இரா.முருகன் "மூன்று விரல்" நாவலுக்கு பாஸ்கர் லஷ்மண் இங்கே முன்னமே விமர்சனம் எழுதியிருக்கிறார்.
சக்ரி டோலெட்டியின் இரண்டு திரைப்படங்களுக்கு இரா.முருகன் வசனம் எழுதியிருக்கிறார். அவற்றுள் ஒன்று நம்ம நாயகரின் "உன்னைப்போல் ஒருவன்" என்பதாலும், இன்னொன்று நான் திரையில் கண்டுகளித்த பில்லா-2 என்பதாலும் இத்தகவல் நமக்குப் பரிச்சயம்.
என் நெருங்கிய எழுத்தாள சீனியர் ஒருவர் பேச்சினூடே தன் அபிமான மற்றும் குருநாத ஸ்தானத்தில் இருப்பவர்கள் என்று இரண்டு பேரைக் குறிப்பிட்டார். அவர்களுள் இரா.முருகனும் ஒருவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதற்கு முந்தைய சீசனுக்குத் தெரிவான அஷ்வின் முருகன் இரா.முருகனின் மகன்.
இவைதான் இரா.முருகன் குறித்து நான் இதுவரை அறிந்த தகவல்கள்.
2010 - 2011 சீசனில் கிழக்குப் பதிப்பகம் ஓட்டிய கிளியரன்ஸ் சேல் ஒன்றில் அள்ளிவந்த புத்தகங்களுள் "சைக்கிள் முனி"யும் ஒன்று. தலைப்பு தந்த சுவாரசியத்தில்தான் புத்தகத்தை வாங்கினேன் எனலாம்.
வழக்கம்போல நம்ம அலமாரியில் ரொம்ப நாளாய் உறங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை இரண்டு காரணங்களால் வெளியே எடுத்தேன்.
ஒன்று - ஆன்றோர் சான்றோர் எல்லாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆம்னிபஸ் தளத்தை என் பர்சனல் டொமைனில் இருந்து ஒரு தனி டொமைனுக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். < sasariri to Omnibusonline >. இப்படியேனும் ஆம்னிபஸ் தளம் மீண்டும் உயிர் பெறுகிறது.
இரண்டு: ஐம்பது புத்தகங்கள் சவால் ஒன்றை ஏற்றுள்ளேன். 50 புத்தகம் வாசியாது ட்வீட்டர் திரும்புவது இல்லை என.
நான் கையில் எடுத்த முதற்பத்தில் சைக்கிள் முனியும் ஒன்று.
நூற்றைம்பது வார்த்தைகள் எழுதிவிட்டேன். இன்னும் புத்தகத்தைக் குறித்து ஒன்றும் பேசாமல் இருப்பது நியாயமில்லை, எனவே....
மொத்தம் பத்து சிறுகதைகள். பத்தாவது சிறுகதை மட்டும் நாற்பது பக்கங்களுக்கு நீளும் ஒரு நெடுங்கதை.
டீமானிடைசேஷன், டிஜிட்டலைசேஷன், இந்த சேஷன் அந்த சேஷன் என்று குதிக்கிறோம். புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ஒரு ஸ்டார் கொக்கரித்தார். பிரதமர் டீமானிட் தோல்வியென ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார் இன்னொரு ஸ்டார். இந்த ஸ்டார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் இணையக் குளுவான். அந்த ஸ்டார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார் பக்தர்.
டீமானிடைசேஷன் தந்த எதிர்மறைப் பலாபலன்கள் படக்-படக் என்று செயலுக்கு வந்த இரண்டாம் தினத்திலேயே மக்களைத் தெருவுக்குத் தருவித்து பல்லை இளித்து விட்டது. நேர்மறைப் பலன்களைத் தரிசிக்கத்தான் சில யுகங்கள் காத்திருக்க வேண்டும் என்று பக்த சிகாமணிகள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
"சில்லு" சிறுகதை இந்த டீமானிடைசேஷனுக்கு நேர்மார். நேர்மறைப் பலாபலன் அனைத்தும் உடனே கிட்டிவிடுகிறது. எதிர்மறைப் பலன் இருபத்தைந்து வருடங்கழித்து நிகழ்கிறது. அறிவியல் புனைவுகள் வரிசையில் நல்ல சுவாரசியமான கதை.
எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் டீ சாப்பிடப் போனவர், டீக்கடை வாசலில் வடையைக் கடித்துக் கொண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது அப்படியே பக்கவாட்டில் சரிந்தவர், பின் எழவேயில்லை, நெஞ்சுவலியில் நொடியில் மாண்டே போனார். அந்த மரணத்தை அந்த டீக்கடைக்காரர் என்றுமே மறக்கமாட்டார். பொருள் வாங்க வந்துவிட்டு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிட்டுப் போகும் வாடிக்கையாளர்கள் நூறுபேரை ஒவ்வொரு கடைக்காரரும் பார்க்கத்தான் செய்கிறார். ஆனால் இதுபோன்ற அனுபவத்தை எல்லாம் எப்படி மறக்க இயலும்? "
"சாயம்" சிறுகதை இப்படிச் செத்துப் போகும் ஒரு வெள்ளையனைத் தரிசிக்கும் ஆசிரியரின் அனுபவக் கதை.
இந்தத் தொகுப்பில் ரொம்பவும் சுவாரசியக் கதை என்றால் அது "முக்காலி". உள்ளதில் கடினம் நகைச்சுவைக் கதைகள் எழுதுவதுதான்.
"பொறித்த, வெந்த நெருப்புக்கோழி சாப்பிடும் அகோரப் பசி அழகிகள், கோழி சைசில் பாதி இருக்கும் இவனை ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டால் என்ன ஆகும் என்ற திகிலோடு கணேசன் அவன் நீட்டிய கையைக் குலுக்காமல் நின்றான்."
என்றும்....
"அற்ப சந்தோஷம் அடைந்த அவன் இனி ஆயுசுக்கும் கை அலம்புவான் என்று கணேசனுக்குத் தோன்றவில்லை "
என்றெல்லாம் எழுதி செம்ம ஜாலியாக கலகலக்க வைக்கிறார் ஆசிரியர்.
"பாருக்குட்டி" ஏனோ "ஸ்ரீரங்கத்து தேவதைகளை நினைவுபடுத்துகிறது. இஸ்பிரேஷனாக இருக்கலாம்.
இப்படியெல்லாம் எழுதுவார்களா என்று நாம் யோசிக்கும் ஒரு கதைக்களம் "வாயு". நாற்பது பக்கங்களுக்கு குசு விடுவது பற்றிய ஒரு கதை. குசு விடும் போட்டி ஒன்றை நடத்துகிறது தொலைக்காட்சி வாய்க்கால் ஒன்று. யார் அயராது, அசராது குசு விடுகிறார்களோ அவருக்குப் பரிசுப்பணம். ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு காரணத்திற்காக போட்டிப்பணம் வெல்ல அங்கே வருகிறார்கள். மொச்சைக் கொட்டை தின்றுகொண்டே இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் மேலைநாடுகளில் உண்மையிலேயே போட்டி நடக்குமா என்று யோசிக்கிறோம் நாம். நடந்தாலும் ஆச்சரியம் இல்லைதான். இருந்தாலும் இந்தக்கதை ஒரு அன்-ஆர்தடாக்ஸ் முயற்சிதான். இதுபோன்ற வேறு யாரும் எழுதிய அஆ கதைகள் குறித்து தெரிந்தால் சொல்லுங்கள் (பின்னூட்டத்தில்).
இந்தக் கதைகளில் பிரச்னை என்னவென்றால் இங்கே பாதிக்கதைகள் ஏதேனும் ஒரு வெளிநாட்டில் நடக்கின்றன. பெரும்பாலும் இங்கிலாந்தில். மூன்று விரல் நாவலின் கதைநாயகன் கூட தாய்லாந்து செல்வதாக பாஸ்கர் லஷ்மண் விமர்சனத்தில் எழுதுகிறார். இங்கேயும் ஒரு சிறுகதையில் ( முக்காலி ) கதையின் நாயகனின் பிழைப்பு தாய்லாந்தில் நடக்கிறது.
ட்வீட்டர் உலகினில் சண்முகம் என்றொரு அன்பர் இருக்கிறார். சமூகம், பூசாரி, ஜவ்வரிசி, வத்தல், வடாம் என்று தன் இணையப்பெயரை (twitter handle) அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். ஒரு அதிதீவிர இளையராஜா ரசிகர் அவர். ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பாடல்கள் வெளியாகும்போதெல்லாம், "பாட்டுல நேட்டிவிட்டியே இல்லைங்க" என்பார்.
அதுபோல. இங்கே வெளிநாட்டுப் பின்னணியில் கதைகள் நிகழ்வதால் கதையுடன் நாம் செட்டில் ஆவதற்கு சற்றே நேரம் பிடிக்கிறது. நேட்டிவிட்டி இல்லை பாருங்கள்.
கூடவே இரா.முருகன் செய்யும் சில தமிழ்ப்படுத்தல்கள்.
ஒரு இடத்தில் ரெஸ்டாரண்ட், ஆப்பிஸ், பாய் ப்ரெண்ட் என்ற வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கும் அவர் மற்றோரிடத்தில் டிவி சேனல் என்பதை "தொலைக்காட்சி வாய்க்கால்" என்கிறார்.
அந்தக் கடைசிக் குசுக்கதையை வாசிக்கும்போது இணையத்தில் தங்கிலீஷில் எழுதும் கூட்டம் ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் தமிழை எழுதுவார்கள். இதோ இங்கே கீழே இருக்கிறது பாருங்கள், வெகு சமீபத்தில் நான் வாசித்த ஒரு தங்கிலீஷ் பின்னூட்டம் இது -
Onniyum pannamudiyaadhu aiyyaa... Sila unarvugal aazhmanadhilirundhu varavaendum illayael adhu varaadhu...... Ippozhudhudhaan tamizh azhivu enbadhu velaiyan nam naatirkku avanin pallikoodathai thinithu sendropodhar kural kuduthirukka vaendum pudhidhaaga samaskridhamo Hindi mozhiyo tamizhai azhikka iyalaadhu aangilam thaan ellorayum avaravarin thaai mozhiyaiy irandaam mozhi aakkaa kaaranam..... Idhuthaan arasiyal kaiyaalaagadha thanam.... Iniya Deepavali nalvaazhthukkal.... Ingu naam kettadhu erindhu nalladhu oliyaaga varavaendum enavum naragasuranin vadham Deepavali kondaadu kiroam.... Vadakku mattrum pira india pagudhikallil Diwali aagividugiradhu adhil Ramar Ayodhyavukku thirumbiyadhu kaaranamaaga kondaadapadugiradhu.... China thaan mudhalil pattaasugalai kandupidithanar adhan piraguthaan iroppargalum americargalum vedigundugalai kandupidithanar endru varalaaru.....
இதை வாசித்து முடிப்பதற்குள் உங்களுக்கு ஒரு பெரும் ஆயாசம் உண்டாகிவிடும். அதுபோல் ஆகிவிட்டது எனக்கு "குசுக்கதை"யினை முழுவதும் வாசித்து முடிப்பதற்குள். சுவாரசியக் கதைக்களத்தில் அசுவாரஸ்ய கதை சொல்லல்.
மற்றபடி இந்தப் புத்தகத்தை வாசித்தவுடன் ஆசிரியரின் மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவல் மேலிடுவது உண்மைதான். என் பட்டியலில் அடுத்து இருப்பது "த்யூப்ளே வீதி". பார்ப்போம்.
2004 பதிப்பு
168 பக்கங்கள்
விலை: ரூ.60/-
No comments:
Post a Comment