெப்பநிலைக்கும் பலூன் உள்ளே உள்ள வெப்பநிலைக்கும் ஐம்பது டிகிரி செல்ஸியஸ் வித்யாசம் இருப்பது நலம். ஆகவே வெளியே வெப்பம் அதிகமாக இருந்தால் பலூன் உள்ளே இன்னும் அதிக வெப்பம் தேவை (அதனால்தான் சென்னையில் பலூன்கள் பறப்பதில்லையோ ! ) ஆகவே பனி முத்தமிடும் ஆல்ப்ஸ் மலை பலூன் மிதவை அனுபவத்தில் வெப்பம் சுகமான ஒன்றாகவே இருக்கும்.
மிக நுட்பமான பல கலை மற்றும் தொழில்நுட்ப காரணிகள் கொண்டு அமைக்கப் படுவதே பலூன் மிதப்பு நிகழ்வு. ஒரு கடிகாரத்திற்கும் இத்தகைய நுணுக்கமான கவனங்கள் தேவை என்பதால் இந்த நிகழ்வில் ஒரு வாட்ச் நிறுவனம் இணைவது இயல்பான ஒன்றாகிறது. பலூனுக்குள் இருந்துகொண்டு மனிதன் அதை கட்டுப்படுத்த விழையும்போது பலூன் தனது சுதந்திரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறது. எங்கே கிளம்புகிறோம் என்பது நமக்கு தெரியும். ஆனால் எங்கே இறங்கப் போகிறோம் என்பது நமக்கும் தெரியாது. பலூனுக்கும் தெரியாது. காற்றுக்கு மட்டுமே தெரியும். கடல் மட்டத்திலிலிருந்து 2300 மீட்டர் உயரத்தில் நம்மை தொட்டு உரசும் அமைதி அசாதாரணமானது. பலூனில் உண்டாக்கப்படும் வெப்ப ப்ரொபேன் வாயு பலூனை மேலேற்றவோ கீழிறக்கவோ மட்டுமே முடியும். திசையை காற்று தீர்மானிக்கும்.
கண்ணாடி ஜன்னல்களோ, குளிர்சாதன அறை வெப்பமோ இல்லாமல் நெடுக்கையாகவும் கிடக்கையாகவும் - மாசு படாத இயற்கையின் எழிலை 360 டிகிரியில் காணும் அந்த காட்சி அனுபவம் ஒரு கனவுக்கு நிகரான ஒன்று. பர்மிஜியானியின் இந்த பலூன் ஆறுபேரை சுமந்து சென்றது. இப்படி பல பலூன்கள் பறக்கும் வானம் எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
சாமுராயின் பெருமிதம் பற்றிய கட்டுரை சாமுராய்க்கு இன்றியமையாத கட்டானா என்ற சுமோ வகை கத்தி பற்றி சொல்கிறது. அது ஒருவகை அபாய அழகு. கொஞ்சம் பழைய மொழியில் சொல்வதானால் 'பெண்களின் கடைக்கண் கத்தி வீச்சு" போல. யோஷிந்தோ யோஷிஹாரா என்ற வாள் செய்யும் கலைஞரைப் பற்றியது. 14 ஆம் நூற்றாண்டில் பெருமையுடன் இருந்த இக்கலை இரண்டாம் உலகப் போருக்குப் பின் தடை செய்யப்பட்டது. பிறகு மீட்சி பெற்றது. உறுதியான, மெலிதாய் வளைந்து, ஒருபக்கம் கூர் கொண்ட வாள் அதனுடைய உபயோகத்தை மறைந்திருந்தாலும் வெவ்வேறு பெருமையுடன் திகழ்கிறது. யோஷிந்தோ சொல்கிறார் - "கட்டானாவை செய்வது கலையும் அறிவியலும் இணைந்த பேரார்வம். கூர்மையும் மெலிவும் உடைய இதை 45 டிகிரி வரை வளைக்க முடியும். சுமார் இருபது படிகளைக் கடந்து இது உருவாகிறது. நமது குரு-சிஷ்ய முறைப்படியே இந்த தொழில் முறை கற்பிக்கப்படுகிறது. இதன் விலை சுமார் ஒரு கோடி ரூபாய்தான். இதனை வாங்குவதால் என்ன பெற்றுவிட முடியும் என்றால் அதனுடைய அழகையும், அது உருவான நளினம் பற்றி உணர்ந்து ரசித்தல் மட்டுமே,” என்று எளிமையாக புன்னகைக்கிறார் யோஷிந்தோ.
நேரத்தை சற்று நிறுத்தி வைத்தால் தேவலை என்று (காதலியுடன் கடத்தும் கணங்கள் போல ) நம்மில் சிலர் நினைப்பதுண்டல்லவா. அதை சற்று கலாபூர்வமாக ஹெர்மிஸ் என்ற வாட்ச் நிறுவனம் சீனப் பெருஞ்சுவர்) உடன் இணைந்து நடத்திய நிகழ்வு பற்றியது ஒன்று. இந்த வாட்சின் பொத்தானை மென்மையாக தொட்டால் நேரம் காட்டும். பிறகு ஒளிந்து கொள்ளும். ஹெர்மிஸ் நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சில விருந்தினர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை தந்தது. நேரத்தை நினைவூட்டும் எல்லா பொருட்களையும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு ஒரு பசுமை பிரதேசத்திற்கு அழைத்துப் போய் அங்கே கடிகார முட்களின் வடிவில் குறியீடுகளை சுமந்து பெண்கள் கடிகார முட்களின் அசைவோடு நடனமிட அது அவர்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தை குறிப்பாக காட்டியது. நேரம் பற்றிய வித்யாசமான அனுபவத்தை உணர்த்திய நிகழ்வு அதுவாக இருந்தது என்கிறார்.
ஜோத்பூரில் நடந்த போலோ நிகழ்வும் அதற்காக ஜேகர் லெ கூத்ர் வாட்ச் நிறுவனம் தயாரித்த சிறப்பு கடிகாரம் பற்றிய பதிவு. இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் அரச பரம்பரைகளில் குதிரைகளின் குளம்பொலி இசைக்க போலோ விளையாட்டு பிரபலமான ஒன்று. ஜோத்பூரின் மஹாராஜா ராணா பிரதாப் சிங் சிறந்த போலோ விளையாட்டு வீரர். முன்பு 1930 ல் இப்போட்டியை காண சீசர் டி ட்ரே என்பவர் (கடிகார வணிகர்) வந்திருந்தார். அப்போது ஒரு போலோ வீரர் உடைந்துபோன தனது கடிகாரத்தைக் காட்டி, அணிந்து கொண்டு விளையாடும்போது உடையாத ஒன்றை உங்களால் செய்ய முடியுமா, என்று கேட்க - "ரிவர்சோ" பிறந்தது. ஆமையைப் போல ஓட்டுக்குள் நுழைந்து கொண்டு தன் அச்சில் திரும்பிக் கொள்ளும் வகை. அதன் பிறகு போலோ என்றால் இந்த கடிகாரம்தான். இதை கொண்டாட ஜோத்பூர் உமைத் பவனில் (பஞ்சத்தை சமாளிக்க ஜோத்பூர் மகாராஜாவின் திட்ட வகையில் இதைக் கட்டி முடித்ததும் ஒரு வரலாற்று குறிப்பு) நடந்த - சரித்திரமும் விளையாட்டும் இணைந்த அந்த நிகழ்வின் குறிப்பு கொண்டது இக்கட்டுரை.
வானத்தில் பறப்பது என்பது யாருக்குமே சுவாரசியமான ஒன்று. ஆனால் ஒருவரை- நீங்கள் எம் சிறப்பு விருந்தினர் என்று வரவேற்று - கண்ணாடி கூரை கொண்ட அதிவேக ஜெட் விமானத்தில் உட்கார வைத்து ஜெட் விமானத்தை வானில் சீற விட்டு அதை (ஜெட்டுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவு கொள்ளவும்) தலைகீழாக ஒரு நிமிடம் பறக்கவிட்டு சாகசம் செய்து காட்டினால் - எப்படி இருக்கும். சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தின் பகுதியாக அதைத்தான் இந்த கட்டுரை சுவாரசியமாக சொல்கிறது.
பிரெட்லீங் வாட்ச் என்பது உலகின் மிகச் சிறந்த விமானத்துறை சார்ந்த கடிகாரங்களை தயாரிக்கிறது. அவர்களிடம் கன்றுக்குட்டிகள் போல பல விமானங்கள் உள்ளன. செக் தயாரிப்பான L39C வகை முதல் போயிங் வகை வரை. இதை எழுதியவர் குரலிலேயே சொல்வதானால் - "ஒரு வாட்ச் கம்பெனிக்கு விமானங்கள் எதற்கு என்று நினைத்தேன். ஸ்விட்சர்லாந்த்தில் லூசெர்ன் நகர் அருகே உள்ள அந்த இடத்துக்கு சென்றபோது இன்றைய தினத்தை எப்படி செலவழிக்க உத்தேசம் என்று கேட்டபோது சில விருப்ப வாய்ப்புகள் இருந்தன - மெர்சிடிஸ் வகை காரில் செல்லலாம்; ஏர் போர்ஸ் விமானியுடன் ஜெட்டில் பயணிக்கலாம்; விமானம் பறந்து கொண்டே இருக்கும்போது "இறக்கை மீது நடத்தல்" எனும் ஜெட் விமான இறக்கைகள் மீது நடக்கும் நிகழ்வைக் காணலாம். ஸ்கை டைவிங் போகலாம். நான் ஒரு சிறுவனைப் போல ஜெட்டில் பயணிப்பதை விரும்பினேன். சொல்லிவிட்டேன் தவிர என்னவிதமான அனுபவம் அது என்பது எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தது. நான் வாழ்வில் அதிகபட்ச அச்சமூட்டும் த்ரில் என்று அனுபவித்தது ரோலர்கோஸ்டர்தான். காக்பிட் எனும் ஜெட் விமான இருக்கையில் அமர்ந்தவுடன் என்னிடம் இரு விஷயங்கள் சொன்னார்கள். ஒன்று எந்த வஸ்துவையும் தொடாதே. மற்றொன்று, ஏதாவது ஆபத்து என்றால் இதை தொடு. பாராசூட் விரியும். இதை நான் உணர்வதற்குள் விமானி உள்ளே வந்து எஞ்சின்களை சரிபார்த்து கிளப்ப தயாராகிவிட்டார். கண்ணாடி கதவு மூடிக்கொண்டது. வயிற்றில் ஒரு குத்துவிட்டது போன்ற உணர்வு. பேசாமல் இறங்கி போய் விடலாம் என்று எனக்கு தோன்றவில்லை என்று சொன்னால் பொய் சொன்னவனாவேன். இதில் மேலதிக விசேஷம் என்ன என்றால் என் விமானம் முதலில் இருக்கிறது. எனக்குப் பின் ஆறு. எல்லாம் அதிவேகத்தில் மிக அருகருகே ஆனால் தொட்டுக்கொள்ளாமல் பறக்கப்போகிறது என்பதை நினைத்தபோது மனதில் அபாயகரமான எண்ணங்கள் தோன்றின. ஒரு காரியம் செய்தால் அதில் முன்னே பின்னே தவறு நிகழலாம். ஆனால் இதில் ஜீரோ தவறு நிகழ்வாக மட்டுமே இருக்க வேண்டும். நான் இருந்தது உட்பட ஏழு விமானங்கள் வரிசை கிரமப்படி எழும்பி பறக்க தொடங்கின. அக்ரோபாட்டிக்ஸ்க்கு தயாரா என்று விமானி என்னைக் கேட்டார். சரி சொல்வதை தவிர வேறு வழி இல்லாமல் என்னுடைய "ம்" அவர் காதில் விழுந்ததோ என்னவோ - பிறகு சில நொடிகளில் பெரிய அழுத்தம் ஒன்றை உணர்ந்தேன். பிறகு விமானி சொன்னார் நாம் சென்றது 4.5G. பிறகு பறந்தபோது எனக்கு பயம் என்று எதுவுமே இல்லை. இனிமேல் பயப்பட என்ன இருக்கிறது என்று ஆகிவிட்டபின் !”
ஜப்பானில் டோக்கியோவில் சிறப்பான ஒன்றான பேர்ல் கட்டிடத்தில் ச்வாச் குழுமத்தின் கைக்கடியார வகைகளின் அணிவகுப்பு பற்றிய ஒன்று. ஸ்தாவின்ஸ்கி அரங்கத்தில் ஜாஸ் விழா வில் பர்மிஜியானி வாச் குழுமம் இணைந்து கொண்ட நிகழ்வு பற்றி இன்னொன்று என மேலும் இரு அனுபவப் பதிவுகள்.
மற்றொரு "வாவ்" அனுபவம் இத்தாலியின் கேப்ரி தீவுக் கடலில் கிடைத்த கடற்கன்னி அனுபவம். அவரது குரலில் சொல்வதானால் - ரஷிய கவிஞர் விளாடிமிர் மயகவோஸ்கி வரிகள் சொல்லும் - ஒரு தீவே பெண்ணாகி பிங்க் நிற பான்னாட் (தொப்பி) அணிந்திருக்கும் என்றால் அது கேப்ரி". அவ்வளவு அழகான தீவு. "ஒமேகா வாட்ச் நிறுவனம் அளித்த சிறப்பு அழைப்பின் பேரில் நான் (மித்ரஜித்) அந்த தீவுக்கு சென்றேன். டாம் க்ரூஸ், சிட்னி ஷெல்டன், ஹெமிங்க்வே, சார்த்தர், ஸ்ட்ரிங், போன்றவர்கள் தங்கிய இடத்தில் தங்குவது பெரும் மகிழ்வை தருவது - இத்தாலியின் க்விஸ்ஸானா. மறுநாள் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து எனக்கு எதுவும் சரியாக தெரியாது. ஆனால் நிச்சயமாக தெரியாது அது என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு கணத்தைக் கொண்டிருக்கும் என்று. உலகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது பேர் மெரினா கிராண்டுக்கு சென்று அங்கிருந்து யாட் ஒன்றின் மேல் அனைவரும் அமர்ந்திருந்தோம்.. தீவை சுற்றிப்பார்க்கும் ஆவலும் மகிழ்வுமாக அனைவரும் - ஒமேகாவின் தலைவர் ஸ்டெப்பான் உகார்ட் உட்பட. நீல வானமும் பளிச்சென்ற ஆதவனும் அழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தன. கேப்ரியின் பிரசித்தமான 'கடல் குகை' யை பார்க்க (கடல் நடுவே குகை போன்ற பகுதியில் சூரியனின் வெளிச்சம் பாய்ந்து நீளமாக எதிரொலிக்கும் அழகு) முயன்று கொண்டிருந்தோம். ஒரு மணி நேர அழகிய கடல் பயணம் நடுவே மற்றொரு கடல் குகையை நாங்கள் நெருங்கும்போது பத்து மீட்டருக்கு முன்பாக கடல் பரப்பில் ஒரு சலசலப்பு கேட்டது. கவனித்தால் - சற்றும் எதிர்பாராமல் - திடீரென ஒரு கடற்கன்னி துள்ளி எழுந்தாள். அவள் கையில் "பிளேனட் ஓஷன் கலெக்ஷன்' வகை ஒமேகா கடிகாரம். இதிகாசங்களில் கேட்ட வகை கடற்கன்னி - இங்கே! மகா ஆச்சரியம். அந்த கன்னி ஆஸ்திரேலியாவின் அன்னா பிரேசர். எங்களுக்காக அவள் ஐந்து மணிநேரம் உறைந்து சில்லிடும் 16 டிகிரி கடல் குளிரில் கடலுக்குள் நீந்திக்கொண்டிருந்தாள். நாங்கள் யாருமே எதிர்பார்க்காத அந்த சில கணங்கள் ஒரு மாஜிக்தான். அந்த கடிகாரத்துடன் எங்கள் யாட்டை சுற்றி கொஞ்ச நேரம் நீரில் விளையாடிய அந்த கடற்கன்னி சட்டென கடலின் ஆழத்துக்குள் மறைந்தே போனாள் - எங்கள் ஆழ் மனதுக்குள் அழிக்க முடியாத ஒரு அழகான பிம்பத்தை உருவாக்கிவிட்டு.”
இந்த அனுபவங்களை பற்றிய பதிவுகளையும் அது குறித்த புகைப்படங்களையும் ஒருங்கே வைத்து பார்க்கும்போது நாம் அந்த அறிய கணங்களை - பணத்தால் மட்டுமே வாங்கிவிட முடியாத அரிய கணங்களை - பற்றி பிரமித்து உணர முடிகிறது. அவற்றை நமது மனதுக்குள் சேமித்து வைத்து நமது கனவுகளில் உலவ விட்டு மகிழலாம்.
ஒருவேளை உங்களுக்கும் இப்படியான வாய்ப்புகள் கிடைக்குமானால் பெரும் பணக்காரர்களை விட அதிருஷ்டக்காரர் நீங்கள்!
Life Money Can't Buy, Mitrajit Bhattacharya,
Chitralekha Books, Rs.874 @ Amazon.in
No comments:
Post a Comment